‘விதி’ என்றொரு தமிழ்த் திரைப்படம். நம்மில் பெரும்பாலானோர் அந்தப் படத்தைப் பார்த்திருப்போம். தன்னைக் காதலிப்பது போல நடித்து, கர்ப்பமாக்கிவிட்டு, திருமணம் செய்து கொள்ள மறுக்கும் காதாநாயகனை நீதிமன்றத்தில் நிறுத்தி கதாநாயகி தண்டனை பெற்றுத் தருவதுதான் அந்தப் படத்தின் கதை.
நிஜத்திலும் அப்படிப்பட்ட கதாநாயகிகள் அனேகம் பேர் உள்ளனர். காதலன் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்கும் பெண், வேறொரு பெண்ணுடன் நடக்கவிருந்த தன் காதலனின் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய பெண், காவல் நிலையத்தில் புகார் செய்து சட்டத்தின் துணையோடு காதலனைக் கைப்பிடித்த பெண் இதுபோன்ற இன்னும் பல செய்திகளை அன்றாடம் செய்தித்தாள்களில் பார்க்கிறோம்.
காதல் என்பது இரண்டு பேர் சம்பந்தப்பட்டது. அந்தக் காதலின் வெற்றியிலும், தோல்வியிலும் இருவருக்குமே பங்கு உண்டு, அந்த வெற்றியும், தோல்வியும் இருவருக்கும் ஏற்படுவதும் உண்டு. அப்படியிருக்க பெரும்பாலும் பெண்கள்தான் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு என்ன காரணம்?
பெண்களின் மீதான சமூகத்தின் தவறான பார்வைதான் இதற்குக் முதன்மையான காரணம். காதலில் ஏற்படுகின்ற விளைவுகளை ஆணுக்கு ஒருவிதமாகவும், பெண்ணுக்கு ஒருவிதமாகவும் இந்த சமூகம் பொருத்திப் பார்க்கிறது. தனக்கு ஒவ்வாத, தான் ஏற்றுக் கொள்ளாத ஒரு செயலை ஓர் ஆண் செய்யும் போது அதைக் கண்டிக்க வேண்டிய குற்றமாகவும், அதையே ஒரு பெண் செய்யும்போது ‘தண்டிக்கப்பட வேண்டிய மரபு மீறலாகவும்’ பார்க்கிறது.
காதல் நிறைவேறவில்லை என்றாலோ ஏதோ ஒரு காரணத்தால் காதலித்த பெண்ணை மணக்க முடியவில்லை என்றாலோ, ஆணுக்கு அது வெறும் ‘காதல் தோல்வி’ மட்டும்தான். கொஞ்ச நாள் தாடி வளர்த்து, துக்கம் கடைப்பிடித்த பிறகு, இன்னொரு காதல் மலர்ந்து மீண்டும் ஒரு காதல் கதை தொடரும் அல்லது வீட்டில் பார்க்கும் பெண்ணுடன் திருமணம், குழந்தை, சேமிப்பு, வங்கிக் கடன் என்று பரபரப்பாகச் செல்லும் வாழ்க்கை ஓட்டத்தில் பழையது கழிந்து விடும், புதியது நிலைத்து விடும். இதில் சில விதிவிலக்குகள் உண்டு. மறுப்பதற்கில்லை. ஆனால் அவை விதிவிலக்குகள் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் ஒரு பெண்ணுக்கு இது போன்ற நிலை ஏற்படும் போது, அவளை காதலில் தோற்றவள் என்று சொல்வதில்லை. மாறாக ‘எவனிடமோ ஏமாந்தவள்’, ‘கெட்டுப்போனவள்’ என்கிறது இந்த சமூகம். காதலித்தவனையே திருமணம் செய்து கொண்டாலும், அப்போதும் பெண்தான் ‘ஓடிப்போனவள்’ ஆகிவிடுகிறாள். இருந்தபோதும் இந்த இடத்தில் அவள் ஓடுகாலியாக ஆனபோதும், கெட்டுப்போகவில்லை அதாவது ‘கற்பு’ பாதிக்கப்படவில்லை என்பதுதான் சமூகத்தின் பார்வையாக இருக்கிறது.
இப்போது புரிகிறதா ஏன் இதுபோன்ற போராட்டங்கள் என்று?
இங்கே பெண்ணுடைய காதலை, கற்பு என்னும் கற்பிதத்தோடு கட்டிவைத்துப் பார்க்கிறது சமூகம். சகித்துக் கொள்ள முடியாத சமூகத்தின் அந்தப் பார்வைக்கு அஞ்சித்தான், ஏமாற்றுக்காரனாக இருந்தாலும் பரவாயில்லை போராடியாவது அவனையே கல்யாணம் செய்து கொண்டு போய்விட வேண்டும் என்ற நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனர்.
‘கற்பெனப்படுவது சொற்றிரம்பாமை’ அதாவது வாக்குத் தவறாமை என்பது பழந்தமிழ்க் கூற்று. இதன்படிப் பார்க்கும்போது, ஏமாற்றுபவர்தானே - திருமணம் செய்த ு கொள்வதாக வாக்களித்துப் பின் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் ஏமாற்றுபவர்தானே கற்பில்லாதவர் அல்லது கற்பிழந்தவர் ஆகிறார். அப்படியானால் பெண்ணுக்கு வழங்கப்படும் பட்டங்கள் ஆணுக்கும் பொருந்துமல்லவா? பிறகு அவர்கள் மட்டும் எப்படி ஒரு வேளை போனால் தகுதியான அடுத்த வேலையைத் தேடிக் கொள்வதைப் போன்ற ‘இயல்பான’ (எதார்த்தமான) நிலைக்குத் திரும்பி விடுகின்றனர்? இதே போன்ற இயல்பு நிலைக்குப் பெண்களால் திரும்ப முடியாதா? திரும்பக் கூடாதா?
முடியும். உறுதியாக முடியும். கற்பெனும் கற்பிதத்தை உடைத்தெறிய பெண்கள் முன்வந்தாலே இது போன்ற இன்னும் எத்தனையோ மாற்றங்களைக் கொண்டு வர முடியும். வாழ்வில் வெற்றி, தோல்வி இரண்டுக்கும் இடமுண்டு. தோல்வியின் எல்லை முடியும் இடத்தில் வெற்றி காத்துக் கொண்டிருக்கும். அந்த வெற்றியை அடைய வேண்டுமானால், தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்து, அதைப் புறந்தள்ளி விட்டு துணிவுடன் முன்னோக்கி ஓடி வந்தால், வெற்றி கைகுலுக்கி நம்மை வரவேற்கும். காதலுக்கும் இது பொருந்தும். அதைவிடுத்து கற்பு கத்தரிக்காய் என்னும் சேற்றுக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தால், மற்றொரு மோசமான தோல்வியை நிரந்தரமாக்கிக் கொள்ள நேரும். எனவேதான் பெண்களுக்குத் தோல்வியைத் தாண்டி வாழ்க்கையைத் தேடும் துணிவு வேண்டும் என்கிறோம்.
பாவேந்தர் கூறுவதுபோல “காதல் வலியது”. அதனால்தான் அதற்கு இத்தனை எதிர்ப்புகள். சாதியக் கட்டுமானங்களை, மதக்கட்டுப்பாடுகளை, அடிப்படைவாதத்தினை இந்தக் காதல் வலிமையுடன் போராடி உடைக்க முயல்கிறது. அதனால்தான் மதவாதிகளும், அடிப்படைவாதிகளும் தீவிரமாகக் காதலை எதிர்க்கின்றனர். அதுவும், பெண்களை அடிமைத்தனத்தில் அழுத்துவதற்கு இவர்கள் உருவாக்கி வைத்துள்ள கலாச்சாரத்தின் பேரால், ஒற்றைப் பண்பாட்டின் பேரால்.
காதல் மற்றொன்றையும் உடைக்க வல்லது. அதுதான் ஆணாதிக்கம். அதனால்தான் கற்போடு கலந்து காதலையே உடைக்கப் பார்க்கிறது இந்த ஆணாதிக்கச் சமூகம். எனவே கற்பைச் சொல்லிக் கட்டிக் காக்கப்படுகின்ற சாதி மதச் சிந்தனைகளிலிருந்து முதலில் பெண்கள் வெளிவரவேண்டும். காரணம் ‘பெண்விடுதலைக்கான ஒரு வழியாகக் காதல்’ இருக்கிறது.
பெண்கள் சம உரிமை பெற்றவர்களாக, சுதந்திரச் சிந்தனையுள்ளவர்களாக வேண்டுமென்றால், குடும்பத்தில் சமத்துவம் (ஜனநாயகம்) கடைப்பிடிக்கப்படவேண்டும். முடிவுகள் எடுப்பதிலும், நிர்வாகத்திலும் பெண்களின் பங்களிப்பும் சமமாக இருக்கும் வகையில் குடும்பம் கட்டியமைக்கப்பட வேண்டும்.
நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைவிட, காதல் திருமணங்களில் சமத்துவத்தின் விகிதாச்சாரம் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். எப்படியயனில், தன்னுடைய துணையைத் தேடிக்கொள்கின்ற தனிமனித சுதந்திரம் தனக்கு உண்டு என்று நிலைநாட்டுகின்ற துணிவின வெளிப்பாடுதான் காதல் திருமணம். தன்னுடைய உரிமையை மதிக்கின்ற, அதற்காகப் போராடுகின்ற உணர்வுடையவர், கண்டிப்பாக தன்னுடைய சக மனிதர்களின் உரிமைகளை, சுதந்திரத்தை மதிக்கின்றவர்களாகவே இருப்பார்கள். அங்கே ஆணாதிக்கம், அடக்குமுறை தலைதூக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை.
“காதலரிருவர்களும் - தம்
கருத்தொருமித்தபின்
வாதுகள் வம்புகள் ஏன்? - இதில்
மற்றவர்க் கென்ன உண்டு?”
பாவேந்தர் சொல்வதைப் போல காதலர்கள் இருவரும் கருத்தொருமித்தல் தான் இங்கே முக்கியமானது. கருத்தொருமிக்காத காதல் கடைசி வரை வராது. இதனை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். திரைப்படங்களும், ஊடகங்களும் காட்டுகின்ற காதலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவது சரியான அணுகுமுறை அல்ல.
தங்களின் விடுதலைக்கான ஒரு வழியாக உள்ள காதலை, தற்கொலைக்கான காரணமாக ஆக்கிவிடக்கூடாது. பெண்கள் துணிச்சலையும், விழிப்புணர்வையும் பெற வேண்டும். அதுதான் பெண்விடுதலைச் சிந்தனைகளுக்கு வலுசேர்க்கும்.
பெண்ணடிமை தீராமல் மண்ணடிமை தீராது. அதேபோல், பெண்விடுதலை, பெண்ணுரிமை போன்றவற்றை வென்றெடுக்காமல் சமத்துவ சமூகத்தைப் பற்றி கனவுகூடக் காண முடியாது. பெண்விடுதலைக்கான வலிமையான ஆயுதமாகக் காதல் இருக்கின்றது.
ஆதலினால் காதல் செய்வீர் !
- இரா.உமா (
(நன்றி: ஜனசக்தி)