2009ஆம் ஆண்டையும் மே மாதத்தையும் குருதி படிந்த ஆண்டும் மாதமும் என்று வரலாறு பதிவு செய்யும். 80,000 ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக் கணக்கான மக்கள் உறுப்பிழந்து ஊனப்பட்டிருக்கிறார்கள் மூன்று இலட்சம் பேர் வாழ்விழந்து, வசிப்பிடம் இழந்து முள்வேலிகளுக்குள் ஏதிலியாக இன்னல்படுகிறார்கள். இந்தக் கூக்குரல் இன்னும் ஓயவில்லை. காயங்கள் இன்னும் ஆறவில்லை. இலங்கை சென்ற தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றக் குழுவினரிடம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் இப்படித் தெரிவித்தனர்:
“உங்களிடத்தில் எங்கள் எல்லாவற்றையும் இப்படியான முற்றுகைத் தருணத்தில் பேசிவிட முடியாது... தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாகச் சொந்த இடங்களில் குடியமர்த்தி, சிதைந்த தேசத்தை அபிவிருத்தி செய்து, இழந்த வாழ்வைக் கட்டி எழுப்ப நடவடிக்கை எடுங்கள். நிரந்தரமான உரிமையற்ற அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிற எமது மக்கள் நிரந்தரமான வாழ்வுரிமையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுங்கள்.”
ஈழத் தமிழர்கள் வேண்டுவதும் உலகத் தமிழர் எதிர்ப்பார்ப்பதும் மீள்குடியமர்வும் வாழ்வுரிமையுந்தான். ஆரவாரமான மாநாடுகள் அல்ல.
தமிழக முதல்வர் கலைஞர் ஒரு மாநாட்டு அவசரத்தில் இருக்கிறார். அந்த அவசரத்தில்தான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்கிற முறைமையைப் புறந்தள்ளி, ஒரு கட்சி மாநாட்டை நடத்துவது போல் அறிவிப்புச் செய்தார். ஆனால் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் நொபாரு கராஷிமா, தமிழக முதல்வரின் அவசரங்களுக்குப் பணிந்துவிடாமல், தம் நிறுவனத்தின் தற்சார்பு நிலையைப் பேணும் வகையில், இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஜப்பானியரான நொபாரு கராஷிமா ஆய்வுப் புலம் முற்றிய அறிஞராகையால், ஆராய்ச்சி மாநாட்டுக்குரிய கால அளவை மனத்திற்கொண்டு ஒப்புதல் அளிக்காமல் இருந்திருக்கலாம்.
முதல்வர் கருணாநிதி ஓர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த முயன்று, அது கைகூடாத நிலையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டைக் கோவையில் நடத்த அறிவிப்புச் செய்துள்ளார். இந்த அறிவிப்புகளில் அரசத் தலைவர் காட்டவேண்டிய பொறுப்பும் நிதானமும் இல்லை என்பதை முதலில் சுட்ட வேண்டும். ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கைகூடவில்லையா, போகட்டும். முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவோம் என்று முடிவு செய்வதில் தமிழ் ஆய்வு பற்றிய அக்கறையோ, செம்மொழி குறித்த நேர்மை உணர்வோ இல்லை; ஒரு மாநாட்டுக் கொண்டாட்டத்துக்கான ஆர்வந்தான் துருத்திக் கொண்டிருக்கிறது.
ஈழத்தமிழர் பிரச்சனையில் உலக அளவில் சரிந்துவிட்ட தனது செல்வாக்கை மீண்டும் உயர்த்த இப்படி ஒரு மாநாடு என்ற ஓர் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.
இனவிடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்குச் செய்த பணிக்காக திருகோணமலை நிலத்தடி எண்ணெய்க் குதங்கள், அனல்மின் நிலைய ஒப்பந்தம், காங்கேசன் துறைமுகம், மன்னார் கடற்பரப்பு போன்றவை இலங்கை அரசால் தானமாக இந்தியாவுக்கு வழங்கப் பட்டுள்ளன என்று ஈழ அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.
தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத ஜப்பானிய அறிஞர் நொபாரு கராஷிமா - இந்த அரசியல் சதுரங்களுக்கு ஆட்படாது தமது புலமைத் தகுதியை நிறுவியுள்ளார். உணர்வுள்ள தமிழறிஞர்கள் இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும்.
பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் - என்ற புறநானூற்று வரிகளை மாணவர்களுக்குப் பயிற்றுவித்த சான்றோர்களிடம் அவ்வரிகளை மெய்ப்பிக்குமாறு இன்றின் வரலாறு கோருகிறது. உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் இன்று கொண்டாட்ட உணர்வில் இல்லை. முள் வேலியில் முடங்கிய ஈழத் தமிழர்கள் வாய் பேச முடியாத மௌனத்தில் வைக்கப்பட்டுள்ளனர். திசை எட்டும் சிதறிய உறவுகள் வாய் புதைத்து அழுகின்றனர். தமிழினம் இருந்தால்தான் தமிழும் இருக்கும் என்ற எளிய உண்மையை உரக்கச் சொல்ல வேண்டிய நேரமன்றோ இது?
- தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு