குறு, சிறு, மலை தெய்வ வழிபாட்டிலிருந்த தமிழ்ச் சமூகப் பிரிவினரை பொது சமய வழிபாட்டிற்குள் இழுக்க சமணமும் பவுத்தமும் முயற்சித்தன. அதற்காக தனிக் கோயில்களையும் மடங்களையும் விஹார்களையும் நிறுவி குறிப்பிட்ட அளவிற்கும் வளர்ந்தன. பிறகு இவற்றை அழித்து ஆதிசங்கரரின் சைவம் (தொடக்கத்தில் வைதீகம் எனப் பொதுவில் அழைக்கப்பட்டது) வெற்றிபெற்றது. அன்றைய மன்னர்களின் ஆட்சியதிகார உதவியோடுதான் இவை சாத்தியமாகின. ஆரிய பார்ப்பனியத்திற்குள் உருவான இன்னொரு சமயப் பிரிவான வைணவம் கடைசியாக தமிழ்நாட்டில் உருவாகி குறிப்பிட்ட வளர்ச்சியையும் பெற்றது.

periyazhwar andal

சைவமும் வைணவமும் தமக்குள்ளான மோதலை மன்னராட்சியின் இறுதி அத்தியாயத்தில் இருந்ததால் நிறுத்தி சமரசம் செய்து கொண்டன. அதன் விளைவாக பெருமாள் கோயில்கள் தமிழக கிராமங்கள் வரை பரவின. இதுவல்லாமல் காஞ்சிபுரத்தில் நரசிம்மேஸ்வர சிவாலயம், வேலூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள், திருநெல்வேலியில் சிவன் அணைந்த பெருமாள், தஞ்சையில் ராமலிங்கேஸ்வரர்... போன்ற கலப்பு கோவில்களும் உருவாயின. பெருமாளின் அவதார கதைகள் அனைத்துமே சைவ-வைணவ சண்டையையும் சமரசத்தையும் காட்டுவன. ஆழ்வார், நாயன்மார்களது சண்டைகளும் சமரசங்களும் இந்த ரகம்தான்.

தமிழர்களின் குறு, சிறு, மலைத் தெய்வங்களோடும் சித்தர்களோடும் சமண - பவுத்த துறவிகளோடும் அக்காள், தங்கை, அண்ணன், தம்பி, கணவன், மனைவி என ஏதோவொரு உறவு பாராட்டி முதலில் சிவனையும் பிறகு ஹரியையும் பொய் புரட்டு கதைகள் மூலம் தமிழரிடையே திணித்தது, பார்ப்பனியம். இதற்கு வட மாநிலங்களில் இருக்கும் போதே ஆக்கும் கடவுள் பிரம்மா - காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் என சகோதரர்கள் ஆக்கியதும், தமிழகத்தில் முருகனுக்கு சிவனை தந்தையாக்கியதும் வினாயகரை அண்ணன் ஆக்கியதும், அம்மனை சக்தி ஆக்கியதும் சக்தியைப் போலவே சிவனின் மறுபாதியாக விஷ்ணுவை ஆக்கியதும் எல்லோருக்கும் தெரிந்த உதாரணங்கள். என்னதான் உறவு பாராட்டி கதையளந்தாலும் சிவ மதத்தில் பல சித்தர்களின் வழிபாட்டு தனித் தன்மையை வைணவர்களால் அழிக்க முடியாமல் போனது. பல இடங்களில் பணிந்து சமரசம் செய்து ஒன்று கலக்கவே முடிந்தது.

அந்நிய சமயத் தாக்குதல்களால் தமிழரின் பல குறு, சிறு, மலை தெய்வங்கள் படிப்படியாக தனித்துவமிழந்து இன்று ஶ்ரீ, அம்பாள், ஈஸ்வர, ஹரிஹர என ஒட்டுரக அடையாளம் கொண்ட பார்ப்பனிய கடவுள்களாக மாறியுள்ளன. பல்வேறு தமிழ் இனக் குழு மக்களின் குல தெய்வங்களாக இவை இருப்பதால்தான் முற்றிலும் அழியாமல் இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளன. அதேபோல் பல பார்ப்பனிய எதிர்ப்பு கூறுகளையும் அடையாளங்களையும் மரபுகளையும் அழியாமல் வைத்திருக்கின்றன.

பார்ப்பனர்களுள் சைவ, வைணவ என இரு பெரும் பிரிவும், வைணவ பிராமணரில் (பெருமாளை வழிபடும் அய்யங்காரில்) வடகலை, தென்கலை என்ற இரண்டு பிரிவும் அதற்குள் பல உட்பிரிவுகளும் உண்டு.

வடகலை பிராமணர்கள் பெரும்பான்மையோர் வேத - உபநிடதங்களில், ஐதீகங்களில், சமற்கிருத மொழியில் பற்றுடையவர்கள். பிற சாதி கலப்பு இல்லாதவர்கள்.

வடகலைக்கு அடுத்த இடத்தில்தான் தென்கலை பிராமணருக்கு மதிப்பு இருப்பதாக கூறுகிறார்கள். தென்கலையில் ராமானுஜரின் சீர்திருத்த கொள்கை-நடைமுறைகளால் பல சாதிப் பிரிவினரின் (செட்டியார், யாதவர், நாயுடு போன்றவர்கள்) கலப்பு அதிகம். (சிறீரங்கம் கோயிலில் துளுக்க அல்லது பீபீ நாச்சியார் சிலை வழிபாடு உள்ளதைப் பார்க்கையில் முஸ்லீம் பெண்களையும் ஏதோ ஒரு சமரசத்திற்காக அங்கீகரித்ததும் தெரிகிறது).

வைணவ ஆழ்வார்களில் தமிழுக்கு முதன்மையளித்தவர்களும் அதற்கு எதிராக சமற்கிருதத்தை தமிழோடு கலந்து மணிபிறழ் முறையை கடைபிடித்தவர்களும் உண்டு. தமிழகத்தில் தற்போது தென்கலை வழி கோயில்களின் மடங்களின் ஜீயர்கள், ஆச்சாரியார்கள் பற்றியொழுகும் வழிபாட்டு மொழி சமற்கிருதமே. ஆழ்வார்களின் தமிழ் வழிபாட்டு முறை சில கோவில்களில் பெயரளவிற்கானதாய் உள்ளது. ஆண்டாள் என்கிற 'பிற சாதிப் பெண்'-ஆழ்வாரை (ராஜாஜி வடகலை என்பதால் ஆண்டாள் சர்ச்சை அவர்காலத்தில் எழுந்தபொழுது பெரியாழ்வாரின் கற்பனை பாத்திரம் இது என முற்றிலும் நிராகரித்தார்) ஏற்றுக் கொண்டதும் இப்பிரிவினர் மட்டுமே.

பெருமாளும் ஆண்டாளும் பெரும்பான்மை சிவ பக்தர்களால்கூட தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறிப்பிட்ட சிறுபான்மை பார்ப்பன - சத்திரிய - வைசிய பிரிவில் சில சாதியினரால் மட்டுமே துணை கடவுள்களாகப் பாவிக்கப்படுகிறது.

*******

பாஜக தலைவர் எச்.ராஜா பெரிதாக்கிய ஆண்டாள் சர்ச்சைக்கு தமிழர்களிடம் உள்ள வரவேற்பை கீழ்கண்ட அடிப்படையில் இனம்பிரித்துப் பார்ப்போம்.

தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் அதி சூத்திரர்கள் (வண்ணார், நாவிதர், ஓடர், பறவர் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்), இந்து புராணக் கதை - கற்பனைக் கடவுள்களுக்கு அப்பால் மூதாதையரின் வீரக் கதை நிஜ மாந்தர்களை - நாட்டுப்புற தெய்வங்களை வழிபடுவதால் அவர்களுக்கு ஆண்டாள் சர்ச்சை தொடர்பில்லாத ஒன்று.

பிற சூத்திர - ஆதிக்க சாதி இந்துக்களிடையே (குறிப்பிட்ட செட்டியார், குறிப்பிட்ட வெள்ளாளர், தேவர், கவுண்டர், நாடார், வன்னியர், முதலியார், மூப்பனார், முத்துராஜா போன்ற பிற்படுத்தப்பட்டவர்கள்) இருக்கும் ஆண்டாள் பற்றிய பக்தி ஈர்ப்பு என்னவோ மூன்றாம் அல்லது நான்காம் இடத்தில்தான் உள்ளது. இவர்களிடையே மூதாதையர்களின் வீரக் கதை மாந்தர்களும் கற்பனை உருவேற்றங்களும் நிறைந்த குலதெய்வங்கள் முதலிடத்திலும், பார்ப்பனியமயமாக்கிய ஊர் பெருமை அடிப்படையில் உள்ள பிரபல "ஶ்ரீ" வகையறா கடவுள்கள் இரண்டாம் இடத்திலும் வழிபாட்டுக்குரியவையாக உள்ளன. எனவே ஆண்டாள் நமது கடவுளல்ல என்ற புரிதலோடு, பொதுவில் கடவுள் என்றடிப்படையில் பார்ப்பதால், விலகிய கரிசனை மட்டுமே இச்சர்ச்சையில் இவர்களுக்கு இருக்கிறது.

வைணவ, சிவ மத உடன்பாட்டிற்குப் பிறகு சிவனை வழிபடும் சைவப் பிள்ளை - வெள்ளாளர்கள் பிரிவு (பிராமணர் அல்லாத முற்படுத்திக்கொண்ட சாதியினர்) ஆண்டாளை தம் கடவுளுக்கு அடுத்த நிலையில் வைத்தே பார்க்கின்றனர். முரண்படும் சித்தர் மடம், ஆதீனம் போன்ற உட்பிரிவு சிவ சைவர்கள் ஆண்டாளை வணங்குவதில்லை. இன்றைய ஆண்டாள் சர்ச்சையில் விலகியே நிற்கிறார்கள்.

அடுத்து சைவ, வைணவ பார்ப்பனர்கள் (முற்படுத்திக் கொண்ட பிராமணர்கள்) ஆண்டாளை ஏற்றுக் கொண்டாலும் ஒரே நிலையில் இருந்து வழிபடுவதில்லை.

வடகலை அய்யங்கார் இப்போதைய ஆண்டாள் சர்ச்சையில் ஒதுங்கி இருப்பதாகவே தெரிகிறது. தனிப்பட்ட ஒருசிலர் வைரமுத்துவிற்கு எதிரானப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம்.

தென்கலை அய்யங்கார் மட்டுமே வைரமுத்துக்கு எதிராக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். போராடுகிறவர்கள் நெற்றிகளில் எல்லாம் தென்கலை நாமம் (y-namam) உள்ளதைப் பார்க்கலாம்.

அடுத்து, நெற்றியில் பட்டை போடும் சிவனை வழிபடும் அய்யர் என்கிற சைவப் பிராமணர் அதாவது காஞ்சி சங்கரமடம் வகையறாக்கள் உள்ளனர். இவர்களில் ஒரு சில உட்பிரிவு அய்யர்கள் வைணவர்களுடன் கைகோர்த்து நிற்கிறார்கள். (நித்தியானந்தா, சங்பரிவாரங்களுடன் கைகோர்த்திருக்கிறார் என்பதை வைரமுத்து மீதான அவரது சிஷ்ய தருதலைகளின் நாக்கூசும் பேச்சுகள் காட்டுகின்றன).

பல சைவப் பார்ப்பன பிரிவினர் ஆண்டாள் சர்ச்சையில் விலகி நிற்கிறார்கள். இவர்கள் (பாஜக சாராதவர்கள்) ஆண்டாளுக்கு ஆதரவாக வீதிக்கு வரவில்லை. இவர்கள் தென்கலை பிராமணர்களுக்கு கீழாக மதிக்கப்படுபவர்கள்தான்; இவர்களும் சிவனுக்கு கீழாகத்தான் பெருமாள் -ஆண்டாளை பார்க்கிறார்கள்.

எனவே ஆண்டாள் வைணவ - தென்கலை கடவுளே அன்றி இந்துக்கள், தமிழர்கள் அனைவருக்குமான கடவுளல்ல. வைரமுத்து விட்டெறிந்த கல், பார்ப்பனிய சாதிய முறைகளில் ஆண்டாளை தனியே பிரித்து அடையாளமிட்டுள்ளது. இந்துத்துவா கும்பலோ இதை மூடி மறைத்து இந்துக்களின் தெய்வமாக ஆண்டாளைக் காட்டி ஆதாயம் தேட முற்படுகின்றனர். அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும்.

- ஞாலன்

Pin It