கதைப்பாடல் என்பது ஒரு இனத்தின் உயிரோட்டத்தில் ஊடுருவி அவர்களது மரபு, கலாச்சாரம், பக்தி, சமூக உறவுகள் போன்ற அனைத்துப் பரிமாணங்களிலும் ஆளுமை செலுத்துகிற ஒருநிகழ்கலையாக மாறியிருக்கிறது என்றால் அது மதுரைவீரன் கதையாகத்தான் இருக்கமுடியும்.

நீண்ட பாரம்பரியம் கொண்ட தலித்துகளில் ஒரு பிரிவினரான அருந்ததியரின் வாழ்வோடு இரண்டறப் பின்னிப் பிணைந்துள்ள இக்கதைப் பாடலைக் கூர்ந்து நோக்கும் பொழுது இதிலுள்ள ஆதிக்க சாதியினரின் சரித்திரத் திரிப்புகளை உணரலாம்.

இக்கதையாடலின் போக்கு அடித்தட்டு மக்களின் வீரச் செழிப்பை உத்வேகத்துடன் வெளிச்சமிட்டுக் காட்டுவதுபோல் தெரிந்தாலும், இதனுள் மறைந்திருக்கும் இன்னொரு புதிர் அந்தக் கருத்தை இருட்டடிப்பு செய்துவிடுகிறது.

மிகவும் சாமர்த்தியமாக இடைச்செருகல் செய்யப்பட்டிருக்கும் அந்த நுட்பத்தை உணரவேண்டுமெனில், புழக்கத்திலுள்ள மதுரைவீரன் கதைப்பிரதியைப் பார்க்கலாம்.

காசி மன்னருக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. கழுத்தில் மாலை சுற்றிப் பிறந்ததால் அப்பாவுக்கு ஆகாது என்று குழந்தையைக் கொண்டுபோய் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். அருந்ததியத் தம்பதிகளான சின்னான் - செல்லி என்பவர்கள் அந்தக் குழந்தையை எடுத்துவந்து வீரன் என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். அந்தக் குழந்தை அழகாகவும், வீரத்தோடும் வளர்கிறது.

அந்தக் கட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு பாளையத்தை ஆட்சி செய்து வந்த பொம்ம நாயக்கன் என்கிற பாளையக்காரரின் மகளான பொம்மி பூப்படைகிறாள். அவர்களது சாதிசடங்குக்கு ஏற்ப ஊருக்கு வெளியே குடிசையமைத்து பதினொரு நாள் விரதம் இருக்கிறாள் பொம்மி. இந்தத் தனிமை விரதத்தில் பூப்படைந்த பெண்ணைப் பாதுகாக்க வேண்டியது அருந்ததியரின் கடமை. இந்தச் சூழலில் வீரன் அங்கு காவலுக்கு வருகின்றார். காதல் அவர்களைப் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ சாதி என்கிற இரும்புத்திரை குறுக்கே நிற்கிறது. அதிலிருந்து மீண்டு வாழ இருவரும் அங்கிருந்து வெளியேறும்போது, பொம்மணனின் படை துரத்துகிறது. அதை வென்று இருவரும் திருச்சிக்குப் போய்விடுகின்றனர்.

திருச்சி மன்னரிடம் படைவீரராகச் சேருகிறார் வீரன். தனது திறமையால் அந்த மன்னருக்குப் புகழ் சேர்க்கிறார். இந்தக் கட்டத்தில் மதுரையில் கள்ளர்களின் கொட்டம் தாங்கமுடியாமல், மதுரை மன்னர் திருமலை நாயக்கர், திருச்சி மன்னரிடம் ஒரு திறமையான வீரன் வேண்டுமெனக் கேட்க,வீரனை அங்கு அனுப்பி வைக்கிறார் திருச்சி மன்னர்.

மதுரையில் அவரது வீரத்துக்கேற்ப பதவியும் பாராட்டும் குவிகிறது. விரைவிலேயே படைத்தளபதி ஆகிறார். இதுவரை அடக்கமுடியாத மதுரைக் கள்ளர்களை அடக்குகிறார். அந்தச்சூழலில், மன்னரின் காதலியான ஆடலரசி வெள்ளையம்மாள் மீது அன்பு ஏற்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். மன்னருக்குச் சேதி தெரிந்து வீரன் மீது ஆத்திரம் வருகிறது. இச்சமயத்தில், வீரனுக்கும் கள்ளருக்கும் உறவு இருப்பதாக ஒரு சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது. மன்னர் அதைப் பயன்படுத்தி வீரன் குற்றவாளி என்று தீர்ப்புச் சொல்லி மாறுகால் மாறுகை வாங்க உத்தரவு பிறப்பிக்கிறார். இந்த அநியாயமான தீர்ப்பினால் மதுரை வீரன் கொல்லப் பட்டார். மக்கள் அவரைத் தெய்வமாக வணங்க ஆரம்பித்தனர்.

அனைவராலும் பாடப்பட்டும், தெருக்கூத்துகளாக நடிக்கப்பட்டும் வருவது இந்தப்பிரதிதான். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படமும் இதேபாணியிலானதுதான்.

இந்தக் கதையாடலை நாம் நுட்பமாகக் கூர்ந்து நோக்கும்போது இதில் புதைந்திருக்கிற ஆதிக்கத் தன்மையின் அடையாளத்தை உய்த்துணரலாம். புகழ் பெற்ற ஒரு மனிதனின் வீரம் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குச் சொந்தமாகக் கூடாது, வீரம் விளைந்த நிலம் எங்களுடைய நிலம் என்று மார்தட்ட வேண்டும் என்கிற ஆதிக்க சாதியினரின் குயுக்தி இங்கு செயல் பட்டிருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

வீரன் என்கிற ஒரு தலித், தன் உயர்சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடித்து விட்டது அவர்களுக்கு கடுஞ்சினத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதுமட்டுமல்லாமல், யாராலும் அடக்கமுடியாத கள்ளர் கூட்டத்தை அடக்கிய அவரது ஒப்புயர்வற்ற வீரமும் அவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

அந்தக் காலகட்டத்தில் நாயக்கர்கள் மிகுந்த செல்வாக்கும் அரசியல் பலமும் பெற்று மன்னர்களாக விளங்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்கவும், அவரது வீரத்தின் புகழை தங்களுக்குச் சாதகமாக்கவும் மன்னரின் குழந்தை என்ற இடைச்செருகலை செருகியிருக்கலாம். சரித்திரத்தைத் திரிக்கின்ற நுட்பத்தை, தங்களுக்குக் கீழ் அண்டிப் பிழைக்கின்ற புலவர்களிடம் சொல்லி ஆணையிட்டிருக்கலாம். இந்தச் சரித்திரத் திரிப்புதான் இன்றைய கதைப் பாடலின் வடிவமாக இருக்குமென்பது இந்த ஆய்வின் முடிந்த முடிபு.

‘குழந்தை மாலை சுற்றிப் பிறந்து விட்டால் மாமனுக்கு ஆகாது’ என்றுதான் காலங்காலமாகச் சொல்வார்களே தவிற, ‘அப்பாவிற்கு ஆகாது’ என்று யாரும் சொல்வது கிடையாது. இந்த எளிமையான ஐதீகமே இந்த கதைப்பாடலின் முடிச்சை அனாயசமாக அவிழ்த்து விடுகிறது.

அது மட்டுமல்ல இந்தக் கதைப்பாட்டில், வீரன் பொம்மியை கூட்டிக் கொண்டு போகும் நிகழ்ச்சியை, ‘வீரன் பொம்மியை கூட்டிக் கொண்டு ஓடினார்’ என்கிற சொல்லாடலாக இல்லாமல், ‘வீரன் பொம்மியை சிறை எடுத்தார்’ என்ற சொல்லாடலாக ஒலிப்பதின் கருத்தை மிக நுட்பமாகச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, அற்புதமான பார்வை புலனாகும்.

சாதி, ஆதிக்கம், தன் ஆசையைத் தெரிவிக்க முடியாத ஏக்கம், அரச வாழ்வின் துக்கம் போன்ற சிறையிலிருந்த பொம்மியை, ‘வீரன் சிறையெடுத்தார்’ என்கிற தரிசனத்தில் சுழல்வு கொள்கிறது இச்சொல்லாடல்.

சரித்திரத் திரிப்பு வாய்ந்த இப்பிரதியை, திரைப் படமாக்கி மதுரை வீரனாக நடித்த ஒரே காரணத்திற்காக எம்.ஜி.ஆர் என்கிற பிம்பம் அருந்ததியரின் வீரனாக உருமாறிய சரித்திர அவலத்தையும் நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

சின்னான் செல்லி என்கிற தலித் தம்பதியினருக்குப் பிறந்தவர்தான் வீரன் என்பதை மறைத்துத் திரித்திருக்கின்ற இக்கதையாடலை மறு உருவாக்கம் செய்யும் போது, இக் கதையாடலின் வீரியம் காலங்களைக் கடந்து நிற்கும் என்பதில் அய்யமில்லை.

Pin It