மரபுசார் வாழ்வியல் (Traditional Lifestyle) எனும் சொல்லாட்சியைத் தவறாகப் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் வீட்டிலேயே உயூடியூபைப் பார்த்து மகப்பேற்றுக்கு (பிரசவத்துக்கு) முயல, கிருத்திகா எனும் அந்தப் பெண் துடிதுடித்துப் பலியான கொடுமை அண்மையில் திருப்பூரில் நடந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது பேசுபொருள் அஃது இல்லை. இது நடந்த சில நாட்களிலேயே ‘வீட்டிலேயே மகப்பேறு பார்ப்பது எப்படி?’ என ஒரே நாள் பயிற்சி வகுப்பில் கற்றுத் தந்து விடுவதாக விளம்பரம் செய்திருக்கிறார் இணையப் பெரும் புகழ் ஈலர் பாசுகர் (Healer Bhaskar)! இப்பொழுது அவரைப் பிடித்து உள்ளே தள்ளியிருக்கிறது காவல்துறை.

healer baskarஇயற்கை சார் மருத்துவம், இயற்கை சார் அறிவியல், இயற்கை சார் தொழில்நுட்பம் என இயற்கையை ஒட்டி ஒரு மாபெரும் நாகரிகத்தையே கட்டமைத்தவர்கள் தமிழர்கள். ஆகவே பழந்தமிழர்களின் இயற்கை சார் வாழ்வியலுக்கு, மரபார்ந்த வாழ்க்கை முறைக்கு மாறுவது என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் நமக்குத்தேவையில்லை. ஆனால் இன்று நாம் கடைப்பிடிக்க முயலும் வீட்டு மகப்பேறு (home birth) உண்மையிலேயே நம் மரபைச் சார்ந்த இயற்கை வழிமுறைதானா? ஈலர் பாசுகர் பரிந்துரைப்பது மரபு வழி மருத்துவ முறைதானா? இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை காண்பதே திருப்பூர் கிருத்திகா போல் மேற்கொண்டு யாரும் உயிரிழக்காமல் தடுக்கும். அதற்கான சிறு முயற்சியே இப்பதிவு.

இதற்குப் பெயர் மரபு வழி மருத்துவமா?

இன்று ஈலர் பாசுகரைக் கைது செய்தவுடன் “மரபு வழி மருத்துவத்தை வலியுறுத்தியதற்காகக் கைது நடவடிக்கையா?” எனப் பலரும் எகிறிக் குதிக்கிறார்கள். எது மரபு வழி மருத்துவம்? ஈலர் பாசுகர் வலியுறுத்துவது மரபு வழி மருத்துவமா? அப்படிச் சொன்னால், ஒன்று – நீங்கள் தமிழர் மரபு வழி மருத்துவம் பற்றி எதுவுமே தெரியாதவராக இருக்க வேண்டும்; அல்லது, ஈலர் பாசுகரின் நூல் எதையுமே படிக்காதவராக இருக்க வேண்டும்.

ஈலர் பாசுகர் பரிந்துரைப்பது மரபு வழி மருத்துவமோ, இயற்கை மருத்துவமோ இல்லை; ‘மருந்தில்லா மருத்துவம்’! “மருந்து என்பதே உடம்புக்குத் தேவையில்லை. எப்பேர்ப்பட்ட நோய் வந்தாலும் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் தன்மை உடம்புக்கு உண்டு” என்பதுதான் ஈலர் பாசுகரின் அடிப்படையான மருத்துவக் கொள்கை! (பார்க்க ஈலர் பாசுகர் எழுதிய ‘அனாடமிக் தெரபி’ எனப்படும் ‘செவிவழித் தொடு சிகிச்சை’).

இது சரியா? உடம்புக்கு அப்படித் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் உண்டு என்றால் எதற்காக அந்தக் காலத்திலேயே சித்தர்கள் வகை வகையாக இத்தனை மருந்துகளைக் கண்டுபிடித்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்? ஆங்கில மருத்துவர்கள்தாம் நம்மிடம் பணம் பிடுங்குவதற்காகத் தேவையில்லாமல் ஏராளமான மருந்துகளை நம் தலையில் கட்டுகிறார்கள் என ஈலர் பாசுகர் சொல்கிறார். அது சரியென்றே வைத்துக் கொள்ளலாம். நான் கேட்பது ஆங்கில மருத்துவர்களைப் பற்றியோ, பிற மருத்துவ இயல்களைச் சார்ந்த இந்தக் கால மருத்துவர்களைப் பற்றியோ இல்லை; தமிழ் மருத்துவ முன்னோடிகளான சித்தர்களைப் பற்றி.

நோயே வராமல் வாழ யோகாசனம்; நோய் வந்தாலும் மருந்தே இல்லாமல் தீர்த்துக் கொள்ள வருமப் பண்டுதம் (வரும சிகிச்சை); அதிலும் சரியாகா விட்டால் ஒவ்வொரு நோய்க்கும் விதவிதமான மருந்துகள், மாத்திரைகள், சூரணங்கள், இலேகியங்கள், பற்பங்கள்; இப்படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அத்தனை நோய்களுக்கான மருந்துகளையும் கண்டுபிடித்து வைத்து, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களுக்கும் நாமே மருந்து கண்டுபிடித்துக் கொள்ள ஏற்றவாறு முறையான மருத்துவ இயலையும் வகுத்து வைத்து விட்டுச் சென்ற நம் சித்தர்கள் பித்தர்களா? அல்லது எந்தப் பெருநிறுவனங்களுக்குச் (corporates) செம்பு தூக்க, எந்த இல்லுமினாட்டிகளுக்கு விசிறி வீசச் சித்தர்கள் இவற்றை நம் தலையில் கட்டினார்கள்?

‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்று முழங்கிய சித்தர்களின் மரபில் வந்த நாம், ‘மருந்து என்பதே உடம்புக்குத் தேவை இல்லை’ என்பவரை மரபு வழி மருத்துவர் எனச் சொன்னால், அதை விடநம் மரபுக்கும் நம் முன்னோடிகளுக்கும் நாம் இழைக்கக்கூடிய இரண்டகம் (துரோகம்) வேறு ஏதாவது இருக்க முடியுமா?இதை மரபு வழி மருத்துவம் எனச் சொன்னால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கே கடைப்பிடிக்கப்பட்டு வரும் சித்த மருத்துவத்தை என்ன பெயர் சொல்லி நாம் அழைப்பது?

ஈலர் பாசுகருடைய மருத்துவ முறையின் அழகு!

அதற்காக, மருந்தில்லா மருத்துவம் போன்ற புதிய முறைகளுக்கு நாம் மாறவே கூடாது என்பதில்லை. தாராளமாக மாறலாம். முன்பே கூறியது போல் யோகாசனம், வருமப் பண்டுதம், அக்குப்பஞ்சர்என எத்தனையோ பேர் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய மருந்தில்லா மருத்துவ முறைகள் பல உள்ளன. அவற்றுக்கு மாறுவதில் தவறில்லை. ஆனால் ஈலர் பாசுகரின் மருந்தில்லா மருத்துவம் இப்படிப்பட்டதா?

ஈலர் பாசுகர் என்ன சொல்கிறார்? “நாக்குதான் மருத்துவர்; சுவைதான் மருந்து. உங்கள் நாக்கு எப்பொழுது எந்தச் சுவையை அதிகம் கேட்கிறதோ அப்பொழுது, அந்தச் சுவை கொண்ட உணவு வகைகளைப் போதுமான அளவுக்குச் சாப்பிடுங்கள். நோய் குணமாகி விடும்” என்கிறார்.எப்படி எனக் கேட்டால், உடம்புக்கு என அறிவு உள்ளதாம்!நம் உடம்புக்கு எப்பொழுது எது தேவை என்பது அதற்கே தெரியுமாம்!

நீரிழிவு வந்தால் இனிப்புச் சாப்பிடக்கூடாது என்பது அலோபதி, சித்தம், ஆயுர்வேதம் என எல்லா மருத்துவர்களும் சொல்லும் அடிப்படைக் கட்டுப்பாடு. காரணம், கணையம் சரியாக வேலை செய்யாமல் இன்சுலின் சுரக்காத காரணத்தால் ஏற்படும் நோய் அது.எனவே மீண்டும் கணையம் சரியாக வேலை செய்யும் வரை இனிப்பைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

ஆனால் இவரோ, “கணையம் செயல்படாமல் போவது என்பது எங்கோ ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே நிகழும். மற்றபடி, இன்று நீரிழிவு நோயாளிகள் எனச் சொல்லப்படும் யாருக்கும் கணையத்தில் கோளாறே கிடையாது. சாப்பிடும் உணவு முறையில்தான் கோளாறு. சாப்பிடும்பொழுது தொலைக்காட்சி பார்ப்பது, படிப்பது, வேக வேகமாகச் சாப்பிடுவது போன்ற காரணங்களால் உணவில் இருக்கும் பெரும்பாலான சர்க்கரை கெட்ட சர்க்கரையாக மாறுகிறது. கணையம் நல்ல சர்க்கரைக்கு மட்டும்தான் இன்சுலின் கொடுக்கும்; கெட்ட சர்க்கரைக்குக்கொடுக்காது.இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் இன்சுலின் சுரக்கவில்லை என்றவுடன் கணையம் கெட்டுப் போய்விட்டது என்கிறோம். இது தவறு! கவனச்சிதறல்கள் ஏதும் ஏற்படாமல் முழுக் கவனத்தையும் உணவின் மீது வைத்து, நன்றாக மென்று, நிறுத்தி, சுவைத்துச் சாப்பிட்டால் போதும். உணவில் இருக்கும் எல்லாச் சர்க்கரையும் நல்ல சர்க்கரையாக மாறி விடும்;கணையமும் இன்சுலினைச் சரியாகச் சுரக்கும்; எல்லாச் சர்க்கரையும் சரியாகச் செரிமானமாகிக் குருதியில் கலக்கும்; நீரிழிவு நோய் போய் விடும்” என்கிறார்.

என்ன தலை கிறுகிறுக்கிறதா? இப்படி ஒவ்வொரு நோய் பற்றியும் பக்கம் பக்கமாய் உளறித் தள்ளியிருக்கிறார் மனிதர். மொத்தம் 320 பக்கங்கள்! முழுவதும் படித்துப் பாருங்கள்! கிறுகிறுப்பென்ன, கிறுக்கே பிடிக்கும்! சளி, இருமல், தும்மல், தலைவலி தொடங்கி ஆத்துமா, காசம், புற்று நோய், எயிட்சு என மொத்தம் 80-க்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துவதாக நூலின் தொடக்கத்தில் பட்டியலிடுபவர், கடைசியில் அத்தனை நோய்களுக்குமான தீர்வாகச் சொல்வது இதைத்தான் – அதாவது, “உங்கள் நாக்கு எதைக் கேட்கிறதோ அதைக் கவனச்சிதறல் இல்லாமல்,போதும் எனத் தோன்றுகிற வரைக்கும் சாப்பிடுங்கள்! இருமல் முதல் எயிட்சு வரை அத்தனையும் பறந்து விடும்” என்கிறார்.

அறிவு என்பது எலிப் புழுக்கை அளவு இருப்பவனாவது இதை நம்புவானா? காய்ச்சல் கண்டிருக்கும் குழந்தை குளிர்பானம் கேட்டால் என்ன செய்வீர்கள்? ‘குழந்தையின் உடம்புக்கு இப்பொழுதுஅது தேவைப்படுகிறது. அதனால்தான் கேட்கிறது’ என வாங்கிக் கொடுத்து விடுவீர்களா? நடுக்குச் சுரம்தான் (ஜன்னி) வரும்! வயிற்றுப்புண் (ulcer) வந்த எத்தனையோ பேர் நாக்கு விரும்புகிறதே என்பதற்காக ஒரே ஒரு நாள் கார வகைகளைச் சாப்பிட்டு விட்டுப் பின்னர் படும் பாடு அவர்களுக்குத்தான் தெரியும்.

எந்த நோய்க்கு எதைச் சாப்பிடக்கூடாதோ அதைத் தவறிச் சாப்பிட்டு விட்டாலே நோய் தீவிரமாகும்; உடம்பு பாடாய்ப் படுத்தும் என்பது நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் பட்டுத் தெளிந்த, கண்கூடான உண்மை. அதையே ஒருவர் தலைகீழாக மாற்றிச் சொல்கிறார் என்றால், அவர் கடைப்பிடிக்கச் சொல்வது மரபு வழி மருத்துவமா, இயற்கை சார் மருத்துவமா என்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்; முதலில் அது மருத்துவமா? அட, அதைக் கூட விடுங்கள்! நல்ல மனநிலையில் இருக்கிற ஒருவர் பேசக்கூடிய பேச்சா இது?

இப்படிச் சுற்றி வளைத்து இவர் சொல்ல வருவது என்ன? கவனச் சிதறல்கள் நிறைந்த, துரித வேகத்திலான இயந்திரமய வாழ்க்கை முறைதான் எல்லா நோய்களுக்கும் காரணம் என்பதுதானே? அப்படிப்பட்ட வாழ்க்கை முறை இப்பொழுதுதானே நிலவுகிறது? நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கிடையாதே! அன்றைக்குத் தொலைக்காட்சி போன்ற கவனச் சிதறல்கள் இல்லையே! காலையில் வேக வேகமாக அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் ஓடும் வாழ்க்கை முறை இல்லையே! அப்பொழுது இந்த நோய்களெல்லாம் எப்படி வந்தன?

அட, நீரிழிவு, உதிரக் கொதிப்பு போன்றவையெல்லாம் அந்தக் காலத்தில் பரபரப்பான வாழ்க்கை முறை கொண்ட பணக்காரர்களுக்குத்தான்வந்தன என்றே வைத்துக் கொள்வோம். மற்ற நோய்கள்...? எத்தனையோ ஏழைகள் ஆத்துமா, வயிற்றுப் புண்,எலும்புருக்கி, புற்று நோய் போன்றவற்றால் அன்றும் பாதிக்கப்பட்டுத்தானே இருந்தார்கள்? அவர்களுக்கு அவை எப்படி வந்தன? சிந்திக்க வேண்டாவா?

ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன. அதற்கேற்ப அவர்களுக்கான நோய்க் காரணங்களும் மாறுபடும். ஒருவருக்குப் போதுமான உணவு கிடைக்காததால் வயிற்று வலி வரும்; இன்னொருவருக்கு அளவுக்கு மீறி உணவு உண்பதால் வரும். சிலருக்குக் கொழுப்புக் காரணமாக இதயக்கோளாறுஏற்படும்; சிலருக்கு மன அழுத்தத்தினாலேயே கூட அஃது உண்டாகும். எத்தனையோ பேர், தலைமுறை வழி நோய்களால் (hereditary diseases) தாக்கப்பட்டிருக்கிறார்கள். பலர், உறவுக்குள்ளே மணம் புரிந்த பெற்றோருக்குப் பிறந்ததால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி அவரவர் வாழ்க்கை முறை, நிலைமைக்கேற்ப அவர்களுக்கான நோய்க் காரணிகளும் எவ்வளவோ மாறுபடும். அப்படியிருக்க, வாய்க்குப் பிடித்ததை, கவன ஒருமைப்பாட்டோடு, போதும் போதும் என்கிற அளவுக்கு வளைத்துக் கட்டித் தின்றால் உலகில் உள்ள அத்தனை பேருக்கும் அத்தனை நோய்களும் குணமாகி விடும் என்பது எப்பேர்ப்பட்ட பித்துக்குளித்தனம்! எந்தளவுக்கு உச்சக்கட்ட முட்டாளாக இருந்தால் ஒருவர் இப்படி ஒரு கூற்றைத் துணிந்து வெளியில் வந்து சொல்வார் என்றுதான் இந்த நூலை முதன் முதலில் படிக்கும்பொழுது எனக்குத் தோன்றியது. ஆனால் இன்று இவர் அடைந்திருக்கும் புகழையும் செல்வாக்கையும் பார்க்கையில் எனக்கு உண்மையிலேயே அச்சமாக இருக்கிறது.

“பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்” என்கிறார் வள்ளுவப் பெருமான். ஆனால் இந்த அளவுக்குப் பயனே இல்லாத ஒரு கூற்றைச் சொல்லி ஒருவர் இந்த அளவுக்குப் புகழும் பொருளும் ஈட்ட முடிகிறது என்றால், அந்த அளவுக்கு அறிவில் சீர்கெட்டுப் போயிருக்கிறதா நம் இனம் என மெய்யாகவே எனக்கு மிகவும் அச்சமாயிருக்கிறது. சீமான், பி.ஆர்.பாண்டியன் என நான் பெரிதும் மதிக்கும் பலர் கூட ஈலர் பாசுகரை ஆதரிப்பது தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.

ஆக, ஈலர் பாசுகர் மரபு வழி மருத்துவரும் இல்லை; அவர் சொல்லும் மருத்துவம் நம் மரபைச் சேர்ந்ததும் இல்லை; அப்படியே, மரபுக்கு ஒவ்வாதது என்றாலும் முயன்றாவது பார்க்கலாமே என நினைத்தால் கூட அவர் சொல்லும் எதுவுமே ஏற்கக்கூடியதாகவும் இல்லை.

அடுத்தது, வீட்டிலேயே மகப்பேறு என்பது.

இன்றைய வீட்டு மகப்பேறு (home birth) தமிழர் மரபு முறையா?

அறுவை முறை மகப்பேறு (சிசேரியன்) எனும் பெயரில் இந்த ஆங்கில மருத்துவர்கள் அடிக்கும் கொள்ளை எத்தனை கொடுமையானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நான் பார்த்த வரை, சென்னையில் 90-களுக்குப் பிறகு ஒருவருக்குக் கூட இவர்கள் இயற்கையான மகப்பேறு நடக்க விடவில்லை. இது தொடர்பாக ‘மெர்சல்’ படத்தில் வந்த அந்தக் காட்சி முற்றிலும் உண்மை. அதில் “இன்னிக்கு நீ எப்படி சிசேரியன்னு சொன்னா பயப்படறியோ, அதே மாதிரி, இன்னும் இருபது வருசம் கழிச்சு நார்மல் டெலிவரின்னு சொன்னா பயப்படுவாங்க” என்பார் S.J.சூர்யா. அதுதான் இன்றைய நிலைமை.

அதற்காக ஒரேயடியாய், வீட்டிலேயே இனி மகப்பேறு பார்த்துக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனம் இல்லையா? உடனே, “அந்தக் காலத்தில்...” என அதே பல்லவியைப் பாடாதீர்கள்! அந்தக் காலத்து மருத்துவச்சிகளின் திறமை இன்று உங்களுக்கு உண்டா?

கருவுற்ற தாயின் உடல்மொழியை வைத்தே பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்று சொல்லும் பாட்டிமார்கள் அன்று இருந்தார்கள்; இன்று இருக்கிறார்களா? முக வாட்டம், உடல் பொலிவு போன்றவற்றை வைத்து, குழந்தை பிறக்கும் நாளை முன்கூட்டியே சொல்லக்கூடிய திறமையாளர்கள் அன்று உண்டு; இன்று உண்டா? காலக்கெடு கடந்த பின்னும் இடுப்பு வலி வராவிட்டால் வரவழைக்கவும்,குழந்தை பிறந்த பின் மீண்டும் உடம்பைப் பழைய நிலைக்குத் திரும்பச் செய்யவும் பல கைமருந்துச் செய்முறைகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன; நமக்குத் தெரியுமா? மகப்பேற்றின்பொழுது குழந்தையின் தலை திரும்பியிருந்தால் அதைச் சரியாக வரவழைக்கும் நுட்பம் அவர்கள் அறிந்திருந்தார்கள்; நாம் அறிவோமா அதை?

வருடி (scanner), வெற்றிடக் கோப்பை (vacuum cup) என எதுவுமே இல்லாமல் இவை செய்யக்கூடிய எல்லாவற்றையும் வெறுமே தங்கள் கைகளாலும் பட்டறிவாலும் செய்து முடித்தவர்கள் அன்றைய நம் பாட்டிமார்கள், மருத்துவச்சிகள். அவர்களின் இந்தத் திறமையில், நுட்பத்தில், கைப்பக்குவத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது நமக்கு உண்டா? அல்லது, ஒரே நாள் பயிற்சி வகுப்பிலோ, உயூடியு காணொலிகள் (YouTube videos) மூலமோ இந்தத் திறமைகள் அனைத்தையும் வரவழைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறீர்களா?

உலகமே போற்றி வணங்க வேண்டிய இத்தகைய நம் முன்னோரின் திறமைகளை ஆவணப்படுத்தாமல் விட்டுவிட்டு, இன்று ஆங்கில மருத்துவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்றவுடன் மீண்டும் வீட்டிலேயே பிள்ளை பெற்றுக் கொள்கிறேன் எனப் புறப்பட்டால், குறிப்பிட்ட நுட்பங்களை அறியாமல் மகப்பேற்றின்பொழுது நேரும் சிக்கல்களைச் சமாளிப்பது எப்படி? மரபு வழி மகப்பேற்றின் உயிர் காக்கும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் தொலைத்து விட்டு மரபு வழிக்குத் திரும்புவது எப்படி முடியும்?

அப்படியே நீங்கள் வீட்டில் பிள்ளை பெற்றுக் கொண்டாலும் அதற்குப் பெயர் மரபுசார் வழிமுறையா? வழி வழியாக வந்த நம் மகப்பேறு இயல் மருத்துவ நுட்பங்கள் ஒன்றையுமே கடைப்பிடிக்காமல், வெறுமே வீட்டில் பிள்ளை பெற்றுக் கொள்வதால் மட்டுமே அது மரபு வழி மகப்பேறு ஆகி விடுமா? சிந்தித்துப் பாருங்கள்!

எனில், இதற்குத் தீர்வுதான் என்ன?

இதற்கு ஒரே வழி, மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்துவதுதான்; மருத்துவர்கள் தேவையில்லாமல் அறுவை முறை மகப்பேற்றை மேற்கொண்டால் உரிய தண்டனை கிடைக்கும்படி சட்டத்தை இறுக்குவதுதான். அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வரும்படி ஆட்சியாளர்களை வலியுறுத்துவதுதான் மருத்துவமனையிலேயே இயற்கையான மகப்பேற்றுக்கான வசதி நமக்குக் கிடைக்க வழி செய்யும். அதுதான் தாய்-சேய் இருவருக்குமான பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

எனவே ஈலர் பாசுகர் போன்ற அரைவேக்காடுகளை நம்பாமல், உண்மையான சித்த மருத்துவர்கள், யோகா ஆசிரியர்கள் போன்றோரை அடையாளம் கண்டு, அவர்கள் காட்டும் வழியில் இயற்கை வாழ்வியலுக்குத் திரும்புவோம். கொள்ளையாய்ப் பணம் அள்ள வேண்டும் என்பதற்காகத் தேவையில்லாமல் அறுவை முறை மகப்பேற்றைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களைத் தண்டிக்கவும், அறப்புறம்பான வழியில் நடை போடும் இன்றைய மருத்துவ உலகை நெறிப்படுத்தவும் சட்டம் கொண்டு வரச் சொல்லி ஆட்சியாளர்களை வற்புறுத்துவோம்!

அதுவே நம் அனைவருக்குமான உடல் – மன நலத்தைப் பாதுகாக்கும் சரியான வழிமுறையாகவும் வாழ்வியலாகவும் இருக்க முடியும்!

- இ.பு.ஞானப்பிரகாசன்

Comments

6 comments

6
Bhaskaran
No madical improvement

Train more "Maruthuvachi" who can help in delivery in their HOME.

will help rural and no hospital area.
இ.பு.ஞானப்பிரகாசன்
ஏற்று உடனே வெளியிட்ட ‘கீற்று’ ஆசிரியருக்கும் இதழினருக்கும் நன்றி!
இ.பு.ஞானப்பிரகாசன்
[quote name="Bhaskaran"]No madical improvement

Train more "Maruthuvachi" who can help in delivery in their HOME.

will help rural and no hospital area.[/quote]

முதலில் அந்த மருத்துவ நுட்பங்கள் நம்மிடம் இருந்தால்தானே மருத்துவச்சிகளுக்குப் பயிற்சி தர முடியும்?
இ.பு.ஞானப்பிரகாசன்
[quote name="Bhaskaran"]No madical improvement

Train more "Maruthuvachi" who can help in delivery in their HOME.

will help rural and no hospital area.[/quote]

பதிவில் இருக்கும் கேள்வியையே மீண்டும் முன்வைக்கிறேன் - "மரபு வழி மகப்பேற்றின் உயிர் காக்கும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் தொலைத்து விட்டு மரபு வழிக்குத் திரும்புவது எப்படி முடியும்?"
Inquirer
நான் பார்த்த வரை, சென்னையில் 90-களுக்குப் பிறகு ஒருவருக்குக் கூட இவர்கள் இயற்கையான மகப்பேறு நடக்க விடவில்லை." I want to know the statistics that confirm your claim. So, no women wanted a C-Section according to your claim? Nobody look to give birth on a particular date and time (Astrological reasons)? and nobody suffer complication of any kind of infection during a child birth whatsoever?
இ.பு.ஞானப்பிரகாசன்
[quote name="Inquirer"]நான் பார்த்த வரை, சென்னையில் 90-களுக்குப் பிறகு ஒருவருக்குக் கூட இவர்கள் இயற்கையான மகப்பேறு நடக்க விடவில்லை." I want to know the statistics that confirm your claim. So, no women wanted a C-Section according to your claim? Nobody look to give birth on a particular date and time (Astrological reasons)? and nobody suffer complication of any kind of infection during a child birth whatsoever?[/quote]

நான் பார்த்த வரையில் என்றுதான் நான் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். என்னிடம் நீங்கள் கேட்கும் புள்ளிவிவரங்கள், தகவல்கள் இருந்தால் நான் அப்படிக் குறிப்பிட்டிருக்க மாட்டேன். நேராக அந்தத் தகவல்களையே தந்துவிட்டுப் போயிருப்பேன்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.