ஜெ.என்.யூமீது பார்ப்பனிய முகமூடிகளின் கொடூரத் தாக்குதல்

புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் முகமூடி அணிந்து, ‘இந்துத்துவ பார்ப்பனிய’ கும்பல், மாணவர்களையும் பேராசிரியர்களையும் பயங்கர ஆயுதங்களுடன் குறி வைத்து தாக்கியிருப்பது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

jnu student leader after attackமாணவர் தலைவர்களையும், இஸ்லாமிய மாணவர்களையும் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில் 34 மாணவர்கள் படுகாயத்துடன் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை மட்டும் வழங்கப்பட்டு வெளியே அனுப்பப் பட்டுள்ளனர். விரல்கள் உடைந்து, கடுமையான தலைக் காயங்களுடன் அனுமதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை செய்தால் தாக்குதல் நடத்திய கும்பலுக்கு எதிரான சாட்சியமாகி விடும் என்று மனசாட்சியே இல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் அரசு அதிகார மிரட்டலுக்கு பணிந்து செயல்பட்டிருக்கிறது.

மாணவர்களைக் காப்பாற்றும் பொறுப்பிலுள்ள துணைவேந்தர் ஜெகதேஷ் குமார், மாணவர்களைக் காப்பாற்றத் தவறிய குற்றத்துக்காக பதவி விலக வேண்டும் என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் கழகங்கள் வலியுறுத்தியுள்ளன.

“வளாகத்தில் அமைதிப் பேரணி நடத்தியபோது என்னை குறி வைத்து இரும்புத் தடிகளால் சுமார் 25 முகமூடி அணிந்த கும்பல் தாக்கியது” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார் மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷா கோஷ். கை உடைந்து கட்டுப் போட்டிருந்த நிலையில் உடலில் 15 இடங்களில் தையல் போட வேண்டிய நிலையில் அவர் இந்தப் பேட்டியை அளித்தார்.

ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான “அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்” என்ற அமைப்பு தொடர்ந்து வளாகத்தில் வன்முறைகளை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது. இந்தக் கொடூரமான தாக்குதலை அழுத்தமாகக் கண்டித்து, ஆங்கில ‘இந்து’ நாளேடு தனது தலையங்கத்தில் (ஜன.7, 2020) “ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் உடன்பாடு ஆதரவு இல்லாமல், இந்தத் தாக்குதல் நடந்திருக்க முடியாது” என்று எழுதியிருக்கிறது. அதற்கான காரணங்களையும் அடுக்கிக் காட்டியிருக்கிறது, அந்தத் தலையங்கம்.

• பல்கலைக் கழக வளாகத்துக்கு வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் முகமூடி அணிந்த கும்பல் இத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

• வீதியிலுள்ள விளக்குகள் தாக்குதலின்போது திட்டமிட்டு அணைக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்திய முகமூடி கும்பலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியதோடு தாக்குதலை முடித்து அவர்கள் பாதுகாப்புடன் வெளியேறவும் உதவியிருக்கிறது. வெளியேறும்போது ‘வசை’ முழக்கங்களை அந்தக் கும்பல் எழுப்பியது.

• தாக்குதல் நடத்திய ஒருவரைக்கூட காவல்துறை கைது செய்யவில்லை.

• இந்தக் கொடூர ஆயுதம் தாங்கிய தாக்குதலில் பல மணி நேரம் நிலைகுலைந்து போய் மாணவர்கள், ஆசிரியர்களின் மரண சத்தம் கேட்டது.

• அறிவு ஜீவிகளைக் கண்டு இந்துத்துவா பேசுவோர் குலை நடுங்கி நிற்கிறார்கள். அதனால் தான் அத்தகைய அறிவார்ந்த சிந்தனையாளர்களை உருவாக்கும் உயர் கல்வி நிறுவனங்களை குறி வைத்துத் தாக்குகிறார்கள்.

• குறிப்பாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மீதான தாக்குதல் 2014 ஆம் ஆண்டே தொடங்கி விட்டது. காரணம், இந்தப் பல்கலைக்கழகம், பன்முகக் கலாச்சாரங்களைக் கொண்ட மாணவர்களை அனுமதிப்பதுடன் அவர்களை சிந்திக்கக் கூடிய திறனாய்வு செய்யக் கூடிய அறிவார்ந்த மாணவர்களாக உருவாக்குகிறது என்பதுதான்.

• வரலாறுகளோடு கற்பனை புராணங்களை இணைப்பது; நம்பிக்கைகளை மதவெறியாக மாற்றுவது போன்ற இந்துத்துவாவின் அரசியல் செயல் திட்டங்களுக்கு அறிவு ஜீவிகள் தடையாக இருப்பதை, இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை

• கடுமையான காயங்களை இந்த மாணவர்களோ, ஆசிரியர்களோ தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டது இல்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ‘அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்’ தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது.

• பல்கலைக்கழக நிர்வாகமும் துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரும் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையிலிருந்து தவறியதோடு மட்டுமின்றி, ஒரு கல்வி வளாகத்தின் பெருமையான அடையாளம் சீர்குலைவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்.

• அமுல்யா பட்நாயக் என்பவர், டெல்லி மாநகரக் காவல்துறை ஆணையர், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியது அவரது தலைமையிலான காவல் துறையின் கடமை. மாறாக ஜாமியா மிலியா பல்கலைக்கழக நூலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, மாணவர்களைத் தாக்கிய கும்பலைத் தடுக்காமல், தாக்குதலை வேடிக்கைப் பார்த்ததே காவல் துறையினர்தான். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் முகமூடி அணிந்து வரவில்லை. ஆனால், தங்களுடைய பெயர் அடையாள பேட்ஜ்களை அணியாமல் மறைத்துக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தினர்.

• தாக்குதலைக் கண்டிக்கிறோம் என்று பா.ஜ.க. தலைவர்களும் அமைச்சர்களும் கூறுவது சடங்குத்தனமான வெற்று வார்த்தைகள்தான். இந்தக் கண்டன வார்த்தைகளுக்கு எந்த மரியாதையும் தர முடியாது.

• இந்தத் தாக்குதலை மோடியும் மத்திய அரசும் ஏற்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டுமானால், தாக்குதலுக்கு துணை நின்ற காவல் துறை மீதும், தாக்குதல் நடத்திய கும்பல் மீதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து நீதிமன்றம் முன்னிறுத்த வேண்டும்.

- என்ற கருத்துகளை ‘இந்து’ தலையங்கம் பதிவு செய்திருக்கிறது.

மாணவர்களே இரு பிரிவாக தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள் என்று பா.ஜ.க.வினர் தாக்குதலை மலினப்படுத்துவது அப்பட்டமான பொய் என்பதற்கு சான்றாக ‘இந்து ரக்ஷாதள்’ என்ற அமைப்பு தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கிறது. அதன் தலைவர் பிங்கி சவுத்ரி என்பவர், “ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் தேச விரோதிகளின் புகலிடமாகி வருவதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. எனவே எங்கள் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள்” என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே இந்து பார்ப்பனியத்தை எதிர்த்த பகுத்தறிவாளர்கள் தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் ஆகியோரை சுட்டுக் கொன்ற ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற பார்ப்பனிய அமைப்பை பா.ஜ.க. ஆட்சி தடை செய்யாததோடு, குற்றவாளிகள் மீதான வழக்கு விசாரணைகளையும் முடக்கிப் போட்டு விட்டது. இப்போது உயர்கல்வி நிறுவனங்கள் குறி வைக்கப்படுகின்றன.

தன்னை கேள்வி கேட்டவர்களை அழிப்பதே பார்ப்பனியத்தின் ‘தர்மமாக’ - வேத காலம் தொட்டு இருந்திருக்கிறது. வேத பார்ப்பனியத்தையும் அவர்களின் ஒழுக்கக் கேடுகள் மக்கள் விரோத செயல்பாடுகள் - யாகங்களைக் கேள்வி கேட்டவர்களை ‘அரக்கர்கள்’, ‘ராட்சதர்கள்’ என்று கூறி அழித்தார்கள். பகவான் அவதாரம் எடுத்து வந்து அழித்ததாக புராணங்களை உருவாக்கினார்கள். வேதத்தை ஏற்க மறுத்தவர்களை ‘நாத்திகர்’ என்றார்கள். வேதம் படிக்கும் ‘சூத்திரன்’ நாக்கை வெட்டு என்றார்கள். அறிவுலகத்தைக் கண்டு நடுங்கும் ஆரியம் இப்போது துப்பாக்கிகளையும் வெட்டரி வாளையும் இரும்புத் தடிகளையும் கையில் எடுக்கிறது.

சம்பூகனையும் இரணியனையும் இராவணனையும் அழித்தக் கூட்டத்தின் வாரிசுகளே இப்போது முகமூடிகளோடு பல்கலை வளாகத்துக்குள்ளும் ‘சம்ஹாரம்’ செய்ய வருகிறார்கள். ஆரிய - திராவிடப் போர் முடியவில்லை.

Pin It