கீற்றில் தேட...

கிட்டதட்ட ஒரு வருடமாக பருத்தி, நூல் விலையேற்றத்தினால் திருப்பூர் பின்னலாடை உள்ளிட்ட துணி உற்பத்தி தடுமாறிக்கொண்டிருக்கிறது. பருத்தி விலை அல்லது நூல் விலை ஆகியவற்றின் கட்டுக்கடங்காத விலை ஏற்ற இறக்கத்தினால் முறையான தொழில் உற்பத்தி என்பது சாத்தியமில்லாமல் போயுள்ளது. பாஜக அரசு இந்நூல் விலை, பருத்தி விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராததால் திருப்பூரில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கின்றனர். சிறு-குறு தொழில்கள் முடங்கிப் போயுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட நெருக்கடியை விட இது மிக மோசமான நெருக்கடியாக எழுந்துள்ளது. எனினும் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்தில் திளைக்கும் பாஜக, இத்தொழிற்கூடங்களைப் பற்றியோ, தொழிலாளர்கள் பற்றியோ அக்கறை கொண்டதாக தெரியவில்லை.

tiruppur garmentsஇந்த கட்டுப்படுத்தப்படாத விலையேற்றத்தின் காரணமாக வங்கதேசம், வியட்நாம், எத்தியோப்பியா நாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனக்கான வணிகத்தை பெருக்கிக்கொண்டிருக்கின்றன. 18 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ பருத்தி ரூ.220-க்கு விற்றது. தற்போது இது ரூ.460-க்கு உயர்ந்திருக்கிறது. அது ஏற்ற இறக்கத்துடன் ரூ.400 எனும் அளவிலேயே இருக்கிறது.

பருத்தி விலையேற்றம் நூல் விலையேற்றம் ஆகியவற்றால் இத்தொழில் மிக மோசமான கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் வடநாட்டில் துணி உற்பத்திக்கு பதிலாக நூல் ஏற்றுமதியில் நிறுவனங்கள் ஈடுபட ஆரம்பித்துள்ளன. நூல் ஏற்றுமதி செய்வதால் லாபத்தில் இழப்பை சம்பாதிப்பதில்லை. மாறாக ஆடை உற்பத்திக்கான அடிப்படை கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை இந்திய அரசு ஊக்குவிக்கிறது. இதற்கான வரி குறைப்பு மட்டுமல்லாமல் வரி திரும்பப் பெறும் ஊக்கத்தொகையும் உள்ளதால் நூல் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களில் துணி உற்பத்தி மிக மோசமான நிலையை எட்டி உள்ளது.

ஆடை உற்பத்தி இந்திய அளவில் 70-80 சதவீதம் சிறு-குறு உற்பத்தியாளர்களைச் சார்ந்து உள்ளது. திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களின் தொழில்களும் இவ்வகையில் 90 சதம் சிறு குறு தொழில்களாக உள்ளன. திருப்பூரில் உள்ள 10 சதவீத பெரிய நிறுவனங்களினால் இந்த பருத்தி விலையேற்றம், நூல் விலையேற்றத்தை ஈடு செய்ய இயலுகிற நிலையில் சிறு-குறு தொழில்கள் நசிந்து போகின்றன என்பது மிகப்பெரும் கவலைக்குறியதே. ஏனெனில் உள்ளூர் வணிகத்திற்கும், வேலைவாய்ப்பிற்கும் சிறு-குறு தொழிற்சாலைகளை சார்ந்தே தமிழ்நாடு இயங்குகிறது.

பெரும் நிறுவனங்கள் வடநாட்டிலிருந்து அழைத்துவரும் தொழிலாளர்களை வைத்தே பெரும்பாலும் இயக்கிக்கொள்கின்றன. இந்நிலையில் சாமானிய தமிழர்களுக்கு சிறு-குறு நிறுவனங்களே பாதுகாவலனாக வேலைவாய்ப்பினை, வணிக வாய்ப்பினை அளிக்கின்றன. இந்நிலையில் இங்கு பணியாற்றும் தமிழர்களுக்கான ஊதியம் என்பது ஐந்தில் ஒரு பங்காக குறைந்துள்ளது. இவர்களுக்கான ஊதியங்களே திருப்பூரின் இதர சிறு-குறு வணிகங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இதனாலேயே கடந்த மே மாதத்தில் திருப்பூர் ஆறு நாட்கள் கடையடைப்பினை நடத்துவதாக அறிவித்தது.

இவ்வாறு பருத்தி விலை உயர்விற்கான காரணம் வடமாநிலங்களில் நடக்கும் பருத்தியை பதுக்கி வைத்தலே ஆகும். இந்த பதுக்குதல் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் நடப்பதை நாம் கவனிக்கலாம். இந்தியாவில் அதிகளவு பருத்தி உற்பத்தி செய்யும் மாநிலத்தில் முதலிடத்தில் இருப்பது குஜராத். உலக அளவிலான பருத்தி உற்பத்தியில் 22 சதம் இந்தியா உற்பத்தி செய்கிறது எனும் பொழுதில், குஜராத் இந்தியாவின் பருத்தி உற்பத்தி சந்தையினை கட்டுப்படுத்தும் மாநிலமாக விளங்குகிறது. இதனாலேயே மும்பை ஆடை உற்பத்தியின் மையமாக விளங்குகிறது. குஜராத் மாநிலத்தில் பருத்தி விளைச்சல் குறைந்ததால் விலையேற்றம் நடப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறத்தில் உண்மையெனினும், பருத்தியை இறக்குமதி செய்வதற்கான வரியை குறைத்த போதிலும் நூல் விலையில் மாற்றமில்லாமல் மேலும் அதிகமாக உயரவே செய்தது. இதனாலேயே 2022 மே மாதத்தில் திருப்பூரில் போராட்ட அறிவிப்பு வெளியானது.

பருத்தியை பதுக்குவதன் மூலம் செயற்கையான விலையேற்றம் செய்வது, நூல் ஏற்றுமதி செய்வதன் மூலம் லாபத்தை ஈட்டுவது ஆகியவற்றின் மூலமாக ஆடை உற்பத்திக்குரிய அத்தியாவசிய பொருட்களில் பற்றாக்குறையை திருப்பூர் கண்டுள்ளது. இவைகள் மட்டுமல்லாது, பங்குச் சந்தையில் எம்.சி.எக்ஸ். எனப்படும் பொருட்களுக்கான பங்கு சந்தையில் நடக்கும் யூக வணிகம் இதன் மாபெரும் காரணியாக அமைந்துள்ளது. இது குறித்து பெருமளவில் இந்திய அரசு கவலைப்படவில்லை. இந்த யூக வணிகம் ஒரு வித சூதாட்டம். நேரடியாக எவ்வளவு உற்பத்தி நடந்துள்ளது என்பதைப் பற்றிய தொடர்பும் இல்லாமலேயே பொருட்களின் விலையை ஏற்றி இறக்கக்கூடிய வணிக பரிமாற்றமும், உண்மைக்கு மாறான உற்பத்தி அளவும் வைத்து பங்குச் சந்தையில் சூதாட்டத்தை பனியா எனும் குஜராத் மார்வாடி சமூகங்கள் செய்து வருகின்றன.

120 ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தாவில் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இயங்கிய பங்கு சந்தையில் இது போன்ற சூதாட்ட பேரத்தின் வழியாக பெரும்பொருள் ஈட்டிய பிர்லாக்கள், டாடாக்கள், ஷப்பூர்ஜி, வாடியாக்கள், கொயங்கா, லால்பாய் போன்றவர்கள் இந்தியாவின் பெரும் முதலாளிகளாக பருத்தி, நூல், ஆடை உற்பத்தியில் முன்னிலைக்கு சென்றார்கள். இவர்களின் இந்த ஆதிக்கத்தைப் பற்றி அன்றய பிரிட்டீஷ் இந்தியாவிற்கான முதலீட்டாளர்கள் பொறுப்பாளர்கள் வெளிப்படையாகவே அரசிற்கும், வைசிராய் தலைமையில் ஆய்வுக்கு வந்த குழுக்களிடமும் செய்திகள் பதிவு செய்யப்பட்டதை நாம் மறந்துவிடக்கூடாது. நூறாண்டுகளுக்கு முன்பே யூக வணிகத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் லட்சம் ரூபாய் பணத்தை ஈட்டிய இந்த பனியாக்களே இன்றும் இத்தொழிலின் மூலப்பொருட்களின் வணிகத்தை கட்டுப்படுத்துகின்றனர். இந்த நிலையே இன்று திருப்பூர் போன்ற தமிழ்நாட்டின் ஆடை உற்பத்தியை நெருக்கடிக்குள் தள்ளி இருக்கின்றன.

இதனால் திருப்பூர் ஒவ்வொரு மாதமும் 1,200 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கிறது. வருடத்திற்கு 36,000 கோடி ரூபாய் உற்பத்தியை ஈட்டும் திருப்பூர் இவ்வகையில் பெருமளவிலான உற்பத்தியை இழக்கிறது. இதன் விகிதம் அச்சம் தரக்கூடிய அளவில் இருக்கிறது. பருத்தி உற்பத்தியும், நூல் உற்பத்தியும் குஜராத், மகாராட்டிரம் உள்ளிட்ட வட இந்தியாவின் ஆதிக்கத்தில் உள்ள நிலையில் திருப்பூரை பாதுகாக்கும் எண்ணம் பாஜக மோடி அரசிற்கு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதையே ஓராண்டு விலையேற்றமும், திருப்பூரின் தடுமாற்றமும் காட்டுகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் மார்வாடி-பனியாக்களின் ஆதிக்கம் தமிழ்த்தேசத்தின் பொருளாதாரத்தை தனது பிடியில் சிறைப்படுத்தி இருக்கிறது என்பதை தமிழர்கள் உணராத வகையில் நமக்கான விடிவு என்றுமே கிடையாது.

- மே பதினேழு இயக்கம்