ஒருவர் எதையெல்லாம் தனது வாழ்க்கையின் ஆதாரம் என்று நம்பிக்கொண்டிருந்தாரோ, அந்த அடிப்படைகள் தகர்ந்து போகும்போது அவர் தற்கொலை செய்து கொள்ள நேரிடுகிறது. நாம் எல்லோருமே ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்தான் வாழ்கிறோம். அந்த வட்டத்தில் குடும்பத்தினர், நண்பர்கள், நாம் வேலைபார்க்கும் நிறுவனம், ஏதேனும் பொது நல ஈடுபாடு இருந்தால், அது தொடர்பான அமைப்பு போன்றவை இடம்பெறும்.

இந்த வட்டம்தான் நமது விருப்பு வெறுப்பை இருப்பை தீர்மானிக்கிறது. இந்த வட்டத்தில் நாம் ஒரு அங்கத்தினர். இந்த வட்டம் இல்லையானால் நாமே இல்லை என்கிற அளவுக்கு நாம் அந்த வட்டத்தோடு நெருக்கம் கொண்டிருப்போம். திடீரென்று ஒருநாள் அந்த வட்டம் நம்மை நீ எனது அங்கத்தினர் இல்லை என்று ஒதுக்கி வைத்து விட்டால் என்னாகும்? அப்படி ஒரு நிலை உங்களுக்கு வந்து அதனால்தான் இப்படி ஒரு விரக்திக்கு வந்தீர்களா?

அன்புள்ள தோழரே!

தோழர் என்று விளிப்பதை நீங்கள் விரும்புவீர்கள். ஏனெனில் மனிதனுக்கு அமைந்த உறவுகளிலேயே மிக உயர்ந்த உறவு தோழர் என்ற உறவுதான் என்று நம்புகிறவர் நீங்கள். மானுடம் வெல்லும். பூமியையே மாற்றிக் காட்டுவோம் என்றெல்லாம் கம்பீரமாகக் குரல் கொடுக்கும் மார்க்சிய தத்துவத்தின் வழிவந்த உங்களுக்கா விரக்தி வந்தது? தோழா நீங்கள் உண்மையில் தோழர் என்றால் இதை என்னால் நம்ப முடியவில்லை.

நீங்கள் என்ன செய்வீர்கள்? பாவம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லிக்கொடுத்த உங்கள் கட்சி, மனதில் ஒரு புயல் அடித்தால், அதை எப்படி வெற்றி கொள்வது என்று சொல்லித்தரவில்லை. புறச்சூழல்தான் உணர்வைத் தீர்மானிக்கிறது. உங்களது புறச்சூழல் உங்களது இருத்தலையே கேள்விக்குள்ளாக்கும் எனில் உடனடியாக புறச்சூழலை மாற்றுவதுதானே பொருள்முதல்வாதிக்கு அழகு. அதை விட்டு விட்டு அழிந்துபோகவா தீர்மானிப்பது? ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்த உங்கள் கட்சித் தோழர்கள், குடும்பம் என்னும் அமைப்பு குறித்து ஏங்கல்ஸ் சொன்னதை சொல்லிக் கொடுக்கவில்லையா?

தனிச்சொத்துடமையைப் பாதுகாக்கத் தோன்றிய குடும்பம் என்ற அமைப்பில் ஒரு சிக்கல் வந்தால் எதற்காக வந்திருக்கும்? ஒன்று நீங்கள் ஒரு உடமையாகப் பார்க்கப்பட்டிருப்பீர்கள் அல்லது நீங்கள் உங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை உடமையாகப் பார்த்திருப்பீர்கள். பொதுவாக நமது குடும்பங்களில் கணவன் பெண்ணை உடமையாகப் பார்ப்பதுதான் வழக்கம். அது தவறு என்ற சுரணை யாருக்கும் இருப்பதில்லை. அதனால் அந்தக் குடும்பங்களில் பெரும்பாலும் பிரச்சனைகள் வெடிப்பதில்லை. அடிமைக்கு தான் அடிமையாக இருக்கிறோம் என்று தெரிந்தால்தானே பிரச்சனை. பெண்கள் அப்படியே சரி என்று போய்விடுவார்கள்.

ஆனால் தோழரே உங்களது வீட்டில் அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லையே? ஏனெனில் கட்சிக்குடும்பம் என்றெல்லவா உங்களது குடும்பத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். உங்களது குடும்பத்திலும் குடும்ப உறுப்பினர்களை உடமையாகப் பார்க்கும் சிந்தனை இருந்திருக்குமோ? அல்லது உடமையாக மறுக்கும் சிந்தனை இருந்திருக்குமோ?

இப்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு தேதி சரியாக நினைவில்லை. அப்போது ஒரு பெண்கள் சங்க அலுவலகம் திருவல்லிக்கேணியில் இருந்தது. (இப்போதும் அங்கு அந்த அலுவலகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.) எனது நண்பர் ஒருவரது (அவரும் தோழர்தான். ஆனால் உங்கள் கட்சிக்காரர் இல்லை. கொஞ்சம் தீவிரமான கட்சியை சேர்ந்தவர்) குடும்பத்தில் பிரச்சனை. அவரது மனைவி திருவல்லிக்கேணி பெண்கள் சங்கத்தில் புகார் செய்தார். எனது நண்பரை அந்த சங்கத்தினர் விசாரணைக்கு அழைத்தார்கள். நானும் உடன் சென்றேன்.

அந்த சங்கத்தில் பொறுப்பில் இருந்த ஒரு பெண்மணி எனது நண்பருக்கு அறிவுரை கூறினார். “குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கத்தான் செய்யும் என்று சொன்ன அந்தப் பெண்மணி, அருகில் இருந்த தனது கணவரை காண்பித்து, இதோ இவருக்கும் எனக்கும் கூடத்தான் பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக நாங்கள் சந்தோஷமாக வாழவில்லையா?” என்று கேட்டார்.

அந்தப் பெண்மணி வேறு யாருமல்ல தோழரே உங்கள் மனைவி. அப்போது அவர் கையைக் காண்பித்தது உங்களைத்தான். சரி 15 ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்குள் இருந்த புரிந்து கொள்ளல் இப்போதும் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தோழரே நீங்கள் அந்த குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமான ஒரு சொத்து என்று நினைத்து விட்டீர்களே? அதுதான் வருத்தத்திற்குரியது. அதனால்தான் அது உங்களை நிலை குலைத்து விட்டது.

சென்னையில் பாரம்பரியமிக்க ஒரு பெரிய மில் பூட்டப்பட்டபோது, உங்களது தலைமையில் போராடிய தொழிலாளர்களை நான் அறிவேன். உங்களது பெருமைகளை அவர்கள் அந்தக்காலத்தில் கதை கதையாகச் சொல்வார்கள். நீங்கள் தேர்தலில் நின்றபோது உங்களுக்கு ஓட்டுப்போட்டவன் நான். நீங்கள் ஒரு சமூகச் சொத்து அல்லவா? அதை நீங்கள் அறிந்த கம்யூனிசமோ அல்லது உங்களைச் சுற்றியிருந்த தோழர்களோ உங்களுக்கு சொல்லிக்கொடுக்காமல் விட்டுவிட்டார்களா?

‘இல்லை. அந்தக் குடும்பத்திற்கு மட்டுமே ஆன சொத்து என்று என்னை நான் நினைக்கவில்லை. நான் கட்சிக்காரன் என்றுதான் நினைத்தேன்’ என்று நீங்கள் சொல்லலாம். அதற்காகத்தான் நீங்கள் உங்கள் மடிக்கணினி உட்பட அனைத்து சொத்துக்களையும் அந்தக் கட்சிக்கே அர்பணித்து கடிதம் எழுதி இருக்கிறீர்கள். என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் தோழரே கடைசி வரையில் நீங்கள் வெறும் கட்சிக்காரராக மட்டுமே இருந்து விட்டீர்களே? ஒரு மார்க்சிஸ்ட்டுக்கு இந்த உலகத்தின் எந்த மூலையிலும் வேலை இருந்து கொண்டே இருக்கிறதே? அது எப்படி உங்களுக்கு தெரியாமல் போனது?

அந்தக் கட்சியில் வேலைபார்த்தால்தான் மார்க்சிஸ்ட்டா? அவர்கள் உங்களை ஒதுக்கித் தள்ளினால் என்ன? உங்களுக்கு பணியாற்ற வேறு இடம் கிடைக்கவில்லையா?

ஒரு நாளிதழில் நீங்கள் எழுதிய பல கட்டுரைகள் பொதுவானவைதானே. அவை ஒன்றும் அந்தக்கட்சியின் ஆவணங்கள் அல்லவே? உண்மையில் நீங்கள் ஒரு மார்க்சியவாதியாக இருந்திருந்தால், உங்களது அறிவை, ஆற்றலை பரந்து பட்ட சமூகத்திற்கு எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்றல்லவா நினைத்திருப்பீர்கள்?

நீங்கள் சர்வதேசவாதியாகக் கூட இருக்க வேண்டாம். இந்தியா முழுவதும் எத்தனை கோடி ஜனங்கள் இருக்கிறார்கள். எத்தனை விதமான அரசியல் கட்சிகள் இருக்கின்றன? எத்தனை விதமான அரசியல் இருக்கிறது? அதிகபட்சம் போனால் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனத்தொகையில் வெறும் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான மக்கள் மத்தியில் மட்டுமே செல்வாக்குப் பெற்ற ஒரு சிறு கட்சியே உங்களது உலகமாகிப் போய்விட்டதே?

ஒவ்வொரு தனி மனிதனது சிந்தனைக்கும் ஒரு எல்லை உண்டு என்பது இதுதானோ?

பெந்தேகோஸ்தே, ஜக்கிவசுதேவ், ஓஷோ, ரமணர், வேதாத்திரி மகரிஷி என்ற இந்த வரிசையில் உள்ளவர்கள் ஒரு பெரும் கூட்டத்தை தங்களுக்கு கீழே கட்டிப்போட்டிருக்கிறார்கள். அவர்களும் இந்த சமூகம் ஒட்டுமொத்தமாக மாறவேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். சமூகத்தை மாற்ற வேண்டுமானல் அதற்கு ஆட்சி அதிகாரம் கையில் வேண்டும் என்று அவர்கள் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் மனிதர்களின் மனதுக்குள் புகுந்து கண்ணுக்குத் தெரியாத அதிகாரத்தை செலுத்துகிறார்கள்.

கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருந்தால்தான் சமூகத்தை மாற்ற முடியும் என்று சொல்லுகிறார்கள். அது சரிதான்.

ஆனால் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானல் ஓட்டு வேண்டும். ஒட்டைப் பெற வேண்டுமானால் மக்களிடம் செல்வாக்குப் பெற வேண்டும். மக்களிடம் செல்வாக்குப் பெற வேண்டுமெனில் அவர்களது மனங்களைப் படிக்க வேண்டும். இதுவெல்லாம் பெரிய வேலை. இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் ஒரு எளிமையான வழியை நீண்டகாலமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். மக்களின் மனங்களைப் படித்து, அவர்கள் மத்தியில் ஏற்கனவே செல்வாக்குப் பெற்றுள்ள கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து கொள்வதுதான் அந்த எளிமையான வழி. சமூக மாற்றம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? அதையே இப்படிப்பட்ட குறுக்கு வழியில் எளிதாகச் சாத்தித்து விடலாம் என்று நினைக்கிறார்களே?

அவர்களோடு இருந்த உங்களுக்கு பிரச்சனைகளை எளிதாகத் தீர்க்கும் வழி தெரியாமல் போய்விட்டதா?

மானம் என்ற ஒரு வார்த்தையை குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு காலகட்டத்தில் அவமானப்படக்கூடிய விஷயம் வேறு ஒரு காலகட்டத்தில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சர்வசாதாரணமாக மாறிவிடும். ஒரு கூட்டத்தினர் அவமரியாதையாகப் பார்க்கக் கூடிய ஒரு விஷயம், மற்றொரு கூட்டத்தினருக்கு உயர் விஷயமாக இருக்கும். எல்லாமே அவரவர் கட்டமைத்துள்ள கருத்தோட்டத்தை ஒட்டியது. சுருக்கமாகச் சொன்னால் மாற்றம் என்பதுதானே மாறாதது.

தோழரே உங்களது மனிதாபிமானம், நேர்மை, தன்மான உணர்வு இவையெல்லாம் சேர்ந்துதான் இந்த விரக்தியில் உங்களைத் தள்ளியதா? மேற்குறிப்பிட்ட உணர்வுகளையெல்லாம் தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளவும், இல்லையெனில் விட்டுவிடவுமான பக்குவத்தை பொதுவாக அரசியல்வாதிகள் பெற்றிருப்பார்கள். அந்தப்பக்குவம் கைவரப்பெற்ற அரசியல்வாதி இல்லையா நீங்கள்?

எப்போதோ ஓரிருமுறை உங்களைப் பார்த்திருக்கிறேன். பல முறை உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். அவ்வளவுதான் உங்களுக்கும் எனக்குமான உறவு. ஆனால் உங்களது விரக்தி எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. என்னைப் போல நீங்கள் அறியாத பலர் உங்களுக்காக வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள். எனவே மீண்டும் ஒருமுறை கூறுகிறேன். நீங்கள் குறிப்பிட்ட ஒரு கூட்டத்திற்கு மட்டும் சொந்தமானவரல்ல. உங்கள் மீதுள்ள ஓர் இனம்புரியாத அக்கறைதான் என்னை இவ்வளவு பெரிய கடிதம் எழுதத் தூண்டியது. நீங்களும் உங்களை இந்த மனநிலைக்கு தள்ளியவர்களும் இதைப் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். மற்றபடி வேறு ஒன்றுமில்லை.

 

இப்படிக்கு

தோழன்

சில்வியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It