மாற்றம் என்பது மட்டுமே மாறாதது என்பது உலகின் தலைசிறந்த மேதைகளில் ஒருவரான காரல் மார்க்சின் கோட்பாடுகளுள் ஒன்றாகும். 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நன்னூல் என்னும் இலக்கண நூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர், பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே (நன். 462) எனக் குறிப்பிடுகின்றார். இயங்கியல் வாழ்க்கையில் மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று.
மதத்தைத் தவிர, பெரும்பாலான துறைகளில் மாற்றம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இந்த மாற்றத்தையும் இரண்டு வகையாகப் பகுத்துக் கொள்ளலாம்.
கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக என்பார் வள்ளலார். குழந்தை மணம், கைம்பெண் மண மறுப்பு போன்றவை எல்லாம் ஒழிக்கப்பட வேண்டியவை; ஒழிந்து விட்டன. அவையாக மாறவில்லை. சட்டங்கள், பலதார மணம் போன்ற இப்படிப்பட்ட காலங்காலமாக இருந்த பழக்க வழக்கங்களை ஒழித்துவிட்டன. இப்போதும் சிலவற்றை நடைமுறைப்படுத்தப் பழையவற்றைத் தோண்டிக் கிளறி எடுத்துச் சான்றாகக் காட்டி முணுமுணுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மருத்துவத் துறையிலும் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் கண்களுக்கான சிகிச்சைகளைக் குறிப்பிடலாம். நேற்று வரை சேலை கட்டி மறைத்ததைப் போன்று தெரிந்தவை எல்லாம் சிகிச்சைக்குப் பிறகு பளிச்சென்று தெரிகின்றன. கண்ணாடியைப் பயன்படுத்தாமலே படிக்க முடிகின்றது.
சேறடிக்கும்போது மாடுகள் வாலைச் சுழற்றிக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் சேறு சப்பென்று கண்ணில் அடித்து விடும். கத்திரிக் கொல்லையில் குனிந்து காய்களைத் தேடி அறுக்கும் போது இலையில் உள்ள சுணை கண்ணில் பட்டு விடும். உறுத்தும்போது கண்ணைக் கசக்கிவிட்டுக் கழுவிக் கொள்வார்கள். மறுநாள் கண்சிவந்து விடும்: அதிகமாக உறுத்தும்; பயங்கரமான சிகிச்சை ஒன்று செய்வார்கள்.
பாதிக்கப்பட்டவரை மல்லாக்கப்படுக்க வைத்து, கோழியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அதன் விரல் ஒன்றை அறுத்து ஒழுகும் குருதியைப் பாதிக்கப்பட்ட கண்ணில் விடுவார்கள். சிலருக்குப் பார்வை போன நிகழ்ச்சி எல்லாம் நடந்திருக்கின்றன. இப்படி மாற்றப்பட வேண்டிய நடைமுறைகள் பல உள்ளன.
இன்னொன்று, ஏதோ ஒரு கட்டாயத்தால் மரபுசார்ந்த நடைமுறை மாற்றப்படுகின்றது. அதனால் ஏற்படக்கூடியவை தோண்டத் தோண்டத் தீமைகளாகவே வெளிப்படுகின்றன.
ஒருத்தன் தரையோடு படுத்துக்கிடந்த உடும்பைப் பிடித்து விட்டான்; அது அவன் கையைக் கால் களால் பற்றிக் கொண்டது; குருதி வழிகிறது. கூட்டாளி ‘விட்டுடா’ என்கிறான். ‘நான் எப்பவே விட்டுட்டேன்; அதுதான் என் கைய விடல’ என்று பதற்றத்தோடு கூறுகிறான்.
இந்த நிலையில்தான் பசுமைப்புரட்சி அதனைத் தொடர்ந்து வந்த உலகமயம், தாராளமயம், தனியார் மயம் என்பவை எல்லாம் அங்கிங்கு எனாதபடி மக்களின் உடல்நலம், உயிரினங்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் போன்றவற்றை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன.
உலகப் பேராசைக்காரர்களின் கோரப் பிடியில் இருந்து விடுபடவும் அண்டத்தைக் காக்கவும் பலர் பழையவற்றை மீட்டெடுக்க முனைகின்றார்கள். மீட்டெடுக்க முனைவோரில் பலர் பழையவற்றையும் கண்ணாரக் கண்டவர்கள்; விஞ்ஞான வளர்ச்சியையும் முழுமையாக அறிந்தவர்கள். அப்படிப்பட்டவர்களில் இருவர் மருத்துவர் சு. நரேந்திரன், மருத்துவர் ஃபிரடெரிக் ஜோசப். இருவரும் முறையே ஆசிரியர், துணை ஆசிரியர் என்னும் நிலையில் இருந்து எழுதப் பெற்றதே நோயின்றி வாழ உணவே மருந்து என்னும் அரிய நூலாகும்.
நூலாசிரியர்கள் இருவரும் முகவுரை, முடிவுரையுடன் சேர்த்து ஐம்பத்தாறு தலைப்புகளில் நூலை வடித்துத் தந்துள்ளார்கள். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நூலின் பிழிவாக அணிந்துரை வழங்கியுள்ளார்.
நூலின் விளக்கம் கொடுத்து எழுதப் பெற்றுள்ள காய்கனிகள், காய்கறிகள், கீரைகள், கொட்டைகள் எனப் பெரும்பாலானவை நம் நாட்டில் வினையக் கூடியவையே. அவற்றிலுள்ள சத்து, நோய் எதிர்க்கும் திறன் போன்றவை பற்றிய அறிவியல் ஆய்வுக் கருத்துகளை எல்லாம் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர்கள் எழுதி யுள்ளார்கள். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்னும் மகாகவியின் கனவு நனவாகிக் கொண்டிருப்பதற்கு இந்நூலும் ஒரு சான்று.
நோயின்றி வாழ உணவே மருந்து என்னும் நூலைப் படிக்கும்போது கிராமத்து நாட்டு மருத்துவ முறைகள் எல்லாம் நினைவிற்கு வருகின்றன. பாட்டி, அப்பாயி, அம்மாயி, ஆயா, பாட்டன், தாத்தா போன்றவர்கள் செய்த நாட்டு வைத்திய முறைகள் எல்லாம் நினைவில் நிழலாடுகின்றன.
நோயின்றி வாழ உணவே மருந்து என நூலாசிரியர்கள் பெயர் சூட்டி இருப்பதே மனதிற்கு ஆறுதலாக உள்ளது. வந்த நோய்க்கும் நம் முன்னோர்கள் உணவையே மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்காக மட்டும் அல்லாமல் வளர்க்கும் வீட்டு உயிரினங்களுக்கும் மருத்துவ குணம் கொண்ட பொருட்களையே உணவாகக் கொடுத்துள்ளார்கள்.
கோழிகள் குணங்கினாலோ, கழிந்தாலோ சின்ன வெங்காயத்தைச் சிறிது சிறிதாக நறுக்கிப் போடுவார்கள். இரண்டு மூன்று நாட்களில் நோய் குணமாகி விடும்.
மாடுகள் மழைக் காலத்திலும் கோடைக் காலத்திலும் நோயினால் பாதிப்பு அடையும். எந்த நோயாக இருந்தாலும் ஒரே மருந்துதான். அதாவது உணவே மருந்துதான். அந்தக் கால மளிகைக் கடைகளில், நாட்டு மருந்துக் கடைகளில் மருந்துச் சாமான் என்று சொன்னால் போதும். எல்லாப் பொருள்களையும் சேர்த்துப் பொட்டலம் கட்டிக் கொடுப்பார்கள்.
சுக்கு, பூண்டு, மிளகு, ஓமம், திப்பிலி, வசம்பு, இலவங்கம், சித்தரத்தை, மஞ்சள், அதிமதுரம் என இருபதுக்கு மேற்பட்ட பொருள்கள் கலந்திருக்கும். கொண்டு வந்து காயவைத்து உரலில் போட்டு இடித்துத் தூளாக்கி, மாவிளக்கு போலப் பிசைந்து மாட்டின் நாக்கை இழுத்து உருண்டையை உள்ளே தள்ளி விடுவார்கள். குழந்தைகளுக்கு நாட்டு மருந்து கொடுப்பது போலத்தான். இரண்டு மூன்று பேர் சேர்ந்து மல்லுக் கட்டி உள்ளே தள்ள வேண்டும்.
நான்கைந்து நாட்களில் மாடு தெளிந்து விடும்; பழைய முடி கழிந்து, புதிய முடி முளைத்துப் புதுப் பொலிவுடன் விளங்கும். குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் கூட அதிகம் கவலைப்படாத தாத்தாக்கள் மாடுகளில் குறிப்பாக, காளை மாடுகள் குணங்கிவிட்டால் ஆடிப் போய் விடுவார்கள். நோய் தீரும்வரை சரியாகக் கஞ்சி, தண்ணீர் குடிக்காமல் தவிப்பார்கள். தங்களோடு மண்ணையும் வளர்க்கும் உயிரினங்களையும் அத்வைதமாகப் பார்த்தது ஒரு காலம். காடு, மலை, கடல், விளைநிலம் எல்லாவற்றுக்கும் ஒரு பொற் காலம்.
நோயின்றி வாழ உணவே மருந்து என்னும் நூலில் நூலாசிரியர்கள் சு. நரேந்திரன், ஜோசப் விளக்கி யுள்ள கருத்துகளோடு அறுபது, எழுபதுகளில் கூட நடைமுறையில் இருந்த நாட்டு மருத்துவத்தைத் தொட்டு எழுதினாலே ஒரு புத்தக அளவு விரியும்.
நூலாசிரியர்கள் அறிவியல் ஆய்வுகள் அடிப் படையில் உணவுப் பொருள்களின் மகத்துவத்தை விளக்குகின்றார்கள். ஆனால் கிராமத்து மக்கள் வழி வழியாகக் கிடைத்த பட்டறிவின்படி உணவை மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அறிய வியப்பாக இருக்கின்றது.
அறிவியல் விளக்கமும் அனுபவ முறையும் உடல் நலத்திற்கு இரண்டு கரைகளாகத் தெரிகின்றன. நூல் முழுவதும் விளக்க வேண்டிய கருத்துகள் நிரம்பி வழிந்தாலும் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு விளக்கலாம்.
மக்களில் பெரும்பாலானோர் குறிப்பாக, இளந் தலைமுறையினர் சுற்றி விளைவதை மதிப்பதே இல்லை. பாகற்காய், சுரைக்காய், வாழைத்தண்டு போன்றவற்றை உணவுப் பொருளாகவே நினைப்ப தில்லை. பீட்ரூட், காரட், நூல்கோல் என்று ஏதேதோ பெயரைக் கூறுகிறார்கள். அவையும் ஊட்டச்சத்து நிறைந்தவை என்பதில் ஐயமில்லை. குடற்புழுவைக் கொல்லும் பாகற்காய், சிறுநீரைப் பெருக்கும் சுரைக்காய், கல்லடைப்பை நீக்கும் வாழைத்தண்டு போன்றவற்றையும் உணவே மருந்தாகப் பயன்படுத்தலாமே!
பொடுகு போகக் குமிழம் பழம் எலும்பிச்சம் பழம் நல்ல மருந்துகள்; செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் அருமையாக முடி வளர்க்கும். ஆற்று வண்டல் முடியின் பிசுபிசுப்பைப் போக்கி முடியைப் பஞ்சுபோலக் கலகலப்பாக்கிக் கருகருவென்று வளர்க்கும்.
அமேசான் காட்டு மூலிகைத் தைலங்களையும் கண்ட கண்ட வேதிப் பொருள்களையும் தடவி, குறிப்பாக இளைஞர்கள் தலையே சகாராப் பாலைவனம் ஆகிவிடுகிறது.
நம் நாட்டில் விளைந்த உணவுப் பொருள்களில் குறிப்பாக மருத்துவ குணம் உடையவற்றை நம்மை விட வெளிநாட்டினர் நன்கு அறிந்திருந்தார்கள். பழந்தமிழகத்தில் இருந்து உணவுப் பொருட்களும் ஆடம்பரப் பொருள்களும் உரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால் அந்நாட்டுத் தங்கமும் வெள்ளியும் கணிசமான அளவு குறைந்து விட்டனவாம்.
விஷயம் என்னவென்றால், மேற்கத்திய நுகர் வோர் இந்திய மசாலா பொருட்களிலும் ஆடம்பரப் பொருட்களிலும் காட்டிய அக்கறையை இந்தியர்கள் மேற்கத்தியப் பொருட்களின் மேல் காட்டியிருக்க வில்லை. கணக்கை நேர் செய்யத் தங்கமும் வெள்ளியும் மேற்கில் இருந்து இந்தியாவுக்குப் பாயத் தொடங்கின (பழந்தமிழ் வணிகர்கள், 2016: 10)
ஏற்றுமதி செய்யப்பட்ட மசாலாப் பொருட்களில் மிளகு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இலவங்கப் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்றவையும் முக்கியமான பொருட்கள். இந்நூலில் குறிக்கப்படும் கருத்தும் இவண் குறிப்பிடத்தக்கது.
பண்டைய காலத்தில் கிரீக் மற்றும் ரோமாபுரி நாட்டின் ஒவ்வொரு மருத்துவரும் குளிர்ச்சியால் வரும் மார்புச் சளிக்குச் சிகிச்சை கொடுக்கக் காரமான நெடியுடைய மிளகாய் மற்றும் மிளகைக் கொண்டு மருத்துவம் செய்தனர் (ப. 62).
பொதுவாக, இலக்கியங்களில் விளக்கப்படு பவை மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கும் என்பார்கள். பழந்தமிழில் குறிக்கப்பட்டுள்ள பல புழங்கு பொருட்கள் அக்காலத்தில் பயன்படுத்தப் பட்டவை என்பதைச் சிவகங்கை மாவட்டக் கீழடி ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன.
பழந்தமிழகத்தில் கிடைத்த முத்து, பவளம் போன்ற ஆடம்பரப் பொருட்களையும் மிளகு போன்ற மசாலாப் பொருட்களையும் மேலை நாட்டினர் வாங்கியதால் அவற்றுக்கு ஈடாகப் பொன்னையும் வெள்ளியையும் கொடுத்தார்கள். இது வரலாற்றுக் குறிப்பு.
யவனர் எனப்படும் கிரேக்க, உரோமாபுரி நாட்டினர் மரக்கலங்களில் பொன்னைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு மிளகை வாங்கிச் சென்றனர் என்னும் செய்தியை அகநானூ ற்றுப் பாடலில் படிக்கும்போது பழந்தமிழ் இலக்கியங்களின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடிகின்றது.
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியடு பெயரும்
வளங்கெழு முசிறி (அகம். 149: 9-11)
தங்கத்தையும் வெள்ளியையும் கொடுத்து நம் நாட்டில் இருந்து வாங்கப்பட்டதுதான் மேலை நாட்டு மருத்துவர்கள் பயன்படுத்திய மிளகு.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் இருட்டறையில் பதுக்கப்பட்டுள்ள பல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளியை உரசி ஆய்வு செய்தால் வரலாற்று உண்மை தெரியும்.
சளி பிடித்தால் எதைச் சாப்பிட்டாலும் மண்ணைத் தின்பதைப் போல இருக்கும். சளிக்கு மருந்து எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்தில் குணம் ஆகும்; இல்லாவிட்டால் ஏழு நாட்களில் சரியாகி விடும் என்பார்கள்.
தூதுவளைத் துவையல், தூதுவளை ரசத்தை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் சளித்தொல்லை விரைவில் குறையும். மிளகு, பூண்டு சேர்த்துக் காரமாக வைக்கப்படும் மிளகு பூண்டு ரசமும் சளியைக் கட்டுப்படுத்தும். காரமான இந்த மசாலாப் பொருட்கள் உணவாகவே பயன்பட்டுப் பல நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
பண்டைக் காலம் முதல் பயன்பட்டு வந்ததுடன் தற்போது கடைகளில் உள்ள பல்வேறு மருத்து வங்கள் குணமளிப்பதைவிடச் சிறந்தது. மேலும் பக்க விளைவுகளும் இல்லாதது. மேலும் மருந்து களைவிட மிளகு சக்தி வாய்ந்தது என்பதால் பரிந்துரைக்கின்றன (ப. 63)
மிளகின் சக்தி வாய்ந்த மருத்துவ குணத்தை மேலை நாட்டினர் எவ்வளவு ஆழமாக அறிந்து உள்ளார்கள் என்பதை மேற்கண்ட மேற்கோளால் அறியலாம். இப்போதும் கிராமங்களில் சளி பிடித்துத் தொண்டை கரகரப்பாக இருந்தால் நான்கு மிளகையும் இரண்டு விரல் பிடியளவு புழுங்கல் அரிசியையும் சேர்த்து வாயில் போட்டு மெல்லு வார்கள்.
ஆஸ்த்மா நோய்க்குக் கோழிச்சூப்பு சிறந்த மருந்து என்னும் குறிப்புக் காணப்படுகின்றது (ப.64). 12ஆம் நூற்றாண்டில் யூத மருத்துவர் மெய்மோனிகஸ் நுரையீரல் சளியைக் கிளறி வெளியேற்றக் கோழிச் சூப்பைப் பரிந்துரைத்ததாக நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
நம் ஊரில் கோழிச்சூப்பு ஒரு அற்புதமான வலி நிவாரணி. சண்டையில் அடிபட்டவர்கள், மரத்திலிருந்து விழுந்தவர்களுக்கு உடல் வலியைப் போக்கக் கோழிக்குஞ்சு ரசம் வைத்துக் கொடுப் பார்கள். குடிப்பவர்களாக இருந்தால் அந்தக் கால நாட்டுச் சாராயத்தையும் ரசத்தோடு கலந்து கொடுப்பார்கள்.
கோழி ரசம் வைக்க மருந்து வேண்டும் என்று கேட்டாலே கடைகளில் கொடுப்பார்கள். கூவாத கோழிக்குஞ்சைச் சுடுநீரில் முக்கி எடுத்துச் சுத்தம் செய்வார்கள் மிளகாய், மல்லியோடு நாட்டு மருந்துகளையும் சேர்த்து அம்மியில் அரைப்பார்கள். சேர்த்துக் கொதிக்க வைக்கும்போது சட்டி மாற்றாததாக அந்த மருந்து ரசம் தெருவெல்லாம் மணக்கும். தாளிக்காததைச் சட்டி மாற்றாதது என்பார்கள்.
நாட்டுப்புறப் பாடல் அமைப்பில் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய வீரபத்திர இராமயணக் கும்மி என்னும் நூலில் உடம்பு வலிக்குக் கோழி ரசமும் சாராயமும் கொடுத்த செய்தி பதிவாகி உள்ளது.
காட்டில் வசிக்கும்போது சூர்ப்பனகை இராமனை விரும்புகிறாள்; சீதையைப் பார்த்ததும் அவளைக் கொல்ல நினைக்கிறாள், அப்போது இலக்குவன் வந்து சூர்ப்பனகையின் அங்கங்களை அறுத்து அடித்து விரட்டுகிறான். இலங்கையில் வந்து விழுந்தவளுக்கு அரக்கர்கள் கோழி ரசத்தையும் சாராயத்தையும் கொடுக்கிறார்கள்.
கூவாத கோழிகள் ஆயிரமும் - அதைக்
கொன்றுமே காய்ச்சிக் கொடுத்திடுவார்
சாராயம் முக்கலம் கொட்டிவிடுவார். அதைத்
தான் வாங்கி நாக்கிலே விட்டிடுவாள்
(1292, 1293)
தஞ்சாவூர் மாவட்டத்தில் மரபுவழி நஞ்சை, புஞ்சைச் சாகுபடி செய்த ஐம்பது. அறுபதுகளில், வேலை முடிந்து அலுக்கையைப் போக்கிக் கொள்ள இவ்வாறு கோழிச் சூப்பை வைத்து உணவையே மருந்தாக்கிக் கொண்டார்கள்.
பகல் முழுவதும் வெயிலிலும் வேனலிலும் உடலில் வியர்வை கொப்பளிக்க வேலை செய்த மக்கள் உடம்பு வலியால் தோல் உரித்த பாம்பைப் போல நெளிவார்கள். அடைக் கோழியைப் போல முனகுவார்கள். வேலைகள் முடிந்ததும் கண்டிப்பாகக் கோழி ரசம் வைப்பார்கள்.
நோயின்றி வாழ உணவே மருந்து என்னும் நூலில் பெரும்பான்மையான உணவுப் பொருள் களின் மருத்துவ குணங்கள் விளக்கப்பட்டுள்ளன. உடல்நலத்தைப் பேணுவதற்கு மருந்துகள் உண்பதைத் தவிர்த்து உணவு மேல் நம்பிக்கை வைக்கத் தொடங்க வேண்டும் (ப. 302) என்னும் நூலாசிரியர்களின் கருத்தை வைர வரிகளாகக் கொள்ள வேண்டும்.
இக்கூற்று நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்குப் பொருந்தும். ஆனால் பசுமைப் புரட்சிக்குப் பிறகு விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களுக்குப் பொருந்துமா என்பது தெரியவில்லை.
பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகே சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய், வயிற்று நோய், மூட்டுவலி, தைராய்டு போன்ற நோய்கள் பற்றி அதிகமாகப் பேசப்படுகின்றன. நாடு முழுவதும் கருத்தரிப்பு மையங்கள். ஐம்பது அறுபது ஆண்டு களுக்கு முன்னர்ச் சர்க்கரை நோயைத் தித்திப்பு நீர் எனக் குறிப்பார்கள். உடல் உழைப்பு இல்லாதவர் களுக்கு வரும் என்பார்கள்.
ஆனால் பசுமைப்புரட்சி வந்தபிறகு உடல் உழைப்பு உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்னும் வேறுபாடு இல்லை. அனைவருமே ஒன்று அல்லது பல நோய்களுடன் மருந்து மாத்திரையின் துணை யோடுதான் வாழ்கின்றார்கள். நூல் முழுவதும் உணவுப் பொருள்களின் மருத்துவ குணங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
ஆரஞ்சு- இரைப்பைப் புற்றைத் தடுக்கிறது (ப. 33); வெங்காயம் ஹெச்.டி.எஸ் அளவை உயர்த்தும் (ப. 49); இரத்தம் உறைதலைத் தடுக்க வெங்காயம் (ப. 50); மிளகு, மிளகாய் உணவுடன் காரமாகச் சாப்பிடச் சளி பிடிக்காது (ப. 62); பூண்டு ஒரு சளி இளக்கி (ப. 67)
மீன், மீன் எண்ணெய் ஓர் உயிர் காக்கும் நண்பன் (ப. 73) முட்டைக்கோசு புற்றைத் தடுக்கும் மருந்து (ப. 76); காய்கறி அதிகம் உண்பவர்களுக்குப் புற்றுநோய் அரிது (ப. 79); நுரையீரல் புற்றைத் தவிர்க்கக் காரம் (ப. 92)
பழங்கள் வைரசிற்குப் பரம எதிரி (ப. 99); டீ, சிகப்பு ஒயின் புற்றைத் தடுக்கும் (ப. 101); தேயிலை இதயத்தைப் பாதுகாக்கிறது (ப. 103); தயிர் வைரசை விரட்டும் (ப. 106); தயிர் உங்கள் வாழ்நாளை நீட்டிக்கும் (ப. 109); பசும்பாலின் மூலம் தடுப்பாற்றலைப் பெற முடியும் (ப. 114);
மருந்துகளின் அரசன் ஆப்பிள் (ப. 120); வாழைப்பழம் - குடல் புண் குணமாகும் (ப. 129); பார்லி கொலஸ்டிராலைக் குறைக்கும் (ப. 135); இதயநோய்க்கு - அவரை பீன்ஸ் (மொச்சை வகை (ப. 139) நீரழிவு நோய்க்குப் பீன்ஸ் (ப- 140);
பீர் குடிப்பதால்- இதயத்தமனி அடைப்பு விகிதம் குறைகிறது (ப. 145); காரட் இதயத்திற்கு நல்ல உணவு (ப. 164); (காரட்) மலச்சிக்கலைத் தடுக்கிறது (ப. 165); காபி மன அழுத்தத்தை நீக்குகிறது (ப. 178) (கத்திரிக்காய்) வலிப்பு, புற்று எதிர்ப்பி (பக். 188, 189)
மீன் இதய நோய் வராது தடுக்கும் (ப. 194); மீன் - புற்று எதிர்ப்புச் சுவர் (ப. 196). பூண்டு - ஓர் ஆண்டிபயாடிக் (ப. 203); நுரையீரலுக்குக் கேடயம் பூண்டு (ப. 207); புற்றுநோய் எதிர்க்கும் பூண்டு (ப. 208); (இஞ்சி) முதல்நிலை உறைதல் எதிர்ப்பி (ப. 213); (திராட்சை) புற்று எதிர்ப்புச் சக்திகள் (ப. 219);
வயிற்றுப் போக்கிற்கு - தேன் (ப. 223); (நீர்ப்பூசணி) புற்று எதிர்ப்பி (ப. 229); பெருங்குடல் புற்று வராது பால் தடுக்கும் (ப. 231); இரத்தத்தை நீர்த்துப் போக வைக்கும் மரக்காதுக் காளான் (ப. 240); புற்றைத் தடுக்கும் - கொட்டைகள் (ப. 241)
கொலஸ்டிராலைக் குறைக்கும் ஓட்ஸ் (ப. 244). (ஓட்ஸ்) புற்று எதிர்ப்பி (ப. 245); (ஆலீவ் எண்ணெய்) புற்று எதிர்ப்பி; முதுமை எதிர்ப்பி; (ப. 250); இதயத்திற்கு வெங்காயம் (ப. 253); (வெங்காயம்) எவ்வளவு அதிகமோ அவ்வளவு நல்லது (ப. 255) (ஆரஞ்சு) உணவுக் குழாய்ப் புற்றைத் தடுக்கும் (ப. 259); (பட்டாணி) புற்றுநோய் மற்றும் தொற்று எதிர்ப்பிகள் (ப. 263) (அரிசி) சிறுநீரக்கல் உண்டாகாமல் பாதுகாக்க (ப. 272)
மேலே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளவை மருத்துவர்கள் சு. சரேந்திரன், ஜோசப் எழுதியுள்ள நோயின்றி வாழ உணவே மருந்து நூலில் உள்ள கட்டுரைகளின் உள் தலைப்புகள். காய்கனி, கொட்டை வகைகள், சில உயிரினங்களின் மருத்துவ குணம் போன்றவற்றை நச்சென்று அறியும் வகையில் உள்ளன. இவ்வகை உணவுப் பொருள்களின் வேறு சில மருத்துவ குணங்களும் நூலில் விளக்கப்பட்டு உள்ளன.
இயற்கையாக உற்பத்தி செய்த உணவே மருந்தாகும் பொருட்களின் மீது மக்களுக்குத் தீவிரமான நாட்டம் ஏற்பட்டுள்ளது. இரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிப் பயன்பாட்டில் விளைந்தவை நச்சுக் கன்னிகளாகி விட்டன. நஞ்சால் விளைந்த உணவை உண்பதால் உடலிலுள்ள ஒவ்வொரு பாகமும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறது.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தாலோ, காதில் ஊற்றிக் கொண்டாலோ ஆளை உடனே கொன்று விடும். பூச்சுக்கொல்லி அடித்த வயல் கொல்லைகளில் மீன், நண்டு, நத்தை, பாம்பு, மண்புழு, கறையான் என எதையும் பார்க்க முடியாது. குழந்தை இல்லாத வீடு போல அமைதியாக இருக்கும். மண்ணே செத்த பிறகு அவை எப்படி வாழும்?
விளையும் பயிர்கள்வழி இரசாயன உரங் களையும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்து களையும் ஏற்றிவிட்டால் அந்த நஞ்சுகள், உணவுப் பொருட்களின்வழிக் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேர்ந்துவிடும்.
அவற்றால் உண்டாகும் நோய்களைப் போக்கக் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி ஆராய்ச்சி செய்கிறார்கள். பல்லாயிரம் கோடிக்கு மருந்து, மாத்திரைகள் விற்பனை ஆகின்றன. அலுவலகங் களில் பணிபுரிபவர்கள், வீட்டில் இருப்போர், முதியவர்கள், இளையவர்கள், வயல் கொல்லைக் காட்டில் வேலை செய்பவர்கள் என எல்லோரும் ஏறக் குறைய மருந்து மாத்திரையுடன்தான் வாழ்கிறார்கள். மின்சாரத்தால் இயங்கும் எந்திர நிலைக்கு மருந்து, மாத்திரைகள் உடம்பை ஆட்சி செய்கின்றன.
ஒரு பசுமைப் புரட்சியாலேயே இவ்வளவு பாதிப்புகள் நிலத்தின் வளம் கெட்டுச் செத்துக் கிடக்கிறது. வறட்சியாலும் இரசாயன உரங்களாலும் பல்லாயிரம் உயிரினங்களும் தாவர வகைகளும் அழிந்து விட்டன. ஆளும் வர்க்கம் இன்னொரு பசுமைப் புரட்சி வேண்டும் என்கிறது. கண்டிப்பாகத் தேவைதான்; அது மரபுசார்ந்த - நம்முன்னோர்கள் காலங்காலமாகச் செய்த இயற்கை விவசாயமாக இருக்க வேண்டும்.
நூலாசிரியர்கள் உணவுப் பொருட்களின் மருத்துவக் குணங்களை ஆய்வுகள் அடிப்படையில் சுட்டிக் காட்டுகின்றனர். அனுபவத்தின் அடிப் படையில் முன்னோர்கள் உணவையே மருந்தாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.
நஞ்சு ஊட்டப்பட்டுள்ள உணவு தானியங்கள், பழங்கள், கீரைகளில் மருத்துவ குணம் இருக்கலாம். ஆனால் அவற்றில் சார்ந்துள்ள நச்சுப் பொருள்களை என்ன செய்வது?
இரசாயன உரம், பூச்சி, களைக்கொல்லி வீரிய விதைப் பயன்பாட்டை நம்மாழ்வார், நெல் ஜெய ராமன், ஆர்.எஸ். நாராயணன், பாமயன், கரிகாலன் போன்ற குறிப்பிட்ட சில சமூக ஆர்வலர்கள் எதிர்த் தார்கள்; எதிர்க்கின்றார்கள். எதிர்க்க வேண்டியவர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை. நம்மாழ்வார் போன்ற வேளாண்மைக் கல்வியில் பட்டம் பெற்ற வர்கள் கலகக் குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு செய்யாதது தான் மக்களுக்குக் கெட்ட காலம்; நோய்களுக்கும் உழு கருவிகள், உரங்கள், விதைகள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்கும் பெரும் பெரும் வேளாண் விஞ்ஞானிகள் வழிகாட்டாத நிறுவனங்களுக்கும் நல்ல காலம்.
வேளாண் விஞ்ஞானிகள் பஞ்சத்தைப் போக்க ஐம்பதுகளில் பிள்ளையார் பிடிக்கத் தொடங் கினார்கள்; அது குரங்காகி விட்டது. பரவாயில்லை; நல்லதைச் செய்யும்போது தீமையாக மாறவும் வாய்ப்புள்ளது. மரபுசார்ந்த வேளாண்மைக்கு உடன் மாறி இருக்கலாம்.
விவசாயம் செய்வோரின் குடும்பங்களில் ஈரத்துணியில் அழுக்கு ஏறுவது போலக் கடன்மேல் கடன்; உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது என்பார்கள். அந்த வாழ்க்கை கூடத் தேவலாம். இப்போது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்கள் கெட்டது ஒரு புறம். அனைத்து மக்களும் நோய் நொடியில் புழுவாக உழல்கின்றார்கள். மருத்துவர்கள் சிலரைத் தவிர வேறு யாராவது வாயைத் திறக்கின்றார்களா? எல்லாவற்றிலுமே அரசியலும் ஆதாயமும்தான்; போகட்டும்.
நூலாசிரியர்கள் முடிவுரையில் முக்கியமாக சில கருத்துகளைத் தொகுத்துக் கூறுகின்றார்கள். முன்னர்க் குறிப்பிட்டதையே மறுபடியும் குறிப்பிட வேண்டும். உடல்நலத்தைப் பேணுவதற்கு மருந்துகள் உண் பதைத் தவிர்த்து உணவுமேல் நம்பிக்கை வைக்கத் தொடங்க வேண்டும் (ப. 303)
உணவு தானியங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே செயற்கை உரங்கள், பூச்சி, களைக்கொல்லிகளாலேயே விளை கின்றன. பழங்களை இரசாயனப் பொருள்களைக் கொண்டு பழுக்க வைக்கிறார்கள். மீன் கெடாமல் இருக்க யூரியாவைப் போடுகிறார்கள்; திராட்சைப் பழத்தைப் பூச்சி தாக்காமல் இருக்க வாளியில் மருந்தை நிரப்பி அப்படியே முக்கி எடுக்கிறார்கள். வாழைக்காய் பெருக்கப் பூவை ஒடித்துவிட்டு நெகிழிப் பையில் யூரியாவைப் போட்டு அப்படியே தார் நுனியில் கட்டி விடுகிறார்கள். நமக்குத் தெரிந்தவை இவை; உணவுப் பொருளை நஞ்சாக்க இன்னும் எத்தனை வழிகள் உள்ளனவோ? கரு இல்லாத முட்டைகளும் குரு இல்லாத வித்தைகளும் உலகைச் சின்னாபின்னமாகச் சிதைக்கின்றன.
மனிதர்களுக்கு நோயைத் தரும் இரசாயன உரம், பூச்சி, களைக்கொல்லிகள் தாவரங்களுக்கு ஏன் கெடுதல் செய்யவில்லை என்னும் ஐயம் எழலாம். பாம்பிடம் உள்ள நஞ்சு அதற்குத் தீமை செய்வதில்லை. அது போலத்தான் நினைக்க வேண்டும்.
உணவுப் பொருள்களில் உள்ள மருத்துவ குணங் களை ஆய்வுகள் அடிப்படையில் நூலாசிரியர்கள் சு. நரேந்திரன், ஜோசப் மிக எளிமையாக விளக்கு கின்றனர்.
இயற்கையான உணவுப் பொருளில் இருக்கும் சத்து அல்லது மருத்துவத் தன்மையைப் பிரித்துப் பயன்படுத்துவதை விட அவற்றையே அப்படியே உண்பது சிறந்தது என்று நூலாசிரியர்கள் குறிப்பிடு கின்றார்கள். மீன் எண்ணெயைவிட மீனே உடலுக்கு ஏற்றது (ப. 200). பூண்டு எண்ணெய், குழாய் மாத்திரை, மாத்திரை மற்றும் நீர் போன்ற தயாரிப்புகள் குறித்து அறிஞர்கள் கூறுவது என்ன? இவற்றில் பலவற்றில் பூண்டின் செயற்படுத்தும் பொருள்கள் கொஞ்சம்கூட இல்லை - அல்லது மிகக் குறைந்த அளவில் உள்ளன என வல்லுநர்கள் எச்சரிக்கின்றார்கள் (ப. 210).
ஓர் அணு அளவு கூடக் குறை கூற முடியாத அளவில் நம் முன்னோர்கள் வேளாண் தொழிலைச் செய்தார்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாத்தார்கள்; அதுவும் அவர்களைப் பாதுகாத்தது. தலைமுறை தலைமுறையாக விதைகளைப் பாதுகாத்தார்கள். எல்லாமே நோயின்றி வாழ உணவே மருந்து என்னும் நிலையில் பயன்பட்டன. வீரிய ரகங்களைக் கண்டு பிடிப்பதாக எல்லா விதைப் பண்டங்களையுமே வேளாண் விஞ்ஞானிகள் குழிதோண்டிப் புதைத்து விட்டார்கள்.
நூலாசிரியர்கள் மருத்துவர்கள் சு. நரேந்திரன், ஃபிரடெரிக் ஜோசப் விளக்கி இருப்பவற்றைப் போன்று அண்மைக் காலம் வரை நூற்றுக்கணக்கான பொருட்கள் உணவே மருந்து எனப் பயன்பாட்டில் இருந்தன.
பிஸ்கட் உட்பட எல்லாத் தீனிப் பண்டங் களிலும் வேதிப் பொருட்கள், பாலில் வேதிப் பொருள் கலப்படம், குடிக்க, இழுக்க, மெல்ல எனப் பல்வகைப் போதைப் பொருட்கள். பெரும் நிறுவனங் களில் தயாரிக்கப்படும் உப்புத் தூளில் கூட நச்சுப் பொருள் கலக்கிறார்களாம்.
வசதி உள்ளவர்கள் மருத்துவத்தால் வாழ்கிறார்கள்; இல்லாதவர் திடீர் திடீரென குணங்கிய கோழியைப் போல விழுந்து மடிகின்றார்கள். நெருநல் உளருவன் இன்றில்லை என்னும், பெருமை உடைத்திவ் வுலகு (திருக். 336) என்னும் திருக்குறள் இக்காலத்திற்கு மிகவும் பொருத்தம் உடையதாக இருக்கின்றது.
இப்போதைய உணவு தானிய உற்பத்தி முறை, உடல் உழைப்பில்லா வாழ்க்கை முறை, உணவு முறை நீடித்தால் சற்றுமுன் இருந்தவன் இப்போது இல்லை எனக் கூறும் நிலை உருவாகி விடும். இருபது முப்பது வயதிற்குள் மாரடைப்பால் இளைஞர்கள் இறப்பதைச் செய்தித்தாள்களில் படிக்கும்போது வேதனையாக இருக்கிறது.
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என்று சில தாய்மார்களை மருத்துவர்கள் எச்சரிக் கின்றார்கள். தாய்ப்பாலில் கூட நச்சுப்பொருள் இருக்கிற தாம். எங்கிருந்து வந்தது? உண்ணும் உணவிலிருந்து தான்.
பால்திருக்கை, கருந்திருக்கை என்னும் கருவாடு களை வாங்கி வந்து பூண்டு, மிளகு வைத்துக் காரமாகக் குழம்பு வைப்பார்கள். தாய்க்காரி நான்கு, ஐந்து கண்டம் பிசுக்கை உணவோடு சேர்த்துச் சாப்பிடுவாள். குழந்தையின் வாயில் ஊற்றாகப் பெருக்கெடுத்து வழியும் தாய்ப்பால். வயல் நண்டும் நல்ல பால் பெருக்கி; குழம்பு வைத்துக் கொடுப்பார்கள். நத்தை மூல நோய்க்கு ஒரு நல்ல உணவு மருந்து. எல்லாமே பசுமைப் புரட்சிக்கு பிறகு அழிந்து காணாமல் போய் விட்டன.
இப்படி நோயின்றி வாழ உணவே மருந்து என்னும் நூல் பற்றி நிறைய எழுதிக் கொண்டே போகலாம். இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைத்ததால் ஒன்றுமறியாத கோடிகோடி அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உணவுக்கு ஆகும் செலவை விட மருத்துவத்திற்கே பல மடங்கு செலவு செய்கின்றார்கள். மன அழுத்தம் மிகுந்து, நிம்மதி போய் விடுகின்றது.
மிளகு, சோம்பு, சீரகம், வெந்தயம், இஞ்சி, சுக்கு, பூண்டு, மஞ்சள் போன்றவை எல்லாம் அஞ்சறைப் (ஐந்து அறை) பெட்டியில் உள்ள அரைக்கும் சாமான்கள். இவற்றை முறையாகப் பயன்படுத்தினாலே உடல் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறும் என்பது அனுபவத்தால் கண்ட உண்மை.
எலும்பிச்சம்பழம், முருங்கை, அகத்தி, புதினா, மல்லி, தூதுவளை, குறிஞ்சா, முடக்கொற்றான், பசலி எனக் கிடைப்பவற்றைத் தவறாமல் நாள் தோறும் பயன்படுத்த வேண்டும். உடற்பயிற்சி, தினம் உணவு உட்கொள்வதைப் போலக் கண்டிப்பாகச் செய்யவேண்டும்.
முறையாக இவற்றை எல்லாம் கடைபிடித்தால் மருந்து, மாத்திரைகளை அதிகமாகப் பயன்படுத்த வேண்டியதில்லை. இதுவும் அனுபவ உண்மைதான்.
தனிமனிதர்கள் குறிப்பாக, முதியவர்கள் தங்கள் உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள நோயின்றி வாழ உணவே மருந்து என்னும் நூல் நல்ல ஊன்று கோலாக அமையும்.