வர வர நாட்டுல சட்டம் ஒழுங்கு எதுவும் சரியில்லைங்க, கையில ஸ்பேனர் எடுத்தவன் எல்லாம் மெக்கானிக்குனு சொல்றான், பேனா எடுத்தவன் எல்லாம் எழுத்தாளன்னு சொல்றான். ஒன்னுமே புரிய மாட்டேன் என்கின்றது. மக்கள் என்னடானா எதைப் பத்தியும் கவலைப்படமால் அவங்க உண்டு, அவங்க வேலையுண்டுனு போயிட்டு இருக்காங்க யாருக்கும் எதைப் பத்தியும் கவலையில்லை. நாடு நாசமாய் போயிட்டு இருக்குனு சொன்னா, பயபுள்ள நின்னு கூட அது என்னான்னு கேட்கமாட்டேனு மூஞ்ச இழுத்து வைச்சிகிட்டு வேகமா நகர்ந்து ஓடிருது. போற போக்கப் பார்த்தா அரசியல் கட்சி எல்லாம் டிவி சீரியலுக்கு இடையில தான் வந்து பிரச்சாரம் செய்யனும் போல் இருக்கு. எவ்வளவோ பெரிய கட்சியா இருந்தாலும், காசு குடுக்காமா நூறு பேத்துக்கு மேல சேர்க்க முடியல, நாட்டையே ஆளுர கட்சி மாநாடு போட்டாலும், ஆயிரக்கணக்கான காலி பெஞ்சுகல பாத்துக்கிட்டுதான் பேசவேண்டி இருக்கு. நாடு இப்படியே போச்சுதுனா யார்தான் நாட்டக் காப்பாத்தறது.

எவன், எவனோ கட்சி ஆரம்பிக்கிறான். மண்டையில இருக்குற மசுறு பூராம் கொட்டி, தலை நரைத்து கிழப்பருவம் எய்தி, காடு வா வாங்குது, வீடு போ போங்குது இந்த சமயத்துல நாட்டக் காப்பாத்தப் போரேன்னு அக்கபோர் பண்ணிகிட்டு இருக்கானுங்க. அவனுங்களப் பார்த்து இத்தனை நாளா என்னத்த புடுங்கிட்டு இருந்த, இப்ப நாட்ட காப்பாத்துரேன்னு ஆட்டிக்கிட்டு வந்துட்டன்னு எவனும் கேட்க மாட்டேங்கறானுங்க. என்னத்த சொல்ல? காலம் ரொம்ப கெட்டுப் போச்சு. இந்த வாட்ஸ்அப்பும், பேஸ்புக்கும், ட்விட்டரும் வந்தாலும் வந்தது, அவன் அவனுங்க கருத்து கந்தசாமியா அவதாரம் எடுத்துட்டானுங்க. எப்ப பார்த்தாலும் தொண தொண எதையாவது போட்டுகிட்டே இருக்கிறானுங்க, அட என்னத்தைதான் அப்படி விடிய, விடிய ஒக்காந்துகிட்டு போட்டுகிட்டு இருக்கிறானு பார்த்தா, அஞ்சு பைசாவுக்குக் கூட பிரயோசனம் இல்லாத விஷயத்தைதான் கண்ணா முழி பிதுங்க போட்டுகிட்டு இருக்குதுங்க. இவனுகளப் பார்த்தாலே பொச்செல்லாம் எரிய ஆரம்பிச்சிருது. அட ஆமாங்க என்னத்த சொல்ல, காதுல தோடு போட்டுக்குறான், கையில வளையல் போட்டுக்குறான், அப்புறம் எதோ ஒயர் மாதிரி இருக்குது, அத கையில பூராம் சுத்தி வைச்சிருக்கிறான். இதுகூட பரவாயில்லைங்க அன்னைக்கு ஒருத்தன் கழுத்துல சைனைடு குப்பி மாதிரி ஏதோ போட்டிருந்தான். நான் பயிந்து என்னடா தம்பி கழுத்துல சைனைடு குப்பி மாதிரி ஏதோ போட்டிருக்க, உனக்கு யாருடா இதக் கொடுத்தது. இலங்கையில தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிச்சாச்சினு அரசாங்கமே சொல்லீருச்சே.. அப்புறம் அந்த மாபெரும் தியாகிங்க போட்டிருந்த சைனைடு குப்பிங்க உனக்கு எப்படிடா கிடைச்சுதுனு கேட்டேன், அவன் அசால்ட்டாக போங்கண்ண இது சைனைடு குப்பி எல்லாம் இல்ல, சும்ம ஸ்டைலுக்குப் போட்டிருக்கேன்னு அசால்ட்டா சொல்லிட்டுப் போய்ட்டான்.

எப்புடிடா இவனுங்கள திருத்தி நாட்டை காப்பாத்தப் போறோம்னு ஆழமான யோசனையாவே கொஞ்ச நாளா இருக்கு. நாட்டை ஆளுற பிரதமர் என்னான்னா ஆட்சிக்கு வந்தா பாலாறும், தேனாறும் ஓடும், எல்லாம் மொன்டு மொன்டு குடிச்சி புஷ்டியாகிறலாம்னு சொல்லி ஆட்சிக்கு வந்து, அப்பறம் எல்லாத்தையும் ஓட ஓட கோவணத்தை உருவிட்டு இருக்கிறாரு. ரேசனுல பொருளே இல்ல. இந்த லட்சணத்துல ஆதார் இல்லாட்டி ரேசனுல பொருள போடமாட்டேன்னு சொல்லி, அதையே நம்பி இருந்த ஏழைகளை எல்லாம் பட்டினி போட்டு சாகடித்து, இந்தியாவோட மக்கள் தொகையை குறைச்சிகிட்டு இருக்கிறாரு. இவருதான் இப்படினா இவரோட சிஷ்யப் பிள்ள சின்ன மோடி உத்திரப் பிரதேசத்துல மாட்டுராஜ்ஜியம் நடத்திட்டு இருக்கிறாரு. யாரு எப்ப சாவாங்கனே தெரியாத ஒரு மரண பீதியில மக்களை வைச்சி இருக்கிறாரு. உடம்பு சரியில்லன்னு ஆஸ்பிட்டலுக்குப் போனா சின்ன மோடி அங்க ஒரு டுவிஸ்ட் வைச்சு ஆஸ்பிட்டலேயே வந்தவங்க கதைய முடிச்சு பாதிபேர்த்த கைலாயத்துலேயும், மீதி பேர வைகுண்டத்துக்கும் அனுப்பி வெச்சுட்டாரு.

இது மட்டும் இல்லைங்க இன்னும் எவ்வளவோ பிரச்சினைகள் எல்லாம் நாட்டுல இருக்குது. யாரும் இல்லைன்னு எல்லாம் சொல்ல மாட்டாங்க. ஏதோ சில பேரும் ரோட்டுல வந்து நின்னு போராடுறாங்க... நாம சும்மா இல்லைன்னு எல்லாம் பொத்தாம் பொதுவா சொல்லீட்டு எல்லாம் போயிட முடியாது. தங்களுக்குப் பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை மக்கள் நல்லா இருக்க வேணும்னு நினைக்கிற மனுசங்க இன்னமும் கொஞ்ச பேர் நாட்டுல இருந்துட்டுதான் இருக்காங்க, ஆன என்ன பிரயோசணம் எவனும் அவனுங்கள மதிக்கறது இல்லை. படத்துல குண்டிய காட்டிகிட்டு ஆடுறவனுக்கு இருக்கிற மரியாதை, வேகாத வெயில்ல ரோட்ல நின்னு தொண்டத் தண்ணி வத்த கோஷம் போடுற போராளிக்கு இல்லாமா போச்சு. இது எல்லாம் நாடு நாசமா போறதுக்கான கெட்ட அறிகுறின்னு மாத்திரம் நாம உறுதியா சொல்லலாம்.

ஆனா என்ன இப்ப பிரச்சினைனா நாட்டுல கொஞ்சமாச்சும் ஜனநாயகம்னு ஒன்னு இருக்குதுனா அது எல்லாம் மக்களும் அரசியல் இயக்கங்களும் போராடி வாங்கிக்கொடுத்துதான். எவனும் வந்து சும்மா எல்லாம் கொடுத்துறல. ஆன இதக் கூட புரிஞ்சிக்காதவங்க எல்லாம் நீதிபதியா இப்ப இருக்காங்க. மக்கள் பிரச்சினைக்காக போராடுனா புடுச்சு உள்ள போடுங்கன்னு நாக்குமேல பல்லு போட்டுக்கிட்டு உத்திரவு போடுரானுங்க. இதுகூட பரவாயில்லை இன்னும் சில நீதிபதிங்க என்ன விமர்சனம் பண்ணுனா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேனு மிரட்டுரானுங்க, நான் தெரியாம தான் கேட்கின்றேன், இன்னைக்கு இந்த சீட்டுல வந்து உக்காந்துகிட்டு ஒய்யாரமா தீர்ப்பு சொல்லிட்டு இருக்கிறயே இதை எல்லாம் உனக்கு யாரு வாங்கிக் கொடுத்தான்னு உனக்குத் தெரியுமா? அது நிச்சயமா உங்க அப்பனும் தாத்தனும் கிடையாது. எங்க பெரியாரும், அம்பேத்கரும் போராடி வாங்கிக் கொடுத்த உரிமையிலத்தான் இப்ப நீ வந்து இங்க நீதிபதியா உட்காந்துகிட்ட இருக்க. உனக்கு நம்பிக்கை இல்லைனா போயி ஒரு அறுபது வருசத்துக்கு முன்னாடி நீ வேலைபார்க்குற நீதிமன்றத்துல எத்தனை பார்ப்பனர் அல்லாத நீதிபதிங்க இருந்தாங்கனு லிஸ்ட்ட எடுத்துப் பாரு. அப்பத்தான் உனக்கெல்லாம் புத்திவரும். போராட்டம் அப்படிங்கறது எவ்வளவு முக்கியம்னு.

ராஜாஜினு ஒரு பார்ப்பான் எல்லா பள்ளிக்கூடத்தையும் மூடிட்டு சூத்திரப் பிள்ளைகளை எல்லாம் மாடு மேய்க்கவும், பரம்பரை தொழில் செய்யமும் துரத்திவிட்டான். ஆனா காமராசர் தான் ஆயிரக்கணக்கான பள்ளியைத் தொறந்து தமிழ்நாட்டு சூத்திரப் பயல்கள் வாழ்க்கையில் கல்வி விளக்கேற்றினார். அதனால்தான் இப்ப இவனுங்க எல்லாம் படிச்சி நீதிபதியாவும், டாக்டராகவும், போலீசாகவும் இருக்கானுங்க. ஆனா இப்ப என்னான்ன இப்படி வாங்கிக் கொடுத்த சலுகையில படிச்சு வந்தவனுங்க நுழைவுத் தேர்வு கொண்டுவான்னு தீர்ப்பு கொடுக்கிறானுங்க. தீர்ப்ப கொடுக்குற இவன் எத்தனை நுழைவுத்தேர்வை எழுதிட்டு வேலைக்கு வந்தான்னு கடைசிவரைக்கும் சொல்லவே மாட்டேன்னு கல்லூளி மங்கன் மாதிரி இருக்கிறான். இவன் தீர்ப்பு கொடுக்குற லட்சணத்துக்கு இவனுங்கள யாரும் விமர்சனமே பன்னக் கூடாதாம். நாட்ல இருக்குற எல்லாத்தையும் இவனோட அடிமைனு இவன் நினைச்சுட்டு இருக்கான்.\

நாம யாரையும் குறிப்பிட்டு சொல்லல. சும்ம பொதுவாகத்தான் சொல்றோம். ஏன்னா நாம எல்லாம் சட்டத்தை மதிக்கும் வம்சாவளியில் பிறந்து வந்தவங்க. பார்த்து கொஞ்சம் சூதானமா தீர்ப்பு கொடுங்கனுதான் நீதிபதி அய்யாக்களை ரெக்வஸ்ட் பண்ணி கேக்குறோம். உன் பொண்டாட்டி தாலியப் போலவே அடுத்தவன் பொண்டாட்டி தாலியையும் நல்ல படியா பாத்துக்கனும் தான் சொல்றோம். காச வாங்கிட்டு தீர்ப்பு கொடுக்குற பல நீதிபதிங்க கீழ் கோர்ட்டுல இருந்து மேல் கோர்ட் வரைக்கும் இருக்காங்க. ஆன அதப் பத்தியெல்லாம் நீதிபதி அய்யாக்கள் ஒன்னும் சொல்லுவது கிடையாது. நம்ம கிராமத்துல ஒரு நல்ல பழமொழி சொல்வாங்க, என்ன கொஞ்சம் கேவலமா இருக்கும் பரவாயில்லை. இருந்தாலும் நீதிபதி அய்யாக்கள் நெறைய படிச்சவங்களா இருக்குறதால தப்பா எடுத்துக்க மாட்டாங்கனு நினைக்கின்றேன் அது என்னான்னா “மொதல்ல உன் பொச்ச கழுவு, அப்புறம் அடுத்தவன் பொச்ச கழுவலாம்”

- செ.கார்கி

Pin It