காஷ்மீரே மயான பூமியாக காட்சியளிக்கிறது. காஷ்மீரின் மூலை முடுக்கெல்லாம் ராணுவம் முகாமிட்டிருக்கிறது. யாரையும் தொடர்பு கொள்ள முடியாதபடி செல்போன், இணையதளம் எல்லாம் முடக்கப்பட்டிருக்கிறது. கடும் நெருக்கடிக்குள் காஷ்மீர் வளைக்கப்பட்டிருக்கிறது.

kashmir army jawansகாலை 5.00 மணிக்கு 26 வயதுள்ள இன்ஷா அஷ்ரஃப் என்ற கருவுற்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு பனிக்குடம் உடைந்து விடுகிறது. இன்ஷாவுக்கு இது இரண்டாவது பிரசவம் என்பதால் முதல் பிரசவத்தின் அனுபவம் இருந்தது. அதனால் தன் தாயார் முபீனா அவர்களை அழைத்து மருத்துவமனைக்கு விரைவாக செல்ல வேண்டும் என்று சொல்கிறார். இன்ஷாவின் தாயாரும் சகோதரி நிஷாவும் சேர்ந்து இன்ஷாவை அழைத்து வருகிறார்கள். அண்டை வீட்டிலுள்ள ஆட்டோ டிரைவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காத்திருக்கிறார்.

வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல 7 கி.மீ. ஆட்டோவில் ஏறி வீட்டிலிருந்து 1 கி.மீ கூட தாண்டாத நிலையில் இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி செல்வதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை என்கிறார்கள். இன்ஷா அவர்களிடம் நிலையை எடுத்துச் சொல்லி பிரசவ வேதனையுடன் கெஞ்சுகிறார். ஆனால் எதையுமே காதில் வாங்காமல் போவதற்கு மறுத்து விட்டார்கள். வேறு வழியே இல்லாமல் மருத்துவமனைக்கு பிரசவ வலியின் வேதனையுடன் நடந்தே செல்கிறார் இன்ஷா. ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு ராணுவ சோதனை நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் இன்ஷா கெஞ்சிப் பார்க்கிறார். ஆனால் யாருமே இன்ஷாவின் கோரிக்கையை காதில் வாங்கவில்லை. ஆம், பிரசவ வேதனையில் தவிக்கிறேன், என்னை வண்டியில் போக விடுங்கள் என கதறுகிறார். அதற்கு கூட ஒருவரும் காது கொடுக்கவில்லை. ஆம், அவர்கள் இராணுவ வீரர்கள் தாம்.

பிரசவ வலியுடனே 6 கி.மீ தூரம் நடந்தே வருகிறார் இன்ஷா. இதற்கு மேல் தாங்க முடியாத நிலை வரும் போது மயங்கி விழுகிறார். அதிர்ஷ்டவசமாக அருகில் ஒரு தனியார் மருத்துவமனை இருக்கிறது, அங்கே அனுமதிக்கிறார்கள். சிறிது நேரத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தையை சுற்றிக் கொடுக்க கூட மருத்துவமனையில் துணி இல்லை.

பெரும் போராட்டங்களுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் இன்ஷா.

இந்த சம்பவத்தை விகடன் தனது தளத்தில் தமிழில் வெளியிட்டிருந்தது. ஆனால் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அழித்து விட்டது. காஷ்மீருக்கு வெளியே இந்திய ஊடகங்கள் அனைத்தும் காஷ்மீரக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று செய்தி வெளியிடுகிறது. ஆனால் அங்கே அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டு, மனித நேயம் மறுக்கப்பட்டு, மக்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.

இன்ஷாவுக்கு மட்டுமல்ல, அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பல பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. போதுமான மருத்துவர்கள் இல்லை. போதுமான பணியாளர்கள் இல்லை. ஆனால், 6 வயது பெண் குழந்தை உட்பட எல்லோரையும் பெல்லட் குண்டுகளால் அடித்து மருத்துவமனைக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறது ராணுவம்.

காஷ்மீரின் இன்னொரு தாய் ராஜியா, தன் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கிறவர். ஆகஸ்ட் 8ம் தேதி வலி ஏற்படுகிறது. வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு 17 கி.மீ. போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. பாதி தூரத்தை நடந்தே கடக்கிறார். அது ஒரு சிறிய மருத்துவமனை அவர்கள் சோதித்து விட்டு பெரிய மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்கிறார்கள். உடனே லால் தேத் மருத்துவமனையில் ராஜியா அனுமதிக்கப்படுகிறார். ஆனால், மருத்துவர்கள் நேரம் கடந்துவிட்டது என்று இறந்த சிசுவை ராஜியாவின் கையில் கொடுத்தார்கள். இந்த சோகத்துடன் வீட்டுக்கு செல்ல முடியாமல் மருத்துவமனையில் முடங்கிக் கிடக்கிறார்கள் ராஜியாவின் குடும்பத்தினர்.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று சொல்வதில் நமக்கு பெருமகிழ்ச்சி வருகிறது. ஆனால் நாம் காஷ்மீர் மக்களை கொடுமைக்குள்ளாக்கி, கருவுற்ற தாய்மார்களின் சாபத்தில், வல்லுறவுக்கு உட்படுத்தி காஷ்மீரை இணைத்திருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.

- அபூ சித்திக்

Pin It