கட்டலோனியாவின் விடுதலைப் பிரகடனத்தை அங்கீகரிப்பதில் ஸ்பெயினுக்கு இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று கட்டலோனியாவின் பொருளாதாரத்தை நம்பியே ஸ்பெயின்உள்ளது. இரண்டாவது எந்நேரம் வேண்டுமானாலும் ஸ்பெயினிலிருந்து விடுதலை கேட்க தயாராக இருக்கும் ' பாஸ்க்' தேசிய இன மக்கள்.

கட்டலோனியா எப்படி ஸ்பெயினின் பொருளாதார பலமாக இருக்கிறது என்பதை இதற்கு முந்தைய தொடர்களிலேயே பார்த்தோம். இப்போது இரண்டாவது பெரும் தலைவலியாக இருக்கும் பாஸ்க் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம் குறித்து பார்த்துவிடலாம். அது கட்டலோனியாவுக்கும் மட்டுமின்றி உலகெங்கும் போராடுகிற தேசிய விடுதலை இயக்கங்களுக்கு உற்ற படிப்பினையாக இருக்கும்.

Basque separatist movement ETA

ஸ்பெயினில் எப்படி கட்டலோனியா மக்கள் ஒரு மாநிலம் என்றளவில் அடிமைகளாக இருக்கிறார்களோ அதைவிட சற்று கூடுதலான அதிகாரத்தோடு பாஸ்க் இன மக்களும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள்..

கட்டலோனியா மக்கள் தங்கள் விடுதலைக்கான போராட்டத்தை தொடக்கம் முதலே ஜனநாயக வழியில் மட்டுமே நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பாஸ்க் மக்களோ மிகப்பெரும் ஆயுதப் போராட்டத்தை நடத்திவிட்டு தற்காலிகமாக போர் நிறுத்தத்தை அறிவிப்பு செய்துவிட்டு ஜனநாயக வழியில் தங்கள் கோரிக்கைக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்..

வீரம்செறிந்த ஆயுதப்போராட்டத்தை சிங்கள அரசுக்கு எதிராக நடத்திக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்ததை நம் கண் முன்பாகவே பார்த்திருக்கிறோம். ஒரு தேசிய விடுதலை போராட்டத்தை குறிப்பாக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை வல்லரசு நாடுகள் மொத்தமும் இணைந்து இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்ததை நாம் பார்த்திருக்கிறோம்.

அந்த காலகட்டத்திற்கு பிறகு தான் 2011இல் பாஸ்க் விடுதலை இயக்கம் தங்கள்ஆயுதப்போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக (cease fire) அறிவித்ததை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்த இயக்கம் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் சிங்கள அரசால் குண்டு வீசி கொல்லப்பட்ட போது சிங்கள அரசை கடுமையாக கண்டனம் செய்ததோடு சு.ப.தமிழ்செல்வனுக்கு வீரவணக்கம் செய்து அறிக்கை வெளியிட்ட சிறப்பைக் கொண்டது இவ்வியக்கம்..

பாஸ்க் மொழி பேசும் மக்களின் அடிமைத்தனத்திற்கு எதிராக தனிநாடு கேட்டு போராடி வந்த இந்த இயக்கத்தின் பெயர் ETA (எயுஸ்கடி தாயகத்திற்கும் விடுதலைக்குமான இயக்கம்). எயுஸ்கடி என்று தான் தங்கள் மொழியை பாங்க்மக்கள் குறிப்பிடுவர்..

1938இல் சர்வதிகாரி பிரான்சிஸ் பிராஸ்கோ ஸ்பெயினின் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு கட்லோனியாவை எப்படி எல்லா விதத்திலும் அடிமை படுத்தினாரோ, அப்படி பாஸ்க் மொழியும் தடை செய்யப்பட்டது. எல்லா உரிமை களும் காலில் போட்டு மிதிக்கப்பட்டது. எனவே இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக PNU என்றழைக்கப்படுகிற பாஸ்க் தேசியக்கட்சி ஜனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுத்தது..

ஜனநாயக வழிப்போராட்டங்களில் எவ்வித நன்மையும் சர்வதிகாரி ஆட்சியில் கிடைக்கப் போவதில்லை என்று உணர்ந்த PNU - வின் மாணவர் அமைப்பு போராளிகள் ஆயுதப் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானித்து உருவாக்கிய அமைப்பு தான் ETA.

கட்டலோனிய விடுதலைப் போராட்டத்தை போல் வெறும் தேசியவாதக் கண்ணோட்டம் மட்டுமில்லாமல் பாஸ்க் விடுதலைப் போராட்டம் மார்க்சிய கண்ணோட்டத்தோடும் நடத்தப்பட்டது. தொடர் தாக்குதலை ETA நடத்தத் தொடங்கி இறுதியில் சர்வதிகாரி பிரான்சிஸ் பிராஸ்கோவின் அரசியல் வாரிசு பிளாஸ்கோவை குண்டு வைத்து கொலை செய்து சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

1978 இல் ஸ்பெயினில் சர்வதிகார ஆட்சி முடிவுக்கு வந்த ஜனநாயக பாராளுமன்ற முறை நிறுவப்பட்டு கட்டலோனியாவுக்கு வழங்கியதைப் போலவே 'பாஸ்க்'கும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது... ஆனால் அந்த அதிகாரம் பெயரளவுக்கு இருந்ததே தவிர நடைமுறையில் ஸ்பெயினின் மத்திய பாராளுமன்றமே அதிகாரம் கொண்டதாக இருந்தது. எனவே பல கட்டப் பேச்சு வார்த்தைப் பிறகு மீண்டும் ETA ஆயுதப் போரட்டத்தை தொடங்கியது...

ஸ்பெயினுக்கும் ETA க்கும் கடுமையான போர் நடக்கத் தொடங்கியது. ETA பயங்கரமான அதிர்வலைகளை உலகெங்கும் ஏற்படுத்தியது. ETA நடத்திய தாக்குதல்களால் ஸ்பெயின் மட்டுமின்றி உலகமே ETA வைத் திரும்பிப் பார்த்தது. இப்படியான வலுவான நிலையில் இருந்த ETA - ஏன் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டது.

(தொடரும்)

- க. இரா.தமிழரசன்

Pin It