டிக்டாக் வீடியோக்களைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்து கொண்டிருக்கின்றது. மற்றொரு புறம் தடை செய்யத் தேவையில்லை என்ற கருத்தும் பேசப்படுகின்றது. நாம் அதைத் தடை செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதத்தை தவிர்த்துவிட்டு டிக்டாக் வீடியோக்களின் சமூக உளவியலை ஆராய்ந்து பார்க்க முயற்சிப்போம்.

tiktokசமூகத்தை ஆளும் கருத்துக்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள் என்பார் மார்க்ஸ். நாம் இந்தக் கருத்தின் மேல் நின்றுதான் டிக்டாக் வீடியோக்கள் பற்றி விவாதத்தைத் தொடர வேண்டி இருக்கின்றது. டிக்டாக் வீடியோக்களை தொடர்ச்சியாகப் பார்ப்பவர்களுக்கும் அந்த வீடியோக்களில் நடிப்பவர்களுக்கும் இடையேயான தொடர்பை, இணைப்புக் கண்ணியை சரியாக இனம் கண்டு கொண்டோம் என்றால் அதன் உள்ளீடாக செயல்படும் அரசியலைப் புரிந்து கொள்ள முடியும்.

டிக்டாக் வீடியோக்களில் திரைப்படங்களில் வரும் வசனத்தை டப்மாஷ் செய்வது, பாடல்களுக்கு டப்மாஷ் செய்வது, நகைச்சுவை காட்சிகளுக்கு டப்மாஷ் செய்வது என்பதைத் தாண்டி அப்பட்டமாக ஆதிக்க சாதிவெறியையும், மதவெறியையும், இன வெறியையும் கூட மிக ஆக்ரோசமாகப் பேசி வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. பெரும்பாலும் இளைஞர்களும், இளைஞிகளும்தான் இது போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்கின்றனர். டிக்டாக் வீடியோக்களை ஓர் ஆய்வு நோக்கில் எடுத்துக் கொண்டு அதன் கருத்தியலையும், பேசுபொருளையும், உள்ளடக்கத்தையும் வைத்து மதிப்பீடு செய்தோம் என்றால், இந்த வீடியோக்கள் அனைத்தும் சாரமாக ஒரு செய்தியைத்தான் சமூகத்திற்கு வழங்குகின்றன‌. அது இன்றைய இளைஞர்களின் சிந்தனை முழுவதும் இந்தச் சமூக அமைப்பு பிரநிதித்துவப்படுத்தும் சீரழிந்துபோன கருத்தியலால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது என்பதைத்தான். பார்ப்பனியமும், முதலாளித்துவமும் உருவாக்கி வைத்திருக்கும் அடிமைத்தனமான ரசனைதான் டிக்டாக் வீடியோக்களின் பங்கேற்பாளர்களையும், பார்வையாளர்களையும் ஒரே புள்ளியில் இணைக்கின்றது.

எப்போது கலை இலக்கியத்தை பாட்டாளி வர்க்கம் தன்னுடையதாக சுவீகரித்துக் கொள்கின்றதோ, அப்போதுதான் அதைத் தன்னுடைய பிரச்சாரத்துக்கும், புரட்சிகர நோக்கத்திற்கும் பாட்டாளி வர்க்கம் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை கலை இலக்கியம் என்பது பெரும்பாலும் பார்ப்பன முதலாளித்துவ சக்திகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. அவை தன்னுடைய ஆதிக்க கருத்தியலை நிலைநாட்டவே கலை இலக்கியத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. சாதி, மதம், இனவாதம், முதலாளித்துவ பயங்கரவாதம் போன்றவற்றை எதிர்த்து அதன் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் கலை இலக்கிய வடிவம் என்பது ஒரு சில சமூக அக்கறை கொண்ட இயக்கங்கள், தனிநபர்கள் இவர்களால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதற்கான சமூக அங்கீகாரம் என்ன என்று பார்த்தால் விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இன்றைய இளைஞர்களின் மனதில் ஆழமாக வேருன்றி கிடக்கும் அரசியலற்ற அற்பத்தனத்தின் பிரதிபலிப்புதான் பெரும்பாலான டிக்டாக் வீடியோக்கள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. மேலும் தனிமனித அந்தரங்கம் என்பது விற்பனை சரக்காக மாற்றப்பட்ட உலகமயமாக்கல் காலத்தில் பெரும்பாலான நபர்கள் அந்தரங்கத்தை வீதிக்கு கொண்டு வருவதன் மூலம் கிடைக்கும் பரந்துபட்ட பார்வையை ரசிக்கும் மனநிலைக்குத் தன்னை தகவமைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அடுத்தவர்களின் அந்தரங்கத்தைப் பார்த்துக் கிளர்ச்சியடைவதும் தன்னுடைய அந்தரங்கத்தை அடுத்தவர்களை பார்க்க வைத்துக் கிளர்ச்சியடைய செய்வதும் கூச்சமற்ற அற்ப புத்திக்காரர்களின் வாடிக்கையாக மாறியிருக்கின்றது

நுகர்வு வெறி என்பது வெறும் பொருட்களை நுகர்ந்து கழிவுகளாக வெளியேற்றுவது மட்டுமல்ல, அது சமூக வலைதள காலத்தில் அதன் உச்சபட்ச பரிணாமத்தை எட்டி இருக்கின்றது. நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு கருத்துக்கும் எத்தனை லைக்ஸ்கள் கிடக்கின்றது, எத்தனை கமெண்டுகள் கிடைக்கின்றது என்பதைப் பொருத்து உங்களது வெறி தூண்டப்படுகின்றது. ஒரு சீட்டாட்டக்காரனின் மனநிலைக்கு அது உங்களை கொண்டு செல்கின்றது. உங்களிடம் இருக்கும் அனைத்தையும் பணயம் வைக்கச் சொல்கின்றது. பத்து லைக்ஸ் வாங்கிய ஒருவன் நூறு லைக்ஸ் வாங்குவதற்காக தொடர்ச்சியாக முன்னைக் காட்டிலும் அதிகமாக அது சரியோ, தவறோ ஆபாசமோ, வக்கிரமோ, பொய்யோ, வதந்தியோ, வன்முறையோ எதையாவது பதிவிடத் தூண்டுகின்றது. லைக்ஸ்களின் எண்ணிக்கையும், பின்பற்றுவோரின் எண்ணிக்கையும், பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் பெருகப் பெருக மூளைக்குள்ளிருந்து ஒரு மேலாதிக்க ஆண்டைத்தனம் உருப்பெருகின்றது. இந்த உலகமே தன்னுடைய வீடியோவைப் பார்க்க காத்துக் கிடப்பது போன்ற மனஅரிப்பு ஏற்படுகின்றது. இந்த அரிப்பு அவர்களை அல்லும் பகலும் அலைக்கழிக்கின்றது. இப்படித்தான் டிக்டாக் வீடியோவை தொடர்ச்சியாக வெளியிடும் ஒருவர் கூடிய விரைவில் இயல்பு பிறழ்ந்த மனநிலைக்கு செல்கின்றார்.

அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டு ஒற்றை அடையாளம் முன்னிறுத்தப்படும் காலத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கான தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள எதையாவது செய்ய உந்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றான். அந்த உந்துதல் அவனை தன்னுடைய அந்தரங்கத்தை விற்பனை சரக்காக மாற்றியாவது அதை அடையத் தூண்டுகின்றது. ஆடையோடு வந்தால் நூறு லைக்ஸ் மட்டுமே கிடைக்கும், ஆனால் அம்மணமாக வந்தால் ஆயிரக்கணக்கில் லைக்ஸ் கிடைப்பதோடு சர்ச்சை ஏற்பட்டு சமூகத்தில் தனித்த அடையாளமும் கிடைக்கும் என்றால் நுகர்வு வெறியும் தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வக்கிரமும் அதையும் செய்து பார்க்க அற்பப் பிறவிகளைத் தூண்டுகின்றது.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் மகிழ்ச்சியை தியாகம் செய்துவிட்டு சாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை பிற்போக்குத்தனத்திலிருந்தும், சுரண்டலில் இருந்தும் விடுவிப்பதற்காகவும் தொடர்ச்சியாக களத்தில் இறங்கி போராடி சிறை சென்று அடிபட்டு உதைப்பட்டு, எந்த மக்களுக்காக போராடுகின்றோமோ அந்த மக்களால் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கான தலைவனாக தனித்த அடையாளத்துடன் புகழோடு இயங்குவது என்பதெல்லாம் வலி நிறைந்த பாதையாகும். அப்படியான புகழை அற்பவாதிகளும், குறுகிய மனம் படைத்தவர்களும் அரசியலற்ற தக்கை மனித‌ர்களும் ஒருபோதும் விரும்புவதில்லை. அவர்களுக்கு உடனடியாக மிக எளிமையாக எந்தவித வலியும் வேதனையும் இன்றி எந்தவித சுய இழப்பும் இன்றி கிடைக்கக் கூடிய புகழே தேவைப்படுகின்றது. அதற்காக எதையாவது ஐந்து பைசாவுக்குக் கூட பெறுமானமில்லாத சில்லரை நடிகர்களின் வசனங்களைப் பேசுவதன் மூலமும், ஆபாச பாடல் வரிகளுக்கு ஆடைகளை அவிழ்த்துக் காட்டி அங்கங்களை காட்சிப் பொருளாக மாற்றுவதன் மூலமும் தன்னை நோக்கி இந்தச் சமூகத்தின் பார்வையை திசைமாற்ற விரும்புகின்றார்கள்.

எந்தச் சமூக பிரச்சினைகளைப் பற்றியும் அக்கறையில்லாத, குறிக்கோளற்ற வாழ்க்கை வாழும் விட்டேத்திகள் தான் இது போன்ற டிக்டாக் வீடியோக்களை வெளியிடுபவர்களாகவும், அதைப் பார்ப்பவர்களாகவும் உள்ளனர். ஒரு மகிழ்ச்சிக்காக இதைச் செய்கின்றார்கள் என்று எளிமைப்படுத்தி இதைப் புரிந்து கொள்ள முடியாது. நாம் எதை விரும்புகின்றோமோ அதைத்தான் பார்க்கவும், கேட்கவும், அனுபவிக்கவும் விரும்புகின்றோம். நம்முடைய நோக்கம் இந்தச் சமூக அமைப்பு கட்டமைத்து வைத்திருக்கும் தனிமனித வாதத்தையும் அது உருவாக்கி வைத்திருக்கும் ஆபாசத்தையும் வக்கிரத்தையும் ஒழித்துக் கட்டி அதன் இடத்தில் ஒவ்வொருவரும் சமூக மனிதர்கள் என்ற சிந்தனையையும் உயர் மனித விழுமியங்களையும் உருவாக்குவது என்றால் நாம் நிச்சயம் இதை விமர்சனக் கண்ணோட்டத்துன் எதிர்ப்பதோடு அதன் உள்ளடக்கத்தை மாற்றியமைக்கவும் முயல வேண்டும்.

நம்முடைய சிந்தனையும் செயலும் தடம்புரண்டு கீழ்த்தரமான வக்கிரத்தை நோக்கி செல்லும்போது அதைச் சீராக்கி சரியான பாதையில் திருப்பிவிட வேண்டிய பொறுப்பு சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. டிக்டாக் வீடியோக்களை ஒரு சமூக மாற்றத்திற்கான கலை வடிவமாக நிச்சயம் நம்மால் பயன்படுத்த முடியும். ஆனால் அரசியல் அறிவற்ற, சமூக அக்கறையற்ற தக்கை மனிதர்களின் கைகளில் அது இருக்கும் வரை தொடர்ச்சியாக அதன் தாக்கம் சமூகத்தின் சிந்தனை வழிதடத்தை செல்லரித்துக் கொண்டேதான் இருக்கும். சமூக அக்கறை கொண்ட பார்ப்பன முதலாளித்துவ அடிமை சிந்தனையை வேரறுக்கப் போராடும் முற்போக்கு சக்திகள் அதன் உள்ளடக்கத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதன் மூலம் முதலாளித்துவத்தின் கண்டுபிடிப்புகளை அதற்கு எதிராகவே நம்மால் பயன்படுத்தி அதை வீழ்த்த முடியும்.

- செ.கார்கி

Pin It