‘நீட்’ தகுதித் தேர்வு என்ற வாதம் பொய்யானது. உண்மையில் அது கல்வி வணிகக் கொள்ளைக்குக் கதவைத் திறந்து விடுகிறது.

நீட் தகுதியை உயர்த்துகிறதா?

மருத்துவக் கல்லூரி படிப்பின் தகுதியை உயர்த்தவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் ‘நீட்’ தேர்வை நடத்துவதாக நடுவண் அரசு வாதிட்டு வருகிறது. ஆனால், உண்மையில் ‘நீட்’ மேற்குறிப்பிட்ட இரண்டு பிரச்சினைகளுக்கும் நேர் எதிராகவே செயல்படுகிறது.

இயற்பியல், வேதியல் என்ற இரண்டு பாடங் களுக்கான 180 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் கூட பெறாத பூஜ்யம் பெற்ற மாணவர்கள் 2017ஆம் ஆண்டு பஞ்சாபில் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக் கிறார்கள். தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப் படும் என்ற அடிப்படையில் மேற்குறிப்பிட்ட இரண்டு பாடங்களிலும் மதிப்பெண்  குறைவுக்கு உள்ளானவர்கள் இந்த மாணவர்கள் இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 15, 2019) அதிர்ச்சியான ஆய்வுச் செய்தி ஒன்றை வெளியிட் டுள்ளது.

வேதியல், இயற்பியலில் பூஜ்யம் அல்லது 10க்கும் கீழே ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்ற 85 சதவீதம் பேர் பஞ்சாப் மருத்துவக் கல்லூரியில் 2017ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளார்கள். மிக மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களைச் சேர்க்கும் பஞ்சாப் மருத்துவக் கல்லூரிகள் நாட்டிலேயே மிக அதிகக் கட்டணம் வாங்கும் கல்லூரிகளாகும்.  சுதேஷ் என்ற மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணமாக ரூ.68 இலட்சம்  வாங்குகிறது. அரசு நிர்ணயிக்கும் கட்டண சீரமைப்புக்குக் கீழே வராமல் சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் பஞ்சாபில் தங்களுக்குள் ஒரு குழுவாக இணைந்து (Group owned University) செயல்படுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டா லும் இதே அடிப்படையில் மிகக் குறைந்த மதிப் பெண்களைப் பெற்ற மாணவர்கள் பல மாநிலங்களில் பெரும் தொகையைக் கட்டணமாக செலுத்தி சேர்த்துள்ளனர் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.  ‘நீட்’ தேர்வு தகுதிக்கான தேர்வு என்று நடுவண் ஆட்சி வாதிடுவது பொய்த்துப் போய் விட்டது என்றும் அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நடப்பாண்டில் சுமார் 65,000 மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதிய 14,10,755 பேரில் 7,97,042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நியாயமான முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், இவர்களில் முதல் 65,000 இடங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும்தான் இடம் கிடைக்க வேண்டும். ஒருவேளை இடஒதுக்கீட்டுக் கணக்கின்படி பார்த்தாலும் முதல் 1 இலட்சம் இடங்களுக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி சாத்தியமாக வேண்டும்.

ஆனால், முதல் 50,000 இடங்களுக்குள் வந்தவர்களுக்குக்கூட இடம் கிடைப்பதில்லை. அதே நேரம் 7 இலட்சத்துக்கும் அதிகமான தர வரிசையில் வந்தவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கிறது.

தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஓராண்டுக்கு ரூ.25 இலட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதுதான் இதற்குக் காரணம். நீட் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்களில் பலர் அந்தக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் விலகிக் கொள்ள, கோடிகளைக் குவித்து வைத்திருக்கும் பலர் 15 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண்களை மட்டுமே எடுத்திருந்தாலும், பணத்தைக் கட்ட முடியும் என்பதால் மிக எளிதாக சேர்ந்து விடுகின்றனர்.

மொத்தத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கு கோடிகளைக் கொட்டும் மாணவர்களைப் பிடித்துத் தரும் வேலையைத் தான் நீட் தேர்வு செய்கிறது. நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாகிவிட்டது.

சத்துணவில் வெங்காயம் பூண்டுக்கு தடையாம்!

மதுரை மாவட்டம் வலையப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மய்யத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த எம். ஜோதிலட்சுமி, எம். அன்னலட்சுமி என்ற தலித் பெண்கள், குழந்தைகளை பராமரிக்கும் பணியாளர் களாக நியமனம் செய்யப்பட்டனர். உள்ளூர் ஜாதி ஆதிக்கவாதிகள், தலித் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளைப் பராமரிப்பதா என்று எதிர்ப்பு தெரிவித்து, குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாதி வெறியர்கள் மீது வழக்குத் தொடராமல் தமிழக அரசு, இந்த இரண்டு தலித் பெண்களையும் இடமாற்றம் செய்தது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு அதே ஊரில் ‘தலித்’ பகுதியில் இவர்களை நியமனம் செய்திருக்கிறது. இத்தனைக்கும் 1563 அங்கன்வாடி பணியாளர்கள் பதவிக்கு ஆளும் கட்சியினர் இலஞ்சம் வாங்கிக் கொண்டு,

2017லிருந்து பணி யிடங்களை,7 நிரப்பாமல் காலம் கடத்திய நிலையில் நாகராஜன் என்ற மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்மையாக இந்தப் பணியிடங்களை தேர்வு செய்யப்பட்டவர்களைக் கொண்டு நிரப்பினார். அதற்காக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அடுத்த நாளே அவருக்கு இடமாற்றல் ஆணை வழங்கி, ‘தண்டனை’ அளித்தது. தமிழ்நாட்டில் சத்துணவுடன் தி.மு.க. ஆட்சி காலத்தில் வாரம் இரண்டு நாள் ‘முட்டை’ போடப்பட்டது. அதில் ஒரு நாள் ‘செவ்வாய்க் கிழமை’. செவ்வாய்க் கிழமை அசைவம் சாப்பிடக் கூடாத ‘புனித நாள்’ என்று கூறி மதவாத சக்திகள் எதிர்ப்பு தெரிவிக்கவே முட்டை போடுவது வேறு ஒரு நாளுக்கு மாற்றப்பட்டது. வடமாநிலங்களில் சத்துணவுக் கூடங்களில் ‘தலித்’ பெண்களை நியமிப் பது கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது.

இப்போது கருநாடக மாநிலத்திலிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. உலகம் முழுதும் ‘அரே கிருஷ்ணா; அரே ராமா’ அமைப்புகளை நடத்தி வரும் ‘இஸ்கான்’ என்ற பார்ப்பன அமைப்பு, ‘அக்சய பாத்திர பவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறது. கருநாடக மாநிலத்தில் பெங்களூரைச் சுற்றியுள்ள 2814 பள்ளிகளுக்கு மத்திய உணவு வழங்கும் ‘ஒப்பந்தம்’ இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 4.43 இலட்சம் குழந்தைகளுக்கு இந்த நிறுவனம் மதிய உணவு வழங்குகிறது. இது பார்ப்பனிய அமைப்பு என்பதால் உணவில் ‘பூண்டு’, ‘வெங்காயம்’ இரண்டையும் சேர்க்க மறுக்கிறது. ‘பிராமண’ உணவு முறையில் பூண்டும் வெங்காயமும் தவிர்க்கப்பட வேண்டும் என்று வேதமதத் தத்துவம் பேசுகிறது இந்த அமைப்பு. குழந்தைகள் மோசமான தரமற்ற உணவை சாப்பிடவே முடியவில்லை என்று கூறி பல கிலோ மீட்டர் தூரம் வீட்டுக்கு நடந்தே சென்று சாப்பிடுகிறார்கள்.

‘ஜன்சுவஸ்தியா அபியான்’ போன்ற தொண்டு நிறுவனங்கள், இஸ்கான் அமைப்பின் இந்த ‘பார்ப்பனிய உணவு திணிப்பு’க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இஸ்கான் அமைப்போ பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்க்கக் கூடாது என்பது எங்களது ‘பிராமண வைதீக உணவுத் தத்துவம்’ என்று அடம் பிடிக்கிறது. கருநாடக அரசு சத்துணவுக்காக தயாரித்துள்ள உணவுக்கான பட்டியலில் வாரத்தில் 4 நாட்கள் வெங்காயத்தைக் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி யிருக்கிறது. ஆனால் ‘இஸ்கான்’ மட்டும் இந்த உணவுப் பட்டியலை மதிக்க மாட்டோம் என்று மீறி செயல்பட்டு வருகிறது.  இத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதி உதவியும் மாநிலங்களுக்கு இருப்பதால் மத்திய அரசின் செல்வாக்கில் ‘ஒப்பந்தம்’ பெற்றுள்ள ‘இஸ்கான்’ மாநில அரசு விதிகளை ஏற்க மறுக்கிறது. போடப்படுகிற உணவும் வாயில் வைக்க முடியவில்லை என்று குழந்தைகள் சாப்பிட மறுத்து மீண்டும் வீட்டுக்கே சாப்பிடப் போகிறார்கள் என்று இது குறித்து விரிவான கட்டுரையை ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் ‘ஞாயிறு மலர்’ (ஜூன் 2, 2019) வெளியிட்டுள்ளது.

குளறுபடியான ‘கிரிமிலேயர்’

மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், அதில் பாதியளவுகூட இதுவரை பூர்த்தி செய்யப்பட வில்லை. இடஒதுக்கீடே முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார அடிப்படை புகுத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிப்பதற்கே வடி கட்டப்பட்டு வருகிறார்கள். இந்த ‘கிரிமிலேயர்’கூட முறையாக வகுக்கப்படவில்லை.

கிரிமிலேயர் என்ற பொருளாதார வரம்பு, மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரு அளவும், பொதுத் துறை நிறுவனங்களுக்கான பணிகளுக்கு ஒரு அளவும் மாநிலங்களில் உள்ள மத்திய அரசுப் பணியாளர் களுக்கு ஒரு அளவுமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த முரண்பாடுளை நீக்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த அய்ந்து ஆண்டுகளாக மத்திய சட்டத்துறை அமைச்சகத் திடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சட்ட அமைச்சகம் இதற்கு செவி சாய்க்க மறுக்கிறது.

‘அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கம்’ -  தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திடம் இது குறித்து முறையிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ‘கிரிமிலேயர்’ நடைமுறைகளை எளிமையாக்குவது குறித்து பரிசீலிக்க நடுவண் ஆட்சி பி.பி. சர்மா என்பவர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. தொடர் நடவடிக்கையாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் லோக்கேஷ் பிரஜாபதி, கடந்த மே 29ஆம் தேதி மத்திய வேலை வாய்ப்புத் துறை அமைச்சகத்திடம் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு கிரிமிலேயர் குறித்த விவரங்களைக்கேட்டார். ஆனால், சட்ட அமைச்சர் எந்த பதிலையும் தரவில்லை.

மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட ஊழியர்களுக்கான ‘கிரிமிலேயரை’ நிர்ணயம் செய்வதில் ‘குடும்ப மாத ஊதியம் மற்றும் குடும்பத்துக்கு விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருவாய்’ ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று 1983ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை கூறுகிறது. ஆனால், அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கான ‘கிரிமிலேயர்’ வரம்பில் மேற் குறிப் பிட்ட இரண்டு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனால் பொதுத்துறை நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு உரிமைகள் தடுக்கப்படுகின்றன. இதேபோல அய்.ஏ.எஸ். அய்.எஃப்.எஸ்., அய்.பி.எஸ். போன்ற அகில இந்திய சர்வீசுகளுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான கிரிமிலேயர் வரம்பு குளறுபடிகளால் 60 திறன் வாய்ந்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. மத்திய  அரசின் இந்தக் குளறுபடிகளை சரி செய்யுமாறு 2013ஆம் ஆண்டு சென்னை, டெல்லி உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது இரண்டு நிதிமன்றங்களுமே கிரிமிலேயர் அளவுகோலை ஒரே சீராக மாற்றி அமைக்க உத்தரவிட்டன.

மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறையை இரண்டு நீதிமன்றங்களுமே கண்டித்தன. இவ்வளவுக்குப் பிறகும் கடந்த மார்ச் 2019 அன்றுமத்திய சட்ட அமைச்சகம் பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் ஒரு தவறான தகவலை சமர்ப்பித்தது. 1993ஆம் ஆண்டு முதல் ‘கிரிமிலேயரை’ நிர்ணயம் செய்வதில் ஒரே அளவுகோல் தான் பின்பற்றப்பட்டு வருகிறது என்ற தவறான தகவலைத் தந்தது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் கண்களை மூடிக் கொண்டு சட்ட அமைச்சகத்தின் அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டது. பிற்படுத்தப்பட்டோர் ஊழிய நலச் சங்கத்தின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இப்போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இது குறித்து விசாரணை நடத்த முன் வைத்திருக்கிறது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 14, 2019) இந்த விரிவான செய்தியை வெளியிட்டிருக்கிறது.

Pin It