திராவிட ஒவ்வாமை என்பது இன்று நேற்றல்ல ம.பொ.சி. காலந்தொட்டே தொடர்கிறது. திராவிடத்தின் எதிர்ச்சொல் தமிழ் என்பதாக ஓர் அசுத்தவாதம் முன்வைக்கப்படுகிறது. இப்போதும் சில 'போலி' தமிழ்த் தேசியவாதிகள் அதைக் கூர்தீட்டி அரசியல் மைலேஜ் தேடுகிறார்கள்.
திராவிடம் என்பது தத்துவமாகியது 19ம் நூற்றாண்டில் தான். திராவிடம் என்பது பரந்துபட்ட அகண்ட தேசமாக இருந்துள்ளது. கன்னியாகுமரி முதல் பாகிஸ்தான் வரை திராவிட மொழி பரவி இருந்துள்ளது.
அம்பேத்கரின் கூற்றுப்படி "நாகர்கள் எனப்படும் திராவிடர்கள் இந்தியா முழுதும் படர்ந்திருந்தார்கள், அவர்கள் திராவிட மொழி பேசினார்கள். ஆரியப் படையெடுப்பின்போது வடவர்களை ஆரியம் உள்வாங்கியபோது தென்பகுதியினர் எதிர்த்தார்கள், ஏற்க மறுத்தார்கள். ஆதலால் இன்றைய திராவிடம் என்பது தென்பகுதியோடு சுருங்கி விட்டது" என்கிறார்.
அதுபோக கருமாபுரம் செப்பேட்டில் "திராவிட தேசத்து சவுந்தரபாண்டியன்" என விக்கிரம சோழரின் 11வது ஆட்சிக்கிலத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் "திராவிட தேசம்" இருந்ததை உறுதி செய்துள்ளது.
மனுதர்மத்தில் அதிகாரம் 10-ல் செய்தி 44-ல் "பவுண்டரம், அவுண்டரம், திராவிடம், கம்போசம் யாவரும் சகம்பாரதம் பால்கீகம் சீனம் கிராதம் கிரதம்கசம்" இந்த தேசங்களை ஆண்டவர்கள் 'சூத்திரர்கள்' ஆகிவிட்டனர் என குறிப்பிடப்படுகிறது.
திராவிட தேசம் அதில் பேசப்பட்ட மொழிகள், பேசிய மக்கள், அவர்களின் நிலப்பரப்பு, அவர்களின் பழக்கவழக்கங்கள் என இவைகளை உள்ளடக்கியது திராவிட நாகரிகம்.
சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகத்தின் எச்சம். கீழடி - சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி என சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். 1964-ல் ரஷியாவையும், ஃபின்லாந்தையும் சேர்ந்த ஆய்வாளர்கள் தனித்தனியாக ஆய்வு செய்து, சிந்து சமவெளி எழுத்து வடிவம் திராவிட எழுத்துதான் என்பதை நிறுவினர். பின்னர் சிந்து சமவெளி எழுத்து வடிவத்தின் முன்னனி ஆய்வாளரான 'அஸ்கோ பர்போலா' சிந்து சமவெளி எழுத்து வடிவத்தை திராவிட எழுத்து வடிவத்துடன் ஒப்பிட்டார்.
ஹரியானாவின் ராகிகிரி எனும் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்த டாக்டர் வசந்த ஷிண்டே அங்கு கண்டெடுக்கப்பட்ட 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எலும்புக்கூடின் மரபணுவை ஆராய்ந்து இது 'திராவிட மரபணு' என்கிறார்.
தமிழர் என்பது மொழியின் அடையாளம். திராவிடர் என்பது இனத்தின் அடையாளம். எனவேதான் ஆய்வாளர்கள் இனத்தின் அடிப்படையில் ஆய்வு செய்கிறார்கள்.
நிகழ்கால விவாதத்திற்கு வருவோம்,
திராவிடம் என்பது என்ன? 'ஆதிக்க எதிர்ப்பு' அவ்வளவுதான்.
எங்கே ஆதிக்கம் நடந்தாலும், யார் மீது ஆதிக்கம் நடந்தாலும் எதிர்க்கும் யாவரும் திராவிடர்களே என்பதுதான் திராவிடத்தின் அடிநாதம்.
திராவிட தேசத்தில் பேசப்பட்ட பல்வேறு (Dravidian Languages) மொழிகளில் மூத்த மொழி தமிழ். தன்னை அழிக்க முயன்ற ஆரியம்தானே திராவிடத்தின் எதிரியாக இருக்க முடியும். எப்படி தமிழை எதிரியாக முன்நிறுத்துகிறீர்கள்?
தமிழை திராவிடத்தின் நேர் எதிரியாக நிறுத்துவதன் மூலம் ஆரியத்திற்கே தெம்பூட்டுகிறோம். தமிழையும் உள்ளடக்கியதுதான் திராவிடம். தமிழா, திராவிடமா எனும் வாதமே திராவிட எதிர்ப்பாளர்கள் கட்டி எழுப்ப முயலுவதுதான்.
பெரியாரை வந்தேறி என்பவர்கள்
திராவிடத்தைக் கேட்டாலே பதட்டப்படுவர்கள்
திராவிட எழுச்சியால் எரிச்சல் அடைபவர்கள்
ஆரியத்தின் ஆதரவாளர்கள் போன்றோர்
திராவிடத்தை தமிழின் போர்வையில் விமர்சித்து ஆதாயம் தேட முயல்கிறார்கள்.
தமிழும், திராவிடமும் வேறுவேறல்ல என்பதுதான் வரலாறு சொல்லும் செய்தி.