கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தனது இறுதி அறிக்கையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஆறுபேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு முகமை திரும்பப் பெற்றுள்ளது. இது காவி பயங்காரவாதிகளை திட்டமிட்டே காப்பாற்றும் மோடி அரசின் சதிச்செயல் என பெரும்பாலான எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Pragya Singh Thakurகாவி பயங்கரவாதிகள் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்குக் கொஞ்சம் தனித்தன்மையானது. அதுவரை காக்கிடவுசர்கள் எல்லாம் கையில் கர்லா கட்டையும், கம்பையும் மட்டுமே கொண்டு பயிற்சி எடுப்பவர்கள் என்ற உலகின் பொதுப்பார்வை மறுத்து அவர்கள் குண்டுகளை வைத்தும் பயிற்சி செய்கின்றார்கள் என்ற உண்மையை வெளி உலகத்துக்கு கொண்டு வந்தது மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம். அந்தக் குண்டுவெடிப்பின் மூலம் மதவெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் உள்ள கள்ளக்கூட்டு அம்பலமானது.

பல குண்டுவெடிப்பு வழக்குகளில் காவி பயங்கரவாதிகளுக்கு உள்ள தொடர்பை அம்பலப்படுத்த காரணமாக இருந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இருந்துதான் இப்போது இதற்கு மூளையாக செயல்பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றார்.

இதற்குத் தேசிய புலனாய்வு முகமை முன்வைத்த காரணம் மிக கேவலமானது. இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்த குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட பைக்கை பிரக்யா சிங் தாக்கூர் பயன்படுத்தியதே இல்லையாம். அதை ராமச்சந்திர கலசங்கரா என்பவர்தான் பயன்படுத்தி வந்தாராம். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதால் பெண் சாமியார் மீதான குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு 2011 ஆண்டே மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த ஐந்தாண்டுகளில் தேசிய புலனாய்வு முகமை செய்த உருப்படியான புலனாய்வு என்னவென்றால் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவன் தலைமறைவாக இருக்கின்றான் என்பதுதான். காவி பயங்கரவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் இனி அவன் எப்போதுமே தலைமறைவாகத்தான் இருப்பான்!.

பிரக்யா சிங் தாக்கூர் மீதான் குற்றச்சாட்டை என்.ஐ.ஏ கைவிடுவது இது முதல் முறையல்ல; ஏற்கெனவே இது நடந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்பவன் 2007 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பிரக்யா சிங் தாக்கூர் பின்னர் இந்த வழக்கில் இருந்து என்.ஐ.ஏ வால் விடுவிக்கப்பட்டார். இந்த சுனில் ஜோசியும் காவி பயங்கரவாதிகள் நடத்திய பல குண்டுவெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளியாவான். இவன் பிரக்யா சிங் தாக்கூரிடம் தவறாக நடக்க முயன்றதால்தான் கொல்லப்பட்டதாக என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு சம்மந்தமாக குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீது மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை நாசிக் நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு நாசிக் நீதிமன்றம் சொன்ன காரணம், மகாராஷ்டிரா குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும் என்றால் அந்த நபர் ஏற்கெனவே இரு முக்கிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் பிரக்யா சிங் தாக்கூர் மீது அப்படி எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாததால் அவரை மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என நாசிக் தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இப்படி அரசு கட்டமைப்பின் அனைத்து உறுப்புகளையும் தனது கைக்குள் வைத்துகொண்டு குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருந்தது. இதன் உச்சமாக இந்த வழக்கை நடத்திக் கொண்டிருந்த மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப்படை தலைவர் ஹேமந்த் கர்கரே மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் போது மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். கர்கரே மரணத்தில் காவி பயங்கரவாதிகளுக்குப் பங்குண்டு என அப்போதே பரவலாக பேசப்பட்டது.

2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மட்டுமே பிரக்யா சிங் தாக்கூர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் அதற்குமுன் 2006 ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஏறக்குறைய 37 பேர் கொல்லப்பட்டனர். முதலில் இந்தக் குண்டுவெடிப்பு தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தால் நடத்தப்பட்டது என கூறி அப்பாவி முஸ்லீம்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஆசிமானந்த கைது செய்யப்பட்ட போதுதான் காவி பயங்கரவாதிகள் எவ்வளவு அபாயமானவர்கள் என வெளி உலகத்திற்குத் தெரியவந்தது. ஆசிமானந்த தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் 2006 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு மட்டும் அல்லாமல் 2007 ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு போன்றவையும் காவிக்கூட்டத்தால் திட்டமிட்டே நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டான்.

இதற்குப் பின்தான் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக அப்போது கருத்து தெரிவித்த ராவின் முன்னாள் தலைவர் பி.ராமன் "2006ம் ஆண்டு முதல் நடந்த அனைத்துத் தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளிலும் மதவாதமும், அரசியலும் புகுந்து விசாரணையையை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன. தவறான குற்றச்சாட்டின் பேரில்தான் பலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி முறையான உருப்படியான ஆதாரம் எதையும் விசாரணை அமைப்புகள் வைத்திருக்கவில்லை. மாறாக இந்தக் கைதுகளை அரசியல் மயமாக்கி அதன் மூலம் லாபம் அடையும் முயற்சிகள் தான் நடந்து வருகின்றன” என உண்மையைப் போட்டுடைத்தார்.

காவி பயங்கரவாதிகள் தங்களுடைய கொடுஞ்செயல்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களை யாரும் தண்டிக்க முடியாது. காவிபயங்கரவாதிகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலும் அது சார்ந்து இயங்கும் அமைப்புகளில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அரசு கட்டமைப்பையே கைப்பற்றி வைத்திருக்கின்றார்கள். இங்கே காவல்துறை, இராணுவம், சி.பி.ஐ, நீதிமன்றம், என பல அமைப்புகள் இருந்தாலும் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஓர் அங்கமாகவே செயல்படுகின்றது.

அதனால்தான் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு மட்டும் அல்லாமல் அனைத்து வழக்குகளிலும் அவர்களால் தண்டனை இன்றி தப்பித்துக் கொள்ள முடிகின்றது. குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு எதிராக வலுவான ஆதரங்கள் இருந்தும் மோடிதான் குஜராத் கலவரத்துக்கு முழுகாரணம் என உலகமே ஒத்துக் கொண்ட பின்பும் மோடியை இந்த காவிமயமாக்கப்பட்ட இந்திய அரசு கட்டுமானங்களால் தண்டிக்க முடியவில்லை. அப்சல்குருவை இந்திய சமூகத்தின் பொது மனச்சாட்சியை திருப்திபடுத்த தூக்கில் ஏற்றத் தெரிந்த இந்திய நீதிமன்றங்களுக்கு உலகமே இனப்படுகொலை குற்றவாளி என்று சொன்ன மோடியை தண்டிக்க மட்டும் மனம்வரவில்லை.

பிரக்யா சிங் தாக்கூர் வைத்திருந்த வண்டியை அவர் பயன்படுத்தவில்லை; ராமசந்திர கலசங்கரா தான் பயன்படுத்தினார்; பிரக்யா சிங் தாக்கூர் தன்னுடைய வண்டியை 2004 ஆண்டே விற்றுவிட்டார்; எனவே குண்டு வெடிப்புக்கும் பிரக்யா சிங் தாக்கூருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என பிரக்யா சிங் தாக்கூர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையே தேசிய புலனாய்வு முகமையும் தெரிவித்துள்ளது. ஆனால் வண்டியின் பதிவு அவர் பெயரிலேயே இருந்துள்ளது. வண்டி விற்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் பிரக்யா சிங் தாக்கூர் இதுவரை தரவில்லை. தரவில்லை என்றால் என்ன? அவர் ஒரு இந்து சாமியாராக இருப்பதால் அவர் ஆதாரத்தை கொடுக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இங்கு இல்லை. இந்து சாமியார்கள் நேர்மையானவர்கள், அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள், அதனால் பிரக்யா சிங் தாக்கூர் சொல்வதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அவரை இந்தக் குற்றத்தில் இருந்து தேசிய புலனாய்வு முகமை விடுவித்துள்ளது. அவரை மட்டும் அல்ல இதில் சம்மந்தப்பட்ட கர்னர் புரோகித் உட்பட அனைவரும் கூடிய விரைவில் விடுதலையாக போகின்றார்கள்.

அப்படி என்றால் யார் குற்றவாளிகள்?. பிரக்யா சிங் தக்கூர் வைத்திருந்த வண்டியை விலைக்கு வாங்கி அதை குண்டுவெடிப்புக்கு பயன்படுத்திய ராமசந்திர கலசங்கரா தான் குற்றவாளி . அவன் யார்? அது வண்டியை வறுமை காரணமாக விற்ற அந்த ஏழை பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், மோடி, தேசிய குற்ற புலனாய்வு முகமை ஆகியோருக்கு மட்டுமே தெரியும். இப்போது அவன் எங்கே இருக்கின்றான்? எங்கு இருந்தால் காவி பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பு இருக்குமோ அங்கு நிரந்தமாக தங்கி இருக்கின்றான்!

- செ.கார்கி