உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறவிருக்கும் நேரத்தில் - பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதி மன்றம் இடைக்காலத் தடைவிதித்தவுடன் பார்ப்பன வட்டாரங்கள் மகிழ்ச்சிக் கடலில் குதித்தன. உயர் கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்கள் இனிப்பு வழங்கி கொண் டாடினர். ‘இந்து’ பார்ப்பன நாளேடு, ‘தகுதி திறமை’ மய்யங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற நிறு வனங்களில் இடஒதுக்கீடுகள் நுழையக் கூடாது என்று தலையங்கம் தீட்டி, தனது பார்ப்பன புத்தியை வெளிப்படுத்தியது. இந்த நிலையில், தமிழகம் முழு அடைப்பு நடத்தி, எதிர்ப்பைப் பதிவு செய்தது. ஆந்திராவிலும் முழு அடைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூடி, நீதி மன்றம் தடையை நீக்குவது பற்றி பரிசீலித்தது. இந்த நிலையில், மத்திய மனித வளத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங், பாராட்டத்தக்க நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார். அடுத்த அறிவிப்பு வரும் வரை உயர்கல்வி நிறுவனங்கள், மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்குமாறு மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் மத்திய அரசின் உதவி பெறும் நிறுவனங்கள் அனைத்துக்கும் உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட அனைத்து நிறு வனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடையில் 27 சதவீத அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரை சேர்ப்பதற்கு, தடைவிதிக்கப்படவில்லை என்றும், எனவே, மாணவர் சேர்க்கையை தொடரலாம் என்று வீரப்ப மொய்லி கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலை யில் உயர்கல்வி நிறுவனங்கள் அவசர அவசரமாக உச்சநீதிமன்றத் தடையைக் காட்டி, இடஒதுக்கீடு இல்லாமலே, அனுமதியைத் தொடங்க திட்டமிட்டிருந்தன. இந்த நிலையில் அர்ஜுன் சிங் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் மேற் கொண்ட இந்த சரியான நடவடிக்கையால் பார்ப்பன வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்தள்ளன.

இதற்கிடையே நீதித் துறை எல்லை மீறக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் டில்லியில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பரபரப்பாகப் பேசியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையிலேயே பிரதமர் பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.

நாடாளுமன்றம், நீதித் துறை மற்றும் நிர்வாகம் ஆகிய மூன்று தூண்களுக்கும் இடையிலான மெல்லிய கோட்டைத் தாண்டி நீதித்துறை செயல்படுவது கூடாது. எல்லை மீறி செயல்படுவது இந்தத் தூண்களிடையே பிரிவினையை உருவாக்கும். அரசியலமைப்புச் சட்டத் தின் இதர அமைப்புகளின் செயல்பாடு களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுத்துக் கொள்வது குறித்து நீதித்துறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீதித்துறையின் செயல்பாடு என்பதற்கும், நீதித் துறையில் எல்லை மீறல் என்பதற்கும் இடையில் மெல்லிய வேறுபாடு என்பது இருக்கிறது. இதர அமைப்புகளின் செயல்பாடுகளை தன் வசம் எடுத்துக் கொள்வது என்பது எல்லை மீறலே ஆகும்.

நீதித் துறையின் முதன்மையான பணி என்பது சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதே ஆகும். மேலும், அரசியலமைப் புச் சட்டத்தை செயல்படுத்துவது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி எந்த வொரு அரசு அதிகார மையமும் தனது கடமைகைளைச் செய்ய உதவி செய்வது என்பதும் ஆகும். இந்தப் பணிகளே நீதித்துறைக்கு பலமான அதிகாரத்தை வழங்கியுள்ளன. எனினும் அதே நேரத் தில், தனது இந்த அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் இதர அமைப்புகளின் செயல்பாடுகளை தனதாக்கிக் கொள்ள பயன்படுத்தக் கூடாது.

அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்று தூண்களும் நல்ல புரிதலுடன் செயல் படாவிட்டால், நாட்டிற்கும், நாட்டு மக்களுக் கும் சீரிய முறையில் சேவை ஆற்ற முடியாது. மூன்று தூண்களும் ஒவ்வொன் றின் அதிகாரம் மற்றும் செயல்பாடுகளை அவசியம் மதித்து நடக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நல்லிணக்கமான நிலைமையை உருவாக்க முடியும். ஒவ் வொரு அமைப்பிற்கும் அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன. அவற்றை ஒன்றுபட்டு நிறைவேற்ற வேண்டியுள்ளது.

மேலும், நாடு முழுவதும் சுமார் 2.5 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. இவற்றை விரைந்து முடிக்க வேண்டும். 1984 ஆம் ஆண்டு குடும்ப நீதி மன்றங்கள் சட்டத்தின்படி அமைக்கப்பட வேண்டிய குடும்ப நீதிமன்றங்களை இன்னும் பல மாநிலங்கள் அமைக்கா மலேயே உள்ளன. இந்த குறைபாடு உடனடியாக களையப்பட வேண்டும்.

மேலும், சமீப காலத்தில் தங்களது சொந்த மற்றும் அரசியல் செல்வாக்கை கூட்டிக் கொள்வதற்காக சில சீர்குலைவு சக்திகள் பொதுநலன் வழக்குகள் தொடர்வது மோசமான கலாச்சாரமாக உரு வெடுத்துள்ளது. இத்தகைய வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பு முழுமையாக ஆராய வேண்டியது அவசியம். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதே விழாவில் பிரதமர் பேச்சுக்கு பதிலளித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It