இராஜஸ்தான் மாநிலம், இந்திய  அளவில் மாடுகளின் பாதுகாப்புக்காக முதல் முறையாக தனி அமைச்சகத்தை  அமைத்த மாநிலமாகும்.

இராஜஸ்தான் மாநிலம், தி ஹிங்கோனியாவில், இந்திய அரசுக்கு சொந்தமான ஆசிய நாட்டின் "சிறந்த" கோசாலை உள்ளது. இங்கு உள்ள பசுக்கள் 14 கால்நடை மருத்துவர்கள், 24 கால்நடை உதவியாளர்கள் மற்றும் 200 உதவி ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ் உள்ளன.

இங்கு, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை உணவு மற்றும் பராமரிப்புக் குறைபாடு காரணமாக  8,122 பசுக்கள் இறந்துவிட்டதாகவும், சராசரியாக, ஒவ்வொரு மாதமும்  1,053 மாடுகள் இறப்பதாகவும், 500 க்கும் மேற்பட்டவை கடந்த 10 நாட்களில் அழிந்துவிட்டதாகவும் இராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு ஆயர்களின் நலனுக்காகச் செயல்படும் ஆர்வலர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

ஹிங்கோனியா  மறுவாழ்வு மையத்தில் ஆண்டு வாரியாக பசுக்களின்  இறப்பு எண்ணிக்கை:

  • 2012 இல், மொத்தம் 3,743 மாடுகள் மையத்தில் இறந்தன.

  • 2013 இல் 5,538 மாடுகள்  இறந்ததாக  அறிவிக்கப்பட்டது.

  • 2014 இல், 7,694 மாடுகள் இறந்தன

  • 2015 ஆம் ஆண்டில் 12,915 ஆக இறப்பு  எண்ணிக்கை அதிகரித்தது.

2012 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 7.09 சதவீதத்தில் இருந்த இறப்பு விகிதம், 2016 ஜூலை மாதத்தில் 11.31 சதவீதமாக அதிகரித்துள்ளது என மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தீவனம் மற்றும் மருத்துவப் பராமரிப்புக்காக, ஹிங்கோனியா கோசாலையில் வருடாந்திர வரவு - செலவுத் திட்டம் 2007 - 08 ல் ரூ. 5.19 கோடியில் இருந்து 2015 - 2016 ல் ரூ.10.78 கோடியாக  உயர்த்தப்பட்டது.

தில்லி புறப்பாட்டிற்கு  முன்பாக, வசுந்தரா ராஜே அவர்கள் பிரபு லால் சாய்னி, ராஜ்பால் சிங் ஷெகாவத் மற்றும் ஜெ.எம்.சி. மேயர் நிர்மல் நஹத்தா மந்திரிகளுடன் உயர் மட்டக் கூட்டத்தை நடத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். நான்கு நாட்களுக்குப் பிறகு டெல்லியிலிருந்து திரும்பும் போது கோசாலையைப் பார்வையிடுவதாகவும்   ராஜே கூறினார்.

சனிக்கிழமை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீடமைப்பு அமைச்சர் ராஜ்பால் சிங் ஷெகாவத், ஹிங்கோனியா மாட்டு புனர்வாழ்வு மையத்தில் உள்ள நிலைமைகளை மீளாய்வு செய்து பின்வரும் அறிக்கையை பதிவு செய்தார்.

ஷெகாவத் அறிக்கை:

  • 266 தொழிலாளர்கள்  சம்பளப் பிரச்சினை காரணமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால், தொழுவங்கள் சுத்தம் செய்யப்படவில்லை மற்றும் விலங்குகளுக்கும்  உணவளிக்கவில்லை.

  • உயிரிழந்த பெரும்பாலான விலங்குகள் ஏற்கனவே நோயுற்றிருந்ததாகவும், காயமடைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் "சாணம் சரிவர நீக்கப் படாததால், மழையினால்  நிலைமை மிகவும்  மோசமடைந்து, அவை புதை மணல் போல் மாறியதால் விலங்குகள் அதில் சிக்கி இறந்தது " என்றார்.

  • மேலும், கோசாலைப் பொறுப்பாளரான ரமேஷ் சர்மா மற்றும் துணை ஆணையாளர் ஷேர் சிங் ஆகியோரை தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்தார்.

  • பணியாளர்களின் சம்பளங்களை இனிமேல்  காசோலைகளாக வழங்க  வேண்டும் என்று ஒப்பந்தக்காரர்களுக்கு ஆணையிட்டார்.  இனிவரும் காலங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க, இந்த ஆவணங்களை சேகரித்து வைக்க வேண்டும்  என்று துஆஊ யிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், இராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ்கட்சி, அதன்  அலுவலகத்தில் இருந்து  கோவிந்த்  தேவ் ஜி கோயில் வரை "பசுப் பாதுகாப்பு யாத்ரா" வை நடத்தியது.

மாடுகளின் இறப்பினைக் கண்டிக்கும் விதமாக, ஹரியானாவில் உள்ள ராஷ்டிரிய காவ் சாண்ட் அமைப்பின் கோபால்தாஸ் மகாராஜ் தலைமையிலான மாடு கண்காணிப்பாளர்கள் மாலையில் 144 தடை உத்தரவை மீறித் தலைமைச் செயலகத்தினுள் நுழைய முயன்ற போது சுற்றி வளைக்கப்பட்டனர். மீண்டும் கோபாலதாஸ் குழுவினர் மெழுகுவர்த்தி ஏந்தி  அணிவகுத்துச் சென்றனர்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் மற்றும் பி.சி.சி செய்தித் தொடர்பாளர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ், "பி.ஜே.பி அரசாங்கம் பசுக்களின் பெயரில் அரசியலைச் செய்கிறது, ஆனால் ஒவ்வொரு நாளும் ஹிங்கோனியாவில் நூற்றுக்கணக்கான பசுக்கள் இறந்து போயிருக்கின்றன. விலங்குகள் மையம் சரிவரச் செயல்படாததால், துஆஊ க்கு  மாடுகளை இனிமேல் விடப்போவ தில்லை என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த மையம்  ஒரு மரணப் பொறியாக  மாறிவிட்டது. மேலும் அனைத்துசமுதாய மக்களும் அரசாங்கத்திற்கும், பசுக்களின் அவமானகரமான சிகிச்சைக்கு  எதிராகவும்  ஒற்றுமையாக  நிற்கின்றனர்"  என்று கூறினார்.

கடுமையான பசி மற்றும் அங்கு பெய்த  கனமழையினால் விலங்குகளின் கால்கள் அதன் சாணக்கழிவுகளில் சிக்கி உயிரிழந்துள்ளது, அரசின் அலட்சியத்தன்மையை சல்லடையிட்டு விளக்குகிறது.

சரியான உணவு மற்றும் பராமரிப்பு இல்லாமல் இறந்து போகும் ஆயிரக்கணக்கான  மாடுகள், மாட்டிறைச்சிக்கு தடை விதித்து மாடுகளைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் நமது மத்திய அரசின் பார்வையில் படாதது ஏனோ?

குஜராத்தில் தலித்துகளின் சுயமரியாதை முழக்கம்

குஜராத் வாழ் தலித் மக்களிடையே அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுயமரியாதைக்கான ஒரு புரட்சி வெடித்துள்ளது. சென்ற மாதம், குஜராத்தில் தலித்துகளுக்கு எதிராக நடந்த வன்முறைகளின் விளைவாக இறந்த விலங்குகளின் உடல்கள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்த மறுப்பு தெரிவித்தனர். இது தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் குஜராத்தில் வீதியோரங்களில் விலங்கு கழிவுகள் அழுகிய நிலையில் தேங்கியுள்ளது.

சுமாராக, குஜராத்தில் பத்து மில்லியன் பசுக்கள் உள்ளன. அவைகளில் தினந்தோறும் மாநிலம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பசுக்கள் இறக்கின்றன. இந்த இறந்த விலங்குகளின் உடல்கள் அப்புறப்படுத்தப்படாமல் அழுகிய நிலையில் தேங்கியுள்ளதால் உயிர் கொள்ளும் நோய் பரவும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 31 ல், அஹமதாபாதில் நடைபெற்ற தலித்துகளுக்கான மாநாட்டில், அவர்கள் அவர்களுடைய பாரம்பரியத் தொழில்களான கழிவுகளை அகற்றுதல், இறந்த உடல்களை அப்புறப்படுத்துதல் மற்றும் விலங்குகளின் தோல்களை உரித்தல் போன்றவற்றை சுயமரியாதைக்கு பங்கம் விளைவிப்பதாக கருதிக் கைவிடுவதாக சபதமெடுத்தனர். இந்த உறுதிமொழிகளை வலியுறுத்தும் விதமாக ஆகஸ்ட் 15 இல்  'உனா'  வில்  பேரணி நடத்தினர்.

இறந்து போன மாடுகளின் தோல்களை உரிக்க மறுத்த நான்கு தலித் இளைஞர்கள் பசுப் பாதுகாவலர்களால் அடித்து கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து தலித் சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இதற்கு அதிகாரிகள் தரப்பில், இந்தப் போராட்டமானது எந்தவித விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை எனவும், மாநிலம் முழுவதும் தேங்கியுள்ள இறந்தபோன விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்த நேரம் அடிப்படையிலான சோதனை முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் பதிவு செய்தனர்.

குப்பைகள் மற்றும் இறந்த விலங்குகளை அப்புறப்படுத்த மாநிலத்தில் உள்ள 8 மாநகரங்கள்,  33 மாவட்டங்கள்  மற்றும் 249  வட்டங்களுக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் என 30,000 பேர் செயல்படுத்தப்படுவார்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.  

அந்த நகரங்களில் வாழக்கூடிய தலித்மக்கள், இந்தத் தொழில்கள் எங்களின் வாழ்வாதாரத் தோடு ஒன்றிணைந்து இருப்பதால் இதை விட்டுச்செல்ல முடியாது என்றும் ஒரு கருத்தினைப் பதிவு செய்கின்றனர்.

அஹமதாபாத் நகராட்சியில் பணியாற்றக்கூடிய ஜிதேஷ் சோலங்கி என்பவர், "நான் மாதந்தோறும் 22,500 ரூபாய் சம்பாதிக்கிறேன். என்னால் எனது சமூகத்தினரின் அவலநிலையை  புரிந்துகொள்ள  முடிகிறது, அதற்காக இந்த வேலைகளைச் செய்யாவிட்டால் எனது குடும்பத்திற்கு வருமானமே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்" என வருத்தம் தெரிவித்துள்ளார்.

அந்த மாநிலத்தில் 285 மாட்டு கொட்டகைகளில் 2,00,000 பசுக்கள் உள்ளன. அந்தக் கொட்டகைகளில் ஆண்டு ஒப்பந்த முறையில் கழிவுகளை அப்புறப்படுத்தும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சில கிராமங்கள் மட்டும் தான் தலித்துகள் வெளியேறியதால் இந்த பிரச்சனைக்கு ஆளாகியுள்ளதாகவும், எந்த நேரத்திலும் மாவட்ட அலுவலகத்தின் உதவியை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தலித் போராட்டத்தின் மையப்புள்ளியான  'உனா' வில் கூட இந்த போராட்டம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும், கடந்த ஒரு மாதத்தில் எந்த கிராமத்திலும் இறந்த விலங்குகளின் உடல்கள் அப்புறப்படுத்தப்படாமல் தேங்கவில்லை எனவும் கிர்சோம்நாத் மாவட்ட ஆட்சியாளர் அஜய் குமார் அறிவித்துள்ளார்.

ஆனால் இறந்த நான்கு இளைஞர்களின் உறவினர்களும், சமூகத்தினரும் இன்றுவரை நாங்கள் இந்தத் தொழில்களில் இருந்து ஒதுங்கிதான் இருக்கிறோம் என்று ஆட்சியரின் கூற்றுக்கு மறுப்புத் தெரிவித்து அறிக்கை விடுத்தனர். இறந்த இளைஞர்களின் உறவினரான  கேவல் ரத்தோட் என்பவர், அந்த நிகழ்விற்குப் பிறகு இன்று வரை யாரும் தொழில் செய்யவில்லை என்று கூறினார். இந்த முடிவு எங்கள் சமூகத்தினருக்கு சுயமரியாதையை பெற்று தந்து விட்டது எனவும், அநீதிக்கு எதிராக பிற தொழில் செய்பவர்களும் எங்களுடன் இணைந்து போராட விழைகிறார்கள் எனவும் இந்தப் போராட்டத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் வழக்கறிஞரான ஜிக்னேஷ் மெவானி அறிவித்துள்ளார்.

  • The Tribune 06.08.2016, Deccan Herald 07.08.2016, Hindustan Times 21.08.2016