தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்றும் கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் பிஜேபி, அதற்காக பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகின்றது. தலித் இயக்கத் தலைவர்களை வளைத்துப் போடுவது, கழகங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்வது, வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இஸ்லாமிய வெறுப்புணர்வை உருவாக்கி இந்து ஓட்டு வங்கியை உருவாக்குவது, பிள்ளையார் சதுர்த்தி உட்பட பல்வேறு இந்துமத விழாக்களை நடத்தி இளைஞர்களின் சிந்தனையைக் காவிமயப்படுத்துவது என பல வேலைகளை அது செய்து கொண்டிருக்கின்றது. இந்த வேலைகளை எல்லாம் இன்று, நேற்றல்ல பல ஆண்டுகளாகவே அது செய்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் பலன் என்று பார்த்தால் பெரியதாக ஒன்றுமில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸ் கும்பலும் தனக்கு ஆதரவாக உருவாக்கி வைத்திருக்கும் நபர்கள் எல்லாரும் ஓட்டு போட்டால் கூட அது சில நூறைக்கூட தாண்ட வாய்ப்பில்லை. அதனால் எப்பாடு பட்டாவது இந்த எண்ணிக்கையை குறைய விடாமலும் இன்னும் அதை அதிகரித்துக் கொள்வதற்கும் முடிந்தவரை பிஜேபியின் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நபர்கள் நச்சுப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் தலித் மக்கள் மத்தியிலும், சிறுபான்மையின மக்கள் மத்தியிலும், முற்போக்குவாதிகள் மத்தியிலும் கடுமையான வெறுப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

இந்த வெறுப்பு எங்கே தங்களது இருத்தலுக்கே வேட்டுவைத்து விடுமோ என்ற அச்சம் பிஜேபி, சங்பரிவாரைச் சார்ந்த நபர்களை தினம், தினம் தூங்கவிடாமல் துன்புறுத்திக் கொண்டு இருக்கின்றது. மேடைகளில் காவல்துறையின் பாதுகாப்போடு மிக இழிவாக சிறுபான்மையின மக்களையும், தலித்துக்களையும், முற்போக்குவாதிகளையும் பேசும் அவர்கள் உள்ளூர பயந்து, பயந்து சாகின்றார்கள். அந்தப் பயத்தின் உச்சமாகத்தான் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் தாங்களே பெட்ரோல் குண்டுகளை போட்டுக்கொண்டு அதைச் சாக்காக வைத்து காவல்துறை பாதுகாப்பை கேட்கின்றார்கள். இதன் மூலம் ஒரு பக்கம் விளம்பரமும், இன்னொரு பக்கம் பாதுகாப்பும் கிடைக்கும் என்பது அவர்களது எண்ணம். ஆனால் தவறு செய்வதற்குக் கூட குறைந்தபட்ச அறிவு இருந்தால்தான் அதை நேர்த்தியாக செய்ய முடியும். பொதுவாக மதவாதிகளுக்கும், சாதியவாதிகளுக்கும் அது எப்போதுமே இருந்தது கிடையாது. அதனால்தான் தவறு செய்தால் மற்றவர்களால் மாட்டிக் கொள்வதைவிட அவர்களாலேயே மாட்டிக் கொள்கின்றனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அயனம்பாக்கத்தைச் சேர்ந்த பரமானந்தம் தன்னுடைய வீட்டிற்குத் தானே பெட்ரோல் குண்டை போட்டுக்கொண்டு காவல்துறையினரிடம் யாரோ மர்மநபர்கள் தன்னுடைய வீட்டில் 21/09/2017 அன்று பெட்ரோல் குண்டு போட்டு விட்டதாகவும், இதில் தன்வீட்டில் இருந்த சோபா தீப்பிடித்து எரிந்து விட்டதாகவும் திருவேற்காடு காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். காவல்துறை நடத்திய விசாரணையில் பரமானந்தம் அவருடைய வீட்டிற்கு அவரே பெட்ரோல் குண்டு போட்டுக்கொண்டு நாடகமாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 22/09/2017 அன்றே அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இது போன்று தன்னுடைய வீட்டிற்கு தானே பெட்ரோல்குண்டு போட்டுக் கொண்டு காவல்துறையில் பிஜேபியினர் புகார் கொடுப்பது இது முதல்முறை அல்ல.

2013 ஆண்டு கோவை வடவள்ளி, சோமையம் பளையம் தாயுமானவர் வீதியைச் சேர்ந்த ராமநாதன் என்ற பிஜேபி நபர் தனது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு நாடகமாடியது காவல்துறை விசாரணையில் தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டார். 2014 ஆண்டு பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாஜகவின் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவராக இருந்த வக்கீல் முரளிகணேஷ் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. நாகை மாவட்டம் ஒழுகைமங்கலம் கிராமம் செம்பனார்கோவில் பகுதியைச் சேர்ந்த பாஜகவின் ஒன்றியத் தலைவரான பாலாஜி குருக்கள் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலை வீதியில் இருக்கும் பாஜக தமிழ் வளர்ச்சிப் பிரிவில் மாநில செயலாளராக இருக்கும் முத்துராமன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுத்தேரியில் செங்கல்பட்டு நகர பாஜக துணைத்தலைவர் சீனிவாசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகளின் மட்டும் அல்லாமல் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள வழக்குகளையும் சரியானபடிக்குக் காவல்துறையினர் விசாரணை செய்வார்களேயானால் மேற்கண்ட அனைத்து வழக்குகளிலும் பிஜேபினரே சம்மந்தப்பட்டிருப்பது நிச்சயம் தெரியவரும். இது எல்லாம் காவல்துறை பாதுகாப்பைப் பெறுவதற்காக பிஜேபினர் செய்யும் கீழ்த்தரமான சதிவேலைகள். தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளப் பார்க்கின்றார்கள். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த காவிக்கூட்டமும் அரண்டு போய் சுற்றிக்கொண்டு இருக்கின்றது. பொதுவாக மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இங்கு முற்போக்கு அமைப்புகள் மிக வலிமையாக இருப்பதால் எங்கே தங்களது கீழ்தரமான பேச்சுக்களால் தர்ம அடி கிடைத்துவிடுமோ என்று உள்ளுக்குள் ஒரு பயம் அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கின்றது.

அதனால்தான் தமிழ்நாட்டில் கள்ளக்காதல், ரியல் எஸ்டேட், கந்துவட்டி, காலித்தனம் போன்றவற்றின் காரணமாக கொல்லப்பட்ட காவி பயங்கரவாதிகளை எல்லாம் கூட இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் குறி வைத்துக் கொன்றதாக அவர்கள் திட்டமிட்டுப் பொய்த் தகவல்களைப் பரப்பினார்கள். அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள காவிபயங்கரவாதிகளுக்கு எல்லாம் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள். இவர்களின் நாடகத்தை நம்பி தமிழக காவல்துறையும் பிஜேபி சங்பரிவாரை சேர்ந்த பல வெட்டிப்பயல்களுக்கு எல்லாம் பாதுகாப்பு கொடுத்து வருகின்றது.

இது போன்ற மானங்கெட்ட, சூடுசுரணை அற்ற நபர்களை வேறு எந்தக் கட்சியிலும் நாம் பார்க்க முடியாது. அப்படியே இருந்தாலும் கட்சிக்கு ஒருத்தன் இரண்டு பேர் இருப்பார்கள். இப்படி ஒட்டுமொத்த கட்சியுமே கேடிகளாலும், பொறுக்கிகளாலும், முட்டாள்களாலும் நிரம்பி வழிகின்றது என்றால் அது பிஜேபியில் மட்டும்தான். மற்ற கட்சிக்காரன் எல்லாம் கட்சியை வளர்க்க தெருத்தெருவாக கூட்டம் போட்டு தொண்டை கிழிய கத்திக்கொண்டு இருந்தால், இந்த மானங்கெட்ட கும்பல் மட்டும் மோடி படத்துக்குக் செருப்பு மாலை போடுவது, பிரியாணியைத் திருடி தின்பதற்காவே கலவரம் செய்வது,காவிக் கொடியை எரித்துவிட்டு இஸ்லாமியர்கள் மீது பழிபோடுவது போன்றவற்றால் கட்சியை வளர்க்கப் பார்க்கின்றது. இப்படி சல்லித்தனமாக யோசிப்பதால்தான் தமிழ்நாட்டில் பிஜேபி திவாலாகும் நிலையில் இருக்கின்றது.

தமிழக காவல்துறை இனி பிஜேபியைச் சேர்ந்தவர்கள் யாராவது 'தன்னுடைய வீட்டில் பெட்ரோல் குண்டு போட்டுவிட்டார்கள், தனது உயிருக்கும் உடமைக்கும் ஆபத்துள்ளது, எனவே தனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று புகார் கொடுத்தால் யோசிக்கவே வேண்டாம்; புகார் கொடுக்க வந்தவனை தூக்கி உள்ளே வைத்துவிட வேண்டும். நிச்சயமாக புகார் கொடுக்க வந்தவன்தான் குற்றவாளியாக இருப்பான். எப்படித்தான் இது போன்ற பிறவிகள் எல்லாம் சமூகத்தில் தானும் ஒரு மனிதன் என்று சொல்லிக்கொண்டு நடமாடுகின்றார்களோ தெரியவில்லை. ஒட்டு மொத்த தமிழக மக்களும் பிஜேபியின் மானங்கெட்ட செயல்களைப் பார்த்து காறி உமிழ்கின்றார்கள். இனி பிஜேபி சங்பரிவார கும்பல் தனது வீட்டில் பெட்ரோல் குண்டு அல்ல அணுகுண்டே போட்டுக்கொண்டு நாடகம் ஆடினாலும் அதை தமிழக மக்கள் நம்பப்போவதில்லை. நிச்சயம் இவனுங்கதான் செஞ்சிருப்பாணுங்க என்று உறுதியோடு சொல்லி விடுவார்கள். முட்டாள்கள் தாங்களாகவே அம்பலமாகிக் கொள்கின்றார்கள் என்பதை தொடர்ந்து பிஜேபியினர் நிரூபித்து வருகின்றார்கள்.

- செ.கார்கி

Pin It