"உங்கள் மகளுக்கு இப்படி வன்கொடுமையோ பாலியல் தொல்லையோ நிகழ்ந்திருந்தால், அதை அவள் உங்களோடு பகிரத் துணிந்தால், எந்தவிதமான குற்றம்சாட்டுதலும் இல்லாமல் அவளுக்குத் துணை நில்லுங்கள்."
பொள்ளாச்சி சம்பவத்திலிருந்து நாம் பல பாடங்களைக் கற்க வேண்டியுள்ளது. நாம் ஏன் ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு விதமாக வளர்க்கிறோம்? பெண்களைத் தைரியம் இல்லாதவர் களாகவும் ஆண்களைக் கோளாறு நிறைந்தவர் களாகவும் வளர்க்கிறோம்.
பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள் அடையாளத்தை மறைத்து நிற்கிறார்கள். பாதிப்பைத் தந்த பையனின் தாயோ வீராவேசமாக வாதாடுகிறார். பெண்ணை மட்டுமே அவமான உணர்வோடு வளர்க்க வில்லை. பெண்ணைப் பெற்றதாலேயே அவமானப் பட்டு நிற்க நினைக்கிறோம். ஏன் சமூகம் இப்படி இரண்டு மதிப்பீடுகளோடு தொடர்ந்து இயங்கி வருகிறது?
ஏழு வருடங்களாக எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓரிருவர் புகார் அளித்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் மௌனம் காத்து நிற்கிறார்கள். ஒரு பெண்ணுக்குக் குடும்பம் ஆதரவாக நிற்க, அவர்கள் காவல் நிலையத்தை அணுகியிருக் கிறார்கள்.
இப்போதுதான் நமக்குப் பிரச்சினையின் “பூதாகாரம்” தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனால், ஓரிரண்டு நாட்களில் பாலியல் “பூத”ச் செய்தியை வேறு “பூத”ச் செய்தி வந்து சாப்பிட்டுவிடும். நாமும் அதைக் கவனிக்கப் போய்விடுவோம். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களின் மௌனமான துயரம் தொடரும். யோசித்துப் பாருங்கள்; எத்தனை பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே பதற்றத்தோடு மருகிக்கொண்டு இருப்பார்கள்?
ஏனென்றால், கயவர்கள் கையில் மாட்டியிருந்த வீடியோ படங்கள், இப்பொழுது எங்கே எப்படி வெளியே வருமோ என்ற பதற்றமும் விசாரணையில் தனது அடையாளம் தெரிந்துவிடுமோ என்ற பயமும் அவர்களைத் துரத்தும். இழந்ததை அவமானமாகக் கருதாமல் கடந்து போ என்று சொல்லிவிடுவது சுலபம். ஆனால், பல வருடங்களாக மண்டைக்குள் ஏற்றப்பட்டிருக்கும் அவமானம் என்ற துருவைத் துடைத்துவிட முடியுமா என்று தெரியவில்லை. இதைப் படிப்பவர்களில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம்; பாதிக்கப்பட்டது தெரிந்த குடும்பங்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இருக்கலாம். இப்போது இந்தப் பெண்களுக்கும் குடும்பங்களுக்கும் தேவைப் படுவது சரியான ஆற்றுப்படுத்துதல்.
ஒரு நாளில் மன மாற்றம் நிகழ்ந்துவிடாது. பாதிக்கப்பட்டவர்கள் தனக்கு நிகழ்ந்தது ஒன்றுமில்லை என அதைக் கடக்க வேண்டும். வாழ்க்கையின் பயணம் இன்னும் நீளும் என்ற மன உணர்வையும் உறுதியையும் பெற ஆற்றுப்படுத்துதல் தேவைப்படும். தயவுசெய்து இந்தத் தேவையை உணருங்கள்; சேவைகளை நாடுங்கள்.
உங்கள் மகளுக்கு இப்படி வன் கொடுமையோ பாலியல் தொல்லையோ நிகழ்ந்திருந்தால், அதை அவள் உங்களோடு பகிரத் துணிந்தால், எந்தவிதமான குற்றம்சாட்டுதலும் இல்லாமல் அவளுக்குத் துணை நில்லுங்கள். உங்களுக்கும் உங்கள் பாரம்பரிய பார்வையி லிருந்து வெளிவருவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால், இதற்கெல்லாம் உயிரை மாய்த்துக்கொள்ளுதல் தீர்வாக முடியாது. நம் முன் நிற்பது, மேலே செல்வது என்ற வழிதான். அதை உறுதி யோடு செய்யுங்கள். அதற்கு நீங்களும் தொடர்ந்து உங்களுக்குத் தைரியம் அளிக்கக்கூடிய பலமாக நிற்கக்கூடியவர்களோடு கைகோத்துக் கொள்ளுங்கள்.
இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படிக் கொம்பு சீவிவிட்டு ஆண் பிள்ளைகளை வளர்க்கப் போகிறீர்கள்? உங்கள் வீட்டுப் பையனைப் போலவே திமிர்த்தனத்துடன் இன்னொருவரின் வீட்டுப் பையனும் வளர்க்கப்பட்டிருந்தால், பாதிக்கப்படப் போவது உங்கள் வீட்டுப் பெண்ணாகக்கூட இருக்கலாம்.
அனைவரும் பொறுப்பாகச் செயல்பட வேண்டிய விஷயம் இது. பாதிப்புக்குள்ளான பெண்ணோ அவளுக்கு வேண்டியவர்களோ புகார் கொடுக்க முன்வந்தால் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு, பண பலத்துக்கும் அதிகார பலத்துக்கும் அஞ்சாமல் நேர்மையோடு செயல்படுங்கள்.
பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸிடம் சொல்ல வேண்டுமென்று இல்லை. உங்களுக்குச் சரியாகப் பட்டால் உங்கள் பெற்றோர் உங்களோடு துணை நிற்பார்கள் என்று பட்டால் அவர்களிடம் பகிருங்கள். அப்படியான நம்பிக்கை அவர்களிடம் தோன்றாவிட்டால், நீங்கள் கடந்து வந்த பாதையில் உங்களின் நம்பிக்கைக்குரிய பெரிய வயதுப் பெண்கள் (டாக்டர், டீச்சர், அத்தை) யாரிடமாவது சொல் லுங்கள். எவ்வளவுதான் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தாலும் ஆண்கள் வேண்டாம். இது ஆண்கள்மீதான விமர்சனமல்ல. உடல் ரீதியான, மனரீதியான உளைச்சல்களைப் பகிர தற்சமயம் சரியான துணை, வழிகாட்டக் கூடிய பெண்கள்தாம்.
வாழ்க்கை வாழ்வதற்குத்தான். துணிச்ச லோடு கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் துயரத்திலிருந்து வெளிவரப் பாருங்கள். ஆக்கப்பூர்வமான இலக்கு ஒன்றை வகுத்துக் கொண்டு, அதில் உங்கள் முழு ஆற்றலையும் நேரத்தையும் செலுத்துங்கள். நடந்ததை விபத்தாகப் பார்க்கப் பழக ஆரம்பியுங்களேன்.
மற்ற இளம் பெண்களுக்கு
நம்முடைய முன் யோசனையற்ற, பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கத் தெரியாத தன்மையால் என்ன நேரிடும் என்பதற்கு பொள்ளாச்சி சம்பவங்களே பெரிய பாடம். இந்த வயதில் ஆண்களுடன் பேசவும் நேரம் செலவழிக்கவும் தோன்றும். காதலிக்க யாராவது கிடைத்தால் காதலிக்கவும் தோன்றலாம்.
யாரைக் காதலிக்கிறோம், எதற்காகக் காதலிக் கிறோம் என்ற கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள். என்னுடைய ஒரு பயிலரங்கில் மாணவி ஒருவர் என்னிடம், “காதலிக்கும் ஆண் சரியானவன்தானா என்று எப்படிக் கண்டுபிடிப்பது” எனக் கேட்டார்.
நீங்கள் காதலிக்கும் ஆண் உங்களிடம் -
- உங்கள் அழகைப் பற்றியும் உடலைப் பற்றியும் மட்டுமே பேசுகிறாரா?
- உங்கள் படிப்பு, வேலை, வாழ்க்கையில் உங்களுக்கான கனவுகள் ஆகியவை பற்றிக் காதுகொடுத்துக் கேட்பதில்லையா?
- தனியிடங்களில் சந்திப்பது பற்றி மட்டுமே ஆர்வம் காட்டுகிறாரா?
- மணந்துகொள்ளப் போகிறோமே; அதனால் கொஞ்சம் நெருங்கிப் பழகினால் என்ன தவறு என்று கேட்கிறாரா?
- உடல் ரீதியான இச்சைக்குக் கொஞ்சமாவது ஈடுகொடுக்காவிட்டால் உங்களை விட்டுப் போய்விடுவாரோ, காதலும் முறிந்து விடுமோ என்ற பயம் வருகிறதா?
மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் ஆம் என்றால், இந்த நட்பு/உறவு அல்லது காதல் பற்றி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். காதலிக்கும் ஆண்கள் எல்லோரும் மோசம் என்பதில்லை. அவர்களை வளர்த்த விதத்தில் உடல்ரீதியான இச்சை என்பதை அவர்கள் இன்பமாகப் பார்க்கிறார்களே தவிர அந்த இச்சையின் அளவு எதுவரை நீளும் அல்லது நீளலாம் என்பது பற்றிய முழுமையான புரிதல் இல்லை. ‘இதுக்குப் போய் அலட்டிக்கலாமா’ என்ற பார்வைதான் அவர்களிடம் மேலோங்கி இருக்கும்படி அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
உங்கள் உறவின் விழைவும் உடல் ரீதியான இச்சையும் உங்களுக்கும் வலியாகக் கூடாது; இன்னொருவருக்கும் வலியாகக் கூடாது. ஏமாற்றுமொழிக்கு மயங்கவும் வேண்டாம்; ஏமாற்று நம்பிக்கையையும் தர வேண்டாம்.
இறுதியாக முக்கியமான ஒன்று, நாங்கள் பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் சொல்வது உண்டு. “தெரியாத வாடிக்கையாளர் என்றால் அவர்கள் கூப்பிடும் இடத்துக்கு நீ போகாதே; உனக்குப் பழக்கம் இருக்கும் இடத்துக்கு அவர்களை அழைத்துச் செல்” என்போம். ஏனென்றால், பாலியல் தொழிலில் ஒருவருக்கு என்று கூப்பிட்டு, கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்து பவர்களும் உண்டு. பாலியல் தொழிலாளர் களுக்கே இப்படியான எச்சரிக்கை தேவை என்றால், காதலிப்பவர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. காதலிக்கும் யாரையும் தனி இடங்களில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத இடங்களில் சந்திப்பதைக் கண்டிப்பாகத் தவிருங்கள். பொது இடங்களில் தனியாக உட்கார்ந்து பேசுங்கள். உங்கள் உணர்வுகளை நீங்கள் கையாளக் கற்றுக் கொண்டேதான் ஆக வேண்டும்.
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
(தோழர் பத்மா ‘தமிழ் இந்து’வில் எழுதிய தொடரிலிருந்து)