தலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா..? ஆம் அவர்களைப் பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன்.

Brothel areaஇது சம்பந்தமாக நான் ஏற்கனவே மாமாப்பயலுவ என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். கண்ணுக்கு முன் நடக்கின்ற சம்பவங்களின் கொதிப்பில் மீண்டும் எழுதத் தூண்டுகின்றது இதுபோன்ற கட்டுரைகள்.

மனைவிக்கு துரோகம் செய்யும் தமிழர்கள் என்று எழுதலாமென இருந்தேன். ஏனென்றால் என்னைச் சுற்றி எனக்குத் தெரிந்து மனைவிக்கு துரோகம் செய்யும் கண்ணில் பட்ட தமிழர்களைப் பற்றி மட்டும்தான் எழுதப் போகின்றேன்.

சரி தமிழனை மட்டும் குறிப்பிட்டு கூறியது போல ஆகிவிடுமே..அப்புறம் கருத்துச் சுதந்திரப் பிரச்சனைகள் வந்திடுமோ என்று பயந்துதான் தலைப்பு மட்டுமாவது மாறியிருக்கட்டுமே என்று மாற்றியிருக்கின்றேன்.

அப்படியென்ன துரோகம் என்கிறீர்களா..? வேற என்ன விபச்சாரம்தாங்க.. தமிழன் கடல் தாண்டி வணிகம் செய்தான் என்ற பெருமைகளை சீர்குலைப்பதற்காகவே இவர்கள் கடல் தாண்டி விபச்சாரம் செய்கிறார்கள்.

நான் ஒரு ஹைக்கூவில் கூட குறிப்பிட்டிருக்கின்றேன்:

துபாய்

பகலில்
கட்டிடக்கலை அழகு
இரவில்
கட்டிடக் கீழே அழுக்கு

பெரும்பாலும் இங்கே மனைவியோடு இருக்கும் கணவன்களும் - இறைபக்தியோடு இருக்கும் பேச்சுலர்களும் தப்பித்துக்கொள்கிறார்கள். மாட்டிக்கொள்வது எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களும் - எது நடந்தாலும் கேட்பதற்கு எவனுன்டு என்ற திமிரில் திரிபவர்களும்தான். சிலர் சம்பாதிக்கின்ற பணத்தை வீட்டிற்கு அலுப்பாமல் தானே வைத்து புழங்கி அவற்றை செலவழிக்க வழிதெரியாமல் கடைவீதியில் சுற்றுகின்றவளிடமும் -பாரில் பரதம் ஆடுபவளிடமும் கொடுத்து வீணாக்குகின்றனர்

எனது நிறுவனத்தில் பணிபுரிகின்ற ஒரு கூலித்தொழிலாளி இராமநாதபுரத்தைச் சார்ந்த பவர்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபர் இங்கே நர்சாக பணிபுரியும் ஒரு மலையாளிப் பெண்ணோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் ஒரு நேர்முகத் தேர்வே நடத்தியிருக்கின்றேன்.

எப்படி ஆரம்பிச்சது இது..?

ஒரு தடவை என்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக செல்லும்போது இரத்தம் சோதனை செய்கிற பணியில் உள்ள அந்தப்பெண் பழக்கமானாள்.. பின் நான் அடிக்கடி அங்கு செல்ல ஆரம்பிக்க அப்படியே ஆரம்பிச்சுது.

(அவள் இரத்தம் எடுத்திரக்கின்றாள் இவர் இதயம் கொடுத்துவிட்டார்;)

சரி அந்தப்பெண்ணுக்கு இங்கே ஆதரவுன்னு யாரும் இல்லையா..?

இல்லை..அந்தப் பெண்ணுக்கு கல்யாணமாகி விவாகரத்து ஆகிடுச்சு..இங்க தனியாத்தான் இருக்கா..

சரி அந்தப்பொண்ணு உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லலையா?

சில சமயம் சொல்லுவா..ஆனா நான் தான் எப்படியாவது சமாளிச்சுருவேன்

உங்களுக்கு கல்யாணம் ஆனதாவது தெரியுமா..?

ம் தெரியும் நான் அவகிட்ட சொல்லிட்டேன்..

( என்னடா இழவாப் போச்சு..தெரிஞ்சும் இவர் மேல ஆசைப்பட்டாளா..அப்படியென்றால் இருவருக்குமே காமம் மட்டுமே அடிப்படை இது காதலல்ல)

ஊர்ல மனைவி குழந்தைங்க எல்லாம் இருக்காங்க..அவங்களுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..?

ஒருதடவை எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் எங்க வீட்டுக்கு போன்செய்து சொல்லிவிட உடனே அவ எனக்கு போன் பண்ணி ஓ ன்னு அழ ஆரம்பிச்சிட்டா..என்ன செய்ய அதெல்லாம் ஒண்ணுமில்லைடி சத்தியம் அடிச்சி நம்ப வச்சிட்டேன்..

( நீ சத்தியம் அடித்ததில் அவளுக்கு அழுகை நின்றது. ஆனால் உன் ஆண்மையல்லா அழ ஆரம்பித்துவிட்டது ) அவர் பெருமையாய் சொல்ல எனக்கு கடுப்பாய் இருந்தது.

எப்படி சமாளிக்கிறீங்க..வீட்டுக் கு பணம் அனுப்பணும்..இங்க வாடகை - அவளுக்கு செலவு..?

ஒரு மாசம் அவ வாடகை கொடுப்பா..இன்னொரு மாசம் நான் வாடகை கொடுப்பேன்

( அட இதுதான் லைப் பார்டனர்ரு சொல்றாங்களோ..)

சரி..ஏன் இது தப்புன்னு தெரியலையா உங்களுக்கு..?அது மாதிரி உங்க மனைவியைப் பற்றி நீங்க தப்பா கேள்விப்பட்டீங்கன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்..?

என்ன செய்ய இப்ப விட்டுட்டேன்..இப்ப அதெல்லாம் இல்ல..என்று திக்கி திணறி பதில் சொல்லி சமாளித்தார்

அதிகமாக நோண்டினால் பிரச்சனை என்று நானும் அதற்கு மேல் கேட்காமல் விட்டுவிட்டேன். பாருங்களேன் இந்த பவர்ணத்தை..

ஊரில் மனைவி குழந்தைகள் என்று அழகான குடும்பத்தை வைத்துக்கொண்டு இங்கே இன்னொருத்தியை வைத்திருக்கின்றார். இவருடைய உணர்ச்சிகள்தானே அங்கே அவருடைய மனைவிக்கும் இருக்கும். இது ஆண்மையின் வரம்பு மீறல் இல்லையா..?

ஊரில் இவருடைய மனைவியைப் பற்றி யாராவது தவறாய் இவரிடம் சொல்லிவிட்டால் எந்த அளவிற்கு துடித்துப்போவார்..? தன் மனைவி தனக்கு மட்டும்தான் மனைவியாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் எல்லா கணவன்களைப் போலவே தன் கணவன் தனக்கும் மட்டும்தான் கணவனாக இருக்கவேண்டும் என்ற அவளது ஆசையில் மண் போடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?

எனது ப்ளாட்டிற்கு அருகே வசிக்கும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் இங்கே ஜெபல் அலி என்னுமிடத்தில் பணிபுரிகிறார். அவரது ஊரைச் சேர்ந்தவர்களுக்கு அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். இங்கேயே ஏதோ வியாபாரமும் செய்து கொண்டிருக்கிறார். எப்பொழுதும் அவரை நேருக்கு நேர் சந்திக்கும் பொழுதும் ஒரு அமைதியான சிரிப்பை உதிர்த்து விட்டு செல்வார். இவரா இப்படிச் செய்தார் என்பதை நினைக்கும் பொழுது நம்ப முடியவில்லை.

அவரை ஒருநாள் ஒரு பெண்ணுடன் பார்த்துவிட்டு அதிர்ந்து போய்விட்டேன். பின் அவரது ப்ளாட்டில் வசிக்கும் எனது நண்பனிடம் கேட்டேன். அவனும் சந்தேகத்தோடு கூறினான்.

ஒருநாள் அவர் மொபைல் போனை மறந்து வச்சிட்டு போய்ட்டாருடா..அப்போ ஒரு போன் வந்திச்சு..நான் எடுத்தேன் க்யு நகி ஆயா என்று இந்தியில் ஒரு பொண்ணு பேசுறா..நான் உடனே பக்கத்தில் இருந்த அவரது தம்பியிடம் கொடுத்துவிட்டேன்..அவர் துருவி துருவி கேட்க அந்தப்பெண் போனை வைத்துவிட்டாள்..

அதிலிருந்து அவரது தம்பிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சந்தேகம்டா.. என்று என்னிடம் கூற ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான். பின்னர்தான் அவரைப் பற்றி விசாரிக்கும் பொழுது பல தகவல்கள் கிடைத்தது

அவர் தனது நிறுவனத்தில் வேலைபார்க்கும் சுரா என்ற மலையாளி பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார் என்று.

பின்னர் மதுரையில் இருந்து அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணை விசிட் விசாவில் இங்கு அழைத்து வந்து ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டு விட்டு மெல்ல மெல்ல தனது விஷ நாக்குகளை நீட்ட ஆரம்பித்திருக்கிறார்.

அந்தப் பெண்ணிற்கு வயது 24 க்குள் இருக்கும். இவருக்கோ 40 வயது. அந்தப்பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக கூற அந்தப்பெண்ணோ நான் உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் உங்கள் முதல் மனைவியிடமிருந்து கையெழுத்து வாங்கி வரவேண்டும் என்று பிடிவாதமாய்க் கூற இவர் முதல் மனைவியின் சம்மதம் பெற முயன்று கடைசியில் தோற்றுப் போனார்.

கடைசியில் அவரது தம்பிக்கு விசயம் எல்லாம் தெரிந்து ஊருக்கும் தெரிந்து விட இறுதியில் வேறு வழியில்லாமல் இப்பொழுது மனைவியை அழைத்து வந்திருக்கிறார்.

அவர் செய்தது எவ்வளவு பெரிய துரோகம்..? கடைசிவரை எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கு எடுத்துக் கொள்வேன் என்ற ஒப்பந்தத்தில் திருமணம் முடித்த பிறகு இவன் மட்டும் அந்த ஒப்பந்தத்தை மீறுவது எந்த வகையில் நியாயம்?

ஒருநாள் நண்பர்களுடன் துபாய் டெய்ரா டாக்ஸி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது ஒரு தமிழர் அவரது மனைவியோடு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

அவரது வாகனத்தை வைத்து அவர் சவுதி மற்றும் மற்ற வளைகுடா நாடுகளில் புகழ்பெற்ற ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என தெரிந்து கொண்டேன்.

அவர் தன் மனைவியோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததில் என்ன தவறு என்கிறீர்களா..?

ஒரு கையால் போனை காதில் வைத்திருக்கிறார் இன்னொரு கையால் பெண்ணின் கழுத்தைச் சுற்றியிருக்கிறார்.

அந்தப் பெண் முகத்தை வைத்து அவள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவள் என தெரிய வந்தது.

இவன் ஊருக்குப் போகும்போது மட்டும் ஏதோ கற்புக்கரசனாக – இறை பக்தியாளனாக நடிக்க ஆரம்பிக்கின்றான். எப்போதும் சட்டையில் வாசனைத் திரவியம் - கைகளில் கோல்ட் வாட்ச் – விலை உயர்ந்த சட்டை - என்று சமூகத்தை ஏமாற்றுகிறார்கள்.

ரொம்ப சுத்தம் பார்ப்பார்கள் - டீசண்டான ஆட்கள் போல காட்டிக் கொள்வார்கள். ஆனால் இங்கே இவன் சாக்கடையில் புரண்ட கதை யாருக்குத் தெரியும்..?

விடுமுறையில் ஊரில் தங்கியிருக்கும் இரண்டு மாதமும் மனைவிக்கு விருப்பப்பட்டதை வாங்கிக் கொடுப்பது- தங்கம் - சேலை என்று போன்ற போலியான கவர்ச்சிகளில் மனைவிகள் எதையும் கேட்பதில்லை.

கணவன் துபாய் போய் வந்திருக்கிறான் என்றால் சமூகத்தில் அந்த மனைவிக்கும் ஒரு மரியாதை வர ஆரம்பிக்கிறது அந்த தற்காலிக மரியாதையை அவள் எதிர்பார்க்கின்றாள். ஆனால் கடல் கடந்து சென்றவன் கற்பிழந்து நிற்கிறான் என்று தெரியுமா அவளுக்கு..?

ஆகவே அப்பாவி மனைவிமார்களே உங்கள் கணவரின் நடவடிக்கைகளைப் பற்றி உங்கள் சுற்றுபுரத்தில் இருந்து துபாய்க்கு செல்லுபவர்களிடமும் துபாயிலிருந்து வருபவர்களிடமும் அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருங்கள்.

இவர்களைப் பற்றிய எனது கோபங்களை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எதனால் இப்படிச் செய்கிறார்கள்..? அவர்களுக்கு காமம்தான் அடிப்படையா..? அப்படியென்றால் ஏன் திருமணம் செய்து கொள்கின்றார்கள்? வாழ்நாள் முழுவதையும் விலை மாதுக்களுடனையே கழித்து விடவேண்டியதுதானே..?

சமீபத்தில் நான் கண்ட ஒரு அருமையான திரைப்படம் மெர்க்குரிப்பூக்கள். அதில் காமெடி நடிகர் கருணாஸின் கதாபாத்திரம் மிக அருமையாக படைக்கப்பட்டிருக்கும். டெலிபோன் பூத்தில் வேலைபார்க்கும் ஒரு பெண்ணை காதலித்து இறுதியில் அந்தப்பெண் பாதி உடலுக்கு மேல் இயங்காத ஊனமுற்றவள் எனத்தெரிந்தும் அவளையே திருமணம் செய்து கொள்ளுவார். படத்தின் க்ளைமாக்ஸே அந்தக் காட்சிதான். சினிமாவுக்குத்தான் அந்தக்காட்சி சரிவரும் என்றாலும் மிகவும் மனதை உருக்கிய காட்சி. மனைவியை உணர்சிகளை புரிந்து கொள்ளாமல் உடல் உறவுக்கு மட்டும் மனைவியை தேவையாக்கிக் கொள்ளும் கணவன்மார்களுக்கு அந்தக் காட்சி ஒரு சாட்டையடி.

இதில் பெரிய ஆச்சர்யம் என்றால் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு சென்னையில் சில வருடங்களாய் பிரிந்து இருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

உடல் உறவுகளையும் தாண்டி மனைவியின் உணர்வுளைச் சரியாகப் புரிந்து கொள்பவன் கண்டிப்பாய் மனைவிக்கு துரோகம் செய்யமாட்டான்.

சென்ற வருடம் துபாய் நைஃப் என்னுமிடத்தில் எனது பகுதியைச் சார்ந்த ஒரு மதிப்புமிக்க குடும்பத்தை சார்ந்த சகா என்ற இளைஞன் ஒரு ரஷ்யப் பெண்ணிடம் விலை பேசிக் கொண்டிருந்தான்.

மாடுகள் விலைபேசுதலில்
கைகள் மூடப்படுகிறது
இந்த
மனித விலைபேசுதலில்
கற்புகள் மூடப்படுகிறதா..?

அவள் உடலுக்கு விலை பேசினானா இல்லை இவனுடைய மனைவி இவன் மீது வைத்த நம்பிக்கையை விலை பேசிவிட்டானா தெரியவில்லை?

நான் அந்த இளைஞனை கவனித்து விட அவனும் என்னை கவனித்துவிட்டு பக்கத்தில் உள்ள ஒரு பில்டிங்கில் அருகே உள்ள சந்தில் ஒளிந்து கொண்டான் .

நானும் அவனைக் கவனிக்காமல் செல்வதைப்போல சென்று அந்த ஓரத்தில் உள்ள கேஎப்சி அருகே மறைந்து நின்றேன். அவனோ நான் சென்று விட்டேனா என்று உற்று பார்த்து கவனித்துவிட்டு பின் விலை பேசிக் கொண்டிருந்த அந்த ரஷ்யப் பெண்ணை அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருக்கின்றான்

உடனே அவனுக்கு தெரிந்த இன்னொரு நண்பரிடம் விசயத்தை கூறி அவனுடைய வீட்டிற்கு கண்டிப்பாய் இதனை தெரியப்படுத்துங்கள் அல்லது அறிவுரை செய்யுங்கள் என்று சொன்னேன். அந்த நண்பர் தெரியப் படுத்தினாரா அல்லது அவனை தனியாக அழைத்து அறிவுரை சொன்னாரா எனத் தெரியவில்லை.

இதுபோன்று மனைவிக்கு துரோகம் செய்யும் பச்சைத் தமிழர்கள் ஏராளம் இங்கு உண்டு.

எவளோ ஒருத்தி விதவையாகட்டும்
பரவாயில்லை
மனைவிக்கு துரோகம் செய்பவனுக்கு
மரணதண்டனை கொடுத்தால்தான் என்ன?

- ரசிகவ் ஞானியார்

Pin It