தமிழகம் முழுவதும் திடீரென சுடுகாடாக மாறிவிட்டதாக உணரத் தோன்றுகின்றது. ஒரு வேளை இது மனப்பிறழ்ச்சி நோயாக இருக்குமோ? எனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் தோன்றுகின்றதா என்று இன்னும் சில பேரையும் கேட்டுப் பார்த்தேன். அவர்களும் அப்படித்தான் சொன்னார்கள். காலையில் எழுந்து எந்தத் தொலைக்காட்சியை வைத்தாலும் டெங்கு மரணங்கள் பற்றிய செய்திகள் பார்ப்பதற்கு மரண அறிவித்தல்கள் போலவே உள்ளன. டெங்கு மரணங்கள் நிகழ்ந்த வீடுகளில் அழும் ஒப்பாரிச்சத்தம் அன்றைய நாள் முழுவதும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. அதில் இருந்து மனதை தேற்றிக்கொண்டு அடுத்த நாளைக்குத் தயாரானால் மீண்டும் தொலைக்காட்சிகளில் வரிசையாக வரும் டெங்கு மரண அறிவித்தல்கள் மீண்டும் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் டெங்கு மரணத்தால் கண்ணீர்விட்டு கதறுவது போன்ற உணர்வு நம்மை ஆட்டிப் படைக்கின்றது. எப்போது டெங்கு மரணம் நம்மை நோக்கி வரும் என்று ஒவ்வொருவரும் காத்துக் கிடப்பது போன்ற நடுக்கத்தை அது ஏற்படுத்துகின்றது.
நான்கைந்து நாட்களாக அனைத்துப் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளையும் டெங்கு மரணங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. பிறந்த சில மாதங்கள் ஆன குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருமே தப்பவில்லை டெங்குவிற்கு. அதிலும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்களைப் பார்த்தால் நிச்சயம் அவர்கள் எல்லாம் பணம் வைத்துக்கொண்டு செலவு செய்ய மனம்வராமல் காசை மிச்சப்படுத்த அரசு மருத்துவமனைக்குச் சென்றவர்கள் போன்று தெரியவில்லை. இதைவிட்டால் இந்த பாவப்பட்ட உயிரைக் காப்பாற்ற வேறு போக்கிடமே இல்லை என்ற நிலையில்தான் அவர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கின்றார்கள். அரசு மருத்துவமனைகளின் நிலை இன்றைய தேதியில் எப்படி இருக்கின்றது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கூட ஒரு பெட்டில் இரண்டு பேரை படுக்க வைத்து மருத்துவம் பார்ப்பதாகவும், பல அரசு மருத்துவமனைகளில் அதுக்கும் வழி இல்லாமல் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதாகவும் பத்திரிக்கைகளில் செய்தி வருகின்றன.
போதிய மருத்துவர்கள் இல்லாமல், செவிலியர்கள் இல்லாமல், படுக்கைவசதி இல்லாமல் , சுகாதாரம் இல்லாமல் மிக மோசமான நிலையில்தான் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இப்படி ஒரு கொள்ளை நோய் தாக்கி மக்கள் கொத்துக் கொத்தாய் சாகும் ஒரு நிலை வந்தால் அதை எதிர்கொள்ள எந்தத் திராணியும் அற்ற நிலையில்தான் அரசு மருத்துவமனைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளையை நிரந்தரமாக்கவும் மக்களுக்கான பொது சுகாதாரதிட்டத்தை உலக வங்கியின் கட்டளையின் படி முழுவதும் கைகழுவி விடுவதும்தான் அரசின் நோக்கமாக உள்ளது. அதனால் திட்டமிட்டே அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் எல்லாம் மொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இப்போதுகூட முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டதின்படி டெங்குவிற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் தரப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்து இருக்கின்றார். இந்தப் பணம்கூட நிச்சயம் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்க மட்டுமே உதவுமே தவிர இது டெங்குவை ஒழிக்கப் பயன்படப் போவதில்லை.
டெங்குவிற்கு இன்னும் மருந்தே கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொல்கின்றார்கள். இப்போது அரசு மருத்துவனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் நிலவேம்பு கசாயம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமே அதிகப்படுத்தும் தன்மை கொண்டவை என்றும், ஆனால் அதுவே நோயை முழுவதும் குணப்படுத்தும் என்று உத்திரவாதப்படுத்த முடியாது என்றும் மருத்துவர்கள் சொல்கின்றார்கள். அப்படி ஒரு வேளை நில வேம்பு கசாயம் கொடுத்தால் நிச்சயம் டெங்கு குணமாகும் என்றால், இத்தனை நூறு மரணங்கள் நிகழ்ந்திருக்காது. ஆனால் அரசு தொடர்ந்து நிலவேம்பு கசாயம் கொடுப்பதை மட்டுமே ஊக்குவித்து வருகின்றது. இத்தனை மரணங்கள் நிகழ்ந்த பின்னாலும் அதைப் பற்றி எந்த அக்கறையும் இன்றி அரசு தான் தோன்றித்தனமாக செயல்பட்டுவருகின்றது.
தினம் தினம் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் டெங்கு மரண அறிவித்தல்களைப் பார்த்தாலே தினம் பத்து, பதினைந்து பேர் டெங்குவால் இறப்பது கண்கூடாகத் தெரிகின்றது. ஆனால் அரசு வெறும் 40 பேர் மட்டுமே டெங்குவால் இறந்ததாக அப்பட்டமான பொய்யைச் சொல்லுகின்றது. அப்படி என்றால் மற்றவர்கள் எல்லாம் எப்படி இறந்தார்கள் என்று கேட்டால், அதற்குத்தான் தயாராக வைத்திருக்கின்றார்கள் 'மர்ம மரணம்' என்ற சொல்லை. அரசின் பொய் கணக்குக்கு அப்பாற்பட்டு இறந்தவர்கள் எல்லாம் மர்ம மரணம் அடைந்தவர்கள் என்ற கணக்கில் சேர்க்கப்படுவார்கள். இதன் மூலம் அரசின் அலட்சியத்தால் டெங்குவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் குறைத்துக் காட்ட முடியும், மற்றொரு புறம் நாளை அரசிடம் இருந்து எந்தவித இழப்பீட்டையும் டெங்குவால் இறந்தவர்களின் குடும்பங்கள் கோர முடியாமலும் இதன் மூலம் தடுக்கப்படும்.
டெங்கு மரணத்தைவிட அதை மறைப்பதில் அரசு நடந்துகொள்ளும் முறைதான் மிகப் பயங்கரமானதாக, இழிவானதாக இருக்கின்றது. டெங்கு கொசுவை விட அரசின் இந்த அரச பயங்கரவாதம் மிக அபாயகரமானது. கொத்துக்கொத்தாய் மக்கள் செத்து தமிழ்நாடு எங்கும் ஒரே மரண ஓலமாய் இருக்கும் போது, கொஞ்சம்கூட அதைப் பற்றி கவலைப்படாமல் சாவு எண்ணிக்கையை எப்படி குறைத்துக் காட்டுவது என்ற கீழ்தரமான வேலையில் அரசு ஈடுபட்டுவருகின்றது. மோடி பஜனை பாடுவதற்கே நேரம் இல்லாமல் இருக்கும் எடப்பாடி அரசு டெங்குவை கட்டுப்படுத்தும் என இன்னமும் சாமானிய மக்கள் நம்பினால் நிச்சயம் ஏமாந்துதான் போவார்கள். அவர்களுக்கு மக்கள் சாவதைப் பற்றி ஒரு சிறிதுகூட மனவருத்தம் கிடையாது. எங்கே பழி அவர்கள் மீது விழுந்துவிடுமோ என்ற பயம்தான் அவர்களுக்கு இருக்கின்றது. அதனால்தான் சென்னையில் டெங்குகொசு உருவாக காரணமாக இருந்ததாகக் கூறி 2000 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இனி இந்த நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் தொடரும் என நாம் எதிர்பார்க்கலாம்.
டெங்கு கொசுவிற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது, டெங்கு மரணங்களுக்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இந்த அரசுக்கும் மக்களுக்குமே சம்பந்தம் கிடையாது. தமிழ்நாட்டில் தற்போது நடப்பதெல்லாம் ஆட்சி என்ற பெயரில் மோடி நடத்திக் கொண்டிருக்கும் குரங்குவித்தை மட்டுமே. திட்டமிட்டே மாநில அரசும் மத்திய பிஜேபி அரசும் தமிழ்நாட்டு மக்களை கொன்று போட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்த அரசை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பும் போராட்டம் மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கான தீர்வாக இருக்க முடியும்.
- செ.கார்கி