ஏப்- 14. அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள். வழக்கம்போலவே தலித் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் மட்டுமே சில விழாக்கள் நடைபெறும். மற்றபடி பொதுவாக சில தலைவர்கள் தாங்களாகவே நேரடியாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிப்பர். சிலர் தம் சார்பாக யாரையாவது அனுப்பி வைப்பர். ஒருவேளை இது தேர்தல் காலமாக இருப்பதால் மாலைகளின் தடிமன் மற்றும் எண்ணிக்கைகள் கூடும் வாய்ப்புள்ளது.
எப்படியாயினும், அம்பேத்கர் என்கிற உருவம் இன்று அரசியல் களத்தில் ஒதுக்கி வைக்கப்படுவதாயில்லை. அது பொதுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கட்சிகளின் பதாகைகளில் மிகுந்த பெருந்தன்மையோடும் சகஜ மனோபாவத்தோடும் அவர் படம் இடம் பெற்றுள்ளது. அதாவது தன்னை சாதிய உணர்விலிருந்து விடுபட்டவராகக் காட்டிக்கொள்ள விரும்பும் தலித் அல்லாத தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் அம்பேத்கர் என்கிற உருவம் அப்படியானதொரு அங்கீகார முத்திரையாக மாறியிருக்கிறது. இதற்காக அந்த நபரோ அல்லது அமைப்போ தனது சுயசாதிப் பெருமிதத்தில் சிறுவீதத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தமது சொந்த வாழ்க்கையில் சாதியத்திற்கு எதிராக துரும்பையும் அசைக்காமலே அம்பேத்கர் என்கிற உருவத்தை இவர் அங்கீகரிப்பதற்கு பிரதியுபகாரமாக அவர்களுக்கு சாதி கடந்த சமத்துவ விரும்பி என்கிற பட்டத்தைச் சூட்டுகிறது அம்பேத்கர் உருவம்.
உண்மையில் அம்பேத்கர் தனக்கான அங்கீகாரத்திற்காக வாழ்நாளில் எதுவொன்றையும் செய்தாரில்லை. தனது உழைப்பையும் அறிவையும் தனக்கு கிடைத்த அதிகாரங்களையும் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வையும் ஒடுக்குமுறைகளையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கும் மனிதஜீவிகளுக்குள் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்குமே பயன்படுத்தினார். ஆனால் இன்று அவரை கொண்டாடுபவர்கள், அவர் பெயரால் இயங்கும் அமைப்புகள் பெரும்பாலானவற்றுக்கும் அவரது உருவம்தான் தேவைப்படுகிறதேயன்றி அவரது சிந்தனைகளல்ல.
பன்முகப்பட்ட ஆளுமையும் செயல்திறமும் கொண்டு விளங்கியவர். இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெருந்தடையாய் இருக்கின்ற சாதியத்திற்கு எதிராக அறிவாயுதம் ஏந்தி வாழ்நாள் முழுவதும் போராடியவர். இன்றளவும் அப்போராட்டத்திற்கான உள்ளொளியையும் சக்தியையும் தமது மேதைமைமிக்க ஆய்வுகள் படைப்புகள் வழியாக வழங்கிக் கொண்டிருக்கும் அந்த மகத்தான மனிதரை வெறும் சிலையாக படமாக சுருக்கி சாரமிழக்கச் செய்துவிட்ட நிம்மதியோடுதான் இப்போது அசூயையின்றி அவர் தீண்டப்படுகிறார் அரசியல் களத்தில்.
ஆனால் பெயரளவிலான இந்த ஏற்பும்கூட சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் நடைபெறவேயில்லை. தலித் அல்லாத எந்தவொரு வீட்டிலும் அவ்வூரின் தலித் ஒருவருக்கு நேரும் தீண்டாமையும் புறக்கணிப்புமே அம்பேத்கருக்கும் நீடிக்கிறது. தனது இளம்பருவம் தொடங்கி வாழ்நாள் முழுவதும் அவர் எதிர்கொண்ட அவமானங்களிலிருந்து இன்றளவும் அவர் தப்பிக்க முடியவில்லை. வெளிப்படையாகவும் நுட்பமாகவும் சாதியை இன்றளவும் காப்பாற்றி வருவதொன்றே கூட அவருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் அவமதிப்பு எனக் கூறமுடியும்.
மிகப்பெரும் பொருளியல் மேதையான அவரது ஆய்வுகளைப் பின்தொடர்ந்து இந்தியமயப்பட்ட ஒரு பொருளியல் சிந்தனைப்பள்ளியை வளர்த்தெடுப்பதிலும் கூட அவர் தீண்டப்படாதவராகவே புறக்கணிக்கப்பட்டுள்ளார். அரசு சோசலிசம் என்று அவர் முன்வைத்த கோட்பாட்டை உள்வாங்கிக் கொள்வதற்கு இன்றுவரை எந்த அரசியல் இயக்கமும் தயாரில்லை. யாரோ ஒரு எழுத்தாளரின் ஒரேயோரு புத்தகத்தை வைத்துக் கொண்டு ஆய்வு செய்து பட்டமும் வேலையும் பெற்றுவிடுகிற நமது ஆய்வாளர்களை அம்பேத்கரின் பேச்சும் எழுத்துமான நாற்பதுக்கும் மேற்பட்ட தொகுப்புகள் ஈர்க்காமலிருப்பதற்கு எது காரணம்? காரணங்கள் மிகவும் வெளிப்படையானவை. அதாவது அம்பேத்கர் என்கிற ஒரு கலகக்காரர் மனிதர்கள் அனைவரையும் சமமென்றார். அதன்மூலம் தலித் அல்லாத பிற சாதியாருக்கு அவர் பொது எதிரியானார். குறைந்தபட்சம் சாதி உளவியலுக்கு ஆட்பட்ட அனைவருக்கும் விரும்பத்தகாதவரானார்.
ஆனால் ‘இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறாங்க’ என்ற அப்பாவித்தனமான அல்லது சாமர்த்தியமான கேள்வியின் மூலமாக இச்சமூகத்தின் மீதான சாதியப் பிடிமானத்தை எதிர்த்து அம்பேத்கர் வைத்த விமர்சனங்களையும் அதனடியான போராட்டத்தையும் ஒதுக்கித் தள்ளி கடந்து போய்விடும் கபடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. கல்வியும் தகுதியும் திறமையும் உள்ள யாரையும் இச்சமூகம் கொண்டாடும் என்னும் பசப்பலான வாதங்களின் பின்னே பதுங்கியிருக்கும் போலித்தனங்களையும் சாதி உளவியலையும் அவரது வாழ்க்கையே அம்பலப்படுத்துகிறது. அவரளவுக்கு படித்தவர்கள் நம்நாட்டில் இன்றளவும்கூட வேறெவரும் இல்லை. இருந்தும் அம்பேத்கரை ஒரு தேசியத் தலைவராக, பெருமைமிக்க நமது முன்னோடிகளில் ஒருவராக, மாபெரும் கல்வியாளராக, வரலாற்றாய்வாளராக, சட்ட வல்லுனராக, ஒடுக்குமுறைக்கு எதிரான போராளியாக கொண்டாடுவதைத் தடுப்பது எது? சமூகத்தின் பொதுப்புத்தியில் அவர் தலித்களின் தலைவராக மட்டுமே குறுக்கப்பட்டு அவரது சிலையும் படமும் பெயரும் சிந்தனையும் பொதுவெளியில் புழங்கத்தகாததாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன? தகுதியும் திறமையும் இருந்தாலும்கூட அங்கீகரிக்க முடியாதபடிக்கு ஒவ்வொருவரது ஆழ்மனதையும் சாதியுணர்வே கட்டுப்படுத்துகிறது என்ற அம்பேத்கரின் குற்றச்சாட்டு இன்றளவும் பொருத்தமுடையதாகிறது.
நகரமயமாக்கமும் கல்வியும் நவீன தொழில்நுட்பமும் சாதியத்தை பொருட்படுத்துவதில்லை என்றும் எனவே அம்பேத்கரின் குற்றச்சாட்டுகளும் வாதங்களும் இன்று பொருத்தப்பாடு அற்றுவிட்டன என்றும்கூட வாதிக்கப்படுகிறது. ஒரு தலித் சத்துணவு ஊழியர் சமைத்த உணவை சாப்பிடுவதற்கு தமது குழந்தைகளை அனுமதிக்காத கிராமத்தாருக்கும், வால்மீகி சாதிப் பெண்களை வீட்டு வேலைக்கு சேர்த்துக் கொள்ள மறுக்கிற டெல்லிக்காரருக்கும் வாய்த்திருப்பது ஒரே மனநிலைதான். அது தீட்டு குறித்த அச்சமும் தலித்கள் குறித்த இழிவான பார்வையும் தான்.
உண்மையில் நகரத்திற்கென்று ஒரு சொந்த முகம் கிடையாது. சாதியத்தால் ஊரென்றும் சேரியென்றும் பிளவுண்டு, ஏற்றத்தாழ்வு என்பதை இயல்பானதொரு மதிப்பீடாக பயின்று வாழும் கிராமங்களிலிருந்து தனது சொந்த சாதி சார்ந்த பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், திருவிழாக்கள், மொழி, பெருமிதங்களோடு நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வந்து விட்டவர்களின் தொகுப்பாகத்தான் நமது நகரங்கள் உள்ளன. எனவே ஒரு நகரவாசி வாழ்வின் எத்தருணத்திலும் சாதி குறித்து தனக்கிருக்கும் மனப்பதிவை மாற்றிக் கொள்ளும் அவசியத்தை எதிர்கொள்வதேயில்லை. இன்னும் சொன்னால் அதை காப்பாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளே மலிந்துள்ளன. எல்லா சாதிச் சங்கங்களும் பெரும் நகரங்களிலிருந்தே செயல்படுகின்றன என்பதும் அவற்றுக்கு ஆதாரமாய் நகர்சார் நடுத்தர வகுப்பும் மேட்டுக்குடியுமே இருக்கின்றன என்பதும் ஒரு எளிய உண்மை. நகரங்களில் முகமற்றுத் திரிவதான கற்பிதங்களுக்கும் அதனடியாய் எழுகிற தற்காப்புணர்வுக்கும் வடிகாலாக இவ்வவமைப்புகளே இன்று செயல்படுகின்றன.
தற்காலத்தில் ஒரு பேருந்தில் பயணிப்பது அல்லது திரையரங்கில் படம் பார்ப்பதைப் போலவே குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக ஒரு தொழிலகத்திலோ அலுவலகத்திலோ கூடுவதற்கும் சாதி ஒரு முன்னிபந்தனையாக வைக்கப்படுவதில்லை. ஆனால் அவ்விடத்திலும் அவர் தன் சாதியைத் துறக்க வேண்டியராயில்லை. அவ்விடத்தில் அவர் வெளிப்படுத்தும் அதிகபட்ச சமத்துவ குணம் என்னவென்றால் தனது சகஊழியர்கள் இன்னின்ன சாதியாராகத்தான் இருக்கவேண்டும் என்று கோராமல் இருப்பதுதான். அந்த அலுவல் நடக்கும் போதும் முடிந்த பின்னும் வீடு திரும்பிய நிலையிலும்கூட அவர் தனது சுயசாதி சார்ந்த எதுவொன்றையும் இழப்பதில்லை. வெளியிடத்தில் அவர் தீண்டாமையை கடைபிடிக்காதவராகத்தான் இருக்கிறாரேயொழிய சாதியை கைவிட்டவராக அல்ல. தவிரவும் சமூகம் என்பது குடும்பம் என்கிற சிற்றலகுகளின் தொகுப்புதானே? அந்த குடும்பங்கள் சாதியின் அடிப்படையில்தானே கட்டமைக்கப்படுகிறது... குடும்பத்திற்குள் - தனிமனித வாழ்வில் சாதியத்தின் இருப்பு நீடிக்கிறவரை சமூகத்திலும் சாதி நீடிக்கவே செய்யும். எனவே நகரம், தொழில்நுட்பம் சாதியை ஓழித்துவிடவில்லை. ஒழிக்கப்பட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு அது ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற புதிய வடிவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே தான் சாதியை ‘வாழும் கடந்த காலம்’ என்றார் அம்பேத்கர்.
அரசியல் விருப்புறுதி கொண்ட ஒரு ஆட்சியோ ஒரு தலைவனோ வாய்க்கும்போது வலுவான சட்டங்களின் மூலமாகக்கூட சிலவகையான ஒடுக்குமுறைகளை ஒழித்துவிட முடியும். ஆனால் சாதிரீதியான ஏற்றத்தாழ்வை சட்டம் போட்டு ஒழிக்கவே முடியாது. ஏனென்றால் சாதி யாரோ சிலர் மட்டுமே வைத்திருப்பதல்ல. அது எல்லோருக்குமானதாய் இருக்கிறது. அது வெளியே நிலவும் வஸ்துவுமல்ல. ஒவ்வொருவரது வாழ்வின் எல்லாக் கணங்களிலும் உள்ளிருந்து வழிநடத்தும் ஆழ்மன போதை. அதிலிருந்து விடுபடுவதற்கானப் போராட்டத்தை தனிமனித அளவில் சொந்த வாழ்க்கையிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது. சாதியற்றதான மனப்பாங்கை பெறுவதற்கான போராட்டமென்பது ஒருவர் நாகரீகமான குடிமைச் சமூகத்தில் வாழ்வதற்கான - தன்னைத்தானே மனிதனாக்கிக் கொள்வதற்கான போராட்டமாகும்.
சமூகத்தின் பொதுவெளியில் புழங்குவதற்கும் அதன் வளங்களிலும் இயற்கை ஆதாரங்களிலும் தனக்குரிய பங்கைப் பெறுவதற்கும் எதன் பேராலும் ஒருவர் தடுக்கப்படக்கூடாது என்பதே அம்பேத்கரின் கனவு. மனிதருக்குள் சமத்துவத்தை நிலைநிறுத்துவதில் பெருவிருப்பம் கொண்டுள்ள அந்தக் கனவு ஆண் பெண் பேதத்தையும்கூட அனுமதிப்பதில்லை. உயர்வருண ஆண் கீழ்வருணப் பெண்ணுடன் இணைந்ததால் பிறந்தவர்கள் தொடத்தக்க சாதியினர் (அனுலோம சாதியார்) என்றும், உயர்வருணப் பெண் கீழ்வருண ஆணுடன் இணைந்து பிறந்தவர்கள் தீண்டத்தகாத சாதிகள் (பிரதிலோம சாதியார்) என்றும் வரையறுக்கப்பட்ட சாதியின் மூலவேரைக் கண்டறிந்தவர் அம்பேத்கர். பிறசாதியோடு ரத்தக்கலப்பு ஏற்பட்டு தன் சாதியின் தூய்மையும் புனிதமும் தீட்டாகிவிடக்கூடாது என்ற கற்பிதமும் அச்சமுமே பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு வழியமைக்கிறது என்பதை அவர் அம்பலப்படுத்தினார். சாதிய, பாலின ஒடுக்குமுறைகள் ஒன்றுக்குள் ஒன்றாய் ஊடாடியிருப்பதை உணர்ந்த தெளிவிலிருந்து ‘ரத்தக்கலப்பு ஏற்படாமல் சாதியத்தை ஒழிக்கமுடியாது’ என்று பகிரங்கமாக அறிவித்தார் அம்பேத்கர்.
சாதிரீதியான ஒடுக்குமுறைக்கும் மீறியதாய் பாலின ஒடுக்குமுறை நிலவுகிறது. சாதியைத் தவிர இழப்பதற்கு ஏதுமற்ற தலித்துக்கும் கூட இங்கே இழப்பதற்கு அவரது ஆணாதிக்க மனோபாவம் மிச்சமிருக்கிறது. சமத்துவமின்மையின் எல்லா வடிவங்களையும் எதிர்த்து களம் கண்ட மகத்தான போராளியான அம்பேத்கரின் சிந்தனை வெளிச்சத்தில் சாதி கடந்த, ஆண் பெண் பேதம் கடந்த மனிதநிலைக்கு மேலெழும்புவதற்கு நாம் யோசிக்கலாம். ஒருவேளை அதுதான் அவர் பிறந்ததற்கும் வாழ்ந்ததற்குமான அர்த்தம் பொதிந்த நமது போற்றுதலாயிருக்கக்கூடும்.
(இக்கட்டுரை சற்றே சுருக்கப்பட்டு 13.04.2006 அன்று தினமணி நாளிதழில் வெளியானது)
- ஆதவன் தீட்சண்யா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
போற்றுதல் பொருட்டு...
- விவரங்கள்
- ஆதவன் தீட்சண்யா
- பிரிவு: கட்டுரைகள்