நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதற்கொண்டு மத்திய அமைச்சர்கள் வரை "இரையினைத் தேடி வாடி இருக்கும் கொக்கைப் போல" கலவர பூமியாக இந்தியாவை உருமாற்றவே காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, முன்னேற்றமின்மை இவைகளை திசைதிருப்ப வழமையாக நிகழ்த்தும் தீவிரவாதக் குற்றச்சாட்டு, பாகிஸ்தான் அரசியல் போன்றவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு எடுக்கப்பட்ட புதிய ஆயுதமான CAA - NRC - NPR போன்ற கருப்புச் சட்டங்களை முன்னெப்பொழுதும் இல்லா அளவில் மக்கள் வீதியில் இறங்கி எதிர்த்துப் போராடி வருகின்ற இச்சூழலில், இவர்களை பொது சமூகத்தில் இருந்து ஒதுக்க பாஜக எடுக்கும் மற்றொரு பிரச்சாரம் தான் களத்தில் 'கோட்சே'வாக மாறுவது.

rss gopal ramஇசுலாமியர்களின் முத்தலாக் சட்டத்தினை ரத்து செய்திடும் போது எழாத மக்கள், நம்பிக்கையின் பெயரில் பாபரி மஸ்ஜித்தை அபகரிக்கும்போது எழும்பாத சத்தங்கள், குடியுரிமையினை கேள்வியாக்கும் போது எழுகின்றன என்றால் இந்த நாட்டின் மீது அவர்களுக்கு இருக்கும் "பற்று"தான் முழுமுதற் காரணம். இதனால் தான் இசுலாமிய மக்களை விடவும் ஏனைய இந்தியப் பெருங்குடியின சமூகங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறும் போராட்டங்களில் தங்களது பங்களிப்பினை வெளிப்படுத்துகின்றனர்.

இதுநாள்வரை எந்த பிரித்தாளும் சூழ்ச்சியினைக் கொண்டு அரசியல் ஆதாயங்களைப் பெற்ற பாஜக வயிற்றில் இந்தப் போராட்டங்கள் புளியைக் கரைத்திருக்கின்றன. அதனை மடைமாற்றிட, குடியுரிமை திருத்த சட்டமியற்றிய கட்சியே அதற்கு ஆதரவுக் கூட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளபட்டிருக்கின்றது.

மறுபுறம் ஊடுருவல்காரர்கள் என்ற குற்றச்சாட்டுகளை பொய்யாக சுமத்தி வாழ்விடங்களை அகற்றும் செயல்களும் பாஜகவின் தலைவர்களால் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் கடந்த 11 ஆம் தேதி பெங்களூரில் "சட்டவிரோத குடியேறிகளினால் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றது" என்று அரவிந்த் லிம்பாவள்ளி என்ற எம்எல்ஏவின் சமூக வலைத்தள செய்தியால் ஆத்திரமூட்டப்பட்ட பாஜகவினரும், அரசு அதிகாரிகளும் 300க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி இருக்கின்றனர். சில சமூக ஆர்வலர்களின் முயற்சியால் அவர்கள் அனைவரும் இந்திய குடிமக்கள் எனத் தெரிய வந்திருக்கின்றன.

பாஜகவின் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் டெல்லியில் நடைபெற்று வரும் "ஷாஹின் பாக்" போராட்டக்காரர்களிடம் இருந்து டெல்லி குடியிருப்புவாசிகள் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் எந்நேரமும் அவர்கள் கற்பழிப்புகளில் ஈடுபடுவார்கள்" என தேர்தல் பிரச்சாரத்தில் கொளுத்திப் போட்டார். பர்வேஷ் வர்மா என்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் இதே கருத்தைச் சொன்னார். இதனால் தூண்டப்பட்ட ஆர்எஸ்எஸ்-ன் துணை அமைப்பான பஜ்ரங் தளத்தின் உறுப்பினர் கோபால் ராம் "இதோ நீங்கள் கேட்ட விடுதலை" (ஆசாதி ஸ்லோகனைக் குறித்து) என மாறி மாறிச் சுட்டதில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர் ஷாதாப் மீது பட்டது. ஆனால் சுட்ட கயவன் தான் கொல்லப்படலாம், அப்போது காவிக் கொடியினை எனக்கு அணிவியுங்கள் என தன்னைச் சார்ந்தோர்களிடம் தெரிவித்தே இதனைச் செய்திருக்கின்றான்.

ஜாமியா மில்லியாவில் காவலர்களோடு இணைந்து பொதுச் சொத்தையும் அப்பாவிகளையும் தாக்கியது, ஜேஎன்யூ மாணவர்களின் மண்டையினை முகத்தினை மூடிக் கொண்டு ABVP குண்டர்கள் உடைத்தது என இந்துத்துவப் பரிவாரங்களின் குற்றச் செயல்கள் ஏராளம்!

இன்று உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் மீது, அன்று கோட்சே எடுத்த ஆயுதத்தினைப் பிரயோகம் செய்ய இந்துத்துவம் கட்டளை இட்டிருக்கின்றனது . காந்தியாரின் வரிசையில் மரணமெய்திட, தபோல்கர் - பன்சாரா - கௌரி லங்கேஷ் என பட்டியலில் நானோ அல்லது நீங்களோ நீண்டு கொண்டே போவோம்.

ஏனென்றால் நானும் நீங்களும் எதிர்ப்பது இந்துவை அல்ல, இந்துத்துவத்தை...

- நவாஸ்

Pin It