kuthoosi gurusamy 268அய்யர் கையினால் அரிசையைத் தலையில் போட்டால் அட்சதை! அவர் கல்லைக்காட்டிக் கடவுள் என்றால் கடவுள்!

அவர் சாணியைப் பிடித்து வைத்துப் பிள்ளையார் என்றால், பிள்ளையார்!

அவர் எச்சிலையை நம் கையில் எறிந்தால் அது கடவுள் பிரசாதம்!

அவர் சாம்பல் தூளைத் தொட்டால் அது விபூதி!

அவர் செத்த மொழியில் உளறினால் அது மந்திரம்!

அவர் நம் வீட்டுத் தண்ணீரை நம் வீட்டுச் செம்பில் ஊற்றி நம் வீட்டு மாவிலையினால் நம் வீட்டில் தெளித்தால் அது புண்ய தீர்த்தம்!

அவர் வீட்டுப் பெண் அரை நிர்வாணமாகக் குதித்தாலும் அது பரத நாட்டியம்!

-இம்மாதிரிப் பல கூறுவேன் என்பது உங்களுக்குத் தெரிந்த சங்கதி யாதலால் இத்துடன் நிறுத்திக்கொண்டு எடுத்துக்கொண்ட விஷயத்திற்குச் செல்கிறேன்.

செல்வதற்கு முன்பு இன்னும் ஒரே ஒரு சிமிட்டா பீடிகை!

என்னைப் போன்றவன் ஜரிகை அங்கவஸ்திரத்துடன் தடபுடலாகத் தோன்றினால், “இது என்னவெறும் ஜம்பம்! வீட்டிலே சோற்றுக்கு லாட்டரி! வெளியே ஜரிகை அங்கவஸ்திரத்தைப் பார்! சொந்தமாயிருக்காது! லாண்டரியில் வாடகைக்கு வாங்கியிருக்கும்!” என்பார்கள் அறிவுமிகுந்த பொது மக்கள்!

இப்படிச் சொல்கிறார்களே யென்று கிழிந்த சட்டையுடனும் வேட்டியுடனும் சென்றாலோ, அப்போதும் விடமாட்டார்கள்!

“இதோ பார், அன்னக்காவடி! இதை நம்பி நாலணாக்கூடக் கொடுக்கக்கூடாது. சுத்த தகரப் போணி! நல்ல துணி கட்டக்கூட ‘வக்கு’ இல்லை. அதுதான் “கம்யூனிஸம் கம்யூனிஸம்” -என்று கத்திக்கிட்டு கிடக்குது,” என்பார்கள்!

ஆனால் ஏதாவது ஒரு பணப்பானை கிழிந்த வேட்டி கட்டியிருக்கட்டும்!

“இவரைப் பார்! எளியவாழ்க்கை! லட்சாதிபதியாக இருந்துங் கூட ஏதாவது டம்பமிருக்கிறதா, பார்! ஏழைபங்காளர் என்றால் இவரல்லவோ?” என்பார்கள்.

இவரை நம்பி நாலணா அல்ல; நாற்பதினாயிரம் ரூபாய் கூடத் தருவார்கள். இவர் அப்படியே “திலகர் நிதி” பண்ணினாலுஞ் சரி! மூச்சுப் பேச்சிருக்காது!

அப்படியிருக்கிறது, தமிழ் உலகம் யாரையும் குற்றஞ் சொல்லிப் பயனில்லை.

இனியாவது விஷயத்துக்கு வருவோம்! சுயமரியாதைக் காரர்கள் கடந்த இருபது ஆண்டுகளாகப் புரோகித ஒழிப்பு பிரசாரம் செய்து வருகிறார்களல்லவா? பதினாயிரக் கணக்கான தன்மானத் திருமணங்கள் நடத்தியிருக்கிறார்களல்லவா?

இதைப்பற்றி நாட்டில் எத்தனையோ கேலிப் பேச்சு! பணக்காரத் திராவிடத் தலைவர்களில் பலர் இன்றைக்கும் புரோகிதனை அழைத்துத் திருமணம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள், மான வெட்கமில்லாமல்! ஏன் என்று கேட்டால், “அவன் என்ன சொல்வது? நான் என்ன கேட்பது?” என்று வீராப்புப் பேசுகிறார்கள்! மலம் கழித்துக் கொண்டே வெள்ளரிப் பிஞ்சுதின்கிறவர்கள், இவர்கள்! “வேண்டாம்” என்று சொன்னால் இன்னும் ஒரு படிமேலே சென்றுவிடுவார்கள்!

புரோகிதத்தைப் பற்றி திரு. வய்யாபுரிப் பிள்ளையவர்கள் “தினமணி கதிர்” (2-7-50) பத்திரிகையில் எழுதியிருப்பதைக் கீழே தருகிறேன்:-

“பாணிக்கிரகணம், ஓமம், தீவலம் வருதல், சப்தபதி முதலியன சங்க காலத்தில் நிகழ்ந்தன அல்ல. புரோகிதர்கள் மந்திரம் ஓதுதலும், மணவினையில் இல்லையென்றே கூறலாம். தாலி கட்டும் சடங்கும் காணப்படவில்லை. சுமார்6-7-ம் நூற்றாண்டுகளில்தான் இவைகளில் பலவற்றையும் தமிழ் மக்கள் கைக் கொண்டனர்.

இவற்றையெல்லாம் நோக்குமிடத்து ஆதியில் ஆரியரின் கலப்பு மிகுதியாக இல்லாத காலத்தே மணச் சடங்கு ஒரு சிலவே இருந்தமையும் பின்னர் அவர்களுடைய கூட்டுறவு தமிழ்நாட்டில் பெருகப் பெருக மணச் சடங்குகளும் பெருகிவிட்டமையும் நன்கு புலப்படும்.”- வெள்ளரிப் பிஞ்சு தின்னும் வீராதி வீரர்களே! வய்யாபுரி கூடச் சொல்லிவிட்டார்! இவர் சாதாரணப் பேர்வழியல்ல! ஒரு தனி ரகம்!

1. டி. கே. சி.
2. நாமக்கல்லார்.
3. அண்ணாமலை.
4. வேதரத்னம்.

-இந்தரகத்தைச் சேர்ந்தவர்! இவரே சொல்லும்போது, கூட ஆரிய முறையில் திருமணம் செய்கின்ற மூளைகளைப் பற்றி நான் என்னதான் சொல்வது? கடுமையான சொல் வந்து விடும் என்பதற்காக உங்களுக்கே விட்டு விடுகிறேன்!

வய்யாபுரி கை(வா) யினாற்கூட வந்த விட்டது! இன்னமுமா புரோகிதத் திருமணம்? மரமண்டைகளைக் கேட்கிறேன்; மற்றவர்களையல்ல!

- குத்தூசி குருசாமி  (15-7-50)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It