பெரு முதலாளி வகுப்பின் தொழிலாளர் விரோத, உழவர் விரோத, தேச விரோத திட்டத்திற்கு ஒரு “ஒப்புதலை” இட்டுக்கட்ட தேர்தல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன
இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, மார்ச் 13, 2017 உத்திரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்திராகாண்ட் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உத்திரப் பிரதேசத்திலும், உத்திராகாண்டிலும் பாஜக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. மணிப்பூரிலும், கோவாவிலும் ஒரு பெரும்பான்மையை அது உற்பத்தி செய்யும். காங்கிரசு கட்சி, பஞ்சாபில் அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. இந்த முடிவுகள், ஒட்டு மொத்தத்தில் மாநிலங்கள் அவையில் பாஜக-வின் இடங்களை அதிகப்படுத்துவதன் மூலம் மத்திய பாராளுமன்றத்தில் அதனுடைய நிலையை பலப்படுத்துவதோடு, அது ஆட்சி நடத்தும் மாநிலங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கிறது.
மத்தியிலுள்ள பாஜக அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிலாளர் உரிமைகள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருப்பதற்கு எதிராக தொழிற் சங்கங்களின் மக்கள் திரள் எதிர்ப்பு அதிகரித்துவரும் சூழ்நிலையில் இந்தத் தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. நாடெங்கிலும் உழவர்களின் கிளர்ச்சிகள் தீவிரமடைந்து வருகின்றன. பெரும்பான்மையான மக்களுடைய எதிர்ப்பின் காரணமாக நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டம் முடங்கிக் கிடக்கிறது. தேசியம் என்ற பெயரில் சனநாயக, மனித மற்றும் தேசிய உரிமைகள் மீது நடத்தப்படும் அப்பட்டமான தாக்குதல்களுக்கு பல்கலைக் கழக மாணவர்கள், மகளிர் அமைப்புக்கள் மற்றும் பிறருடைய எதிர்ப்பு வலுத்து வருகிறது. முதலாளித்துவ வகுப்பின் சில பிரிவினரிடையே கூட அதிருப்தியும், பொறுமையற்ற அறிகுறிகளும் இருந்து வருகின்றன.
தாராளமயம், தனியார்மயம் மூலம் உலகமயமாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேகத்தைத் தீவிரப்படுத்துவதற்கு “மக்களுடைய ஒப்புதலை” இட்டுக்கட்டுவதற்கு அண்மையில் நடைபெற்ற தேர்தல்களை, இந்திய மற்றும் அன்னிய ஏகபோக முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பெரும்பான்மையான மக்கள் மீது, ஏகபோக முதலாளிகளுடைய காட்டுமிராண்டித் தனமான சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும், சட்ட ரீதியானதாக அதை ஆக்கிக் கொள்ளவும் தேர்தல்கள் பயன்பட்டிருக்கின்றன.
150 முதலாளித்துவ ஏகபோகக் குடும்பங்களைத் தலைமையாகக் கொண்டுள்ள ஒரு சிறுபான்மையான முதலாளித்துவ சுரண்டல் வகுப்பினர் தாம், நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களுக்கான திட்டத்தையும், தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கிறார்கள். உலகிலேயே மிகவும் மக்கள் தொகை மிகுந்த சனநாயகம் என்று அழைக்கப்படும் இது, மிகச் சிறுபான்மையாக இருக்கும் செல்வாக்கு பெற்ற ஏகபோக முதலாளிகளே திட்டங்களைத் தீர்மானிக்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது. தங்களுடைய நலன்களுக்கு எந்தக் கட்சி சிறப்பாக செயல்படுமெனவும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மக்களை மிகவும் திறமையாக ஏமாற்றவும் கூடிய ஒரு குறிப்பிட்ட கட்சியை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
தங்களுக்குப் பிடித்த கட்சியை அவர்கள் முடிவு செய்த பின்னர், ஏகபோக முதலாளிகள் தங்களுடைய செல்வத்தையும், பல்வேறு வழிகளையும் பயன்படுத்தி தாங்கள் விரும்பும் முடிவுகளை உறுதி செய்து கொள்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்துவதற்காக, ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு எதிராக வைக்கப்படுகின்றன. பெருமுதலாளி வகுப்பினருக்குப் பிடித்தமான கட்சியின் வெற்றிக்கு வழி வகுப்பதற்காக, சில குறிப்பிட்ட கட்சிகளில் பிளவுகளைத் திட்டமிட்ட முறையில் உருவாக்குகிறார்கள்.
வகுப்புவாத, சாதி அடிப்படையில் அணிதிரட்டுதல், பண பலம், ஊடகங்கள் மீது கட்டுப்பாடு போன்ற பல்வேறு பிளவுவாதத் தந்திரங்களோடு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் தேர்தல் முடிவுகளை சூழ்ச்சியாகக் கையாள்வதும், அதற்குப் பிடித்த கட்சிக்கு, “அதிரடிப் பெரும்பான்மையை” உற்பத்தி செய்வதற்கும் பெரு முதலாளி வகுப்பிற்கு எளிதான வழியைக் கொடுக்கின்றன.
எல்லா எதிர்ப்பும் நாட்டிற்கு எதிரானதென அறிவித்து, அதைப் பாசிச முறையில் ஒடுக்குவதன் மூலமும், இராணுவ மயமாக்கல் மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு இடைப்பட்ட போரில் பங்கேற்பதன் மூலமும் தங்களுடைய தொழிலாளர் விரோத, உழவர் விரோத, சமூக விரோத, தேச விரோதத் திட்டமாகிய இந்திய மூலதனத்தை உலகமயமாக்கும் திட்டத்தை முன் கொண்டு செல்வதற்கு அனைத்திந்திய மட்டத்தில் பாஜக-வை வலுப்படுத்த வேண்டுமென மிகவும் கொழுத்த, செல்வாக்கு பெற்ற முதலாளிகள் விரும்புகின்றனர் என்பதை மார்ச் 11 தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பெரு முதலாளி வகுப்பின் தலைவர்கள், இந்தத் தேர்தல் முடிவுகளை வெளிப்படையாகவே கொண்டாடியும், மோடியை இந்தியாவின் புதிய “அரசனென” புகழாரம் சூட்டியும் வருகிறார்கள். இந்தியா அரசியல் சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவடையும் ஆண்டாகிய 2022-க்குள், ஒரு “புதிய இந்தியா”வை நிலைநாட்டுவதற்கான பாதைத் திறந்து விடப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி கூறிக் கொள்கிறார்.
புதிய இந்தியா என்ற பெயர்ப் பலகையின் கீழ், உலகின் முன்னணி ஏகாதிபத்திய சக்திகளுடைய குழுவில் சேர்ந்து கொள்ள வேண்டுமென்ற தன்னுடைய திட்டத்தை முன் கொண்டு செல்வதில் பெரு முதலாளி வகுப்பு குறியாக இருக்கின்றனர். அது, உழைக்கும் பெரும்பான்மையான இந்தியர்களுடைய உரிமைகளுக்கும், நல்வாழ்விற்கும் எதிரானதாக இருக்கும். இது, நமது நாட்டினுடைய மலிவான, அதே நேரத்தில் மிகுந்த உற்பத்தித் திறனுடைய இளம் தொழிலாளர்களைக் கடுமையாகச் சுரண்டுவதன் மூலம் மிகச் சிலருடைய கைகளில் முதலாளித்துவச் செல்வத்தை விரைவாகக் குவிக்கும் திட்டமாகும். அது மேலும் தீவிரமாகவும், விரிவாகவும், உழவர்களைக் கொள்ளையடிக்கவும், இயற்கை வளங்களைச் சூறையாடவும், இராணுவமயப்படுத்தவும், அரசு கருவூலத்தைக் கொள்ளையடிக்கவும் ஆன திட்டமாகும்.
முதலாளி வகுப்பு மிகவும் அபாயகரமான போக்கில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
முதலாளி வகுப்பினருடைய தொழிலாளர் விரோத, உழவர் விரோதத் திட்டத்தைத் தீவிரப்படுத்த மோடி அரசாங்கத்திற்கு மக்கள் “கட்டளையிட்டிருப்பதாக” கூறிக் கொள்வது, முழு மோசடியாகும். இந்த பூதாகரமான பொய்யை நாம் கேள்வி கேட்க வேண்டும். தொழிலாளி வகுப்பினருடைய போராட்ட ஒற்றுமையைப் பாதுகாப்பதும், அதை மேலும் வலுப்படுத்துவதும், பெரு முதலாளி வகுப்பினருடைய தாக்குதலுக்கு எதிராக போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதும் அவசியமாகும்.
வகுப்புவாதம், வகுப்புச் சுரண்டல், சாதி ஒடுக்குமுறை உட்பட நம்முடைய பிரச்சனைகளுக்குத் தீர்வானது பெரு முதலாளிகளுடைய ஆட்சியதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், அதற்கு பதிலாக தொழிலாளர்கள், உழவர்களுடைய ஆட்சியை நிறுவுவதிலும் இருக்கிறது. தேவைப்படுவது என்னவென்றால், முழு அரசியல் அமைப்பையும், பொருளாதாரத்தின் போக்கையும் மாற்றியமைப்பதாகும்.
தொழிலாளர்கள், உழவர்கள் நாம், அரசியல் அதிகாரத்தை நம் கைகளில் எடுத்துக் கொள்வதன் மூலம், சுரண்டலுக்கு ஒரு முடிவு கட்டவும், அனைவரும் மனித மாண்புடன் வாழ்க்கை நடத்துவதற்கான தேவைகளை நிறைவேற்றவும், பொருளாதாரத்தைத் திருத்தியமைக்க முடியும்.
நம்முடைய எல்லா உரிமைகளுக்கும் உத்திரவாதம் அளிக்கக் கூடிய ஒரு புதிய அரசை நிர்மாணிக்கும் கண்ணோட்டத்தோடு முதலாளி வகுப்பின் திட்டத்திற்கு எதிராக நம்முடைய போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். நம்முடைய போராட்ட ஒற்றுமையைக் கட்டி வலுப்படுத்தி, ஆளும் வகுப்பினருடைய பிளவுவாத சதித் திட்டங்களை முறியடிப்போம்.