‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்’ என்பான் பாரதி. இந்தக் கட்டுரையும் அப்படியல்ல; பேச வேண்டிய ஒரு பொருளைப் பேசத் துணியும் ஒரு முயற்சி!

‘எந்த ஒரு சமூகம் தன் குழந்தைகளையும் முதியவர்களையும் பிச்சை எடுக்கவிட்டிருக்கிறதோ, அந்தச் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக்கொண்டு இருக்கிற சமூகம்!’ என்பது அறிஞன் வாக்கு.

இதைச் சற்றே மாற்றியமைத்துச் சொல்வதானால், எந்தச் சமூகம் தன் குழந்தைகளையும் முதியவர்களையும் வேலை வாங்கிக் கொண்டு இருக்கிறதோ, அந்தச் சமூகம் ஒரு சுரண்டல் சமூகம்!’ என்பேன் நான்.

குழந்தைகள் செய்ய வேண்டியது எல்லாம், படிப்பதும் விளையாடுவதும் தான். முதியவர்கள்..? இந்தச் சமூகத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் அவர்கள் போதுமான அளவு வேலை செய்து முடித்தாயிற்று. இனி உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொள்ளாமல் ஓய்வெடுப்பதும், மனதுக்குப் பிடித்தமானவற்றை மட்டும் செய்துகொண்டு எஞ்சிய காலத்தை இனிமையானதாகக் கழிப்பதும்தான் முதியவர்களின் நிஜமான தேவை. அதற்கான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது தான் குடும்பத்தின், சமூகத்தின் கடமை.

அப்படியானால், 70 வயது தாண்டிய முதியவர் ஒருவரை அவர் குடும்பமும் நம் சமூகமும் கொடுமைப்படுத்திக் கொண்டு இருப்பதைப் பார்த்து, நாம் ஏன் வாய் மூடிச் சகித்துக்கொண்டு இருக்கிறோம்?

சோ ராமசாமி தான் அந்த முதியவர்!

அவருடைய பல கருத்துக்களுடனும், அரசியலுடனும், அபத்தமான பேட்டிகளுடனும் எனக்குக் கடுமையான கருத்து வேறுபாடுகள் உண்டுதான். ஆனால், ஒரு மனிதராக அவர் வதைக்கப்படுவதை, வதைபடுவதைப் பார்த்துக் கொண்டு இருக்கப் பொறுக்கவில்லை. பொது வாழ்க்கையில் பல துறைகளில் மிகுந்த புத்திக்கூர்மையுடன் செயல்படுவதாக ஒரு போலி முத்திரையை நிலை நிறுத்தி வைத்திருக்கும் அவர் ஏன் ஓய்வுபெற்று, தான் விரும்பியபடி பொழுதைக் கழிக்க முடியாமல், சூழ்நிலையின் கைதியாக இருக்க வேண்டும்?

தனக்கு முன் ஏதாவது கேள்வி வைக்கப்பட்டு விட்டால் சோவிற்கு, தலைகால் புரியாது. (தலையும் முழங்காலும் ஒரே மாதிரி வழவழப்பாக இருப்பதனாலோ என்னவோ). ஆரம்பித்து விடுவார். தொடர்ந்து உளறுவதில் ஏதாவது சரியான கருத்து வந்து விட்டால், தான் புத்திசாலி என்கிற பொன்னாடையையும், பேத்தலான விஷயங்களுக்கு நகைச்சுவை நையாண்டி என்கிற போர்வையையும் போர்த்துக் கொள்வது இவருடைய நீண்டகால வாழ்நாள் சரித்திரம்.

இவருடைய சொந்தப் பத்திரிக்கை எழுத்திலுமே இதே பாணிதான் கடைப்பிடிப்பது வழக்கம். எந்த ஒரு நிகழ்வுக்கும் எல்லா சாத்தியக் கூறுகளையும் எழுதிக் கொள்வார். நடந்த பிறகு அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறு பிரசுரம் செய்து ஏதோ தீர்க்க தரிசனமாகத் தான் சொன்னது போல் காட்டிக் கொள்வார்.

ஆனால் முன்பெல்லாம் இவற்றை ஒரு தந்திரக் கணக்கோடு கட்டுப்பாட்டுக்குள் வைத்துச் செய்து வந்தவர் கடந்த சில மாதங்களாக முன்னுக்குப் பின் முரணாக உளறுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தைய தொலைக்காட்சிப் பேட்டிகளில் அவருடைய அரசியல் கணக்குகள் அத்தனையும் தப்பிப் போனதை சால்ஜாப்பாக மறைக்க முயன்று வழிந்ததைப் பார்த்தவர்கள் அறிவார்கள். முன்பெல்லாம் தமிழகத்தின் எந்த அரசியல் நிகழ்வு என்றாலும் இவரையும் தேடிப்பிடித்து "இனம்" கண்டு, இவர் முன் மைக் நீட்டி "ம்க்கும்" "ம்க்கும்" என்கிற அருவெருப்பான செருமல்கள் மற்றும் கொனஷ்டைகளுடன் இவர் தருகின்ற பேத்தல்களைப் பேட்டி என்று காட்டி வந்த வடநாட்டுத் தொலைக்காட்சிகள் இப்போதெல்லாம் இவரைக் கண்டு கொள்வதே இல்லை.

சமீபத்தில் குமுதம் என்கிற பத்திரிக்கைக்குப் பேட்டி தருகிறார். அந்தப் பத்திரிக்கை கருணாநிதியைத் தாக்கி எழுதுவதற்கு, எப்போதுமே அந்தக் கருத்து உடைய எவரையும் தேடிச் சென்று அவர் வாய் மொழியாகத் தான் எழுத நினைத்ததை எல்லாம் எழுதித் தீர்த்துக் கொள்ளும். இந்த முறை சோவிடம் சென்று வாயைக் கிண்டியிருக்கிறது.

அந்தப் பேட்டியில் கட்டாய தமிழ்ப் பாடத்தைப் பள்ளிகளில் அரசு சட்ட பூர்வமாக அமல்படுத்த இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், தமிழ் மொழியைப் படிப்பது குழந்தைகளுக்குக் கூடுதல் சுமை என்று திருவாய் மலர்ந்த இவர், இந்தி படிக்க விடாமல் பள்ளிச் சிறார்கள் தடுக்கப்படுவது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். இந்தி மொழி பள்ளிக் கல்வி அளவில் இருக்க வேண்டும் என்பது இவருடைய பேரவா. சொந்தத் தாய்மொழியை, நாளின் பெரும்பகுதியில் காதுகளில் விழுந்து கொண்டே இருக்கும் மொழியைப் படிப்பது சிறுவர்களுக்குக் கூடுதல் சுமையாம்; அந்நிய மொழியாகிய இந்தியைப் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கட்டாயமாக்க வேண்டுமாம். இவ்வளவு முரண்பட்ட கருத்துக்களை ஒரே பேட்டியில் சொல்ல இவர் கூச்சப்படுவதே இல்லை.

முரணாகப் பேசுவதே இவருடைய சிந்தனை பாணி என்றாலும், இவருடைய உளறல்கள் கேட்போரின் சிந்தனையில் விஷம் பாய்ச்ச ஒரு பிரக்ஞையுடனான முயற்சியாகவே எப்போதும் இருக்கும். எதிராள் கவனமாக எதிர்த்து விட்டால் ஹிஹி என்று நையாண்டியாக தன் பேச்சினை இனம் காட்டும் முஸ்தீபுகளுடனேயே பேசுபவர் இப்போதெல்லாம் கட்டுப்பாடு இழந்த உளறல்களைக் கொட்டத் தலைப்பட்டிருக்கிறார்.

இது அல்சைமர்ஸ் (Alhziemer's disease) என்கிற மறதி நோயின் ஆரம்ப அறிகுறி. இந்த நோயைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். மூளையின் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, மறதி அதிகமாகி, மொழி மறந்து, எந்த ஒரு புரிதலும் அற்ற ஒரு நிலை. அந்த நிலை நோக்கி சோ அவர்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்பதே எம் கவலை.

இவை எதுவும் அவருடைய குறைகள் அல்ல; முதுமையில் எவருக்கும் இயல்பானவை. உடல் பலவீனமும், செயல் பலவீனமும் எல்லா மனிதர்களும் முதுமையில் சந்தித்தே தீர வேண்டியவை. ஆனால், அப்போதும் கடும் உழைப்புக்கு அவர்களை உட்படுத்துவதை ஒரு குடும்பமும் சமூகமும் தொடர்ந்து செய்யுமானால், அது மனித விரோதச் செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சோ சராசரியாக இன்று ஒரு நாளைக்கு 12 மணி நேரமாவது விழித்திருக்கிறார். விழித்திருக்கும் நேரம் முழுவதும் பத்திரிக்கை ஆசிரியர் என்கிற போர்வையில், அரசியல், இலக்கியம், ஆன்மீகம் ஆகியவற்றில் அடிக்கும் ஆரியக் கூத்து, வடமொழி இன வெறி, தமிழ் மொழித் துவேஷம் உள்ளிட்ட பணிகள் அவரை ஆக்கிரமிக்கின்றன.

அடுத்த வார இதழ்ப் பக்கங்களைப் படித்து உத்தரவுகளைப் பிறப்பிப்பது, அரசியல் எதிரிகளாக இவர் நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அறிக்கைகளைக் காரசாரமாக எழுதுவது, உடனுக்குடன் வெளியிடுவது, எதிரிகளிடமிருந்து மட்டுமல்ல, இவர் யாருக்கு ஆதரவாக எழுதுகிறாரோ அவர்களாலேயே கூட ஒதுக்கப்படுவதை ஜீரணித்துக் கொள்வது, தன்னை ஒரு புத்திசாலியாக தமிழகத்துக்கு வெளியிலிருக்கும் மீடியாக்களாவது நம்பும் வண்ணம் தொடர் வியூகங்கள் வகுப்பது, நிரந்தர எதிரி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே பிளவு ஏற்படுத்த முயல்வது, தன் ஆதரவுக் கட்சிகளான அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கிடையே எப்படியாவது கனெக்ஷன் ஏற்படுத்த ராப்பகலாகச் சிந்தித்த வண்ணம் இருப்பது, நடுவில் வளர்வது போல் தோற்றமளிக்கும் புதுக்கட்சிகளை அதிமுக பக்கமாகக் கோர்த்து விட முயற்சிப்பது, அது முடியாவிட்டால் எதிர்காலத்தில் அவர்கள் வளரவிடாமல் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளைத் திட்டமிடுவது... இதெல்லாம் போக, எஞ்சிய நேரத்தில் தன் மனதுக்கு விருப்பமான நாடக சினிமா ரசனைகளையும் அனுபவங்களையும் அசைபோடுவது என்று தான் விழித்திருக்கும் 12 மணி நேரத்தில் 10 மணி நேரத்துக்கான உழைப்பை அவர் கொடுத்தாக வேண்டியிருக்கிறது.

உண்மையில், இது பிரமிப்புக்கான விஷயம்தானா?

சோவுக்கு, இனிமேல் வாழ்க்கையில் அடைய வேண்டிய புதிய புகழும் எதுவும் இல்லை; புதிய அவதூறுகளும் இல்லை; சந்திப்பதற்கான புதிய விமர்சனங்களும் இல்லை. அவருக்குச் சூட்டப்படும் புகழுரைகளும், அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் இனி புதிதாக மாறுவதற்கும் வழியும் இல்லை. யார் நிமித்தம் அவர் இந்த முட்கிரீடத்தைத் தரித்திருக்க வேண்டும்?

இதையெல்லாம் ‘விட்டு விடுதலையாகி, சிட்டுக் குருவியைப் போலே சுதந்திரமாகச் சிறகடிக்க வேண்டியவர் அவர். தன்னை உண்மையான பஃபூனாக உரத்துச் சொல்வதற்குத் தடையாக இருக்கும் பத்திரிக்கையாசிரியர் பதவி என்ற துண்டை உதறிவிட்டு, காமெடி எழுத்தாளர் & நடிகராக சுதந்திரமாகச் செயல்பட, இந்த வயதில்கூட முடியாதென்றால் எப்படி?

அவருடைய ரத்த வாரிசுகளுக்கு ஒரு கேள்வி: ‘ஒரு அரசியல்வாதி அல்லாத அரசியல்வாதி, பத்திரிக்கையாளரல்லாத பத்திரிக்கையாளர், மீடியாக்காரர் அல்லாத மீடியாக்காரர், மொத்தத்தில் எதிலுமே ஒரு பொறுப்பற்ற இரண்டும் கெட்டானாக அவரைப் பார்க்காமல், ஒரு தந்தையாக அவரைப் பாருங்கள். தினம் இப்படி உடல் மன உபாதைகளுடன் அவர் பொது வேலைகளைச் சுமந்துகொண்டு அலைக்கழிக்கப்படுவது உங்களுக்குச் சம்மதம்தானா? ஏன் அவருக்கு ஓய்வு தர மறுக்கிறீர்கள்?’

துக்ளக் வாசகர்களுக்கு ஒரு கேள்வி: ‘சோவுடன் துக்ளக்கும் ஓவர் என்பதை எழுதாத விதியாக ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு, இப்போதே அதற்கு மூடுவிழா நடத்திவிடுவதற்கு என்ன தயக்கம்? மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கிவிட்டு, சோனியா கட்சித் தலைவராக இருந்து காங்கிரஸை வழிநடத்துவது போல, சோ அதனை விட்டு வெளியே இருந்து கொண்டு உங்களை வழிநடத்தினால், உங்களால் அவர் அளவுக்கு உளறிக் கொட்டிக் குழப்பி எழுதி ஓர் இண்டலக்சுவல் இமேஜுக்குள் ஒளிந்து கொண்டு சமாளிக்க முடியாமல் போய்விடும் என்று அச்சப்படுகிறீர்களா? உங்கள் அச்சத்தினால், ஒரு முதியவரை இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டுமா?’

சோவுக்கு ஒரு கேள்வி: ‘உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்’ வேண்டுமென்று கேட்ட பாரதிக்கு அது 39 வயது வரைகூட வாய்க்கவில்லை. உங்களுக்கு அது 70 வயது தாண்டும் வரை வாய்த்தது. இன்னும் 20 ஆண்டுகள் உங்கள் விருப்பம் போல் ஓய்வெடுக்கவும், உங்கள் விருப்பம் போல் நாடகங்களை (மேடையில் மட்டும்) எழுதி இயக்கிப் பார்த்துக் கொண்டிருப்பதற்கும் பழைய ஆரியப் புகழ்பாடும் நூல்களுக்கு சமஸ்கிருதப் பூச்சுடன் நகாசு வேலை செய்து பண்டிதப் பம்மாத்து காட்டுவதற்கும் தடையாக இருக்கும் பத்திரிக்கை மற்றும் மீடியாத் துறைத் தொடர்புகளைத் தூக்கி எறியக்கூட வேண்டாம்; கை மாற்றிவிட்டுப் போவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்? இந்தத் தங்கக் கூண்டிலிருந்து உங்களை நீங்களேதானே விடுவித்துக்-கொள்ள வேண்டும்.

நன்றி: மகேந்திரன்.பெ, பனிமலர் மற்றும் மங்கை.

Pin It