சமூகப் பண்பாட்டுத் தளத்தில் தனக்கென்று ஒரு கட்டற்ற பாதையை உருவாக்கிக் கொண்டு சுதந்திரமாய்ப் பாய்ந்து கொண்டிருக்கிறது காட்டாறு. காட்டாற்றின் இந்தப் பயணம் என்ன மாதிரியான விளைவுகளை இந்தச் சமூகத்தில் ஏற்படுத்திவிட முடியும்? என்கிற அய்யங்கள். இந்தப் பயணம் என்ன செய்வதற்காக..? என்கிற இளக்காரம், இதெல்லாம் என்னமோ..? என்கிற அலட்சியம் இப்படிப் பல பார்வைகளை - குரல்களை எதிர்கொண்டுதான் காட்டாறு பயணிக்கிறது.

இது, தன் கரைகளில் எதிரொலிக்கும் எதிர்மறைக் குரல்கள் குறித்துக் கவலைப்படவில்லை என்பதற்கு ஒரு பெரும் சாட்சி, தன் இலக்கை நோக்கிப் பேரிரைச்சலோடு பாய்வதிலேயே காட்டாறு குறியாயிருக்கிறது என்பதே ஆகும்.

களப்போராட்டக் கலகக்காரர்கள்கூட ஆள்களைக் கருத்தில் கொண்டு சில நேரங்களில் தமது வேகத்தில் சில கூட்டல் கழித்தல்களைச் செய்வதை நாம் அறிவோம். அதுதான் எதார்த்தமும் கூட. ஆனால், பெரியாரியல் என்பது தந்தை பெரியார் அவர்களே குறிப்பிட்டதைப் போல, வெறும் சீர்திருத்தம் அல்ல; ஒரு தலைகீழ் மாற்றம், புரட்சி என்கிற சொற்களைக் காட்டாறு கட்டுப்பாட்டோடு கையாண்டு வருகிறது என்றே சொல்வேன்.

காரணம், இதைச் சொல்வதால் இவர்கள் கோபிப்பார்களோ, இவர்கள் எல்லாம் வருத்தம் அடைவார்களோ, இதனால் இப்படி இப்படி எதிர்ப்புகள் பலப்பட்டுவிடுமோ என்றெல்லாம் கவலைப்படாமல் தான் சொல்ல வருகிற சேதிகளை, நாளைய தலைமுறையின் மீது சுமத்திவிடுவதற்கு காட்டாறு தயக்கம் காட்டியதே இல்லை என்பதுதான் இது காலம் காட்டாறை கவனித்து வருகிறவர்கள் புரிந்திருக்கிறோம்.

இது சரியல்ல என்று சிலர் வாதிடக்கூடும். இது சமூகப் பண்பாட்டுத் தளத்தில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிற ஒரு கிளர்ச்சியின் நாற்றாங்கால் முயற்சி என்று என்போன்றோர் கருதக்கூடும். ஆனால், இவை எதைப்பற்றியும் காட்டாறு கவலைப்படவுமில்லை, கண்டு கொள்ளவும் இல்லை என்பதை அதன் போக்கில் பயணிப்போரின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.

இப்போதுகூட, “சமையலறைகளை உடைப்போம்” என்கிற ஒரு விவாதக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. இது வெறும் விவாதக் களமாக மட்டும் இல்லை என்று நான் நம்புகிறேன். காரணம், கடந்த ஆண்டுகளில் சமையலறைப் புறக்கணிப்பு (Boycott kitchen) என்றுதாம் இவர்கள் சொல்லி வந்தார்கள். அதுவே பெரும் வாத-பிரதிவாதங்களை உண்டாக்கியது. எங்கே? சமூக வெளியிலா? இல்லை...சமூக மாற்றத்திற்கான செயற்பாட்டாளர்களிடையே!

இப்போது முந்தைய கிளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. அதாவது Boycott என்பதிலிருந்து Demolish என்பதாக. அதாவது ‘புறக்கணிப்பு’ அடுத்த கட்டமாக ‘உடைத்து நொறுக்குவது’ என்பதாக அந்தச் சொல் முன்னோக்கி நகர்ந்திருக்கிறது.

Demolish kitchen சமையலறைகளை நொறுக்கு வோம் என்றால் என்ன? வீட்டுக்குள் ஏற்கனவே கட்டி வைத்திருக்கிற சமையல் அறைகளை எல்லாம் சம்மட்டியால் அடித்து உடைத்துவிட்டு சமைய லறை இல்லாத வீடாக்கிவிடுவதா? என்றால், அது இல்லை. சமையலறைக்கென்றே ஒரு ஜீவன் இந்த சமூகத்தில் வளர்க்கப்படுகிறதே அதை மாற்றுவது.

பெண்ணியவாதிகள் என்போர் முதற்கட்டமாக, சமையல் என்கிற தொல்லையிலிருந்து பெண் மக்களை வெளியேற்றுவதற்கு முயற்சிப்போம் என்பதுதான் அது என்று நான் புரிந்து கொள்கிறேன்.

அப்படியா? அப்படியானால் சாப்பிடுவதற்கு என்ன செய்வது? என்று ஒரு வித மிதப்பான கேள்வி வருகிறது. ஆண்களிடமிருந்து மட்டுமல்ல; பெண்களிடமிருந்தும் தான். நல்லது. இதே கேள்வியால் ஏளனத்தோடும், மிதப்போடும் கேட்பதற்குப் பதிலாக, கொஞ்சம் கவலையோடும், உண்மையான தேவையின் அக்கறையோடும் கேட்டுப்பார்க்கலாமே?

இந்தச் சமூகத்தில் மலம் அள்ளுவதற்கு என்றே ஒரு சாதி பரம்பரை பரம்பரையாக இருக்கிற காரணத்தினால்தானே மனிதர்கள் மலம் அள்ளும் மகா கேவலமான ஒரு சமூக அமைப்பை இந்த விஞ்ஞான காலத்திலும் மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டு, மலம் அள்ளும் தொழிலாளியின் துயரங்களை வெட்கமே இல்லாமல் நாம் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்.

இதே போலத்தான் சமைக்க, துவைக்க, வீட்டைப் பராமரிக்க, வாரிசுகளைச் சுமந்து பாதுகாக்க என்று ஒரு சாதி (பெண்கள்) இருக்கிறது என்பதால் தானே அதை மாற்றவோ, அதில் திருத்தம் செய்யவோ அக்கறை காட்டாமல் இந்த ஆணாதிக்கச் சமூகம் அமைதியாய்க் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு கள்ள மவுனங்களும் ஒற்றைப் புள்ளியில் நிற்கின்றனவா? இல்லையா?

ஆக, சமையலறைகளை உடைப்போம் என்கிற முழக்கத்தின் பின்னணியில் ஒரு புரட்சிகரமான சிந்தனையின் போர்க்குரல் இருக்கிறது என்பதாகவே இதை நான் பார்க்கிறேன். மிகைப்படுத்தப் பட்டவையாகத் தெரியுமானால் அவர்கள் நரைத்த கிழவனின் உரத்த முழக்கங்களை மீண்டும் ஒருமுறை ஊன்றிப் படித்து உண்மையை உணர்ந்து கொள்ளவேண்டும் என்று மிக்க பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்.

சமையலறை உடைப்பு என்ற முழக்கத்தின் கூடவே, பால் வேறுபாடு களைந்து பொது இடங்களைப் பயன்படுத்துவது, பள்ளி-கல்லூரிகளில் பொதுவிடுதிகள் அமைப்பது, பாலியல் கல்வி, காதுகுத்து, பூப்புநீராட்டு விழாக்கள் தடை, திருமணத்தில் பெண்ணின் கருத்துகளை - உரிமைகளைப் பாதுகாப்பது, திருமணம் செய்து கொள்ளாமல் வாழவிரும்பும் பெண்களுக்கான விடுதிகள், தனிக்குடித்தனம், குலதெய்வ வழிபாடு தடை, சிவப்பழகு விளம்பரத்தடை, கணவன் பெயரிலான பாலியல் வன்முறை, திருமணக் கொடைத் தடை, குடும்பப் பொறுப்புகளில் சமபங்கு, சொத்துரிமை இப்படி பல முழக்கங்களை முன் நிறுத்துகிறது இந்தச் சமையலறை உடைப்பு போராட்டம்.

மேலோட்டமாக பார்ப்போரும், மாற்றங் களுக்கு எதிரானவர்களும் இவற்றிற்கு மிக எளிய விடையைச் சொல்லிவிடுகிறார்கள். இதெல்லாம் சரிப்பட்டு வருமா? என்கிற ஏளனக்கேள்விதான் அவர்களது விடை என்பது நமக்குத் தெரியும். இவர்களையும் உள்ளடக்கிய இந்தச் சமூகத்திற்கு நான் ஒன்றைச் சொல்வேன். இவையெல்லாம் ஒரு காலத்தில் இந்தச் சமூகத்தால் விலக்கப்பட்டு, இவற்றைச் செய்வதே நகைப்புக்குரியது, வெட்கக் கேடானது என்கிற அளவுக்கு இந்த மூடத்தனங்கள் முடக்கப்படும் காலம் வரும். அதேபோல் இங்கே வேண்டும் என்று முன்மொழியப்பட்டிருக்கிற கோரிக்கைகள் நடைமுறைக்கு வந்து, இவற்றுக்காகவா ஒருகாலத்தில் நீங்கள் போராடினீர்கள்? என்று நாளைய நம் சந்ததிகளே நம்மோடு பேசுவார்கள்.

எனவே காட்டாறு முன்மொழிந்திருக்கிற இந்த முழக்கங்களை அப்படியே தமிழ்நாடு திராவிடர் கழகம் வழிமொழிகிறது. இறுதியாய் கூடுதலாய் ஒரு செய்தி.

கடந்த ஆண்டு பெரியார் நினைவு நாளில் இருந்து எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகள் பெரும்பாலும் (தவிர்க்க முடியாத ஒன்றிரண்டு கிழமைகள் தவிர) Boycott kitchen தான். அதாவது ஞாயிறு காலையில் நாங்கள் வழக்கத்துக்கு மாறாக தாமதமாகவே எழுவோம். எனது இணையர் நாகராசன்தான் தேனோடு சாண்ட்விச் அல்லது ப்ரட் ஆம்லெட் போன்ற ஒரு சிறிய அளவிலான சிற்றுண்டியைத் தயார் செய்வார். அவ்வளவுதான் மதியம் இரவு இரண்டு வேளைகளும் உணவகங்களில் சாப்பிடுவோம் அல்லது சில வேளைகளில் சமைக்காத உணவு.

ஞாயிறு அன்று எங்கள் வீட்டில் அடுப்புப் பற்றவைக்கிற வேலையை 75 சதம் குறைத்துள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மகிழ்ச்சியைப் பெருக்க முயற்சிக்கிறோம். எங்கள் குழந்தையிடமும், எங்கள் வீட்டில் புழங்கும் குழந்தைகளிடமும் இந்தச் செய்தியைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். பெரியார் பற்ற வைத்துள்ள புரட்சி நெருப்பு என்பது காலந்தோறும் பற்றிப் படர்ந்து கொண்டே இருக்கும். அது பிற்போக்குகளைச் சுட்டெரிக்கும்! முற்போக்கு களுக்குக் கதகதப்பான சுகத்தை, மகிழ்ச்சியை பகிர்ந்தளிக்கும்.

செ.மா.சாந்தி, தமிழ்நாடு திராவிடர் கழகம்

Pin It