தஞ்சை மண்டல எழுத்தாளர் கலைஞர் மு.கருணாநிதி 

"காவேரி தண்ணீர் குடித்தவருக்குச்  

சாவேரி ராகம் தன்னாலே வரும்

தஞ்சை வட்டாரத்தில் உலவும் பழமொழிகளில் இசைப் பெருமை பேசுவன இப்படிப் பல உண்டு.

karunanidhi writingஇசையும் கலைகளும் மணந்து கமழும் பெருமை பெற்றது தஞ்சை மண். செய்யும் தொழில் என்னவென்று கேட்குமிடங்களில் "சுக ஜீவனம்" எனக் குறிப்பிடுவோரை அங்கேதான் மிகுதியாகப் பார்க்க முடியும். அடுத்தவர் உழைப்பில் வாழ்வதைச் "சுக ஜீவனம்" எனக் குறிப்பிடுவோருக்குப் பெயர் 'மிராசுதார்'. பிறருக்காக உழைப்பதையே வாழ்வாகக் கொண்டோருக்குப் பெயர் 'பாயாகாரிகள்'.இப்போது அச்சொல் வழக்கிழந்து விட்டது.

உழைக்காமல் உண்பவர்கள், உழைப்பிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்ட உயர் சாதியினர். அவர்களுக்கு ஓய்வு மிகுதி, ஓய்வை கழிக்க உருவான கலை, இலக்கிய வகைகளும் உணவு வகைகளும் பொழுது போக்கு வகைகளும் தஞ்சை மண்ணில் ஏராளாமாய் இருக்கின்றன.

இசையும் கலையும் செழித்த மண்ணில் சிற்ப எழில் குலுங்கும் கோவில்களுக்குப் பஞ்சமில்லை. கோவில் வழிபாட்டோடும் வருவாயோடும் இசை, கலை முதலியன இணைக்கப்பட்டதால் அவற்றின் வளர்ச்சிக்கு வழி கிடைப்பது எளிதாகி விட்டது. 

ஒரு கலையில் தோய்ந்த மனம், ஒவ்வொரு கலையிலும் ஈடுபாடு காட்ட முனைவது இயல்பு. எல்லாக் கலைகளும் வளர்ந்த தஞ்சை மண், இலக்கியக் கலை வளர்ச்சிக்கும் இடம் தந்தது. 

தஞ்சை மண் தந்தவர் 

எழுதுகோலின் ஆற்றலை முழுதாய் அறிந்த மூத்த எழுத்தாளராகக் கலைஞர்மு.கருணாநிதி திகழ்கிறார். தொண்ணூற்று இரண்டு வயதைத் தொட்ட பின்பும், அவரின் எழுத்துப் பயணம் நிற்கவில்லை. அவரை உருவாக்கியதில், அவர் வாழ்ந்த தஞ்சை மண்ணுக்குப் பெரும் பங்கு உண்டு. 

வேளாண்மை வளத்தையும் இசை, கலைகளின் வளத்தையும் நீண்ட நெடிய காலமாகத் தன்னுள் இயக்கிக் கொண்டு வருவது தஞ்சை மண்! புத்தூழியின் வருகை, கடந்த அய்ம்பதாண்டுகளாக அதன் இயங்குதிசையைப் புரட்டிப் போட முயல்வது தொடர்கிறது. 

நிலத்தின் இயல்பைத் சார்ந்தே, மக்களின் வாழ்க்கை உருவாகிறது. ஒரே நிலத்தில் தனி அடையாளமும் பொது அடையாளமும் கலந்து நிகழ்வதே காலத்தின் வளர்ச்சி. 

புதிய உலக எழுச்சியின் அடையாளமாகத் தஞ்சை மண்ணில் எழுந்தவர்களில் கலைஞர்மு.கருணாநிதியும் ஒருவர். பழைய உலகைத் தழுவி வாழ்ந்தவர்கள் பகட்டுவாழ்வையும் வாழ்க்கைப் பாதுகாப்பையும் தடையின்றிப் பெற முடிந்தது. புதிய உலக வருகையை வரவேற்ற எழுத்தும் எழுத்தாளரும் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவதே வழக்கமாய் இருந்து சாவைப் பலமுறை சந்தித்து மீள மனவுரம் வேண்டும். இயக்கத் துணை வேண்டும். குடும்ப அரவணைப்பு வேண்டும். கொள்கை வழிகாட்டல் வேண்டும். கலைஞருக்கு அவை கிடைத்தன. அதனால் தமிழிலக்கியத்திற்கு அவர் கிடைத்தார். 

தஞ்சையின் தனிப்போக்குகள் :

உலகின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் இலக்கிய உருவாக்கத்தில் நிலம் பெரும் முதன்மையை வலியுறுத்திச் செல்கிறது. 

'முதல்எனப் படுப்பது நிலம்பொழுது இரண்டின் 

இயல்புஎன மொழிப இயல்பு உணர்ந் தோரே'

நிலத்தைக் களமாகவும் பின்புலமாகவும் கொண்டே இலக்கியம் எழுகிறது.

'இமிழ்கடல் வேலி தமிழ்நாடு' என முழுப்பார்வை பார்ப்பது பருந்துப் பார்வை. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைக் கூர்மையாகவும் தெளிவாகவும் பார்ப்பது வட்டாரப்பார்வை. வட்டார இலக்கியம் எனும் தனிப் பிரிவு, இப்போது பெரும் கவனம் பெறும் பிரிவாகி விட்டது. 

"வட்டார மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும் 

சிடுக்குகளையும் சலிப்புகளையும் களிப்புகளையும் 

இயல்பு மாறாத பசுமையான 

அவர்களின் வழக்கு மொழியின் வலிமையோடும் 

வகிர்ந்தெடுத்துச் சொல்வது வட்டார 

இலக்கியத்தின் தனித்தன்மை"

என்று வரையறை கூறுவார் பாவலர் சிற்பி. 

தஞ்சை வட்டாரத்தில் கலைகள் மிகுந்திருப்பது உண்மை. ஏமாற்றுக் கலையும் அவற்றில் ஒன்றாகிப் போனது அவலமானது! கோவிலும் நிலமும் மிகுந்துள்ள அப்பகுதியில், இரண்டின் பெயராலும் மக்கள் ஏமாற்றுப் பட்டனர். 

" மக்கள் தொகுதி எக்குறை யாலே 

மிக்க துன்பம் மேவு கின்றதோ 

அக்குறை தீர்க்கும் ஆற்றல் வாய்ந் தோனைச் 

சிக்கெனப் பிடித்துச் சீர்பெறல் இயற்கை" 

தேவையைப் புரிந்து தீர்வு காட்டுவோரை மக்கள் வரவேற்பர் என்பது பாரதிதாசன் கணிப்பு. 

தஞ்சையில் திராவிடர் இயக்க, பொதுவுடைமை இயக்கங்கள் பெற்ற செல்வாக்கைப் பார்க்கும் போது அது தெளிவாய்ப்புரிகிறது. 

நிலங்கள் மடங்களுக்கும் உயர்சாதியினருக்கும் உரிமையாய்ப் போன அவலம், தஞ்சை மாவட்டத்து தனித்தன்மை. 

உரிமையும் கல்வியும் வாழ்வும் பறிக்கப்பட்ட பண்ணையடிமை வாழ்வு, தஞ்சை நிலவுடைமைக் கொடுமை வழங்கிய பரிசு. 

பக்தியின் பெயரால் மதத்தின் பெயரால் சிந்தனைச் சிறையில் நிரந்தர விலங்கு போட்டு மக்கள் அறையாமையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையே, தஞ்சை வட்டார உழைக்கும் மக்களுக்குக் கிடைத்தது.

இவற்றலிருந்து விடுதலை பெறுவதற்கான பகுத்தறிவு வெளிச்சத்தை ஏந்தி வந்த திராவிடர் இயக்கம், பெரிய அளவில் வரவேற்கப்பட்ட இடம் தஞ்சை மண்டலம்!

மதமூடத்தனத்திலிருந்தும் உழைப்பு அடிமைத்தனத்திலிருந்தும் மக்களை விடுவிக்கும் இயக்கம் வரவேற்கப்பட்டது., இலக்கியம் வரவேற்கப்பட்டது. உலக இலக்கியத்திற்கு இணையாக இலக்கிய படகைக் கைவலிக்கச் செலுத்தும் மேதைகள், திராவிடர் இயக்க இலக்கியத்தில் கலைத்தன்மை குறைந்திருக்கிறதா எனக் கவலையோடு பார்த்தார்கள். 

கலைத்தன்மையை அடுத்தகட்டமாக்கி கருத்து வலிமைக்கு முதற்கட்டம் தரும் தேவையே. திராவிடர் இயக்க இலக்கியங்களுக்கு இருந்தது.

தஞ்சை மண்ணில் பிறந்த கலைஞர், அந்த மண்ணின் அவலங்களை வாழ்க்கைப் பட்டறிவோடு அறிந்து வளர்ந்தவர். அவற்றை மாற்றிக் காட்டும் நோக்கம் மட்டுமே அவரின் எழுத்தின் இலக்காய் இருந்தது. சமூகம் முழுமைக்கும் செய்தி சென்று சேர்வதற்கான பொதுமொழியையே அவர் எழுதுகோல் எழுத்தாய் இறக்கியது.

கலைஞர் வாழ்வும் வழியும் 

இசைவளம் மிகுந்த தஞ்சையின் இசைக்க குடும்பத்தில் பிறந்தவர் கலைஞர்மு.கருணாநிதி திருக்குவளையில் பிறந்த அவர், படிப்பதற்காகத் திருவாரூர் வந்தார். படிப்பு அவரின் விருப்பம்! அவரை இசையில் ஈடுப்படுத்துவதே குடும்பத்தின் விருப்பம்! அவரே சொல்கிறார் :

"என் தந்தை முத்துவேல் மிகச்சிறந்த நாதசுரக் கலைஞர். அதுமட்டுமில்லாமல் வேறுபல இசைக்க கருவிகளையும் திறமையுடன் வாசிப்பார். தமிழிலும் சிறந்த புலமையுடையவர். என்னை இசைத்துறையில் இழுத்துவிடவே அவர் பெரிதும் விரும்பினார். உங்களுக்குத் திருக்குவளையில் கோவில் மானியமாகக் கிடைத்த நிலத்தில் உழவையும், என் உறவினரிடம் இசையையும் இளம்பருவத்தில் பயின்றேன்" 

இசை, உழவு இருதுறையிலும் இளமையில் ஈடுபட்டுள்ள அவருக்கு, அவற்றின் வலிவும் மெலிவும் தெரிவதற்கான வாய்ப்பு கிடைத்தது. 

'கருநாடக இசை கேட்கப்பிடிக்கும்' என இன்றும் கூறும் அவர், டி.என். இராசரத்தினத்தின் 'தோடி' இசையிலும் திருவெண்காடு சுப்ரமணியத்தின் 'மகுடி' இசையிலும்' மனம் கரைபவர்.

திருகுவளையிலுருந்து திருவாரூருக்குப் படிக்க வந்தவர், பள்ளி இறுதி வகுப்பு வரை தான் படித்தார். பத்தாம் வகுப்பில் அவருக்குத் துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்த புத்தகம் 'பனகல் அரசர் வரலாறு'. நீதிக்கட்சித் தலைவரான அவரின் வரலாறு, கலைஞரை ஒடுக்கப்பட்டோர் வாழ்வு குறித்துச் சிந்திக்க வைத்தது. 

படிக்காதவர்கள் உலகம் முழுதும் உள்ளார்கள். படிப்பு மறுக்கப்பட்டவர்கள் இந்தியாவில் மட்டும் தான் உள்ளார்கள்! இங்குள்ள சமூகத்தின் தனித்தன்மையான சிக்கல்களை சிந்திக்க வைத்தது அந்தப் புத்தகம் !. 

அய்ம்பது பக்கங்கள் உள்ள பனகல் அரசர் வாலாற்றை மனப்படமாகச் சொல்லும் ஒரே மாணவராகக் கலைஞர் மட்டுமே அந்த வகுப்பில் இருந்துள்ளார்.

படிப்பும் பணியும் மறுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் அவலத்தைப் பார்பவராகக் கலைஞரை மாற்றியது அந்தத் துணைப்பாட நூல்! அதே காலகட்டத்தில் எழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், இவரை மொழி காக்கும் உணர்வு நோக்கி உந்தித் தள்ளியது. 

பட்டுக்கோட்டை அழகிரியின் சொற்பொழிவு அப்பொழுது திருவாரூரில் நடந்துள்ளது. கேட்கச் சென்ற இவர் மனத்தைப் பகுத்தறிவுத் தீ பற்றிக் கொண்டது.

ஒத்த கருத்துடைய மாணவர்களை ஒருங்கிணைத்தார். 'சிறுவர் சீர்திருத்தச் சங்கம்' பிறந்தது. 'மாணவநேசன்' என்னும் கையெழுத்தேடு கருத்துக் பரப்பும் கருவியானது. மாதம் இருமுறை வருவதாக இதழ் இருந்தது. அதில் எழுதித் தீர்க்கும் ஒரே ஒருவராகக் கலைஞரே இருந்தார். எழுத்தார்வத்தை ஆற்றலாகச் சாணை பிடித்துத் தந்தது 'மாணவ நேசன்'. 

பள்ளி இறுதி வகுப்புக்கு (1942-43) வந்து விட்டார். பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் அன்பு கணபதி தொகுத்த தமிழ்ப்பாட நூல் பாடமாக இருந்தது. அதில் பாரதிதாசன் பாடலும் இருந்தது, 'அழகின் சிரிப்பு' நூலின் முதற்பாடலான 'காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன். பாடலின் அழகு, கலைஞர் மனத்தைக் கொள்ளை கொண்டது. 

திடீரெனப் பள்ளிக்கு மாவட்டக் காலத்திலிருந்து ஆணைவந்தது. ' பாரதிதாசன் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் பாடலைப் படித்தால் மாணவர்கள் கெட்டுவிடுவார்கள்.

பாரதிதாசனின் அழகின் சிரிப்புப் பாடலைக் கற்பிக்கக்க கூடாது'. இப்படித் தான் அந்த ஆணை அறிவித்தது.

பாரதிதாசனின் அழகின் சிரிப்புப் பாடலுக்குத் தடை விதித்தது தஞ்சை மாவட்டக் கழகம்! அதனை எதிர்த்துக் கூட்டம் ஏற்பாடு செய்து விட்டார் பள்ளி மாணவரான கருணாநிதி. கண்டனச் சொற்பொழிவாற்றச் சென்னையிலிருந்து டர்ப்பிடோ ஏ.பி.சனார்த்தனம் அழைக்கப்பட்டார். வழிச் செலவுக்கு அய்ந்து உரூபா பணவிடை அனுப்பப்பட்டது. 

கலைஞர் தம் வாழ்வில் ஏற்பாடு செய்த முதல் கூட்டம், திருவாரூரில் நடந்த அந்தக் கூட்டம் தான் ! கூட்டம் தந்த தமிழுணர்ச்சி மாணவர்களைத் தீயாய்ப் பற்றிக் கொண்டது. கருணாநிதி 'அருட்செல்வம்' ஆனார். 'மாணவ நேசன்' இதழிலும் அந்த பெயரையே இடம் பெறச் செய்தார். உடன் பயின்ற கே.ஆர்.ரங்கசாமி 'இராம.அரங்கண்ணல் ஆனார். சாமிநாதன் 'செம்மல் தங்கோ' ஆனார். 

கருத்துணர்ச்சி தெளிவு பெற்றதால் மாணவர் அமைப்பின் பெயர் 'தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்' எனப் பெயர் மாற்றம் பெற்றது. அமைப்பின் தொடக்க விழாவிற்கு வாழ்த்துப்பா வழங்குமாறு 11.11.1942 ஆம் நாள் பாவேந்தர் பாரதிதாசனுக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். 

பாரதிதாசனிடமிருந்து 20.11.1942 ஆம் நாள் அஞ்சலில் வந்த வாழ்த்துப்பா, இன்று நாடறிந்த பாடலாகி விட்டது. 

"தமிழ் பொழிலில் குயில்பாடும் திருவாரூரில் 

தமிழ்நாடு தமிழ் மான வர் மன்றம் காண் 

இளம்பிற்றுக் காண் தமிழ் சிங்கக் கூட்டம் 

கிழித்தெறிய தேடுது காண் பகைக்க கூட்டத்தை"

பள்ளி மாணவனாக எள்ளி எதுக்காமல் பாரதிதாசன் மதித்து அனுப்பிய வாழ்த்துப்பா கலைஞரின் எழுத்தார்வத்திற்கு உரமேற்றியது. 

தம் எழுத்துலக வளர்ச்சியை அவர் நினைவு கூறுகிறார்.

        "என் 15 ஆவது வயதில் 'மாணவ நேசன்' என்னும் மாதம் இருமுறைக் கையெழுத்து ஏடு நடத்தினேன். பாரதிதாசன், பெரியார், சிங்காரவேலர், கைவல்யம், அண்ணா முதலியோரின் எழுத்துக்கள் என் எழுத்தாற்றலுக்கு உரமாயின... உலக எழுத்தாளர்களில் கார்க்கி என்னைக் கவர்ந்தார். இந்திய எழுத்தாளர்களில் வ.ரா, மு.வ, என்னைக் கவர்ந்தனர்"

தம் எழுத்துலக ஈடுபாட்டுத் தொடக்க காலமாக 1938 இலிருந்து 1942 வரையிலான காலத்தைக் கலைஞர் குறிப்பிடுகிறார். இலக்கிய விளைச்சலுக்கு விதைப்புக்கு காலமானது, திருவாரூர் வ.சோ. உயர் நிலைப் பள்ளியில் அவர் படித்த காலம்!

எழுத்தின் பயன் 

இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் ஈடுபாடு காட்டியவர் கலைஞர். இதழியல், சிறுகதை, புதினம், கவிதை, தன் வரலாறு, நாடகம், திரைப்படம், சொற்பொழிவு எனப் பலவகையாக விரிந்து நிற்பது அவரின் படைப்புலகம். 

கல்வியறிவு குறைந்த சமூகமே அன்றிருந்தது. அவர்களை நோக்கி எழுதுகோலை இயங்கவைத்த வலைஞர், அலகாரத் தமிழை வழியாகக் கொண்டார். மொழியின் அழகைக் காட்டிக் கருத்தை நோக்கி ஈர்க்கும் அண்ணாவின் எழுத்துவழி மக்களைக் கவர்ந்தது; திராவிடர் இயக்க இலக்கிய அடையாளமாகவும் ஆனது கலைஞரின் நடை அதற்குச் செழுமை சேர்த்தது. 

சிந்தனை வெளிப்பாடான மொழிநடை எல்லா மக்களையும் சென்றடையும் தன்மையில் இருக்க வேண்டும். இதுவே திராவிடர் இயக்க எழுத்தாளர்களின் இலக்காக இருந்தது. இதில் அவர்களுக்கு வெற்றியும் கிடைத்தது. 

பகுத்தறிவு பரப்பல், மூடநம்பிக்கையை ஒழித்தல், சாதியை மறுத்தல், ஏற்றத்தாழ்வுள்ள சமத்துவ சமூகத்தை உருவாக்கல், மத மோசடியைத் தோலுரித்தல், கைம்பெண் மறுமணம் ஊக்குவித்தல், புரோகித மறுப்பை வலியுறுத்தல், சாதி மறுப்புத் திருமணங்களை வரவேற்றல் முதலான சமூக மாற்றச் சிந்தனைகளை ஏந்தி வந்தன திராவிடர் இயக்க இலக்கியங்கள். 

தமிழுணர்வை வளர்த்தல், பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்தை உருவாக்கல், தமிழ்ப் பண்பாட்டை மீட்டல், ஆரியப்பண்பாட்டை அகற்றல் முதலானவை திராவிடர் இயக்க எழுத்தின் மைய இழைகளாகத் திகழ்ந்தன. 

கலைஞர் படைப்புகளும் இதே திசையில் புதிய கருத்துகளைக் காட்டின. முற்போக்கு உலகு நோக்கி அழைத்துச் செல்வதை நோக்கமாக்க கொண்டிருந்தன. 

பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்தை உருவாக்குவதற்கும் தமிழ்ப் பண்பாட்டை மீட்பதற்கு கலைஞர் உருவாக்கிய படைப்புகள் பல 'குறளோவியம், சங்கத் தமிழ், தொல்காப்பிய பூங்கா' முதலிய நூல்கள் இந்த நோக்கத்தோடு எழுதப்பட்டவை. 

முதலமைச்சராகக் கலைஞர் பொறுப்பு பேற்ற பின் எழுபதுக்கு மேற்பட்ட தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதும் இதே நோக்கத்தில் தான்! 

இலக்கிய விழிப்பிற்கு வழிகோலிய இந்த நடவடிக்கையால் அறிஞர்களின் குடும்பங்கள் பல பயன் பெற்றன; படிக்கவும் வெளியிடவும் தடையின்றி சமூகம் அறிவுப் பயன் பெற்றது.

பழைய இலக்கியங்கள் மீது தானும் சமுதாயமும் ஆர்வம் காட்டக் கலைஞரின்எழுத்துகளே காரணம் என்று ஜெயகாந்தன் கூறுகிறார். 

"உங்களை போன்றவர்கள் இடையறாது வலியுறுத்தியதன் காரணமாக நாங்கள் திருக்குறள் படிக்கிறோம். பழந்தமிழ்ப் பண்பாடுகளில் தீவிரமாக ஈடுபாடும் ஆராய்ச்சியும் கொண்டோராய் இருக்கிறோம். உங்கள் பழைய படங்களின் வசன வரிகளில் பல எனக்கு மனப்பாடம்"

எழுத்தாளர் ஜெயகாந்தன் இப்படி கலைஞரிடம் நேரில் கூறினார். கலைஞரின்எழுத்துப் பயனைப் புலப்படுத்தும் சொற்களாக இவற்றை ஏற்கலாம். 

கலைஞரின் படைப்புக் களங்கள் பல பிரிவாய் விரிந்து கிடக்கின்றன. அவரின் சிறுகதை, புதினம், சார்ந்த படைப்புகளை மட்டும் மதிப்பிடுவது இங்கு போதுமானது. 

படைப்புக்களம் 

அச்சுப்பண்பாட்டு வருகையும் கல்வியின் பரவலும் வாசிப்பு வாய்ப்பைப் பெருக்கின; விரிவு படுத்தின. 

தமிழ் வாசிப்பு வட்டங்களை நான்காக வகைப்படுத்துவார் பேரா.கா.சிவத்தம்பி. 

தேசிய நிலைப்பட்ட வாசகர் வட்டம் 

திராவிடக் கருத்து நிலை வாசகர் வட்டம் 

இடதுசாரிக் கருத்து நிலை வாசகர் வட்டம் 

மதக் கருத்து நிலை வாசகர் வட்டம் 

திராவிடக் கருத்துநிலை பற்றிய வாசிப்புணர்வும் புரிந்து கொள்ளலும் ஆய்வுலகில் இல்லை என்பது கா.சிவத்தம்பி கருத்து. 

"இந்த ஓரங் கட்டுகை (Marginalisation) காரணமாக நமது இலக்கிய வரலாறு எழுதுகையில் முழுமை இல்லாமற் போய் விட்டது" என்னும் அவரின் கவலை நேர்மையானது.

ஆரிய, இந்தியப் பண்பாடு பற்றிய எடுகோள்களையும் அரசியலையும் புனிதங்களையும் கேள்விக்கு உள்ளாக்கின 'திராவிடக் கருத்து நிலை எழுத்துக்கள்'. அதனால் அவற்றை இருட்டடிக்கும் பணி இன்று வரை தொடர்கிறது. 

எழுத்து, பேச்சு இரண்டிலும் எதுகை மோனை தழுவிய ஈர்ப்பு நடை திராவிடர் இயக்க எழுத்தில் முதன்மைப் படுத்தப்பட்டது., 

புதிய 'எடுத்துரைப்பு மொழி' ஆகா மக்களால் அது வரவேற்கப்பட்டது.,விரும்பி ஏற்கவும் பட்டது. 

இதழ்கள், திரைப்படம், நாடகம், சொற்பொழிவு, முதலிய எல்லா முதன்மை ஊடகங்களையும் தங்கள் பயன்பாட்டிற்குள் கொண்டு வந்தது திராவிடர் இயக்க எழுத்துலகம். 

துண்டு வெளியீடுகள் மூலம் கருத்தைப் பரப்ப தொடங்கி, இதழ்களாக வளர்ச்சி பெற்று நாடகத்தை மக்கள் தொடர்புக் கருவியாக விரிவுபடுத்தி, ஆக்க இலக்கியத்திலும் காலூன்றிப் பரவிய திராவிடர் இயக்க எழுத்துலக முறைமையைக் கலைஞரிடம் அப்படியே பார்க்க முடியும்.

கலைஞரின் இலக்கிய நுழைவு குறித்துக் கா.சிவத்தம்பி கூறுவது கவனத்திற்குரியது. 

"(திராவிடர் இயக்க எழுத்தாளர்கள்) கூறும் முறையிலும் ஒரு புதுமை இருந்தது. சங்க காலமும் திருக்குறளும் சிலப்பதிகாரமும் இத்தமிழ் எழுச்சியின் குறியீடுகளாயின. இவை பற்றிய விவரிப்புகள் புதிய சமூகப் புலப்பதிவுகளுக்கு (perspectives) இடம் கொடுத்தன. ஒரு புதிய நடால், புலனுகர்வு உணர்வூட்டத்தைக் கொடுக்கும் எழுத்து ஆகியன ஜனநாயகத் தன்மையுடைய ஓர் இலக்கிய, கலைப் பாரம்பரியத்தை வளர்த்தன. அந்தத் தனித்துவத்தை உடுத்தும் உடைமுதல் பேசும் மொழி நடை வரை காணக் கூடிய தாக இருந்தது. 

அண்ணாத்துரை அவர்கள் தாம் நிகழ்த்திய இந்த இலக்கியத் தளமாற்றத் தளபதியாக முத்துவேலர் கருணாநிதியைக் கொண்டார்..... இலக்கியத் துறைகள் ஒவ்வொன்றிலும் கலைஞர் கருணாநிதி செயல்பட்டுள்ளார். நாடகம், சினிமா, முதலிய துறைகளில் இவரது தாக்கமும் பங்கும் முக்கியமானவை. தி.மு.க வின் ஆரம்பகாலப் பரவலுக்குக் காரணமான 'நச்சுக்கோப்பை', 'தூக்குமேடை' முதலிய நாடகங்ககளின் ஆசிரியர் இவராவார். தமிழ் சினிமாவின் செல் நெறியை மாற்றிய பராசக்தி இவரது படைப்பாகும்.

சிறுகதைப் பரப்பு 

இலக்கியமும் அரசியலும் கலைஞர் வாழ்க்கை நாணயத்தின் இரட்டைப்பக்கங்களாக ஒட்டிப்பிறந்தவை. அவரின் படைப்புகளில் பரவலான மதிப்பீட்டுக்கு வராதவையாகச் சிறுகதை, புதின நூல்கள் உள்ளன.

வேகமாகப் படித்து முடிக்கக் கூடிய வடிவமான சிறுகதை வடிவம், பாரதியாரின், 'ஆறிலொருபங்கு' (1913) சிறுகதையிலுருந்து தமிழில் தொடங்குகிறது. வ.வெ.சு.அய்யரின் 'குளத்தங்கரை அரசமரம்', தாகூர் கதையின் தழுவல் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதால், முதற்படைப்பு எனும் பெருமையிலுருந்து விளக்கப் பட்டுவிட்டது. 

"சிறுகதை என்றால் வெறும் பொழுது போக்குக்காகப் படிப்பதற்க்கா எழுதுவது? அதில் ஏதாவது ஒரு கருத்து, சமுதாயத்துக்குத் தேவையானதாக அமைக்கப்பட வேண்டாமா? 

'எழுத்தாளர் ஏகலைவன்' எனும் சிறுகதையை எழுதிய கலைஞர், கதையின் பகுதியாக இப்படியொரு வினாவை எழுப்பியிருப்பார். 

திராவிடர் இயக்கப் படைப்பாளர்களின் இலக்கிய படைப்புகளுக்கான உந்து விசையாக இந்தக் கருத்தோட்டமே இருந்துள்ளது என நாம் வரையறை செய்து கொள்ள முடியும். 

கலைஞரின் சிறுகதைகளாக இருநூறுக்கு மேல் இருக்கின்றன. அவற்றில் பாதிக்குமேல் தாம் படித்திருப்பதாகப் பெருமையுடன் கூறும் பிரபஞ்சன் கலைஞர் குறித்த தம் வாசிப்புப் பார்வையைச் சொல்கிறார். 

"ஒரு கருத்து, சிந்தனை, அனுபவத்தைச் சமூகம் சார்ந்து வெளிப்படுத்தவே கலைஞர் சிறு கடை வடிவத்தை எடுக்கிறார் அல்லாமல், கருத்தற்ற சமூக உணர்வற்ற ஒரு சிறு கதையைக் கூட அவர் எழுதிய தில்லை. இது ஓர் எழுத்தாளனுக்குப் பெருமை தரும் விஷயம்" 

"கிழவன் கனவு' கலைஞரின் முதல் சிறுகதைத் தொகுப்பாக 1945 இல் வெளிவந்தது. நாடும் நாகமும் (1953), தாய்மை (1956) கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் (1971) அடுத்தடுத்து வந்தவை.

கடவுள் மறுப்பைப் பேசும் சிறுகதை 'கண்ணடக்கம்' கடித வடிவச் சிறுகதை 'நரியூர் நந்தியப்பன்' புராண எதிர்ப்பப் பேசுவது 'நளாயினி' மத நல்லிணக்கம் வலியுறுத்துவது 'அணில் குஞ்சு' இந்தி எதிர்ப்புக்கு காலகட்டத்தை விவரிப்பது 'சந்தனக் கிண்ணம்' 

'கண்ணடக்கம்' போலவே கடவுள் மறுப்பைப் பேசும் கதை 'விஷம் இனிது'. 

ஊரைச்சுருட்டி விழுங்கும் நோயாக 'பிளேக்' நோய் பரவி வரும் போது, காளிதேவியிடம் பக்தன் கேட்பான் : 

"கருணைக் கடலான காளியா நீ ? 

பிணக்கொலு கண்டு பெருமகிழ்வு கொள்ளும் 

பேய்க்கும் உனக்கும் என்ன வேறுபாடு? 

(கண்ணடக்கம்)

"நம் பினோர்க்குக் கை கொடுக்காதே 

இராம பிரானை விட இந்த விஷம் இனிது" 

(விஷம் இனிது)

இந்து வெறியர்கள் காந்தியடிகளைக் கொன்ற கசந்த வரலாற்றைக் குறியீட்டுத் தலைப்பாக்கிக் கலைஞர் எழுதிய சிறுகதை 'காந்திதேசம்'

திராவிடர் இயக்கம் என்பது சமூக, பொருளாதார, அரசியல் விடுதலை இயக்கம். அதன் கருத்துக் கூறுகளை வெளிப்படுத்த கலைஞர் தேர்ந்தெடுத்த இலக்கிய வடிவங்களில் சிறுகதையும் ஒன்று. 

புதினப் போக்கு 

திராவிடர் இயக்கச் சார்பாக வெளிவந்த முதல் புதினம் மூவலூர் ராமாமிர்த அம்மையார் எழுதிய 'தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்'. 1936 இல் வெளிவந்த இப்புதினம் தேவதாசி முறைக்கு எதிரான குரலை எழுப்பியது.

சமூக மாற்றச் சிந்தனையோடு அறிஞர் அண்ணா 'பார்வதி பி.ஏ' (1944) 'ரங்கோன் ராதா (1948) புதினங்களை வழங்கினார். 

கலைஞர் எழுதிய புதினங்கள் சமூகப் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள் எனும் இருவகையின!

புதையல் (1960),  வான்கோழி (1978), வெள்ளிக்கிழமை (1961),  ஒரு மரம் பூத்தது (1979), சுருள் மலை (1961), ஒரே ரத்தம் (1980). 

கலைஞர் எழுதி வெளிவந்த சமூகப் புதினங்கள் இவை.

'புதையல்' திரைப்படமாகவும் வந்தது. 'வெள்ளிக்கிழமை' திரைப்படமானபோது 'அணையா விளக்கு' எனப் பெயர் மாறியது. 

"கல்யாணமான ராதை கூடக் கணவனை விட்டுவிட்டுக் கண்ணோடு தானே திரிந்தான்" (புதையல் பக்கம்-6) 

புராண இதிகாச, கடவுள், மத போதையைத் தெளிய வைக்கும் இது போன்ற உரையாடல்கள் கலைஞர் புதினங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

ரோமாபுரிப் பாண்டியன் (1974)

பொன்னர் சங்கர் (1986)

தென்பாண்டிச் சிங்கம் (1989)

பாயும் புலி பண்டார வன்னியன் (1991) 

வரலாற்றுப் புதினங்களாகக் கலைஞர் வழங்கியுள்ளவை.

இவற்றைப் பற்றி இருவேறு கருத்துக்களை திறனாய்வுலகில் உண்டு. 

"கல்கியின் நாவல் முறையைத்தான் கலைஞர் கடைப்பிடித்தார். ஆனால் கல்கியின் உயரத்திற்கு உயரவில்லை" என்பது கோவை ஞானியின் பார்வை. (10) 

கா.சிவத்தம்பியின் பார்வை இதிலிருந்து வேறுபட்டது: 

"தமிழகத்தின் உள்ளூர் வரலாற்று நோக்கில் (local history) இவை முக்கியமானவையாகும். எடுத்துரைப்பின் (Narration) முறை, சம்பவங்களை (தொடர்ந்தும்) புலனுகர்வுக் கவர்ச்சியுடையதாக அமைந்துவிடும். (11)

கலைஞரின் புதினங்களில் பொதுப் போக்காக அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள் உள்ளன. ஆய்வின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவை வழிகாட்டும். 

சமூகப்பு தினங்களில் முதலாவது வந்தது 'பெரிய இடத்துப் பெண்'. கோவையில் கலைஞர்வாழ்ந்த போது, கோவை (தேவாங்கப் பேட்டை)த் தோழர்களால் 1946 இல் வெளியிடப்பட்ட இந்நூல் குறித்து வரலாற்றுக் குறிப்பு, கலைஞர் தொடர்பான எந்த நூலிலும் இதுவரை இடம் பெறவில்லை. 

தஞ்சை வட்டாரமணம் காட்டும் கலைஞரின் குறும்புதினம் 'சாரப்பள்ளம் சாமுண்டி'. தஞ்சை பெரியகோவிலின் சிற்பவேலைகள் இடையில் இன்று போனதற்கான காரணத்தைத் தேடுவது இந்தக்கதை. 

ஓ ஹென்றி எழுதிய 'கடைசி இலை' என்னும் கதையைத் தழுவிக் கலைஞர் எழுதியது 'ஒரு மரம் பூத்தது'. 

விழுப்புரம் சாதிக் கலவரத்தை மையமாக்கி எழுந்த புதினம் 'ஒரே ரத்தம்'.

மார்க்சிம் கார்க்கியின் 'தாய்' புதினத்தைத் தழுவிக் கலைஞர் கவிதை நடையில் உருவாக்கியது 'தாய் காவியம்'. இதில் மேடைத் தோனியின் சாயல் இருக்கும். 

இதை படைப்பு நோக்கைத்தையே மறுப்பதுபோல் நெருப்பைக் கொட்டும் பார்வைகளும் வந்தன. 

"இது தான் வாழ்க்கை உண்மை என்று நம்பவைக்கும் பிரம்மிப்பைத் தந்தது. மார்க்சிம் கார்க்கியின் 'தாய்' நாவல். ஆனால் கருணாநிதியின் எழுத்தில் உண்மை உணர்வுகள் கூட பொய்யாகி விடுகின்றன. 

சுண்டு விரலால் தட்டிவிட்டுச் செல்லும் பாவனையில் ஒதுக்கி விடுகிறார் ஜெயமோகன். 

புரட்சி இலக்கியம், முற்போக்குப் பார்வை, கார்க்கி என்பனவற்றை அறியாத எளிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும், கலைஞரின் முயற்சி எளிமை சார்ந்து இருப்பதில் வியப்பில்லை. முயற்சியை எளிமையாக்கிப் பார்த்து எள்ளும் பார்வையே வியப்பாய் இருக்கிறது. 

கலைஞரின் எழுத்துகளில் மடைதிறந்த வெள்ளமாய்ச் சொற்கள் பாய்ந்து வந்துவிழும். அதன் எதுகைமோனை அழகும் ஓசையும் மொழியின் இனிமையை எளிதாய் உணர்த்தும். உழைத்து வாழும் எளிய மனிதர்கள், தமிழ் மீது ஈடுபாடும் பற்றும் கொள்ளக் காரணமானவை கலைஞரின் எழுத்துகள்.

திராவிடர் இயக்க இலக்கியங்களின் தேவையை வலியுறுத்திப் பேசுபவர் கோவை ஞானி. 

"திராவிட இயக்க இலக்கியம் என்றொரு வகை தொழில் இருப்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை. சிலவகை இலக்கியத்திற்கு அறிஞர் அண்ணா முதலானவர்கள் பங்களித்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாரதிதாசன். கலைஞர்மு.கருணாநிதியை இவ்வகை இலக்கியத்தில் இனம்காண முடியும்". 

கொட்டிக்கிடக்கும் எழுத்துகளில், தனித்துத் தெரியும் அடையாளத்துடன் திகழ்வது கலைஞரின் மொழிநடை. 

'அரண்மனை நாயே 

அடக்கடா வாயை!' 

செதுக்கப்பட்ட சொற்களுடன் சீற்றம் வந்து விழுவது, செவியைவிட்டு நீங்காது! 

பாட்டரங்கில் பங்கேற்க வேண்டிய பெண்பாவலர் வரவில்லை. படிப்பதற்கு அவர் மகளை அனுப்பியிருந்தார். அம்மாவின் கவிதையைப் படிக்க வந்த மகளை அழைத்தார் கலைஞர். 

'பாடம்மா நீ கேட்ட தாலாட்டை'

கலைஞரின் மொழிநடைத் திறம் பற்றிக் கூர்மையாகப் பேசுவார் கா.சிவத்தம்பி: 

"கருணாநிதி அவர்களிடம் கவித்துவம் இருந்தது. அது அவருக்கு தி.மு.க.வின் மற்றைய எழுத்தாளர்களை விட ஒரு வன்மையை வழங்கிற்று. இந்தக் கவித்துவமே இவரது திரைப்பட வசனங்களுக்கும் மெருகு அளித்தது.

மேலாக, இவர் ஒரு கவிஞராகவும் மேற்கிளம்பினார். இந்தக் கவித்துவமும் கவிதையாற்றலும் இவரைச் சங்க இலக்கிய விளக்குநராக்கிற்று.

பாட்டுணர்வு நடையில் எழுதும் கலைஞர், பாடல் எழுதுவதிலும் ஈடுபாடு காட்டியவர். 

'காகித ஓடம் கடலலை மீது' (மறக்க முடியுமா?, 1966)

'வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே' (காஞ்சித் தலைவன், 1963) 

'வாழ்க்கை என்னும் ஓடம் வழங்கு கின்ற பாடம்' (பூம்புகார், 1967) 

'பூமாலை நீயே புழுதிமண் மேலே' (பராசக்தி 1952)

திரைப்பாடல்களான இவற்றைத் தெரிந்து வைத்திருக்கும் பலரும், எழுதியவர் கலைஞர்என்பதை அறிந்திருப்பார்களா என்பது அய்யம்! 

கலைஞரின் இலக்கியத்திறனையும் படைப்பாற்றலையும் அதன் சமூக விளைவையும் மதிப்பிடுகிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்: 

"கருணாநிதி போன்ற கலகக்காரர்கள் தான் ஒரு பழமையான சமூகத்தின் அசமந்தத்தைப் போக்கும் திறன் பெற்றவர்களாக, வரலாற்றேட்டில் விளங்குவார்கள். 

தமிழ்ப் படைப்பிலக்கியப் போக்கில் அழுத்தமான தடம் பதித்த தமிழ்ச் சிற்பிகளில் கலைஞர் மு.கருணாநிதி, அவருடைய வன்மையையும் கூர்மையும் மிக்க சமூக யதார்த்த விமர்சனத்துக்காகவும் போர்க்குணம் மிக படைப்புகளுக்காகவும் நினைக்கப்படுவார்"

இலக்கிய ஆற்றலில் பல அடுக்குகள் உள்ளன. ஒவ்வோர் அடுக்கும் அதனதன் வலிமையோடு வரவேற்கப்பட வேண்டும். உச்சநிலை இலக்கியங்கள் நோக்கி உந்தித் தள்ள இடைநிலை இலக்கியங்கள் தேவை. அந்தத் தேவையே கலைஞர் கருணாநிதி எழுத்துக்களை இன்றும் வாழவைத்துக் கொண்டுள்ளன.

சான்றெண் விளக்கம் 

1. கொங்கு மனம் கமழும் படைப்புகள், தமிழ்ப் பண்பாட்டு மையம், கோவை 2013, ப.10

2. கல்பனா (மாத இதழ்) 'ஜெயகாந்தன் எடுத்த கலைஞர் நேர்காணல் 1979, ஆக 

3. இராம.அரங்கண்ணல் நினைவுகள், சென்னை, 1998 பக்,7,8 

4. மு. தமிழ்க்குடிமகன், கலைஞரும் பாவேந்தரும், மதுரை 1995, பக்.27

5. சிறுதைக்கதிர் (மாத இதழ் ) 'பிரபஞ்சன் எடுத்த கலைஞர் நேர்காணல், 1994, செப் 

6. கல்கனா (மாத இதழ்), 1979 ஆக 

7. கார்த்திகேசு சிவத்தம்பி, கலைஞர் கருணாநிதியின் காலை, இலக்கியப் பங்களிப்பின் பின்புலம் பற்றிய ஒரு குறிப்பு', கணையாழி, 1999, சூன்

8. கணையாழி, 1999, சூன் 

9.கணையாழி, 1999, சூன் 

10. சிறுவானிமெயில், கோவை, 24.10.2003 

11. கணையாழி, 1999, சூன்

12. துக்ளக், 20.10.2003

13. சிறுவானிமெயில், கோவை, 24.10.2003 

14. கணையாழி, 1999, சூன்

15. கணையாழி, 1999, சூன்

- செந்தலை ந.கவுதமன்சூலூர் பாவேந்தர் பேரவை, கோவை

Pin It