பண்பாட்டுச் சிதைவு மற்றும் கருத்துச் சுதந்திரம் குறித்து தமிழகத்தில் பரவலாக விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில் அமீரகத்தில் துபாய் நகரில் அது குறித்தான கருத்தரங்கம் ‘பண்பாடும் கருத்தும்’ என்னும் தலைப்பில் கடந்த 8.12.2005 வியாழன் இரவு தமிழ் உணவகம்- காயிதே மில்லத் அரங்கில் நடைபெற்றது. துவக்கு இலக்கிய அமைப்பு, தாய்மண் வாசகர் வட்டத்தோடு இணைந்து ஒருங்கிணைத்திருந்த இந்த கருத்தரங்கில் அமீரகத்தில் உள்ள தமிழர் அமைப்புகளைச் சார்ந்த சான்றோர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்விற்கு அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை தலைவர் எம்.ஏ. அப்துல் கதீம் தலைமை ஏற்றார். தாய்மண் வாசகர் வட்ட பொறுப்பாளர் முத்தமிழ்வளவன் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கம் மற்றும் காரணங்களை விளக்கி துவக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இ. இசாக் தொடக்கவுரை ஆற்றினார். தாய்மண் வாசகர் வட்ட அமைப்பாளர் சேர. பட்டணம் அ.மணி, அமீரகத் தமிழியக்க பொறுப்பாளர் ஆசிப் மீரான், துவக்கு இதழின் நிர்வாக ஆசிரியர் நண்பன், துபாய் தமிழ்நாடு பண்பாட்டு கழக தலைவர் குத்தாலம் அஷ்ரப் அலி, அமீரகத் தமிழர் அமைப்பின் நிர்வாகி பரத், முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகி கோவை சிராஜ், அறிவுமதி அன்பர்கள் அவை அமைப்பாளர் தமிழன்பு, ஐபிசி வானொலி தீபம் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் ‘ஊடகச்செல்வர்’ சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். மேலும் அமீரகத்திலுள்ள தமிழன்பர்களும், பத்திரிக்கையாளர்களும், சிந்தனையாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். துவக்கு இலக்கிய அமைப்பின் நிர்வாகக்குழு கவிமதி நிகழ்வில் பங்கேற்றோருக்கு நன்றி கூறினார்.

இறுதியாக தமிழ்ச் சமூக முன்னேற்றத்திற்கு பண்பாடும், கருத்துரிமையும் மிக முக்கியமானதாகும். இவை இரண்டும் நியாயமான எல்லைக்குட்பட்டதாக இருக்கவேண்டும், இவற்றை சிதைக்கிற அனைத்தையும் தமிழர்கள் ஒன்றிணைந்து எதிக்க முன்வர வேண்டும், ஆரோக்கியமான, நேர்மையான விவாதங்களின் மூலம் தீர்வு காண முயலவேண்டும், என்றும் பண்பாட்டை சிதைக்கும் போக்கை புலம்பெயர்ந்த தமிழர்கள் கவனித்து அவற்றை புறக்கணிக்க வேண்டும். இதனடிப்படையில் திரையுலக பிரபலங்களை அழைத்து விழாக்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கலந்தாய்வில் உதிர்ந்த சில கருத்துகள்..

திரு. அப்துல் கதிம்...

பண்டைய தமிழ் இலக்கியங்களும் ஒழுக்கத்தை பின்பற்றுவதை போற்றியே வந்திருக்கின்றன. பெண்களுக்கு கற்பு என்றும் ஆண்களுக்கு நிறை என்று கூறப்பட்டிருக்கிறது. கருத்துரிமையென்பது மற்றவர் உணர்வை உரிமையை அநியாயமாக சிதைக்காதவரை தான். எந்த கருத்தையும் முன்வைக்கும் முன் அந்த சமூக சூழலை உணர்ந்து முன்வைப்பது சிறந்தது. மக்களின் வாழ்வை அறியாதவர்களின் சிந்தனை மக்களால் எதிர்க்கப்படுவது இயல்புதான். அவை சீர் செய்யப்படவேண்டும். தமிழர்களின் தன்மான உணர்வு வளரவேண்டும் அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும். இப்பணியில் அரசியல் காழ்ப்புணர்வு தவிக்கப்பட வேண்டும்.

திரு. முத்தமிழ் வளவன்...

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக திண்ணியத்தில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை கண்டிக்காத பத்திரிக்கையாளர்கள் இன்று கருத்து சுதந்திரம் என்று வரிந்து கட்டிக்கொண்டு வருவது ஏமாற்று வேலையே.. தங்கள் இன மக்களுக்காக போராட்டங்களை நடத்திய மருத்துவர்.ராமதாசு, தொல்.திருமாவளவன் ஆகியோர் சாதிய அரசியல் செய்வதாக கூறியவர்கள், இன்று பொதுப்பிரச்சனைகளுக்காக போராடும் போது அந்த சாதிகளுக்காக போராட வேண்டியதுதானே என்று கூறுவது சிந்தனையாளர்களின் இரட்டை நிலையையே உணர்த்துகிறது.

திரு. இ.இசாக்...

அறிவுசீவிகளின் நோக்கம் குஷ்பு, சுகாசினி போன்றவர்களுக்க்கு ஆதரவளிப்பதோ, அல்லது கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான போராட்டங்களோ அல்ல. அது தமிழர்களின் இருப்பை சிதைக்கும் நோக்கிலே நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட சதியே. தமிழர்களை இழிவானவர்களாகவும், தமிழையும் நீஷபாஷை என்றும் தமிழர்களின் வாழ்வை அழுக்கானதென்றும் கருதியவர்கள், கருதுபவர்கள் தமிழ்மக்களின் போராட்டத்தை நியாயமானதென்றோ, நாகரீகமானதென்றோ கூறுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு நல்ல சமூக சிந்தனையாளர்களும் துணை நிற்பது வருத்தத்தை தருகிறது. தனது கருத்தை சொன்னதற்காக பொடாவில் தளைப்படுத்தி பழ.நெடுமாறன், சுப. வீரபாண்டியன், புதுக்கோட்டை பாவாணன், தமிழ்முழக்கம் சாகுல் அமீது உள்ளிட்ட தமிழ்த் தேசியர்களையும், பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலையும் சிறையிலடைத்த போதெல்லம் மவுனம் காத்துவிட்டு கருத்துச் சுதந்திரத்திற்காக இன்று களமிறங்கி இருக்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் உள் அரசியல் தெளிவானது. தமிழ் தேசிய உணர்வாளர்களை வன்முறையாளர்கள் ஆணாதிக்கர்கள் என நிறுவ முனைவதிலிருந்து இவர்களின் உண்மையான நோக்கம் பெண்ணுரிமையோ, கருருத்துரிமையோ அல்ல என்பது விளங்குகிறது. மோசடி சிந்தனைகளுக்கு சமூக ஆர்வலர்கள் துணை போக கூடாது.

திரு. சேர. பட்டணம் மணி...

தமிழகத்தில் இப்போது ஒழுக்கக் கேட்டை உயர்த்திப்பிடிக்கும் நிலை உள்ளது. பெண்கள் அனைவரும் தாங்கள் ஒழுக்கமானவர்களாக உணர்வதைத்தான் விரும்புகிறார்களே தவிர சில அவதார அருவருப்புகள் சொல்வதை போல அல்ல. தாங்கள் வாழும் சமூக அமைப்பை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற முயற்சிக்கிறார்கள். திரைப்படங்களில் துபாய்க்காரன் மனைவி சோரம் போனவள் என்பது போல நகைச்சுவை காட்சிகளை அமைத்தவர்களின் சிந்தனை தொடர்ச்சிதான் இவை. இது போன்ற சிந்தனைகளை தீவிரமாக எதிர்க்கவேண்டும். பல்முனை எதிர்ப்புகளையும், சதிகளையும் தாண்டி முன்னேற வேண்டிய சமூகம் தனிமனித ஒழுக்கமுடையதாக இருக்கவேண்டும்.. அது ஆண், பெண் இருவருக்குமானதாக இருக்கவேண்டும். எந்த பெயரிலும் ஒழுக்கக் கேட்டை அனுமதிப்பது.. தமிழர் முன்னேற்றத்தை சிதைக்கவே உதவும்..

திரு. அஷ்ரப் அலி...

இந்த பிரச்சினையை இவ்வளவு பெரிதாக்க வேண்டியதில்லை.. நடிகைகள் அங்கும் இங்கும் (வெளிநாடு வந்தால்) எப்படி வாழ்கிறார்களோ அதை சொல்கிறார்கள். இவற்றை கண்டுக்கொள்ளாமல் விடுவது நமக்கு சிறப்பு. எதை செய்தாலும் தமிழர்கள் ஒற்றுமையுடன் செய்யவேண்டும், நம்மிடம் ஒற்றுமையில்லாதால் தான் இன்று இவ்வளவு பிரச்சினைகள். தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பண்பாட்டு சீரழிவுகளை முன்மொழிபவர்களை எதிர்க்க வேண்டும்.

திரு. கோவை சிராஜ்...

இன மதவேறுபாடுகளை தாண்டி, அனைவரும் ஒற்றுமையாக ஒழுக்கமினமையை வலியுறுத்தும் நச்சுக்கருத்துகளையும், இழுக்கைத் தரும் கலாச்சாரத்தை திணிக்கும் இந்த மோசமான சூழலை மிக வலிமையுடன் எதிர்க்க வேண்டும். இன்றைய பிரச்சினை குறித்த தனது கருத்துகளை துணிவாக வெளியிடவேண்டும். சில விசயங்களை போராடி தீர்க்கவேண்டும். அது தீவிரமாக இருந்தாலும் தவறில்லை.. ஆனால் நியாயமானதாக இருக்கவேண்டும். பாபர் மசூதி இடிப்பின் போதும், அயோத்தி படுகொலைகளின் போதும் கோவை வன்முறையின் போதும் ஒன்றும் பேசாதவர்களெல்லாம் இன்று கருத்து, உரிமை என நிற்பது கேலிக்கூத்தாக உள்ளது.

திரு ந.தமிழன்பு...

இன்று நமக்குள் இருக்கும் சாதி போன்ற பல அடையாளங்களும் நம்மால் ஏற்படுத்தப்பட்டதல்ல. அது வந்தேற்களினால் திணிக்கப்பட்டது. இன்று சமூகத்தில் பின் தங்கியிருக்கும் மக்களும் கல்வி அறிவு பெற்று சமூகத்தில் வளரத் தொடங்கி இருப்பதால் வந்தேறிகளுக்குள் அச்சம் நிலவுகிறது. அதைத் தவிர்க்க ஒரு மோசமான சமூக சூழலை உருவாக்குகிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்ணுரிமையை பாதுகாப்பதோடு, ஆணுக்கும் சேர்ந்த ஒழுக்க வாழ்வை தமிழரிடையே நிலை நிறுத்தவேண்டும். தமிழர் ஒற்றுமைக்கும் ஒழுக்கத்திற்கும் எதிரான சதி சிந்தனைகளையும், ஊடகங்களின் போக்கையும் கண்டறிந்து அதை தொடக்க நிலையிலே முறியடிக்க வேண்டும்.

திரு. பரத்..

அமீரகத்தில் நடைபெறும் எந்த தமிழர் விழாவிற்கும் நடிகர் நடிகைகளை அழைக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். பண்பாட்டை சிதைக்கும் அவர்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும், தமிழர் நலனுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் தமிழர்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.

திரு. ஆசிப் மீரான்

இன்றைய தேவை மிகக் கடுமையான போராட்டங்கள்தான், இது போன்ற போராட்ட சூழல் ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கப்படவேண்டும். இன்று சுகாசினியின் கருத்து சுதந்திரம் பத்தி பேசுபவர்கள் பழ.நெடுமாறன், சுப. வீரபாண்டியன் போன்றவர்கள் பேசவே கூடாதென உள்ள நீதிமன்ற தடை பற்றி எதுவும் பேசுவதில்லை. இது போன்ற உள்அரசியல் வாதிகளின் போக்குக்கு சில அறிவுஜீவிகளும் துணை நிற்பது வியப்பாக உள்ளது. இணையத்திலும், இதழிலும் எழுதும் வாய்ப்பு பெற்ற அறிவாளிகள் சமூக சூழலை புரிந்துக்கொள்ளாமல் மூளை திறனை நிறுபிக்கவே முனைகிறார்கள். இவர்கள் மக்களுக்கான சிந்தனையாளர்களாக மாறவேண்டும். அல்லது இது போன்ற சிந்தனையாளர்களை இனங்கண்டு தமிழர்கள் ஒதுக்கவேண்டும்.

திரு. நண்பன்...

சுதந்திரம் என்பது எல்லைகளுக்கு உட்பட்டது, பண்பாட்டை சிதைக்கும் எதுவும் கருத்தாகாது. திருமணத்திற்கு முன் பாலியில் சுதந்திரம் வேண்டும் என்று முன் வைக்கும் பெண்ணியவாதிகள் உண்மையான பெண்ணுரிமைவாதிகள் அல்ல. கருத்து சுதந்திரத்திற்கென கணிமொழி தொடங்கியுள்ள கருத்து.காம் மோசடியானது. இதில் போலிகளுக்கும், ஆங்கில சிந்தனையாளர்களுக்கும் மட்டுமே இடமுண்டு, இப்படியானவர்கள் தமிழ்மண்ணில் கருத்துரிமை காவலர்களாக காட்டிக்கொள்வது அயோக்கியத்தனமானது. இணையத்தில் கருத்துரிமை பேசுகிற எவரும் நேர்மையான விவாதத்திற்கு முன் வருவதில்லை, எதிர்கருத்துகளை தனிமனித தாக்குதல் என தவிர்க்கவே முனைகிறார்கள். இது போன்ற போலிகளை ஒன்றிணைந்து ஒழிக்கவேண்டும்.

ஊடகச் செல்வர். சாத்தான் குளம் திரு. அப்துல் ஜப்பர்...

குஷ்பு, சுகாசினி என்பது பிரச்சனையின் வெளித் தோற்றங்கள். இந்த புற அடையாளங்களை எதிர்த்து போராடுவதைக் காட்டிலும் இதன் பின்னணியில் இருக்கும் பிரச்சனையின் வேர்களை அறிதல் மிக முக்கியம். தொடர்ந்து தமிழர், தமிழர் கலாச்சாரம், அவர்கள் வாழ்வியல் முறைமைகளை சிதைப்பதன் மூலம் அவனை அடையாளமிளக்கச் செய்யவேண்டும் அதற்குண்டான அனைத்தையும் தங்களுக்கு வாய்ப்புள்ள அத்தனை வழிகளிலும் செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஊடகத்துறையின் மூலம் அவர்கள் அதை மக்கள் மனங்களில் விதைத்து வருகிறார்கள். எதையும் இவர்கள் பேசினால் கருத்து சுதந்திரம் அதைத் தமிழ் உணர்வாளர்கள் பேசினால் பாசிசம் என்று கூறுவது வேடிக்கை. மேலும் தமிழன் என்பது ஒரு தகுதி. தமிழர்களுக்கு எதிராக நடக்கும் இந்த சூழ்ச்சிகளை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அது குறித்தான விழிப்புணர்வு ஒவ்வொருவர் நெஞ்சிலும் தீயாக இருக்க வேண்டும்.

செய்தியாக்கம்: முத்துக்குமரன்

Pin It