கடந்த சில தினங்களாக காதலை மையப்படுத்தி தமிழகத்தில் நடந்து வரும் படுகொலைகள் கடும் வருத்தத்தையும், மனவேதனையையும் தருகின்றது. காதலைக் கொண்டாடிய ஒரு சமூகம் இன்று அதற்கு எதிர்நிலையில் நின்றுகொண்டு அதனை வீழ்த்த துடித்துக்கொண்டு இருக்கின்றது. டன் கணக்கான காதல் கவிதைகளும், ஆயிரக்கணக்கான காதல் திரைப்படங்களும் வந்த பின்னும் ஒரு சமூகம் அதை இன்னும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பது அவமானகரமானது. காதலிப்பதற்கும், காதலிக்கப்படுவதற்கும் உடல் சார்ந்த அழகியல் மட்டுமே போதுமானது என்ற நிலைப்பாடு நம்முடைய இளைய தலைமுறையிடம் ஏற்பட்டுவிட்டது. அதைத் தாண்டி சென்று இன்றைய நிலையில் காதலின் பல்வேறு பரிணாமங்களைப் புரிந்து கொள்ளும் திராணியற்றவர்களாய், அரசியல் அற்றவர்களாய் அவர்கள் உள்ளனர்.

  இந்த உலகத்தில் நீ மகிழ்ச்சியாக வாழ்வதற்கு என்னைக் காதலிப்பதைத் தவிர உனக்கு வேறு மாற்று வழியே கிடையாது என காதலிக்கும் ஒவ்வொருவரும் தனக்குள் அறுதியான முடிவெடுத்துக் கொள்கின்றார்கள். அதைச் சுற்றியே தனது காதலின் தீவிரத்தன்மையை அவர்கள் கட்டமைத்துக் கொள்கின்றார்கள். காதலித்தல் ஒன்றே அவர்களை அடைவதற்கான, வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்வதற்கான ஒரே முன் நிபந்தனையாக அவர்கள் பார்க்கின்றார்கள். காதல் மட்டுமே போதுமா? ஒரு பெண்ணோ, ஆணோ தான் வாழ்நாள் முழுவதும் தான் விரும்பும் நபருடன் சேர்ந்து வாழ்ந்தால் அதுவே இந்த உலகத்தில் தான் வாழ்ந்ததற்கான மிகப்பெரும் அடையாளம் என நினைக்க முடியுமா?  இல்லை அப்படியே நினைத்தாலும் நினைத்த மாத்திரத்தில் அது வரிசைக்கிரமமாக நடைபெறும் ஒன்றா?.

 இந்திய சமூகத்தில் காதலை நிர்ணயிப்பதில் பல காரணிகள் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. சாதி, மதம், பொருளாதாரம் போன்றவை அதன் பட்டியலில் முக்கிய இடம் வகிப்பவை. இதை எல்லாம் புரிந்துகொண்டுதான் காதல் வருமா? என நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக அப்படி வருவது கிடையாதுதான். பார்த்த மாத்திரத்திலேயே இங்கே எல்லோருக்கும் பல்பு எரிகின்றது, மணி அடிக்கின்றது. ஆனால் வாழ்நாள் முழுவதும் பல்பு எரிந்து வாழ்க்கை பிரகாசமாக இருப்பதற்கும், மணி அடித்து காதலை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்கும் சில அடிப்படையான விடயங்களை நம் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

 காதலிப்பதற்கு முன்னால் சில ஜனநாயக ரீதியான கருதுகோள்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் காதலிக்கும் பெண்ணோ இல்லை ஆணோ ஒன்றும் நம்முடைய சொத்து கிடையாது, நாம் காதலிக்கின்றோம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் தம்முடன் தான் கடைசி வரை இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பது அபத்தமானது. பெண்களைவிட ஆண்கள் இதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். பெண்களை தன்னுடைய உடைமையாகக் கருதும் ஆணாதிக்க மனநிலை இங்கே காதலிக்கும் பெரும்பாலான ஆண்களிடம் தொழிற்படுகின்றது. இது அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒன்றல்ல; அவர்களுக்குள் இந்த சமூகம் திணித்த ஒன்று. இந்த ஆணாதிக்க சிந்தனையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாலே ஒழிய ஒரு நேர்மையான காதலை நாம் பெண்களிடம் கடைபிடிக்க முடியாது.

 ஒரு ஆணை ஒரு பெண் காதலித்தாள் என்பதற்காக எல்லா  சமயங்களிலும் அவள் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. மாறிய சூழ்நிலையில் அவள் தன்னுடைய காதலை நிராகரிக்க எல்லா உரிமையும் உள்ளது. தான் காதலித்த ஆண் ஒரு மோசமான பழக்க வழக்கங்கள் உள்ள நபர் என்று தெரிந்தாலோ இல்லை திருமணத்திற்குப் பின் தன்னுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் திறன் அவனுக்கு இல்லை என்று தோன்றினாலோ அந்தக் கணத்திலேயே முழுவதுமாக அந்த ஆணை காதல் நீக்கம் செய்துவிட்டு அவள் விரும்பும் தகுதிகொண்ட வேறு ஒரு ஆணை தன்னுடைய காதலனாக சேர்த்துக்கொள்ள அவளுக்கு எல்லா உரிமையும் உள்ளது. இதைக் காதலிக்கும் ஒவ்வொரு ஆணும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வரும் போதுதான் இங்கே பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை என்பது கட்டுப்படுத்தப்படும்.

 அதே போன்று பெண்களும் தங்களுடைய காதலில் நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும். ஒரு ஆணை காதலிக்கும் முன்பே ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துவிட வேண்டும். தான் காதலிக்கும் ஆண் தான் விரும்பும் அனைத்து தகுதிகளும் கொண்டவன் என்ற பட்சத்தில் சாதி, மதம், அதனைக் கடைபிடிக்கும் தன்னுடைய பெற்றோர்கள், உறவினர்கள் என அனைத்தையும் எதிர்த்து அவனுடன் வாழ்வதற்காக போராடத் தயாராக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் திருமணம் செய்துகொள்வதாக உத்திரவாதம் அளித்துவிட்டு கடைசியில் பெற்றோர் சம்மதிக்கவில்லை, உறவினர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள், சாதி தடையாக இருக்கும், ஜாதகம் சரியில்லை என ஒதுங்கிக் கொள்ளுவது மிகவும் தவறு. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தாமல் அவர்கள் தவிர்க்க வேண்டும்.

 எவ்வித சமூகப் பார்வையும் இல்லாத காதல்களே இங்கு பெரும்பாலும் தோல்வியிலும், வன்முறையிலும் முடிகின்றது. காதலித்தோம், காதலித்ததால் திருமணம் செய்துகொண்டோம், திருமணம் செய்துகொண்டதால் பிள்ளை பெற்றுக்கொண்டோம், பின் அவர்களுக்காக வாழ்வது நமது கடமை என்ற தக்கையான பார்வையே இங்கு பெரும்பாலான காதலர்களிடம் உள்ளது. காதலுக்குள்ளாக உள்ள அரசியலை அவர்கள் புரிந்துகொண்டு காதலிப்பதில்லை. நாம் காதலிப்பது குறுந்தொகை காலமல்ல என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பன இந்துமத வெறியும், சாதிய வெறியும் நிரம்பி வழியும் காலம். சாதிய தூய்மைவாதம் என்பது அனைத்துச் சாதிகளின் விருப்பத் தேர்வாக இருக்கும் காலம். அப்படிப்பட்ட வக்கிரம் நிறைந்த காலத்தில் நாம் காதலிக்கின்றோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். காதலித்தல் என்பது சாதிய கட்டுமானத்தை எதிர்ப்பதாக பொருள், காதலித்தல் என்பது மதத்தை எதிர்ப்பதாக பொருள், காதலித்தல் என்பது ஜனநாயகத்தைப் பெறுவதற்கான போராட்டம் என்று பொருள். இப்படித்தான் காதலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை வெறும் உடல் சார்ந்த பாலியல் ஈர்ப்பு என எளிமைப்படுத்தி புரிந்து கொள்வதாலேயே அதன் சிக்கல்களை நம்மால் சிக்கெடுக்க முடியாமல் போய்விடுகின்றது.

 கரூரில் கொல்லப்பட்ட பொறியியல் மாணவி சோனாலி மற்றும் தூத்துக்குடியில் கொல்லப்பட்ட பள்ளி ஆசிரியை பிரான்சினா ஆகியோரின் கொலைகளில் அடிநாதமாக இருப்பவை ஆணாதிக்க வெறியே ஆகும். பெண்ணை உடைமையாகப் பார்க்கும் ஆணாதிக்க வெறியே அந்தப் பெண்கள் காதலை நிராகரித்தபோது அவர்களைக் கொல்வதற்குத் தூண்டியிருக்கின்றது. ஒரு ஆணை காதலிப்பது என்பதும் காதலிக்க மறுப்பதும் என்பதும் ஒரு பெண்ணின் ஜனநாயக உரிமை என்பது இந்த ஆணாதிக்க வக்கிரம் பிடித்த இளைஞர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.  நான் உன்னை காதலிக்கின்றேன்; எனவே நீ என்னை கண்டிப்பாக காதலிக்க வேண்டும், என்னை மட்டும்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது என்ன வகையான காதல் என்று நமக்குத் தெரியவில்லை.

  ஒரு ஆணை ஏற்றுக்கொள்வதற்கோ இல்லை அவர்களை நிராகரிப்பதற்கோ ஒரு பெண்ணுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதை எந்த ஒரு ஆணும் அவளுக்கு இல்லை என்று மறுக்க உரிமை கிடையாது. இது போன்ற கொலைகள் காதலைப்பற்றி நேர் எதிரான சிந்தனையைச் சமூகத்தில் விதைத்துவிடும். ஆண்டுக்கு  150 பெண்கள் இதுபோன்று காதல் தொடர்பான பிரச்சினைகளால் தமிழகத்தில் கொல்லப்படுவதாக எவிடென்ஸ் அமைப்பு தெரிவிக்கின்றது. ஒரு கொலை இன்னும் பல கொலைகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்கின்றது. உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை கொலை செய்வது என்பதோ, இல்லை துன்புறுத்துவது என்பதோ அந்த பெண்ணிடம் நாம் எதை எதிர்ப்பார்த்துக் காதலித்தோம் என்பதையே கேள்விக்குள்ளாக்கிவிடுகின்றது.

 “வெண்ணீரில் நீ குளிக்க விறகாகி தீக்குளிப்பேன், உதிரத்தில் உன்னைக் கலப்பேன்” என்றெல்லாம் உருகி உருகி காதலித்துவிட்டு அந்தப் பெண்ணை ரத்தவெள்ளத்தில் சாய்ப்பது என்பதை நினைத்தாலே நமக்கு நடுக்கத்தை கொடுக்கின்றது. இந்த உலகத்தில் அனைவருமே காதலித்து இருக்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் காதல் சமூக நிர்பந்தத்தால் சிதைந்துபோயே இருக்கின்றது. காதல் அனைவருக்கும் கைகூடுவது கிடையாது. கிடைக்காத பெண்ணை கொலைசெய்யவேன் என்று புறப்பட்டால் இங்கே நம்முடைய அம்மாவோ, அக்காவோ, தங்கையோ  ஏன் நம்முடைய மனைவியோ கூட உயிர்வாழ முடியாது. அவர்களுக்கும் கூட அவர்களின் முன்னாள் காதலர்கள் இருக்கக்கூடும். சாதி, மதம், குடும்ப கெளரவம் போன்ற கீழ்த்தரமான அச்சுறுத்தல்களால் அவர்கள் தான் காதலித்த ஆணை கடைசியில் கைகழுவிட்டு வந்திருக்கலாம். அதற்காக யாரும் நம்முடைய அம்மாவையோ, அக்காவையோ, தங்கையையோ, ஏன் நம்முடைய மனைவியையோ நாம் கொல்வதை அனுமதிப்போமா?.

 சாதியை ஒழிக்க வேண்டும், மதத்தை ஒழிக்க வேண்டும், சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க வேண்டும் என்ற முன்முடிவோடு காதலியுங்கள், காதலிக்கும் பெண்ணுக்கு முத்தம் கொடுக்க நினைப்பதற்கு முன்னால் ஜனநாயகத்தைக் கொடுங்கள். உங்களை பிடிக்கவில்லை என்று ஒதுங்கிக் கொண்டால் அவளை இன்னும் அதிகமாக காதலியுங்கள். அளவிட முடியாதபடி அவளை நேசியுங்கள், உங்களால் காதலிக்கப்பட்ட பெண் அவள். உங்களைத் தவிர வேறு யார் அவளை அற்புதமாக இந்த உலகத்தில் காதலிக்க முடியும். அவளுக்குப் பிடித்த மாதிரி அவளை வாழவிடுங்கள். அவள் விரும்பும் நபர் வேறொருவராக இருக்கும் போது அதை ஜனநாயகத் தன்மையோடு அனுமதிப்பதுதான் நாகரிகமான செயல்.

ஒரு பெண்மீதான காதலோ, இல்லை ஆண் மீதான காதலோ தோல்வியில் முடிந்தால் நிச்சயம் இன்னொரு பெண் மீதோ, இல்லை ஆண்மீதோ காதல் இயற்கையாகவே முகிழும். அதுதான் மானுட இயல்பு. இதை புரிந்துகொள்ள வேண்டும். அதனுடன் சேர்ந்து சாதிய எதிர்ப்பு, மத எதிர்ப்பு போன்றவையும் காதலுடன் சேர்ந்து பயணித்தால் அதுதான் மேன்மையான, அழகான, ஜனநாயகக் காதல். அதனால் காதல் என்றால் என்னவென்று புரிந்துகொண்டு காதலியுங்கள். அப்போதுதான் காதலில் வெல்வதற்கு இன்னும் அதிகமாக காதலிப்பீர்கள்.

- செ.கார்கி

Pin It