attack on jnu studentsகருத்துரிமைக்காகவும், ஜனநாயகத்தைக் காக்கவும், பாசிசத்திற்கு எதிராகவும் குரல் கொடுப்பதில் இந்திய பல்கலைக்கழகங்களிலேயே சிறந்து விளங்கும் டெல்லி ஜவஹர்லார் நேரு பல்கலைக் கழகத்தை ஒழித்துக் கட்ட காவி பாசிஸ்ட்டுகள் பல்வேறு சதி வேலைகளை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தொடர்ச்சியாக செய்து வருகின்றார்கள். இந்தியாவில் உள்ள மற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு எல்லாம் உத்வேகம் தரும் பல போராட்டங்களை முன்னெடுத்த சிறப்பு மிக்கவர்கள் ஜேஎன்யு மாணவர்கள். அதற்கு முக்கிய காரணம் அங்கு வலுவாக காலூன்றி இருக்கும் இடதுசாரி புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களே ஆவார்கள். அப்படிப்பட்ட புகழ் பெற்ற அந்தப் பல்கலைக் கழகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும், இல்லை என்றால் அதை ஒழித்துக் கட்ட வேண்டும் என வலதுசாரி பாசிஸ்ட்கள் பல்வேறு வழிகளில் முயன்றும் இதுவரை எதுவுமே நடக்கவில்லை. இதனால் பல ஆண்டுகளாக கனன்று கொண்டிருந்த பகையை கடந்த 5 ஆம் தேதி டெல்லி காவல் துறை துணையுடன் தீர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் வலதுசாரி பாசிஸ்ட்கள்.

அங்கே தீவிரமாக செயல்பட்டு வரும் இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்களுக்கும், வலதுசாரி பாசிச மாணவர் அமைப்பான ஏபிவிபிக்குமான போராட்டம் இன்று நேற்று தொடங்கியதல்ல... கடந்த 2016 ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் ராம்லீலா கொண்டாடப் பட்டபோது, அதை எதிர்த்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் அமித்ஷா, ராம்தேவ், பிராய்ச்சி, ஆதித்யநாத், ஆசாரம் பாபு, நாதுராம் கோட்சே, சாக்ஷி, ஜான்தேவ் அகுஜா, பிரவின் தொகாடியா, அசோக் சர்மா என மொத்தம் பத்து பேரின் உருவத்தை வைத்துக் கொளுத்தி, தங்களது இந்துத்துவத்திற்கு எதிரான எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். அதே போல காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திக் கொண்டிருக்கும் அத்துமீறல்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக ஜேஎன்யு மாணவர்கள் குரல் கொடுத்து வருகின்றார்கள். அதற்காக கன்னையா குமார், உமர் காலித் போன்ற மாணவர்கள் பலர் கைது செய்து செய்யப்பட்டதும், அவர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும், கொடும் தாக்குதலுக்கு உள்ளானதும் நாம் அறிந்ததுதான்.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக விடுதிக் கட்டண உயர்வுக்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. நாட்டில் வெங்காய விலை உயர்வு, கடும் பொருளாதார நெருக்கடி, கோடிக்கணக்கான வேலை இழப்புகள் என ஒட்டுமொத்த இந்திய மக்களும் வாழ்வா, சாவா என்ற நிலையில் சித்தரவதையை அனுபவித்துக் கொண்டிருக்க, தங்கள் மீதான அதிருப்தியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்று திட்டமிட்டு ஆர்எஸ்எஸ் கும்பல் தனது ரவுடி அமைப்பான ஏபிவிபியை ஜேஎன்யு மாணவர்கள் மீதும், பேராசியர்கள் மீதும் ஏவிவிட்டு வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றது.

5.1.2020 அன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த 50க்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஜேஎன்யு மாணவ, மாணவியரையும், விடுதியில் தங்கியிருந்த மாணவர்களையும், தடுக்கச் சென்ற பேராசிரியர்களையும் இரும்பு ராடு, உருட்டுக் கட்டை, ஹாக்கி மட்டை போன்ற ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஜே.என்.யு.எஸ்.யு. மாணவர் தலைவர் ஆயிஷ் கோஷின் தலையை இரும்புக் கம்பியால் உடைத்திருக்கிறார்கள். மேலும் காயம் அடைந்த 35 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை ஏபிவிபி மாணவர்கள் அமைப்புதான் நடத்தியுள்ளது என்று தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களும், போராசியர்களும் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும் அதற்கு ஆதாரமாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகளும் பதிவேற்றப் பட்டுள்ளன.

ஆனால் இத்தனை ஆதாரங்கள் இருந்தும் எப்படி குஜராத் கலவரத்தையும், பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு அதற்கும் தங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று அவர்களால் சொல்ல முடிந்ததோடு, அதில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் முடிந்ததோ, அதே போல ஜேஎன்யு மாணவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திவிட்டு, தற்போது அந்தத் தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பல் மறுத்து வருகின்றது. வரலாற்றில் ஆர்எஸ்எஸ் போன்ற கீழ்த்தரமான கோழைகளை நாம் எங்குமே பார்க்க முடியாது. இந்தத் தாக்குதல் சம்மந்தமாக கருத்து தெரிவித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ''கல்வி நிறுவனங்கள் கல்வியை வழங்குவதாக மட்டுமே இருக்க வேண்டும். அரசியல் நிழலுலக நபர்கள் கூடிப் பேசும் இடமாக கல்வி நிறுவனங்கள் மாற அனுமதிக்க முடியாது" என்று கூறி இருக்கின்றார்.

jnu student leaderஇடதுசாரி மாணவர்களை மனதில் வைத்துதான் அமைச்சர் பேசுகின்றார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் இடதுசாரி சித்தனையாளர்களின் புகலிடமாக விளங்கும் ஜேஎன்யு மாணவர்கள் ஒருபோதும் முஸ்லிம்களை எப்படி அழிப்பது - குண்டுவைத்தா, கலவரம் செய்தா, காஷ்மீரைத் துண்டாடியா இல்லை நாட்டை எப்படி பெருமுதலாளிகளுக்கு விற்பது, இந்திய வங்கிகளில் லட்சக்கணக்கான கோடிகளை வாங்கிவிட்டு எப்படி வெளிநாட்டிற்கு அவர்களை தப்ப வைப்பது, சாமியார்களை எப்படி பொறுக்கிகள் போன்று பயன்படுத்துவது என்பதைப் பற்றி எல்லாம் அவர்கள் அங்கு கூடிப் பேசவில்லை. அவர்கள் எப்படி இந்தியாவை பாசிசத்தின் கொடுங்கோன்மையில் இருந்து மீட்டெடுப்பது, ஜனநாயகத்தையும், நீதியையும் எப்படி மீட்டெடுப்பது என்பதைப் பற்றிதான் பேசுகின்றார்கள். இதை எல்லாம் பேசாத பல்கலைக் கழகம் எதற்காக செயல்பட வேண்டும்? ஒருவேளை இவர்கள் பல்கலைக் கழகத்தை எல்லாம் பஜனை மடங்கள் போல் செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றார்களா?

மாணவர் சமூகம் தெளிவான அரசியல் அறிவோடு வளர வேண்டும் என்பதுதான் இந்த நாட்டில் ஜனநாயகத்தையும், நீதியையும் விரும்பும் அனைவரின் ஒருமித்த விருப்பமாகும். ஆனால் அவர்களை தக்கை மனிதர்களாகவும், அற்ப சிந்தனை கொண்டவர்களாகவும், சுயநலவாதிகளாகவும், குறுகிய மனம் படைத்தவர்களாகவும் ஆக மொத்தம் எதற்கும் உதவாத ஆகாவழிப் பேர்வழிகளாக பயிற்றுவிக்க வலதுசாரி பாசிஸ்ட்கள் திட்டமிடுகின்றார்கள். அதனால் மக்களுக்கான அரசியல் பேசினாலே வெறி நாய்கள் போல அவர்கள் மீது பாய்கின்றார்கள். ஒருபக்கம் முற்போக்குவாதிகள் மீதான தங்களின் வரலாற்றுப் பகையையும், இதன் மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள். இன்னொரு புறம் நாட்டில் நிலவும் அசாதாரணமான பொருளாதார பெருமந்தத்தில் இருந்தும் கவனத்தை அவர்களால் திசை திருப்ப முடிகின்றது.

ஆனால் ஒருநாளும் முற்போக்கு மாணவர்களை இவர்களால் அச்சுறுத்தல் மூலம் பயமுறுத்தி அடக்கி விட முடியாது. ஜே.என்.யு. தாக்குதலைக் கண்டித்து 5 ஆம் தேதி நள்ளிரவே மும்பை கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். அதே போல மும்பை நகரில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஜே.என்.யு. மீதான பாசிஸ்ட்டுகளின் தாக்குதலைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஹைதராபாத், புனே உள்பட நாட்டின் பல இடங்களிலும் ஜே.என்.யு. பல்கலைக் கழகத்தில் நடந்த தாக்குதலைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.

காவி பயங்கரவாதிகளின் பாசிசப் போக்கிற்கு எதிராக, ஜனநாயகத்தையும் நீதியையும் விரும்பும் அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்ப்புகளை தீவிரமாகப் பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால், இந்த நாடு கும்பல் வன்முறையாளர்களின் பிடியில் சிக்கி சீரழிவதை நிச்சயம் நம்மால் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பது மட்டும் உறுதி.

- செ.கார்கி

Pin It