ஒரு இனத்தின் சுவாசத்திற்கான முயற்சியைப் பயங்கரவாதமெனப் பட்டியலிட்டதனால் அடுத்தவர்களால் அதிகம் அக்கறை கொள்ளப்படாதவர்களாக, விடியலுக்கான வேதனைகளைத் தனித்தே சுமக்கும் ஈழத்தமிழினத்தின் சார்பாக ஒரு மடல்! ‘எட்டுக்கோடி தமிழர் உள்ளார் உலகமெங்கும்’ என மேடைக்குமேடை முழங்கிய முன்னாள் பிரமுகர்களின் வார்த்தைகளில் மயங்கிக்கிடந்து பின்னாளில் எழுந்த இனத்தின் இளையவன் ஒருவன் எழுதும் மடல்! ஆனாலும், அனுதாபமும் ஆதரவும்தேடி ஆற்றாக்கொடுமையினால் வேறுவழியின்றி எழுதப்படும் மடல் அல்ல இது! ‘பள்ளிக்காலத்தில் இருந்தே பாரதம் எங்களுடைய நியாயத்தின்பால் நிலையெடுக்கும்’ என்று அப்பாவித்தனமாக எண்ணிய அநேகமான ஈழத்தமிழர்களின் இதயங்கள் கூறும் முறைப்பாடு என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம். உலக வரைபடத்தில் மட்டுமே எங்களுக்கு மிகமிக அண்மையில் நீங்கள் இருப்பதை வியப்புடன் பார்த்துக் கொள்கிறோம். கூப்பிடுதொலைவுதான் என்றும்கூட கூறுகிறார்கள். ஆனாலும், எங்களுக்காக எப்போதுமே எதற்கும் துணிந்து உழைத்துவரும் மதிப்புக்குரிய பழ.நெடுமாறன் ஐயா உட்பட்ட சிலர் தவிர மற்றையபடி இங்கு நாம் எப்படித்தான் அவலங்களுக்குள் அலறித் துடித்தாலும் எவரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

கன்னித் தமிழுக்குச் செம்மொழி கௌரவம் பெற்றுக் கொடுத்தவரே! அச்செம்மொழி பேசும் எங்கள் கன்னியரும் காளையரும் செம்மணியில் சிதைத்துப்புதைக்கப்பட்டதை நீங்கள் அறியவில்லையோ? அதுதான் நடந்து 10 வருடங்கள் கடந்திருக்கலாம். முத்துக் குளித்து தமிழகத்தோடு முன்னாளில் இருந்தே உறவு பூண்டிருந்த எங்கள் மன்னாரின் வங்காலையில் சித்திரவதையின்பின் சிதைக்கப்பட்ட பெற்றோரோடு, ஓரவிழி செருக கயிற்றில் தொங்கவிடப்பட்டிருந்த அந்தப் பிஞ்சுமுகங்கள்கூட உங்கள் நெஞ்சம் திறக்கவில்லையா! நீங்கள் 7 கோடி இருப்பதைக் காட்டித்தான் சிங்களம் எங்களை அழிக்கிறது! நீங்களோ நாங்கள் இருப்பதையே மறந்துவிட்டீர்கள்! ஒரு திரைப்படத்தின்மீதான தடையை நீக்க முரசறைந்து வீதியிறங்கும் நீங்கள் எங்களின் இருப்பிற்கான போராட்டத்தின் மீதான தடையையே அனுமதிக்கத் துணிந்திருக்கிறீர்கள்! பரிமேலழகன் உரையை வெறுத்த எங்களுக்கு பாரதிதாசனின் திருக்குறள் விளக்கமும், அதைத் தொடர்ந்து நீங்கள் வடித்த குறளோவியமும்தான் தமிழை ஊட்டியது.

சங்ககாலச் செய்யுள்களுக்கு எளிதாய் உரை தந்து தமிழனின் முன்னாள் பெருமையை எங்கள் அனைவருக்கும் உணர்த்தியது உங்கள் எழுத்துத்தான்! அத்தோடு விட்டீர்களா, இல்லையே! இன்றுபோல் அன்றும் வரும்பகை எதுவாயினும் ‘தீ’ எனப்பொருள்பட எழுந்த வன்னியின் வீரமறவன் பண்டாரவன்னியன் குறித்து ஆய்வுவழி நீங்கள் படைத்த அரும்பொக்கிசமாம் ‘பாயும்புலி பண்டார வன்னியன்’ என்ற வரலாற்று நாவலையும் அல்லவா படைத்தளித்தீர்கள், உங்களாலும் எங்களாலும் உச்சரித்து உயிராக நேசிக்கப்படும் தாய்த்தமிழுக்கு! அப்படியெல்லாம் இருக்க இப்போது மட்டும் ஏனிந்த மாற்றான்தாய் மனோபாவம்? அன்றைய காலத்தில் பண்டாரவன்னியனின் சுதந்திரத்திற்கான போரும் பிரித்தானியர்களைப் பொறுத்தவரையில் “பயங்கரவாதம்” தானே? கடந்தகாலத்தை அழகாகக் கவிபாடும் உங்களால் எதிர்காலத்துக்கான எங்களின் நிகழ்காலப்போராட்டத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்க எப்படி முடிகிறது? வரலாற்றுப்பெருமையை வெளிச்சமிட்டுக்காட்டிய தமிழ்த்தகையே, நிகழ்காலத்தில் இச்சிறுமை உமக்குத் தகுமோ?

‘உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு வரும்தீமை உனக்கு வரும் தீமை அன்றோ! பிணிநீக்க எழுந்திரு நீ இளந்தமிழா, வரிப்புலியே!’ . . . ‘தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை உன் பெருமை! குறை தவிர்க்க ஆழிநிகர் படைசேர்ப்பாய்!’ . . . ‘கடல்போலும் எழுக! கடல் முழக்கம்போல் கழறிடுக தமிழ் வாழ்கென்று! கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்!’ . . . ‘விழிப்போரே நிலைகாண்பார்! விதைப்போரே அறுத்திடுவார்! களைகாண்தோறும் அழிப்போரே அறஞ்செய்வார்! அறிந்தோரே உயர்ந்திடுவார்!’ என்றெல்லாம் புரட்சி மூட்டியது யார்? உங்களது நேசத்துக்குரிய புரட்சிக்கவிஞர் தானே! நீங்கள் போற்றும் இலக்கியங்கள் தோறும் வில்லுகளை ஆக்கிவிட்டு பேரினவாதத்தின் கொடுமையை இனியும் தாங்க இயலாதென அம்பெனப் புறப்பட்ட எங்களுடைய போராட்டத்தை நீங்கள் புரிந்துகொள்ளத்தலைப்படாதது ஏன்? எதிரியானவன் எங்கள் கன்னத்தில் அறைந்திருந்தால் மறுகன்னத்தையும் காட்டி அவனுக்குப் புத்திபுகட்ட முனைந்திருக்கலாம். ஆனால், முழு இனத்தையும் சிதைத்தழிப்பதற்கான மூர்க்கத்துடன் அலைபவனை எவ்வாறு நாம் வேறெவ்வாறு முகங்கொள்வதாம்?

கல்லக்குடியில் தண்டவாளத்திலே கொண்ட கொள்கைக்காகத் தலைவைத்துப் போராடியதற்காக 6 மாதம் சிறை அனுபவித்தவரே! ‘உங்கள் இலட்சியத்தை எடுத்துச்சொல்வதற்காக’ உயிரைக்குறுக்காகப் பாதையிலே வைத்துப்படுத்த நீங்கள் தலையை எடுத்துவிட்டீர்கள், நாம் இன்னும் எடுக்கவில்லை. ஏனென்றால் ‘உயிராயுதங்கள்’ தான் எங்களை, எங்களின் எதிர்காலத்தைக் காக்கும் உன்னத ஆயுதங்கள்! “மத்திய அரசின் நிலைப்பாடுதான் எங்களின் நிலைப்பாடும்” என்று எப்படி உங்களால் எளிதாகக் கூறமுடிகிறது? காலாற நீங்கள் கடற்கரையில் உலாச் செல்லும்போதெல்லாம் சிங்களக் கொடுங்கரங்களிடம் தங்கள் பிள்ளைகளை இழந்தவர்களினதும் பொட்டைப்பறிகொடுத்தவர்களினதும் அல்லது மீண்டும் மீண்டும் இந்திய அரசின் கடற்படைக்கலங்கள் நயவஞ்சகமாகத் தடுத்தபோதெல்லாம் எதிர்க்காது தமை அழித்த தற்கொடையாளர்களினதும் இதயத் துடிப்புகள் உங்களை ஏதும் செய்வதில்லையா?

போர் புரிந்த சீனாவுக்குத் தண்டவாளப் பிணைப்பு, பாகிஸ்தானுடன் பஸ்-போக்குவரத்து, பொற்கோயில் முற்றுகைக்குப் பழிக்குப்பழியாக பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டபோது 3000 இற்கு மேற்பட்ட சீக்கிய மக்கள் கொல்லப்பட்டபோதும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் பிரதமராகத் தேர்வு என்பவையெல்லாம் சாத்தியமாகும்போது மூச்சுக்கு மூச்சு நீங்கள் சுவாசிப்பதாகச் சொல்லும் தமிழினத்தின் வலிகளை அறியாமல் கட்சிரீதியாக நீங்கள் விலகிநிற்பது ஏன்? ‘. . . அயல்மொழி ஒன்றின் ஆதிக்கக்கொடுங்கரம் வரம்புமீறி நீண்டிடும்போது, ஓர் இனத்தின் வாழ்க்கையையே அது பறித்திடும்போது அதனை முறியடித்திட எதிர்ப்புக்கனல் மூண்டெழுவது இயற்கையே!’ என்று உங்கள் ‘நெஞ்சுக்கு நீதி’யில் சொன்னது உங்களுக்கு மட்டும்தானா ஏற்கும்? ‘. . . சிறுபான்மையோர் ஆகிவிட்டாலும் சீரோடு வாழ்ந்திட்ட ஈழத்தமிழர்களின் எதிர்காலம் இந்த அளவுக்கு வேரோடு பிடுங்கப்படவேண்டுமா என்பதே நமது வேதனைக்குரல்!’ என்று நீங்கள் 50 வருடங்களுக்கு முன்பே நொந்து வெந்ததாகச் சொல்லிய உங்களின் இதயம், இன்றுமட்டும் எப்படி இவ்வாறு கல்லாகிக் கசிய மறுக்கிறது? இப்படிச் சொல்வதற்காக மன்னிக்கவேண்டும்!

அல்லலுற்று ஆயிரமாயிரம் என வரும் உறவுகளை உங்கள் கரையில் வசதிகள் செய்து கொடுத்துத் தங்க வைக்கிறீர்கள். இருப்பினும் உரிமையுடன் ஒன்றைச் சொல்லிவிட உள்ளம் துடிக்கிறது : ‘அகதிகள்’ என்ற அங்கீகாரம் அல்ல நாம் வேண்டுவது! எம்மை நாமாக வாழ முடிவதற்கான ஒரு ஆதார பூமி, அதுதான் எங்களின் தாயகம்! திருகோணமலையில் சிங்களவெறியாட்டத்திற்கு அஞ்சி உங்கு வருவதற்காகவென மன்னாரில் தங்கியிருக்கும் ஒரு பகுதி தமிழ்மக்களை தங்களுடைய பாதுகாப்பில் அகதிக் கூடாரங்களிற்கு அழைத்துச் செல்ல ருNர்ஊசு கடுமையாகத் துடிக்கிறது. பார்த்தீர்களா எங்கள் அவலத்தை! சொந்த தேசத்திலே அந்நியர்கள் எங்களை வாழ்வளிப்பதாகச் சொல்லி வரவேற்கிறார்கள் (?).

‘பராசக்தி’ படத்தின் நீதிமன்றக் கதைவசனம் ஞாபகத்திற்கு வருகிறது. . . அணியோடு தமிழுக்கு அழகு சேர்த்த வள்ளலே, உயிர்த்தமிழின் உண்மைநிலை காண ஏன் மறுக்கின்றீர்? கடந்துபோன வரலாற்றின் இருள்செறிந்த பக்கங்களுக்கு ஒளியூட்டி உண்மைநிலை அறிவித்தவரே! இங்கே நிகழ்காலமே வெளியுலகிற்குத் தெரியாமல் வாழ்வதற்காகப் போராடும் இனத்தின் உணர்வுகளை ஸ்பரிசிக்கத் தயங்குவதேன்? உங்கள் சூரியத்தொலைக்காட்சியினர்கூட எங்களைப் பற்றிய காட்சிகளுக்கு இருட்டடிப்புத்தானே செய்கிறார்கள். அப்படியுமில்லாமல் அபூர்வமாக ஏதாவது இடம் பிடித்தால் அது கொழும்பில் நிகழ்ந்த ஏதாவது குண்டுவெடிப்புக்கான பழிசுமத்தலாக மட்டுமே இருக்கும். இதிகாச ராவணனுக்காக வரிந்துகட்டும் “திராவிடப்பாரம்பரியம்” அநுமார்களின் அட்டூழியத்தை மட்டும் ஏன் அங்கீகரிக்கின்றது? எதையும் தராமல் விடுவதுதான் உங்களின் ஆதரவில் ஆட்சிசெய்யும் ‘மத்தி’யின் முடிவாயின் எதிரிக்கு உதவி எமக்கு இம்சை தருவதையும் தயவுசெய்து தவிர்க்கச் சொல்லவும்.

சிறீலங்காவின் “சமாதானப்புறா”க்கள்கூட எங்கள் பிள்ளைகளின் குருதி சுவைக்கவே துடிக்கின்றன என்ற யதார்த்தத்தைக் கண்டு கொள்ளுங்கள்! அதன் அடிப்படையில் ராடர்-வழங்கல்களையும் அதைத் தொடர்ந்து வரக்கூடிய அடுத்த கட்டங்களையும் ஏதாவது செய்து தடுத்து நிறுத்த மாட்டீர்களா? நீங்கள் எங்களை வெறுக்கவில்லை என்பது புரிகிறது. எங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியானால் நீங்கள் சந்தோசமடைவீர்கள். இருந்தும் அதற்காக உங்களின் பங்கென்று எதையுமே செய்ய மாட்டீர்கள் என்று நீங்கள் ஒருமுறை சொன்னது நினைவில் இன்னும் கிடக்கிறது. கும்பகோணத்தில் 98 குஞ்சுகள் கருகியபோது இங்கு எங்களைக் கசிய வைத்த அந்த இன உணர்வை உங்களிடத்திலும் எதிர்பார்க்கிறோம். தன்னையே மூட்டிய உன்னதன் ரவூப் அளவிற்கு வேண்டாம்! நாகர்கோவிலில் வெள்ளைக் கனவுகளுடன் பாடசாலைப் பிஞ்சுகளைப் பலியெடுத்த சிங்களத்தின் இரும்புப் பறவைகளுக்கு உதவிய கறையை தயவுசெய்து உங்களில் சுமக்காதுவிட்டாலே போதும்!

இலக்கியங்களை வாழவைக்கும் உங்களின் இதயம் இலட்சியங்களை மட்டும் ஏன் மறுதலிக்கின்றது? தன்னுடைய கணவனுக்கு நியாயம் கிடைக்காத காரணத்திற்காக முழு மதுரையையும் எரிக்கத்துணிந்த கண்ணகியின் நியாயத்தை ஏற்றுச் சிலையெழுப்பிய நீங்கள் அடுத்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தம்மையே அழித்து தமிழ்வாழச்செய்யும் (ஆமாம் உங்களுடைய செம்மொழி!) ஆயிரமாயிரம் கண்ணகிகளுக்காக இதயத்தின் ஒற்றை மூலையிலாவது ஓரிடம் ஒதுக்குவீர்களா? கைவிடப்பட்ட இந்த ஈழத்தமிழினத்தின் நம்பிக்கைக் கதிரவன் என எங்களுக்கு ஒருவன் உள்ளான். ஆகவே நாம் ஒருபோதும் உள்ளம் தளர்வதில்லை. ‘உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!’ என்ற வாசகத்தினை நாம் உதடுகளால் உச்சரிப்பதில்லை. . . ஏனென்று கேட்கிறீர்களா? மூச்சின் துடிப்பை பேச்சில் ஏன் பெரிதாக முழக்க வேண்டும் என்றுதான்! “தமிழர்களே! நீங்கள் என்னைப் பாறையில் மோதினாலும் சிதறு தேங்காயாகத்தான் உடைவேன் ; நீங்கள் என்னைப் பொறுக்கியெடுத்துத் தின்று மகிழலாம்” என்று நீங்கள் ‘திருச்சி மாநாட்டில்’ கூறியதைப் போலத்தான் நாமும் சின்னத் திருத்தத்துடன் கூறுகிறோம். எம்மவர்கள் சிதறும்போது எதுவுமே மிஞ்சாது! ஆமாம், எதுவுமே மிஞ்சாது! “என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும் விறகாகத்தான் விழுவேன் ; அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச்சாப்பிடலாம்!”, என்று நீங்கள் கூறிய அதே முழக்கத்தைத்தான் நாமும் சிறுமாற்றத்துடன் சொல்கிறோம். எம்மினம் விறகாக விழுவதில்லை’ மாறாகத் தீயாக எழுகின்றது. சொல்லுங்கள் யாரில் என்ன தவறு?

மடல் எழுதிய காரணத்தைச் சொல்கிறேன். எங்களின் நியாயங்களை உணர்ந்து கொள்ளத் தலைப்படாதவர்கள், தங்களுடைய அதர்மங்களுக்கு எம்மை அடிபணியவைக்கலாமென முனைகிறார்கள். இங்கு தவிர்க்க முடியாத யுத்தம் நிச்சயம் விரைவில் மூண்டே தீரும்! ஆமாம், உணர்வுகளைப் பலி கொடுத்துவிட்டு சதைப்பிண்டங்களாக எம்மினம் வாழத் தலைப்படவில்லை! விடுதலைக்குப் பின்னொரு வாழ்வு கிட்டின் மட்டும் வாழ்வதை நேசிக்கின்றோம் : தேசிய விடுதலையைத் தவிர மாற்றுவழி எதனையும் விட்டுவைக்காத எதிரிக்கும் ஏனைய தரப்புகளுக்கும் எங்களுடைய தலைவனின் பதில் இதுவாகத்தான் இருக்கும். மடிந்து வாழ்வதைவிட ‘செய் அல்லது செத்துமடி’ எனும் தேசியத்தலைவரின் வாசகங்களே இங்குள்ளோரின் இதயத் துடிப்பாக சப்திக்கிறது. நாளை எப்படி இருக்கும் என்று எவருக்கும் தெரியாது. ஆனாலும், அது நம்முடையதாக இருக்கவேண்டும் என்பதற்கான உழைப்பே ஈழத்தமிழினத்திற்கு தலைமையால் போதிக்கப்படுவது. வெறும் வாழ்வை அல்ல, வெற்றிகளை மட்டுமே நேசிக்கின்றோம்!

எது எப்படியாயினும் வழக்கொழிந்துபோன தமிழனின் வீரப்பரம்பரை மீண்டும் இங்கு தளிர்த்தெழுந்த ஈழத்தின் வரலாற்றை நீங்கள் அழகு தமிழில் பாட வேண்டும். சங்கம் காணாத தலைமகன்மாரையும் தலைமகள்மாரையும் தமிழீழம் கண்டு நிற்பதை நீங்கள் கண்டு கவிசுரக்க வேண்டும். அதற்காக எங்கள் மூச்சிருக்கும்போது ஒருமுறை தமிழீழம் வந்து போங்கள்! புறப்பொருளில் இல்லாத கருப்பொருளையும் தாங்கி விரிந்து கிடக்கும் எங்கள் மாவீரர்களின் துயிலுமில்லங்களைப் பார்த்துச் செல்லுங்கள்! ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள்’ தீர்வு காண்பதை விரும்புபவர்களுக்கு அகதியென்ற பெயர்சூட்டி தற்காலிக முகாம்கள் மட்டுமே எங்களுக்குச் சிங்களம் தர விரும்பும் அதிகபட்சமான தீர்வு என்ற அரசியல் யதார்த்தத்தைக் கண்டு சொல்லுங்கள்! பிஞ்சோடு சருகும் ஆயுதம் ஏந்த வேண்டி நேர்ந்ததன் வரலாற்றுச் சூழலை அறிந்து சொல்லுங்கள்! எங்களை (உங்களின் ரத்த உறவுகளை) அழிப்பதில் ஆளுங்கட்சியுடன் எதிர்க்கட்சி உட்பட சிங்களம் முழுதுமே ஒன்றுபட்டு நிற்கிறது. ஆனால், நீங்கள் மட்டும்??? காங்கிரசுக்குப் பிடிக்காது என்றால் எங்களைப் பற்றி எழுதி அதைப் பகிரங்கப்படுத்தி அதனால் மீண்டும் உங்களுக்குப் பங்கம் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. 

தடாவும் பொடாவும் இன்னும் புதுப்புதுப் பெயர்களில் வரும் சகல சட்டங்களின் உங்களுக்கெதிரான அச்சுறுத்தல்களும் நீங்கிய பின்னராவது, நாங்களெல்லோரும் கல்லறைகளாகி விட்ட பின்னராவது உங்கள் மௌனித்த மனச்சாட்சி உங்களை வழிக்குக்கொண்டு வரும் நன்னாளில், இந்தத் தேசத்தில் விதைந்து போனவர்களுக்கு அதைப் படையல்செய்யுங்கள்! அதுவே இம்மடலின் அன்பான வேண்டுகோள்! அதுவரை ‘நெஞ்சுக்கு நீதி’ யின் தொடர்ச்சியை எழுதும்போது உங்களது பூட்டப்பட்ட மனச்சாட்சியைக் கேட்டுக்கொள்ளுங்கள், எழு எனத் தூண்டிய பேனா எழுந்தவர்களை ஏன் வெறுக்கிறதென்று! மத்திய அரசின் நிலைப்பாடு தான் உங்களுடைய நிலைப்பாடு என்றால், வங்காலையில் ராணுவத்தால் அழகிய அந்த இரண்டு சிறிய ஓவியங்களை உளிகளால் காயப்படுத்தப்பட்டபின் தூக்கிலிட்ட அகோரத்திற்கு மௌனம் காப்பதுதானா உங்களுடைய நிலைப்பாடு? கூடவே சிங்களத்தரப்புகளுக்கு மத்தி வழங்கும் “நல்லெண்ண” ஊக்குவிப்புகள் உங்களை எதுவுமே செய்யவில்லையா? கவிதைக்கு மட்டும்தானே பொய் அழகு என்கிறார்கள், மானிடர்க்கு அல்லவே!

இங்கனம்,
சு.ஞாலவன்
தமிழீழம்

Pin It