கடந்த நவம்பர் 8 நள்ளிரவு முதல் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் கையில் உள்ள எல்லாப் பணத்தையும் வங்கியிலோ, தபால் நிலையங்களிலோ ஒப்படைத்து விடவும், நீங்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை, ஒரு நாளைக்கு ரூ.2000 -த்திற்கு மேல் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளார். இது கருப்புப் பணத்தையும், நாட்டிற்கு வெளியே கள்ளநோட்டுகள் அச்சடித்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதைத் தடுக்கவும் எடுக்கும் நடவடிக்கை எனக் கூறினார். வழக்கமான எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம், வரிகட்டாமல் ஏமாற்றி, கருப்புப் பணமாக அதை பதுக்கி வைக்கும் பணமுதலைகளே என்று ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள கருத்துடன் கொஞ்சம் தேசபக்த மணத்தையும் கலந்து மக்கள் மத்தியில் எடுபடும் வண்ணம் தெளித்திருந்தார்.
இந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தில் 86 சதவீதமாகும். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் இணையதள வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யவோ, பொருட்கள் வாங்கவோ தடையேதும் இல்லை. இதன் மூலம் பங்கு வர்த்தகம், பெருநிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. அதாவது ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள் (organized sectors) தொடர்ந்து இயங்கவும், வங்கியின் மூலம் அல்லாமல் தொண்ணூறு சதவீத அளவுக்கு நேரடி பணப்பரிமாற்றத்தின் மூலம் இயங்கும் ஒழுங்கமைக்கப்படாத (unorganized sectors) வீட்டு விற்பனை (real estate), சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர், வர்த்தகர்கள், அங்காடிகள், மற்ற விற்பனை நிலையங்கள், சாதாரண மக்களின் அன்றாட பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. சுருங்கக்கூறின், உள்நாட்டின் ஒழுங்கமைக்கப்படாத பொருளாதாரம் மொத்தமாக முடக்கப்பட்டுவிட்டது.
- இப்படி மொத்தமாக புழக்கத்திலுள்ள 86 விழுக்காட்டுப் பணத்தை திரும்பப் பெற்று, புதிய பணத்தை புழக்கத்தில் விடவேண்டிய அவசியம் என்ன?
- அதனை மிகச் சரியாக அமெரிக்க தேர்தல் அன்று ஏன் அறிவிக்க வேண்டும் ?
- ஒட்டுமொத்த ஒழுங்கமைக்கப்படாத துறைகளின் மொத்த பொருளாதார நடவடிக்கைகளும் எதற்காக முடக்கப்பட வேண்டும்?
- கருப்புப் பணம் முழுவதும் வெறும் பணமாகவேதான் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று நம்பும் அளவுக்கு அவர்கள் அறிவற்றவர்களா? இல்லையெனில், அவர்களின் நோக்கம் கருப்பு பண ஒழிப்பு இல்லை என்றாகிறது. கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமெனில் முன்பு செய்ததைபோல படிப்படியாக திரும்பப் பெறாமல், அதிரடியாக ஒரே நாளில் ஒழித்துகட்டவேண்டிய அவசியம் என்ன?
- எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல் இவ்வளவு அவசரமாக ஏன் செய்யவேண்டும்?
- இப்படி தனது கட்டுப்பாட்டில் இல்லாத பொருளாதார நடவடிக்கைகளை முடக்கி எதனை சாதிக்க இவர்கள் விரும்புகிறார்கள்? அதனால் பாதிக்கபடப் போவது யார்?
இதற்கு இடதுசாரிகள் முதல், மக்கள் மீது அக்கறை உள்ள அனைவரும், இந்திய அளவில் உள்ள சூழலை மட்டுமே வைத்து கொண்டு, இது சில்லறை வணிகத்தை ஒழித்துக் கட்டி, மக்கள் கையில் உள்ள பணத்தை வங்கிக்கு மாற்றி, மக்களை வங்கி முறையுனுள் கொண்டு வரும் திட்டம் என்பதையும், இந்தியத் தொழிலதிபர்கள் அழிந்து போகும் சில்லறை வர்த்தகத்தையும், மக்கள் வங்கியில் இட்ட பணத்தை கைப்பற்றிக் கொள்ளவும், அவர்களின் பணமற்ற பணவர்த்தக நோக்கத்திற்கு ஏற்ப மக்களை வதைத்து பண்படுத்தும் இந்திய அரசின் திட்டம் என சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதனை இந்த நேரத்தில், இவ்வளவு அவசரமாக செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்பதும், இவை மட்டும்தான் இந்த செல்லாகாசு அறிவிப்பின் நோக்கமா? எதிர்காலத்தில் இது என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும்? என்பதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த கேள்விகளுக்கு இந்திய சூழலோடு உலகளாவிய நிலவரத்தையும் கணக்கில் கொண்டு பார்ப்பதன் மூலமே விடை காண முடியும்.
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எழும் முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடியை, போரின் மூலம் இருப்பதை அழித்து, புதியதை உருவாக்குவதன் மூலமும், புதிய சந்தை திறப்பின் மூலமும் விடை காண்பார்கள். இரண்டாம் உலக போருக்குப்பின், உலக எண்ணெய் உற்பத்தியையும், சந்தையையும் கைப்பற்றி, அதற்கான வர்த்தக ஊடகமாக ஆணைத்தாள் பணமுறை (fiat currency) மூலம் டாலர் என்ற “புதிய உற்பத்தி பொருளையும், வணிகத்தையும்” உருவாக்கினார்கள். இன்று எண்ணையோடு, உலகின் மற்ற அனைத்து வர்த்தகங்களும், இதன் மூலம் நடைபெறும் வகையில் மாற்றி அமைத்திருக்கிறார்கள். தொண்ணூறுகளில் சோவியத்தை உடைத்து புதிய சந்தை திறப்பின் மூலமும், தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக புதிய மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்ததன் மூலமும் தமது நெருக்கடியை தீர்த்துக் கொண்டார்கள். அதுவும் போதாமல் வாங்கும் திறனற்றவர்களையும் வாங்கச் செய்யும், கடன் பொருளாதாரத்தை (https://goo.gl/95sVdP) அறிமுகம் செய்தும் இறுதியில் தோல்வியடைந்தார்கள்.
2008 ஆம் ஆண்டு பெரும் பொருளாதார நெருக்கடியை அறிவித்தார்கள். அதனை சரி செய்ய, மேலும் டாலரை அச்சடித்துக் கொண்டதோடு (quantitative easing), பூஜ்ஜிய வட்டிவிகிதத்தையும் (https://goo.gl/3zCIuA) நிர்ணயித்தார்கள். அச்சடித்த பெட்ரோடாலர் காகிதங்களை சந்தையில் விற்க, உடனடித் தீர்வாக எண்ணெய் விலையை 147 டாலர்கள்வரை (https://goo.gl/n6EDQx) உயரச் செய்தார்கள். நீண்டகாலத் தீர்வாக, இன்னும் தனது முழுக்கட்டுப்பாட்டில் இல்லாத ரசியா, ஈரான், வெனிசுவேலா, லிபியாவின் எண்ணெய் வளங்களையும், இரான், ரசிய நாடுகளின் ஆசிய, ஐரோப்பிய எண்ணெய், எரிவாயு சந்தையையும் கைப்பற்றுவது என முடிவெடுத்து செயல்படத் துவங்கினார்கள். ஈரானை பொருளாதாரத் தடை மூலம் தனது வழியில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். லிபியாவை போர் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். வெனிசுவேலாவில் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். ரசிய எரிவாயு குழாய்க்கு மாற்றாக கத்தார் நாட்டு எரிவாயுவை சிரியா, துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லும் திட்டத்தோடு (https://goo.gl/HUFbBV) சிரியாவில் உள்நாட்டு போரை தூண்டி விட்டார்கள். ரசிய எரிவாயுகுழாய் செல்லும் உக்ரைனில், உள்நாட்டு கலவரம் நிகழ்த்தி ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்தார்கள்.
அமெரிக்காவிற்கு ஏற்படும் நெருக்கடி, அதற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவது இயல்பானது. இனி வெற்றுக் காகிதத்தை வாங்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு பொருட்களை விற்க விரும்பாத சீனா, மற்ற ஏற்றுமதி பொருளாதார நாடுகளான ஜப்பான், தென்கொரியா, பிரேசில், இந்தியாவுடன் பேசி தங்களுக்குள் கூட்டை ஏற்படுத்தி சந்தையைப் பகிர்ந்து கொள்ள முயற்சித்தது. அமெரிக்கா இதைப் பின்னிருந்து கலைத்து விட்டுக் கொண்டிருந்தது. தனக்கு எதிராக செயல்படும் சீனாவை சுற்றி வளைக்கவும், பொருளாதார ரீதியாக வலுவிழக்கச் செய்யும் வேலைகளையும் செய்து வந்தது. அமெரிக்காவின் இந்த ரசிய, சீன எதிர்ப்பு நடவடிக்கைகள், அவர்களை நெருங்க வைத்து ஒன்றாக இணையச் செய்தது. இயல்பாகவே அமெரிக்காவால் பாதிக்கப்பட்ட ஈரான் இவர்களின் அணியில் இணைந்து கொண்டது. சீனா, ஈரான், ரசியாவுடன் இணைந்து வலிமையான ராணுவ, பொருளாதாரக் கூட்டை ஏற்படுத்தி, தங்களின் உற்பத்தி பொருட்களுக்கான சந்தையை தமக்குள் திறந்து கொண்டார்கள். கூடவே, டாலரை தங்களுக்கிடையிலான (https://goo.gl/UDhtrP) பொருளாதார நடவடிக்கையிலிருந்து விலக்கினார்கள் (https://goo.gl/og9nsW). எதிர்காலத்தில் டாலரையும், ஆணைத்தாள் பணமுறையையும் (Fiat currency) நீக்கிவிட்டு ஏற்கனவே பழக்கத்தில் இருந்த தங்கத்தின் அடிப்படையிலான நாணய முறைக்கு (Gold standard) திரும்ப ஆயத்தமானார்கள். தங்களின் இருப்பிலுள்ள தங்கத்தின் அளவை உயர்த்தும் வேலைகளை முடுக்கி விட்டார்கள்.
டாலர் வெறும் வெற்றுக் காகிதமாவதை புரிந்து கொண்டு பல்வேறு நாடுகளும் அதனை படிப்படியாக கைவிடத் தயாரானார்கள். தமது சொந்தப் பணத்தில் வர்த்தகம் செய்யத் துவங்கினார்கள். அதோடு சீனா, “ஒன்றிணைந்த பகுதி ஒருங்கிணைக்கும் சாலை” (one belt one road) என்ற ஆசிய-ஐரோப்பிய நாடுகளை, சந்தைகளை இணைக்கும் மாற்றுப் பொருளாதார முன்னெடுப்பையும், உலக வங்கிக்கு இணையாக, அனைத்து நாடுகளையும் இணைத்து புதிய வங்கியையும், உலக நாடுகளின் வங்கிகளுக்கு இடையிலான பணப்பரிமாற்ற (bank for international settlements) அமைப்பிற்கு மாற்றாக, புதிய அமைப்பையும் நிறுவினார்கள். அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரமும் நலிவுற்றுக் கொண்டிருந்தது. உலக அளவிலும் டாலர் பயன்பாடு குறைந்து கொண்டிருக்கிறது. ஆசியாவின் மிகப்பெரிய எண்ணெய் சந்தையான சீன சந்தையும் அமெரிக்காவின் கையில் இருந்து நழுவிப்போனது. உலக நாடுகளின் நெருக்கடியினால் ஈரானின் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்பட்டது.
மீண்டும் எண்ணெய் விற்பனையில் இறங்கிய ஈரான் டாலரைத் தவிர்த்துவிட்டு எண்ணெய் வியாபாரம் செய்ய ஆரம்பித்தது. இப்போது சீனாவை அடுத்து உலகில் இருக்கும் பெரிய எண்ணெய் சந்தைகள் ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியாவாகும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் மக்கள் ஒட்டச் சுரண்டப்பட்டு விட்டதால், இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சியது போக, கொஞ்சம் ரத்தம் இன்னமும் பாக்கி இருக்கிறது. கூடவே பெரிய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாகவும் இந்தியா இருப்பதால், இல்லாத ஊரில் இலுப்பைபூ சர்க்கரையாக, நிலவும் பெரும் உலக சந்தை நெருக்கடியில் இந்தியாவில் வெறும் முப்பது சதவீத மக்கள் மட்டுமே வாங்கும் சக்தியுள்ளவர்கள் என்றாலும், அதுவே பெரிய சந்தை வாய்ப்பானது. உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்க மற்றும் சீன அணியினர் போட்டியிடும் சூழலில், இவ்விரு அணியினருமே இந்தியாவை தமது பக்கம் கொண்டு வர பேரம் பேசுவதால், இந்தியாவிற்கான கிராக்கி அதிகரித்துள்ளது. சீன அணியினர் இந்தியா தமது அணிக்கு வந்தால் ரஷிய ஆயுதங்களையும், ரஷிய – ஈரான் நாடுகளின் எண்ணெய் எரிவாயுவையும் வழங்குவோம். இதனோடு இந்தியாவில் சீனா முதலீடும் செய்யும், இந்தியாவின் மென்பொருள், மருந்துப்பொருட்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் ஆபரண பொருட்களுக்கான சந்தையை திறந்து விடுவதாகவும் சொல்லி பேரம் பேசினர். அமெரிக்க அணியினர், அமெரிக்காவின் ஆயுதம், சவுதியின் எண்ணெய், ஜப்பானின் முதலீடு, ஆஸ்திரேலியாவின் மூலப்பொருட்களை வழங்குவதாகக் கூறினர். கூடவே, இப்போது அமெரிக்கா தனக்குத் தேவையான பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்து வாங்கி வருகிறது. அதை இந்தியாவிற்கு மாற்றித் தருவதாகவும் பேரம் பேசினர்.
தனது பேரவலிமை அதிகமாகியிருப்பதை உணர்ந்த இந்தியத் தொழிலதிபர்கள் எல்லோரிடமும் பேரம் பேசி பெருமளவு பலனை அடைய முடிவெடுத்தார்கள். அவர்களுக்கு இசைவாக இந்திய அரசு பல்திசை வெளியுறவு கொள்கையை (multi-vector foreign policy) அறிவித்தது. பேரம்பேசும் இடைத்தரகனாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள மோடி உலக நாடுகளுக்கு இடையறாமல் பயணம் செய்து, கண்விழித்து பேரம் பேசிக் கொண்டிருந்தார். அமெரிக்காவிடம் ஆயுதக் கொள்முதல், காப்பீடு, அந்நிய முதலீடு திறப்பு, ஜப்பானுக்கு அணுஉலை, அதிகவேக ரயில், சீனாவுக்கு விரைவு ரயில், ரசியாவுக்கு எண்ணெய், அணுஉலை, ஆயுத கொள்முதல், பிரான்சுக்கு போர்விமானம் என உலகிலுள்ளவர்கள் அனைவருக்கும் இந்தியாவைப் பிரித்துக் கொடுத்தார். இரண்டு அணிகளில் இந்திய தொழிலதிபர்கள் அமெரிக்க அணியின் மீதே அதிகமாக பந்தயம் கட்டினார்கள். மோடி இந்திய தயாரிப்புக் கொள்கையை (make in India) பெருமையாக அறிவித்தார்.
இதனிடையில், அமெரிக்கா, ஐரோப்பிய எரிவாயு சந்தையை ரசியாவிடமிருந்து பிடுங்கும் சிரியப் போரில் தோல்வியைத் தழுவுவதைப் பார்த்த ஜெர்மனி, ரசியாவுடன் ஏற்கனவே இருக்கும் எரிவாயுக் குழாயோடு மற்றுமொரு குழாய் அமைக்க தங்கள் நாட்டின் எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமாக உடன்பாடு செய்து கொண்டது. இதுவரை அமெரிக்காவின் பக்கமிருந்த துருக்கி அதிபர், தனக்கு எதிராக ரசியாவுடன் இணைய முற்பட்டதால் அவரைத் தூக்கி எறிய ராணுவ சதிப் புரட்சியை ஏவிவிட்டது. ரசிய, ஈரானிய நாடுகள் அதிபர் எர்டோகனுக்கு சதியை முன்னமே உளவறிந்து அறிவித்து தங்கள் பக்கம் துருக்கியை இணைத்து கொண்டார்கள். கத்தார்-துருக்கி எரிவாயுவுக்கு பதிலாக, கிடப்பில் போடப்பட்ட ரசிய-துருக்கி எரிவாயுத் திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. மலேசிய, பிலிப்பைன்ஸ் நாடுகள் சீனாவின் பக்கம் சாய்ந்து விட்டன. ரசியாவின் விமான தாக்குதல்கள் காரணமாகவும், ஈரானின் நேரடி கள உதவிகளினாலும், சிரிய ராணுவம் வெற்றியின் விளிம்பை நெருங்கிக் கொண்டிருந்தது. முக்கிய தொழில்துறை நகரான அலெப்போவை (Aleppo) சிரிய அரசு கைப்பற்றினால், போரில் வெற்றி பெற்றுவிடும். அதன்பொருள், அமெரிக்காவின், ஐரோப்பிய எரிவாயு சந்தையை கைப்பற்றும் போர் தோல்வியடைந்து விடும். அது டாலர் மேலாதிக்கத்தின் முடிவுரையாகவும் அமைந்து விடும். இப்போது, அமெரிக்காவின் முன் உள்ளது இரண்டே வழிகள். ஒன்று, தனது அடியாட்கள் சிரியாவில் தோல்வியடையும் நிலையிலிருப்பதால், தானே ரசியா, ஈரானுடன் நேரடியாக போரில் இறங்குவது. அது மறைமுகமாக ஆதரவளித்துக் கொண்டிருக்கும் சீனாவையும், ஐரோப்பிய யூனியனையும் உள்ளிழுக்கும். இரண்டு, தற்காலிகமாக சிலவற்றை விட்டுக் கொடுத்து, பேரம் பேசி பெற்றுக்கொண்டு, சமாதானம் செய்து கொள்வது.
சண்டை செய்ய வேண்டுமென்ற உலகமய தரப்பின் சார்பாக, ஏற்கனவே மத்திய கிழக்குப் போர்களை முன்னின்று நடத்திய ஹிலாரியும், தேசிய நிறுவனங்களை, சந்தையை முதன்மைப்படுத்தும், வெளியுறவில் சமாதனம் பேசச் சொல்லும் தரப்பு சார்பாக, உள்ளூர் வியாபார பணமுதலை ட்ரம்பும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நிறுத்தப்பட்டனர். ஹிலாரி சிரிய போருக்கு தீர்வாக, விமானம் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக சிரியாவை அறிவிக்க வேண்டுமென்றார். அதன்பொருள் அங்கே பறந்து கொண்டிருக்கும் ரசிய, சிரிய விமானங்கள் பறக்கத் தடை விதிப்பதாகும். அதை எப்படியும் ரசியா ஏற்காது. ரஷிய விமானங்கள் மீறி பறக்கும்போது அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்படும். பதிலடி நடவடிக்கைகளை ரசியா செய்யும், போர் மூளும். ட்ரம்ப், ரசிய அதிபருடன் பேசுவேன் என்றார். இதன் பொருள் பேரம் பேசி சமமாகவோ அல்லது கூட, குறையவோ பிரித்துக்கொள்வோம். போர் என்றால் டாலர் நிலைத்து நிற்கும், உலகமயம் தொடரும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் தொடர்ந்து பலனடையும். சமாதானம், தேசிய பொருளாதாரமே முக்கியம் எனப் போனால், அமெரிக்க சந்தையை சார்ந்து இயங்கும் நாடுகள் இருக்கும் பல வாய்ப்புகளை இழக்க நேரிடும். ட்ரம்ப் வார்த்தையில் சொல்வதென்றால் அமெரிக்காவிற்கு முதலிடம் தருவது (America First). அதன் பொருள் அமெரிக்கா தனது அணிகளை கைவிட்டுவிட்டு, மூழ்கும் கப்பலில் இருந்து தான் மட்டும் தப்பித்துக் கொள்வது என்பதாகும். அப்போது அமெரிக்க அணிகளின் நிலை? அதோகதிதான்.
ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கொண்ட சீனா, உள்நாட்டு சந்தையை வலுப்படுத்த தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தை உயர்த்துவதன் மூலமும், தனது உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைக்கு “ஒன்றிணைந்த பகுதி ஒருங்கிணைக்கும் சாலை” திட்டத்தின் மூலமும் தீர்த்துக் கொள்ள தயாரானது. அதன்மூலம் தனது நாணயத்தை எதிர்காலத்தில் உலக நாணயமாக மாற்றும் நோக்கில் செயல்படுகிறது. இதுவரை ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மட்டுமே நம்பி, உள்நாட்டு முக்கிய பொருளாதாரமான விவசாயத்தில் எந்த பங்குமின்றி, வெளிநாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் பொருளை உற்பத்தி செய்து கொடுத்துக் கொண்டு, அவர்களின் பொருளை வாங்கி விற்றுக் கொண்டிருக்கும் இந்திய முதலாளிகள் என்ன செய்வார்கள்? இதுவரை அமெரிக்காவுக்கும் அதன் அணி நாடுகளுக்கும் மென்பொருள், இரும்பு, ஜவுளி, மருந்து, தோல்பொருட்கள், ஆபரண கற்கள் என ஏற்றுமதி செய்து அதையே நம்பியிருக்கும் இவர்களுக்கு மாற்று என்ன? ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு ஏதுவாக, அதிகமாக பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு, அதன் மதிப்பைக் குறைத்து உள்ளூர் மக்களின் உழைப்பை மலிவாக்கி அவர்களை வாங்க வக்கற்றவர்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள். ஏற்றுமதியே இல்லை என்றாகினால் இந்தப் பணத்தை என்ன செய்வது?
அமெரிக்கா தேசியப் பொருளாதாரத்துக்கு மாறினால், அதற்கு ஏதுவாக, தனது பணமதிப்பை, வட்டி விகிதத்தை உயர்த்திவிடுவார்கள். டாலரில் கடன் வாங்கியிருக்கும் இந்திய தொழிலதிபர்களும், இந்திய அரசும் குறைபண மதிப்பு கொண்ட ரூபாயில் சம்பாதித்து, அதிக பணமதிப்பு கொண்ட டாலரில் திரும்ப செலுத்த வேண்டும். வங்கியில் நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்தை, தொழிலதிபர்கள் எடுத்துக் கொண்டது போக, மீதி உள்ள பெரும்பாலான பணத்தை சந்தை நெருக்கடிக்கு தீர்வாக வாங்கும் சக்தியற்றவர்களையும் வாங்க வைக்க வங்கிக்கடன் (நம்ம ஊர் சொல்லில் லோன்) கொடுத்திருக்கிறார்கள். யாருக்கு....? நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் ஐம்பது சதமாக உள்ள சேவைத்துறை தொழிலாளர்களுக்கும் மற்ற பிறருக்கும். முதலாளிகளே என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது அவர்களை நம்பியிருக்கும் இந்தத் தொழிலாளிகள் என்ன செய்வார்கள்? எப்படி வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்துவார்கள்?
தொழிலதிபர்களுக்கு ஏற்பட்ட நட்டம், தொழில் இழப்பு, சந்தை இழப்பு, மூலதன இழப்பை எப்படி சரி செய்வதென கையை, மூளையை கசக்கினார்கள்! வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த, உள்நாட்டு சந்தையை பெருக்க பணத்தின் மதிப்பை அதனை புழக்கத்தில் இருந்து குறைத்து அதற்கு கிராக்கியை ஏற்படுத்தி அதன் மதிப்பை வேறு உயர்த்த வேண்டும். ஏற்கனவே முதலாளிகளுக்கு தந்துள்ள வாராக்கடன்களினால் வங்கிகள் திவாலகிவிடும் நிலையில் உள்ளது. வங்கிகள் திவால் ஆவதைத் தடுக்கவும், அமெரிக்க சந்தை இழப்பால் ஏற்படப் போகும் பொருளாதார இழப்பை சரி செய்யவும் இந்தியாவிற்கு உள்ள ஒரே வாய்ப்பு தனது நாட்டு மக்களை கொள்ளை அடிப்பதுதான்.
தனது பொருளாதார இழப்பை சரிசெய்ய இப்போது இந்தியாவுக்குள் கொள்ளையடித்தால் தான் உண்டு. தன்னைத் தவிர யாரிடம் பணம் இருக்கிறது? வெளியில் இழந்த சந்தையை உள்ளூரில் யாரை காலி செய்து அந்த இடத்தில் உட்காரலாம் என அவசர அவசரமாக யோசித்ததில் உதித்ததுதான் இந்த செல்லாகச்சு திட்டம். சொந்த சகாக்களின் பணத்திலோ, தொழிலிலோ கைவைத்தால் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளவேண்டி வரும், அது சொந்தக் காசில் சூனியம் வைத்து கொண்டதாகிவிடும். தனக்கு அடுத்த நிலையில் உள்ள, அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும், பணத்தில் மேற்கொள்ளும் நடுத்தர முதலாளிகள், வணிகர்கள், இடைத்தரகர்கள், சிறு குறு தொழில் செய்பவர்களின் பணத்தையும், தொழிலையும் பிடுங்கினால்.... கிடைத்தது அருமையான யோசனை! அரசிடம் சொல்லி, தாங்கள் வாங்கிய, கடனை தள்ளுபடி செய்ய சொல்லி பொருளாதார இழப்பை சரி கட்டி கொண்டார்கள் முதலாளிகள்.
நாங்கள் முன்பு சொல்லியது போல கையிலுள்ள பணம் எல்லாம் கருப்புப் பணம் என அறிவித்தார்கள். வெள்ளை என்றால் கணக்கு காண்பித்து மாற்றிக்கொள் என்றார்கள். மக்கள் தமது கையிலுள்ள பணத்தை எல்லாம் வங்கியில் வரவு வைக்கச் சொன்னார்கள். செலவுக்கு மட்டும் கொஞ்சம் பிச்சையிட்டார்கள் (மக்களே அதனை தன் பணம், தன்னுரிமை என நினைப்பதில்லை என்பது அவர்களுக்கு வசதியாகப் போனது). முதலாளிகளின் பண இழப்பு சரி செய்யப்பட்டுவிட்டது. அதிகம் அச்சிடப்பட்ட பணம் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுவிட்டது. திவாலாக இருந்த வங்கித் துறை மறுமூலதனமிடப்பட்டு, உயிர்பிக்கப்பட்டுவிட்டது. சிறு, குறு, நடுத்தர வணிகர்கள், தொழில்முனைவர்களின் மூலதனம் பிடுங்கப்பட்டுவிட்டது. சுழற்சியில் இருந்த பணம் அனைத்தும் பிடுங்கப்பட்டு விட்டதால், இருக்கும் பொருட்களை வாங்க ஆள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. அதனால் உள்நாட்டில் செயற்கையாக பணவீக்கத்தை குறைத்தாகி விட்டது. அதையே காரணம் காட்டி மத்திய வங்கி, கடனுக்கான வட்டி விகித்தை குறைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
இழந்த வெளிநாட்டு மூலதன வாய்ப்பிற்கு பதிலாக, உள்நாட்டில் மக்களிடம் இருந்து வலுகட்டாயமாக பிடுங்கிய பணத்தை - அதாவது வங்கியிலிடச் சொல்லிய பணத்தின் மூலம் - குறைந்த வட்டிக்கு மூலதனம் திரட்டப்பட்டுவிட்டது. இந்த பணத்தட்டுப்பாடு பிரச்சனை தீர்வதற்குள் உள்நாட்டு சிறு, குறு வியாபாரிகளின் வியாபாரம் படுத்துவிடும். இன்னும் கொஞ்ச நாட்களில் அவர்கள் கடையை மூடிவிட்டுப் போய்விடுவார்கள். ஏற்கனவே அவர்களுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் பிரஷ் கடை திறந்து போட்டியிட முடியாமல் நடையைக் கட்டியது. இப்போது அதுபோல் அல்லாமல், தனிக்காட்டு ராஜாவாக அவர்கள் தொழிலைத் தொடங்கலாம். வெளிநாட்டில் இழந்த சந்தையை உள்ளூரில் பிடித்தாகிவிட்டது.
இந்திய மக்கள் அனைவரையும் வங்கிக் கணக்கு துவங்கச் சொல்லி வற்புறுத்துவதன் மூலம், புதிய தொழிலாக வங்கித் துறையிலும் இறங்கி லாபமடையலாம். உள்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் தமிழக அரசு சாராயக் கடைகளை திறந்ததை போல, தனது சங்கிலித்தொடர் கடைகளை (franchise shop களை) திறந்து கொள்ளை லாபமீட்டலாம். அதில் பணமில்லாமல், பணஅட்டைகள் (Debit card) மூலம் பொருளை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதன் மூலம் புதிய பணமற்ற வர்த்தக மற்றும் சேவை தொழில் என்ற புதிய தொழில்களும் கிடைக்கும். அடுத்து அமெரிக்காவிற்கே முதலிடமென்ற அதன் கொள்கையால் பெருமளவு பாதிக்கப்படப் போவது இந்திய மென்பொருள் உற்பத்தி துறை. இந்த வங்கி மற்றும் பணமற்ற வர்த்தக சேவைக்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கவும், மேம்படுத்தவும் வேண்டிய தேவை வரும். அதனைக் கொண்டு தனது மென்பொருள் சேவைத் தொழிலை, நட்டத்தை எதிர்கொள்ளாமல் தொடர்ந்தும் நடத்தலாம். அரசிற்கு முதலாளிகள் வரி கட்டாமல் ஏமாற்றுவதால் ஏற்படும் வருமான இழப்பை, அரசு கட்ட வேண்டிய வெளிநாட்டு கடன் தவணைக்கான பணத்தை, முதலாளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கத் தேவையான பணத்தை, அவர்களுக்கு சேவை செய்ய பணிக்கப்பட்ட அரசை இயங்கச் செய்ய தேவையான பணத்தை, மக்கள் அனைவரையும் பொதுவான வரி விதிப்பிற்குள் (GST மசோதா) கொண்டு வருவதன் மூலமும், இனி வாங்கும் எல்லா பொருட்களுக்கும் வரிசெலுத்த வைப்பதன் மூலமும், அரசின் வரிவருவாயைப் பெருக்கி விடலாம்.
இப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கிய திட்டத்தை (master plan) தீட்டினார்கள். அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் நெருங்க, நெருங்க ட்ரம்ப் வெற்றியடையப் போவதை தெரிந்து கொண்டாலும், அதில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் சமாளிக்க வசதியாக தேர்தல் நாளுக்கு முந்தைய நாளன்று திட்டத்தை அறிவிக்க முடிவு செய்தார்கள். கருப்புப் பண ஒழிப்புப் போர் என்றும், அதிரடியாக ஒரே இரவில் வெள்ளையாக்கப் போகிறேன் என திரைப்படங்களில் வரும் கதாநாயகனைப் போல அறிவிப்பதன் மூலம், தான் ஹீரோவாக மக்கள் மத்தியில் அறியப்படுவோம் என மோடி கனவு கண்டிருப்பார். கூடவே மாநிலக் கட்சிகளுக்கு இந்த செய்தியைக் கசிய விடாமல் பார்த்துக்கொண்டதன் மூலம், அவர்களை இதனோடு சேர்த்து ஒழித்துக் கட்டிவிடவும், வரும் இடைத் தேர்தல்களில் அவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க வாய்ப்பில்லாமல் செய்து, தான் மட்டும் பணம் கொடுத்து வெற்றி பெறவும், இந்த வாய்ப்பை ஆளும்கட்சி பயன்படுத்திக் கொள்ள முனைந்தது.
எதிர்பார்த்தது போலவே ட்ரம்ப் வெற்றி பெற்றுவிட்டார். பொருளாதார நெருக்கடி சமயங்களில் மக்களிடம் தேசியவாதம் பேசி, இனவெறியைத் தூண்டி, அவர்களை திசை திருப்பி, பிரச்சனைக்கு வேறு ஒருவனை காரணம் என விரலை நீட்டி தான் தப்பித்துக் கொள்வதைப் போல இம்முறையும் ஆட்சியாளர்கள் தப்பித்துக் கொண்டார்கள். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்காவின் புதிய அதிபருக்கு, வாழ்த்துச் செய்தி அனுப்பிய கையோடு, சிரியாவில் இறுதி யுத்தத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார். சீனாவில் புதிய சூழலுக்கேற்ப செயல்பட புதிய பொருளாதார அமைச்சரை நியமித்திருக்கிறார்கள். சீன அதிபர், எச்சரிக்கையுடன் கூடிய வாழ்த்தைப் பதிந்திருக்கிறார். ஜப்பான் பிரதமர் நேரில் சந்தித்து வந்திருக்கிறார். இந்திய வெளியுறவுத் துறைச் செயலர், ட்ரம்ப் அமைச்சக சகாக்களை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். அவர் இதுவரை கணக்கிட்டது சரியாகத்தான் இருக்கிறது. நீதிபதி ஆசனத்தில் டிரம்ப் அமர்ந்து தீர்ப்பு சொல்லும் வரை பொறுத்திருப்போம் என்கிறார். உலகின் அரசியல் வட்டத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. அது மக்களைத் தாக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித்தை உயர்த்தப் போவதாக செய்திகள் வருகின்றன. இந்திய பங்குச் சந்தைகள் இறங்கு முகமாக உள்ளது. மொத்த உள்நாட்டு பணத்தேவையை முடக்கியும் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலிட்ட பணத்தை எடுத்துச் செல்வதால் அமெரிக்க நாணயத்திற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.69 ஐ தொட்டு விட்டது, இந்தியாவில், தொழிலதிபர்களுக்கு சாதகமாக அனைவரையும் ஒரே நேரத்தில் தாக்கும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி இதுவரை, ஐம்பதிற்கும் மேற்பட்டோரை கொன்று விட்டு, மார்தட்டிக் கொண்டு வெற்றிவெறிப் புன்னகையுடன் கும்மாளமிடுகிறார் மோடி. மக்கள் அனைவரும் செல்லாத காகிதங்களை கையில் வைத்துக் கொண்டு தெருவில் நிற்கிறார்கள்.
அடுத்து உலக நாடுகள் தங்க மதிப்பின் அடிப்படையில் பணத்தை அச்சிடும் முறைக்கு மாறினால், அப்போது மக்களிடமிருந்து தங்கத்தைப் பிடுங்கி சமாளிக்க ஏதுவாக, இப்போதே தங்கத்தின் மீது மோடி கண் வைக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றன. பணமற்ற வர்த்தகம் மடமடவென உயர்ந்து கொண்டிருக்கிறது. பல்பொருள் அங்காடிகளில் கூட்டம் பெருகுகிறது. அண்ணாச்சி கடைகளில் ஈயோடுகிறது. போராட்டங்களால் நிறைந்து கிடக்க வேண்டிய தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன!
(பின்குறிப்பு: இது பணம், பொருளாதாரம், புவிசார் அரசியல், சந்தை, வங்கி என பல விசயங்கள் பேசுவதால் குழப்பமானதாகவும், புரிந்து கொள்ளக் கடினமானதாகவும் இருக்குமென்றே அனுமானிக்கிறோம். மேலும் டாலர் வீழ்ச்சியின் தொடக்கம் என பொருள்பட, தெரிந்தேதான் எழுதி இருக்கிறோம். இதில் பல கேள்விகள் எழுவதும், எழுப்புவதும் இயல்பானதே. சூழல் மற்றும் நேரம் கருதி சுருக்கமாக எங்கள் பார்வையை முன்வைத்து உள்ளோம். விரிவாகப் புரியும்படி எழுதி, டாலர் வீழ்ச்சியின் தொடக்கமே இது என்பதை நிறுவி, விரைவில் முழுமையாகவும், விரிவாகவும் எழுதி நூல் வடிவில் வெளியிடுகிறோம். நன்றி)
சான்றுகள்:
http://www.zerohedge.com/news/2015-05-24/china-establishes-worlds-largest-physical-gold-fund
http://www.zerohedge.com/news/2015-04-15/collapse-petrodollar-oil-exporters-are-dumping-us-assets-record-pace
http://www.globalresearch.ca/chinas-new-silk-road-one-belt-and-one-road-strategic-eurasia-land-and-sea-transport-corridors/5428226
https://www.rt.com/business/198928-china-world-bank-rival/
http://www.bbc.com/news/world-asia-33307314
https://sputniknews.com/business/201603091036035210-vtb-bank-payment/
https://www.rt.com/business/348826-russia-china-oil-exports/
http://www.reuters.com/article/us-oil-iran-exclusive-idUSKCN0VE21S
http://www.thehindu.com/opinion/lead/Non-alignment-to-multi-alignment/article13982580.ece
http://www.reuters.com/article/us-energy-europe-usa-idUSKCN1101AP
https://www.rt.com/news/348562-putin-erdogan-turkey-pilot/
https://www.theguardian.com/world/2016/jul/16/turkey-attempted-coup-what-we-know-so-far
http://en.farsnews.com/newstext.aspx?nn=13950430001452
https://www.rt.com/business/355245-turkey-restart-tukish-stream/
http://www.reuters.com/article/us-mideast-crisis-aleppo-idUSKCN11E1ET
https://www.theguardian.com/us-news/2015/oct/13/donald-trump-foreign-policy-doctrine-nation-building
https://www.theguardian.com/world/2016/oct/25/hillary-clinton-syria-no-fly-zones-russia-us-war
http://www.wsj.com/articles/china-may-rein-in-wage-rises-to-boost-economy-1457616686
http://www.zerohedge.com/news/2015-06-08/one-belt-one-road-may-be-chinas-one-chance-save-collapsing-economy
http://www.commerce.nic.in/eidb/iecnttopn.asp
http://www.financialexpress.com/opinion/fdi-inflows-who-is-investing-in-india-and-in-what-sectors/28737/
https://goo.gl/od7zqu
http://economictimes.indiatimes.com/news/economy/indicators/urban-households-in-debt-rise-to-22-rural-to-31-nsso-survey/articleshow/55949903.cms
http://www.globalresearch.ca/indias-war-on-cash-the-demonetization-blitzkrieg-the-ice-nine-solution/5561601
http://www.thehindu.com/business/Industry/Services-sector-contracts-on-cash-shortage-worst-in-3yrs-PMI/article16763388.ece
https://goo.gl/mIQyQy
http://www.foxnews.com/world/2016/11/15/latest-airstrikes-hit-syria-aleppo-after-3-week-pause.html?refresh=true
http://www.thehindu.com/news/international/India-optimistic-after-initial-interactions-with-Donald-Trump%E2%80%99s-team/article16696739.ece
- சூறாவளி