டிசம்பர் 26ஐ துயரநாளாகக் கூட அறிவிக்கலாம். அத்தகையதொரு பேரழிவும் பேரிழப்பையும் நடத்திய சுனாமி என்கிற பெயரைக் கேட்டாலே நடுநடுங்குகிற அளவிற்கு 2004 - ல் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தி விட்டுப்போனது அந்த ஆழிப்பேரலை. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட அந்த உயர் நிலநடுக்கம் கடல்வழியே பரவி இந்தியா, இலங்கை, அந்தமான் - நிக்கோபால் தீவுகளென கதிகலங்க வைத்தது இன்றும் நினைவில் சுவடாய் பதிந்திருக்கிறது.

Tsunamiஅது ஞாயிற்றுக்கிழமை. கல்வி மையங்களுக்கும் பணி நிலையங்களுக்கும் ஓய்வு நாள். அன்று காலை கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள், கரையோரங்களில் குடியிருந்த குடிசைவாழ் மக்கள், சிறுவியாபாரிகள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. அன்றைக்கு ஏற்பட்ட அந்த (சுனாமிய) நிலநடுக்கம்தான் மீண்டும் மீண்டும் அந்தமானை அச்சுறுத்தி வந்தது. 2004 டிச.26 க்குப் பிறகு எண்ணிலடங்காத முறை அப்பகுதியில் நிலநடுக்கமும், நில அதிர்வும் ஏற்பட்டு அம்மக்களை அச்சுறுத்திக்கொண்டேயிருந்தது. நிலநடுக்கத்தின் பீதியால் அவர்கள் இரவுதோறும் வீட்டைவிட்டு வெளியேறி நடுரோட்டிலேயே உறங்கியும் உறங்காமலும் இரவைக் கழித்தனர். நாளடைவில் அது சாதாரண நிகழ்வாகி அந்தச்சூழலை அவர்கள் பழக்கப்படுத்திக்கொண்டனர்.

தமிழகத்தையே மூழ்கடித்திருக்கும் இந்த மழைவெள்ளம் கூட சுனாமியின் சுனாமியின் மிச்சம் சொச்சம் என்று கூறுகிறார்கள். ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருக்கும் ஓட்டையும் அதற்கு ஒரு காரணமாய்ச் சொல்லப்படுகிறது. சுனாமிக்குப் பிறகு உலக வரைபடத்தில் சிறு மாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். பள்ளமானப் பகுதி கடலில் புதையுண்டும் கடலிலிருந்த மேடானப் பகுதி வெளித்தெரிவதாகவும் கூறப்படுகிறது. சுனாமிக்குப் பின் சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் சில மாற்றங்கள் தெரிகின்றன. அதில் ஒன்று கடலில் புதையுண்டு கிடந்த பாறைச் சிற்பங்கள் வெளித்தெரிவதாகும். அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கடல் ஆராய்ச்சியின் மூலம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சிற்பக்கோயில்கள் பல்லாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடலில் மூழ்கிப் போயிருப்பதாக இந்த கடல் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இது விஞ்ஞானிகளுக்கும் அவர்களின் ஆராய்ச்சிக்கும் சுனாமியால் ஏற்பட்ட லாபம் என்றாலும் தற்போதைய கடல் மட்டம் நிலமட்டத்தை சற்று நெருங்கி வந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை தூண்டியிருக்கிறது.

மேலும், சுனாமிக்குப்பின் அடிக்கடி கடல் உள்வாங்குவதும் வெளியேறுவதுமாய் இருப்பதும் ஒருவித அச்சஉணர்வை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. “சுனாமி வந்ததற்கு நிலநடுக்கம் மட்டும் காரணமில்லை, அறிவியல் வளர்ச்சியால் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் உலகெங்கிலும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற பல அடுக்குமாடி கட்டிடங்களும் உலக நாடுகள் தங்கள் பலத்தை பரிசோதித்துக் கொள்ளவும் சோதனையின் பேராலும் அவ்வப்போது நிகழ்கிற அணுகுண்டு சோதனைகளும் போர்களும் ஒருவகையில் காரணமாய் இருக்கும்” என்று அறிவியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

அணுஆயுத சோதனையாலும் அடுக்குமாடிகள் பெருகிவருதாலும் நிலத்தில் ஏற்படுகின்ற அழுத்தத்தின் காரணமாக பூமிக்குள் இருக்கிற நெருப்புப் பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதி எரிமலை வெடிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படிப்பட்ட சுனாமி, நிலநடுக்கம், எரிமலை, புயல், ஓசோன் ஒட்டை, அளவிற்கு அதிகமான மழை - வெள்ளம் அனைத்திற்கும் தீர்வு இயற்கையோடு ஒன்றி வாழ்வதைத்தவிர மனிதச் சமுதாயத்திற்கு வேறுவழியில்லை. விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தை இயற்கைக்கு எதிராக பயன்படுத்துவதை மனிதச் சமுதாயம் தவிர்க்க வேண்டும். இத்தகையதொரு மாற்று வழிகளே இயற்கைப் பேரிடரிலிருந்தும் பேரழிவிலிருந்தும் உலகையும் மக்களையும் காக்கும். இதையும் மீறி அழிவை ஏற்படுத்தும் நாசச் செயல்களை மனிதக் கொடுங்கைகள் புரியுமானால் உலகம் அங்காங்கு அழிந்துகொண்டுதான் இருக்கும்.

- இலாகுபாரதி

Pin It