தினமணி நாளிதழ் சார்பாக திருவில்லிப்புத்தூரில் நடந்த கருத்தரங்கில் வைரமுத்து அவர்கள் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் பேசிய பேச்சு, வைரமுத்துவின் ஞானபீட கனவுக்கே வேட்டு வைப்பதாய் முடிந்திருக்கின்றது. எப்படியாவது ஞானபீட விருதை வாங்கி, தமிழுக்குப் பெருமை சேர்த்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவர் வைரமுத்து அவர்கள். அதற்காக தருண்விஜய்யை தாஜா செய்வதில் தொடங்கி மோடியின் முதுகு சொறிய கவிதைகள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது என சென்று கொண்டிருந்த அவரின் புனிதப் பயணம் அநியாயமாக போர்னோ கவிதைகள் புகழ் ஆண்டாளால் பாதியிலேயே பரிதாபமாக நின்றிருக்கின்றது. இதனால் எச்சிக்கலை ராஜாவைப் பற்றியும், இல.கணேசனைப் பற்றியும் அவர் எழுதலாம் என்று திட்டம் தீட்டி வைத்திருந்த பார்ப்பன மகாகாவியம் எழுத முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. வைரமுத்துவின் கவிதா மேதாவிலாசத்துக்கு ஞானபீடம் கொடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை, தாசிமகன் பட்டம் அல்லவா கொடுக்கப்பட்டிருக்கின்றது. குனிந்ததும், நெளிந்ததும், கூழைக்கும்பிடு போட்டதும் இந்தப் பட்டத்தை வாங்கத்தானா?

Vairamuthu 255தன்னை திராவிட இயக்கத்தின் சித்தாந்தங்களில் தோய்த்துக்கொண்டவராக அறிவித்துக் கொண்டு பல ஆண்டுகளாக கலைஞரின் கவிதை வாலாக தொங்கிக் கொண்டிருந்த வைரமுத்து, கொடுக்கும் காசுக்கு ஏற்ப வார்த்தைக் கடலில் மூழ்கி சொறிந்து விடுவதற்கு ஏற்ற நல்ல ஆதீண்டுக்குற்றிகளை (விலங்குகள் தினவெடுத்தால் சொறிந்து கொள்ளும் கல்) எடுத்து வரும் வல்லமை வாய்ந்தவர். தமிழ்நாட்டில் வைரமுத்துவிற்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர்கள் அனைவரும் வைரமுத்துவின் கவிதைகளை வார்த்தை, வார்த்தையாக உடைத்து, பொருள்கொண்டு புளகாங்கிதம் அடைபவர்கள். இதில் சில பேர் படிக்கும் போதே பரவச நிலையை அடைந்துவிடுவதும் உண்டு. அப்படி வாசகனைப் படிக்கும் போதே யார் மெய்மறந்து பரவசநிலையை அடைய வைக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் தமிழ்நாட்டில் சிறந்த கவிஞர்கள் என்ற பட்டமும், அழியாப் புகழும் கிடைக்கும். கம்பரசம் எழுதிய கம்பனில் தொடங்கி திருப்பாவை எழுதிய ஆண்டாள், திரைப்படப் பாடலாசிரியர்கள் கண்ணதாசன், வாலி, இப்போது வைரமுத்து வரையில் ஒரு பாரம்பரியமே இருக்கின்றது. இவர்கள் அனைவரும் தங்களுடைய காமம் தோய்ந்த கவித்துவத்திற்காகவே கொண்டாடப்பட்டவர்கள். இன்று வரையிலும் கொண்டாடப்பட்டு வருபவர்கள்.

அதனால்தான் ஆண்டாளைப் பற்றி புகழ்பாட ஆண்டாளைப் போலவே எழுதி தமிழ்ச் சமூகத்தில் புகழ்பெற்ற வைரமுத்துவை தினமணி பார்ப்பன வைத்தியநாதன் அழைத்திருக்கின்றார். நிச்சயமாக ஆண்டாளைப் பற்றி தமிழ்நாட்டில் வைரமுத்துவைத் தவிர இன்னொருவரால் சிறப்பாகப் பேச முடியாது. அப்படி தன்னால் சிறப்பாகப் பேச முடியும் என்ற நம்பிக்கையில்தான் வைரமுத்துவும் அக்கிரகாரத்து மாமாக்கள் வாயில் எச்சில் ஒழுக உட்கார்ந்திருந்த அந்தக் கருத்தரங்குக்குச் சென்றார். பேச்சின் ஆரம்பத்தில் இருந்தே ஆண்டாளையும், அவள் எப்படி தமிழை ஆண்டாள் என்பதையும் கவிச்சுவை, காமச்சுவை ததும்ப பல வரலாற்றுத் தகவல்களையும் சேர்த்து குழப்பி அடித்துக்கொண்டு வந்த வைரமுத்து, பேச்சின் இறுதியில் கொஞ்சம் குழம்பி, ஆண்டாளின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச முற்பட்டு, அவளைப் பற்றி அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர மாலிக் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட 'Indian movement: some aspects of dissent protest and reform' என்ற நூலில் ஆண்டாளைப் பற்றி 'Andal was herself a devadasi who lived and died in the srirangam temple' என்று எழுதியிருப்பதாக சொல்கின்றார். ஆனால் கவிஞர் அதற்கு என்ன விளக்கம் என்று தமிழில் சொல்லவில்லை. ஒருவேளை கருத்தரங்கில் உட்கார்ந்திருக்கும் அக்கிரகாரத்து மாமாக்களுக்கு ஆங்கிலம் அத்துப்படியாக இருக்கும் என்று அவரின் திராவிட மூளை யோசித்து இருக்கலாம்.

அது கிடக்கட்டும், இப்படி சொன்ன வைரமுத்து நேரடியாகவே இதைப் பக்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் எண்ணிப் பார்ப்பார்கள் என்றும் சொல்கின்றார். இந்த இடத்தில்தான் எச்சிக்கலை ராஜா உட்பட பார்ப்பனக் கும்பல் கொதித்தெழுந்து வைரமுத்துக்கு தாசிமகன் பட்டம் கொடுத்ததற்கான கருப்பொருள், உரிப்பொருள் எல்லாம் உள்ளது. நிச்சயம் வைரமுத்து நினைத்திருந்தால் இதைச் சொல்லாமலேயே தனது பேச்சை முடித்திருக்க முடியும், அதுவும் தேவதாசி என்ற முறையைக் கண்டுபிடித்து கோயிலிலேயே விபச்சார விடுதியும் நடத்த முடியும் என்று உலகிற்கே கிளுகிளுப்பு ஆன்மீகத்தைக் கற்றுக் கொடுத்த பார்ப்பனக் கும்பலின் மத்தியில் நிச்சயம் வைரமுத்து இதைச் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால் இதைச் சொன்ன வைரமுத்துவின் நோக்கம் பார்ப்பனனின் மனதைப் புண்படுத்துவதாக இருக்க துளிக்கூட வாய்ப்பில்லை என்பதுதான். வேறு என்ன நோக்கமாக இருந்திருக்கும் என்றால் இவ்வளவு சிறப்புவாய்ந்த கவிதைகளை எழுதி, படிப்பவர் வாயில் எச்சில் ஒழுக வைத்த ஆண்டாளை ஒரு தேவதாசி என்று மற்றவர்கள் சொல்கின்றார்கள் என்று சொல்வதன் மூலம் பார்ப்பன மாமாக்களின் கவனத்துக்கு அப்படி சொன்னவர்களின் பெயரையும், முகவரியையும் கொண்டு செல்வதும், அவர்களுக்கு எதிராக பார்ப்பனக் கும்பலை கொம்பு சீவி விடுவதுமே வைரமுத்துவின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் யார் மீது அம்பு பாயும் என்று வைரமுத்து கணக்கிட்டாரோ, அதற்கு மாறாக தவறுதலாக அந்த அம்பு அவர் மீதே பாய்ந்திருக்கின்றது. தினமணியில் வெளியான அந்தக் கட்டுரையைப் படித்த யாரும் வைரமுத்து, ஆண்டாளைத் தவறாகப் பேசிவிட்டார் என்று நிச்சயம் சொல்லமாட்டார்கள். பார்ப்பானைப் பகைத்துக் கொள்ளும் தைரியமெல்லாம் வைரமுத்து போன்ற பிழைப்புவாதிகளுக்கு ஒருநாளும் வராது என்பது சொல்லித் தெரிய வேண்டிய செய்தியல்ல. ஆனால் எதையுமே முழுவதுமாகத் தெரிந்து கொண்டு பேசாமல் 'இந்துவிரோதிகள், தேசவிரோதிகள்' என்று பட்டம் கொடுப்பதை மட்டுமே தன்னுடைய தொழிலாக செய்துவரும் பார்ப்பனக் கும்பலுக்கு 'ஒரு சூத்திர வைரமுத்து பாப்பாத்தி ஆண்டாளை தேவதாசி (தேவடியாள்) என்று பேசிவிட்டான்' என்று எவனோ ஒரு அரைகுறை பார்ப்பானின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வைரமுத்துவின் பரம்பரையையே முச்சந்திக்கு இழுத்து அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

இதிலே சிறப்பு என்னவென்றால் வைரமுத்துவை தாசிமகன் என்று சொன்ன எச்சிக்கலை ராஜா, தைரியமாக அவன் கருத்தில் உறுதியாக இருக்கின்றான். ஆனால் அவனின் மிரட்டலுக்குப் பணிந்து வைரமுத்து வெட்கம் கெட்ட முறையில் வருத்தம் கோரியுள்ளார் என்பதுதான். வைரமுத்துவுக்கு உண்மையிலேயே தன்மான உணர்வும், சுயமரியாதையும் இருந்திருக்குமேயானால் எச்சிக்கலை ராஜா பேசிய பேச்சுக்கு செருப்பை எடுத்துக்கொண்டு அவன் வீட்டுக்கே சென்று ‘பஞ்சம் பொழைக்க வந்த பார்ப்பார பயலே.. உனக்கு அவ்வளவு வாய்க்கொழுப்பாடா’ என்று அவன் வாயிலேயே நாலு சாத்தி சாத்தியிருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது? ஆடம்பர வாழ்க்கைக்காக எழுத்தை அம்மணமாக்கி எழுதும் வைரமுத்து போன்றவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாதுதானே?

இப்போதுகூட வைரமுத்துக்காக மார்க்சிய இயக்கத் தோழர்களும், பெரியாரிய இயக்கத் தோழர்களும் தான் வெளிப்படையாக வந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். வைரமுத்து யாரைப் பணிந்து விருது வாங்க நினைத்தாரோ, அந்தக் கூட்டத்தில் இருந்து ஒரு நாய் கூட அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. மாறாக அனைத்து நாய்களும் சேர்ந்து அவரைக் கடித்துக் குதறுவதிலேயே குறியாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரியாரிய, மார்க்சிய அமைப்புகள் எல்லாம் இந்த மண்ணை பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிரான தளப் பிரதேசமாக மாற்றி அதை நிரந்தரமாகக் காத்துவர போராடிக் கொண்டு இருக்கும்போது, கேவலம் பேருக்காகவும், புகழுக்காகவும் பார்ப்பன பயங்கரவாதக் கும்பலுடன் கூடிக் கும்மாளம் அடித்த வைரமுத்துவுக்கு இது எல்லாம் ஒருநாள் நிச்சயம் நடக்கும் என்று நாம் எதிர்பார்த்ததுதான். அதுபோலவே நடந்துவிட்டது.

பார்ப்பனனின் கைகளில் இருந்து விருது வாங்குவது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லை. அர்த்தமுள்ள இந்துமதம், ஜெய ஜெய சங்கரா என்று எதையாவது எழுதி பேரையும், புகழையும் வேண்டும் அளவிற்கு வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் வரலாறு காறித் துப்பும். ‘புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ என்றார் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி. ஆனால் வைரமுத்து போன்றவர்கள் பேரோடும், புகழோடும் வாழ உயிரைவிட மேலானதாகக் கருதப்படும் தன்மானத்தையும், சுயமரியாதையையும் விட்டுவிட்டு உலுத்தர்களாய் வாழ்கின்றார்கள். எதை வேண்டும் என்றாலும் எழுதி சம்பாதிக்க முடியும். அப்படி ஒரு கூட்டம் தமிழ் எழுத்துலகில் எண்ண முடியாத அளவிற்கு இருக்கின்றது. அவர்கள் எல்லாம் எந்த வகையிலும் இந்தச் சமூகம் முன்னோக்கி பயணித்துவிடக் கூடாது என்று ஆளும் பிற்போக்கு கும்பலுக்கு ஊதுகுழலாக செயல்படுபவர்கள். அவர்களில் இருந்து வைரமுத்து எந்த வகையிலும் விதிவிலக்கானவர் கிடையாது.

மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதை அவரது குடும்பம் நிராகரித்தது. அதன் மூலம் தமிழ்ச் சமூகம் தலைநிமிர்ந்து நின்றது. தன் வாழ்நாளில் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையைத் தவிர வேறொன்றையும் நினைத்திராத அந்தக் கவிஞர்தான் உண்மையில் கொண்டாடப்பட வேண்டியவர். வைரமுத்து போன்றவர்கள் தமிழ்ச்சமூகத்தின் கொடிய வியாதிகள், காறி உமிழப்பட வேண்டியவர்கள். வைரமுத்துவின் பேச்சைக் கேட்டால் சில பேருக்கு உடலெல்லாம் பூரித்துப் போகின்றது. ஆனால் நம்மைப் போன்றவர்களுக்கோ எரியக்கூடாத இடமெல்லாம் ஏனோ எரிகின்றது. ஆண்டாள் கேவலமானவள் என்றால், அதைவிடக் கேவலமானவர் வைரமுத்து. இரண்டு பேருமே ஒரே ஆபாச குட்டையில் ஊறிய மட்டைகள். இப்போது கூட வைரமுத்துவிற்காக எச்சிக்கலை ராஜா உட்பட பார்ப்பனக் கும்பலை விமர்சிப்பது, வைரமுத்து என்ற பார்ப்பன கைக்கூலிக்காக அல்ல. பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு பெரியாரிய மண்ணில் புத்தி புகட்டுவதற்காகத்தான்.

- செ.கார்கி

Pin It