தலித் எழுச்சி வரலாற்றுப் பின்னணியை புரிந்துக் கொள்வது எப்படி?
“கர்ணன்” திரைப்படம் தமிழக சினிமா வரலாற்றில் முக்கியமானது. இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்… 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாதிய கொடுமைகளை அதற்கு எதிரான போராட்டக் களங்களை தற்காலத்தின் விவாத களத்திற்கு இயக்குநர் கொண்டு வந்துள்ளார்.
வரலாற்றை மீண்டும் மீண்டும் மீள்வாசிப்பு செய்தலும், விமர்சனங்கள் செய்தலும் மிக அவசியம்… படைப்பிலக்கியத்தின் முக்கிய நோக்கங்களில் இது இன்றியமையாதது.
ஒரு வரலாற்றை புரிந்துக் கொள்ள அக்காலத்தின் படைப்புகளை மீள்வாசிப்புக்கு முயல வேண்டும். கொடியங்குளம் பற்றி பல உண்மை அறிக்கை குழுக்களின் ஆய்வுகள் அப்பொழுது வந்துள்ளன. அதில் 1997 ஆம் ஆண்டு தோழர்களின் ஒத்துழைப்புடன் கொடியங்குளம் பிரச்சனைக்கு பின்பு எழுதப்பட்ட ஒரு சிறு வெளியீட்டை மீன் வாசிப்புக்காக கீழே தந்துள்ளோம்.
இதை வெளியிட்ட மக்கள் பண்பாட்டு ஆசிரிய குழுவிற்கு நன்றி.. இப்படி பல வரலாற்று ஆவணங்கள், படைப்புகள், கட்டுரைகள், புத்தங்கள் மீள் வாசிப்பும் மறுவாசிப்பும் செய்வதும் அவசியம் என்பதால் இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது. கர்ணன் திரைப்பட பின்னணி படைப்புலகம் பின்னணி என்ன என்பதை புரிய இப்படியான வரலாற்று தகவல்கள் அவசியம் இனி கட்டுரைக்குள் செல்வோம்!
கொடியங்குளத்திற்கும் அதன் வரலாற்று நிகழ்வுகளுக்குள்ளும் செல்வோம்!
தென் தமிழகத்தில் தலித் மக்களின் எழுச்சிப் போர் (1997ஆம் ஆண்டு மக்கள் பண்பாடு இதழ் வெளியீடு)
“பொன்விழ சுந்ததிரம்”,“பொன்விழா சுதந்திரம்” என்று ஊளைக் கூச்சல் வெற்று ஆரவாரத்துடன் ஆளும் வர்க்கங்கள் டாம்பீகமாக கொண்டாடத் தொடங்கி உள்ளன. துடைப்பக்கட்டைக்கு பட்டுக் குஞ்சம் என்ற கதையாக இத்துடன் உலகிலேயே மாபெரும் சனநாயக அரசு, குடியரசு என்று வாய் ஓயாமல் பீற்றிக் கொள்கின்றன.
தீண்டாமை தடை செய்து விட்டதாக 1950 ஆம் ஆண்டில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பெருமையாகப் பறை அடித்து அறிவித்தது. சாதிய இழிவுகளை அகற்றி “சோசலிசம்” படைக்கப் போவதாக காங்கிரஸ் கட்சி வீர சபதம் எடுத்துக கொண்டது. இன்றைய நிலைமைதான் என்ன?
வெட்கம், சூடு, சொரணை இல்லாமல் ஆளும் வர்க்க கும்பல்களும் ஓட்டுக்கட்சிகளும் ‘சனநாயகம்’‘சுதந்திரம்’ என்று கொண்டாடும் கடந்த 50 ஆண்டுகளில் வரலாறு எப்படிப்பட்டது? தங்களின் சுய மரியாதைக்காகவும் வாழ்வுரிமைக்காகமும், மனிதனாக நடத்த வேண்டும் என்பதற்காகவும் தலித் மக்கள் சிறிய அசைவுகளை உண்டாக்கி எழுந்திருக்க முயற்சித்த போதெல்லாம் அங்கு என்ன நடந்தது?
மைய, மாநில அரசுகளும், ஆதிக்க சாதியில் உள்ள சாதி வெறியர்களும், ஒட்டு கட்சிகளும் இந்த அசைவுகளை நசுங்கின. பெல்ச்சி, வெண்மணி, முதுகுளத்தூர், கரம்சேடு, கண்டூர், போடி, குறிஞ்சாங்குளம், கொடியங்குளம், மேலவளவு என்று செங்குருதி ஒடிய வரலாறாகவே கடந்த 50 ஆண்டுகள் கடந்துள்ளன.
தொலைக்காட்சி வானொலி, திரைப்படம் போன்ற மக்கள் தொடர்பு ஊடகங்கள் மூலம் பொய் பிரச்சாரம் செய்து இவைகளை மறைக்க முயலலாம். ஆனால் எமது தலித் மக்கள் சிந்திய இரத்தத்தின் வாடையும் ஆறாத வடுக்களும் நித்தம் நித்தம் உழைக்கும் மக்கள் நெஞ்சில் கோபக் கனலை மூட்டிய வண்ணம் உள்ளன.
உரிமைகளுக்காக எரிமலைகள் வெடித்து எழச் செய்கின்றன. இத்தகையதொரு உரிமைகளுக்கான போர் முழக்கம்தான் குமரி முதல் மதுரை வரை, இன்று சென்னை வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் தலித் மக்களின் வீரமிக்க போராட்டங்கள்!
சமூக நீதி, பார்ப்பனிய எதிர்ப்பு, தேசிய இன விடுதலை என்று பறை சாற்றி ஆட்சி கட்டிலுக்கு வந்த திராவிட கட்சிகளின் துரோகத்தனங்கள் சொல்லிமாளாது. அதன் நல்ல எடுத்துக்காட்டு இன்றைய கருணாநிதி ஆட்சி! சுய மரியாதைக்காக, மனித உரிமைகளுக்காக, சமூக நீதிக்காக போராடியதற்குப் பார்ப்பனியத்தை எதிர்ப்பதற்கும் தலித் மக்களுக்கு கருணாநிதி அரசு கொடுத்துள்ள பட்டங்கள் “தேச விரோதிகள்”, “குண்டர்கள்” என்பதாகும். காவல்துறையையும், கறுப்புச் சட்டங்களையும் ஏவி தலித் மக்கள் எழுச்சியை ஒடுக்க நினைக்கின்றனர். வரலாற்று சக்கரங்களைப் பின்னோக்கி நகர்த்த முடியுமா என்ன?
சாதி கலவரம் அல்ல. தலித் எழுச்சி போர்
தென் தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களை சாதிக் கலவரம் என்று நாம கரணம் சூடி தமிழக அரசும், ஒட்டு கட்சிகளும், பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், சாதி சங்கங்களும் பிரச்சாரம் செய்கின்றன. இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் சதி! இதுவரையில் நடந்த சாதி மோதல்களுக்கும் தற்பொழுது நடப்பவைகளுக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது.
தலித் மக்களிடம் சிறிய சலசலப்பு, எதிர்ப்பும் வந்தால்கூட ஆதிக்கச் சாதி வெறியர்களும், அரசும் (குறிப்பாக காவல்துறை) அவைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து உள்ளன. 1948 இல் ராமநாதபுரத்தில் 5 நாட்களிலும், 1957 இல் முதுகுளத்தூர் 15 நாட்களிலும், 1989 இல் போடியில் 23 நாட்களில், 1995 இல் கொடியங்குளத்தில் 7 மாதங்களில் தலித் மக்கள் உரிமைகளுக்காக எழுந்த மோதல்கள் முறியடிக்கப்பட்டன. ஆனால், இந்த போராட்டங்களில் படிப்படியாக தலித் மக்கள் தங்களின் போராட்ட நாட்களையும், முறைகளையும் விரிவுப்படுத்தி உள்ளதை பார்க்க முடியும்.
இம்மோதல்கள் அனைத்து சில ஊர்களுக்குள்ளோ, குறிப்பிட்ட பிரதேசத்திற்குள்ளோர் அடங்கி இருந்தது. கொடியங்குளத்திற்கு பிறகு தென் மாவட்டங்கள் முழுவதும் விரிவடைந்து உள்ளது. இன்று தலித் மக்களின் எழுச்சி தென் மாவட்டங்களில் மட்டும் இல்லாமல் அதன் வேகம் தமிழ்நாடு முழுவதும் இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்களுக்கும், சனநாயக, புரட்சிகர சக்திகளுக்கும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களைப் போல் அல்லாமல் 10 ஆயிரம் 20 ஆயிரம் என தலித் மக்கள் எல்லா இடங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டனர். எடுத்துக்காட்டாக, டாக்டர் கிருஷ்ணசாமியை விடுதலைச் செய்யக் கோரி சிதம்பரனார் மாவட்டம் மணியாச்சி அருகே 4.5.97 அன்று நடந்த ரயில் மறியலில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் பங்கு கொண்டனர். காலை முதல் மாலை வரை நடந்த இம்மறியலில் ரயிலில் இருந்த பயணிகள் அனைவருக்கும் கிராமங்களில் உணவு சமைத்து அளிக்கப்பட்டது.
குழந்தைகளுக்குத் தேவையான பால் வழங்கப்பட்டது. இவை தலித் மக்கள் எழுச்சியை மட்டுமல்ல உணர்வு பூர்வமாக சாதாரண பொதுமக்களுக்கு எதிராக போராட்டம் திசை திரும்பக் கூடாது என்ற உழைக்கும் மக்களின் பண்பாட்டையும் நாம் பார்க்க முடிகிறது. ௐட்டு கட்சிகள் 100 பேர்கள் கூடினாலே பொதுமக்களுக்கும், கடைக்காரர்களுக்கும் எவ்வளவு தொந்தரவு அளிக்கிறார்கள். இதோடு ஒப்பிடுகையில் தலித் மக்களின் பொறுப்புணர்வு மிக பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.
வள்ளியூரில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து மதுரையில் தலித் இயக்கங்கள் போராடின. அதில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16.5.97 அன்று மேலவாசல் பகுதி அருந்ததியர் (துப்புரவு தொழிலாளர்) மாணவர் பழனிக்குமார் இறந்தார். தேவர் சாதியில் உள்ள சாதி வெறியர்களும் போலீசும் இணைந்து அச் சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதைக் கண்டித்து துப்புரவு தொழிலாளர் சங்கம் 17.5.97 முதல் 24.5.97 வரை உறுதிமிக்க வேலைநிறுத்த போராட்டம் செய்தனர். மதுரை மாநகரமே நாறி போனது! 23 ஆம் தேதி நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் 5000 க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தினர் கலந்துக் கொண்டனர்.
துப்புரவு தொழிலாளர் போராட்டத்தில் இப்போராட்டம் ௐரு மைல்கல்! தங்கள் பலம் என்ன என்பதை தாங்கள் மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை. அரசாங்கத்திற்கும் காட்டினார்கள். அத்தகைய எழுச்சிமிகு போராட்டம் இது. இப்படியாக தலித் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பல போராட்டங்களில் பங்கு கொண்டனர்.
மேலும், இதுவரையில் நடந்த மோதல்களில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தலித் மக்களாகவே இருந்தனர். கொலை, பாலியல் வன்முறை, வீடுகள் தீக்கிரை, பயிர்கள் நாசம், தொழில் கருவிகள் அழிப்புகள் என்று இந்த இப்பாதிப்புகள் பல வகைப்படும். இந்த முறை ஆதிக்க சாதியிலுள்ள சாதி வெறியர்களுக்கு, அரசாங்கத்திற்கும் தலித் மக்கள் பதிலடி கொடுத்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
அனைத்திற்கும் மேலாக, ௐட்டுக்கட்சி பொறுக்கிகள், அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தி கொண்டு நிராகரித்து வருகின்றனர். சென்ற ஆண்டு ஜெயலலிதாகவும். இந்த ஆண்டு கருணாநிதியும் இப்பகுதிகளுக்கு பார்வையிடச் சென்ற போது ஊரையே தலித் மக்கள் காலி செய்து முதலமைச்சர்கள் முகத்தில் கரியை பூசி உள்ளனர். எல்லா ௐட்டுக் கட்சி கொடிகளும் வெட்டப்பட்டு குப்பையில் போடப்பட்டன. அரசாங்க அதிகாரிகள், நீதிமன்றம், காவல்துறை அதிகாரிகள் வாக்குறுதிகளை சிறிதும் நம்பத் தயாராக இல்லை.
தங்கள் போராட்டங்களைச் சமரச, சீர்திருத்த வாதங்களுக்கு திசைத் திருப்பும் எந்த தலைவனையும் தலித் தலைவர்கள் உட்பட யாரையும் தலித் மக்கள் நம்பத் தயாராக இல்லை. தங்கள் விடுதலையைத் தங்கள் ஓற்றுமையும் போராட்டமும்தான் சாதிக்கும் என்று உணர்ந்துள்ளனர்.
ஒட்டு மொத்தத்தில் நாறிப்போன சமூக அமைப்பையும், ஒடுக்க முறை அரசையும் ஓட்டு பொறுக்கி அரசியலையும் சுயநலமிக்க தலைவர்களையும் அடையாளம் கண்டு தலித் மக்கள் புறக்கணிக்க தயாராகி வருவது நல்ல வளர்ச்சியாகும்.
பெண்களின் பங்கு இப்போராட்டங்களில் பெருமளவு அதிகரித்து உள்ளது. ஆணாதிக்கம், சாதிய ஒடுக்குமுறை என்ற இரட்டை நுகத்தடியில் துயர்படும் தலித் பெண்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஒழிக்க போர் முரசு கொட்டி புறப்பட்டு விட்டதை இப்போராட்டங்கள் காட்டுகின்றன.
மறியல்கள், பதிலடியான தாக்குதல்களில் பங்கு ஏற்பதுடன், காவல்துறையினரின் பாசிச ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுத்தும் வீரமுடன் இப்பெண்கள் போராடி வருகின்றனர். மேற்கண்டவைகளை அனைத்து தலித் எழுச்சியின் விளைவே ஆகும்.
சமூக ஆதிக்கங்கள் உரிமைப் போராட்டங்கள்
அருவருக்கத்தக்க, மனித தன்மையற்ற சாதியமானது தெற்காசிய சமூகத்தைக் கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாக உடும்பு பிடியாக பிடித்து ஆட்டுகிறது. நிலவுடைமை சமுதாயத்தின் ஆரம்பத்தில், குறிப்பிட்ட சமூக, பொருளியல் வளர்ச்சியில் உருவான சாதியம் பின்பு படிப்படியாக இறுகி மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. நீண்ட நெடுங்காலத்திற்கு சமுதாய வளர்ச்சியை தடை செய்யும் புற்று நோயாக இருந்து வருகிறது.
சாதிய ஒடுக்கு முறையும், இழிவையும் மௌனமாக மனிதன் அங்கீகரிக்கவில்லை. மனித சமுதாயம் வர்க்கங்களாக பிரித்ததில் இருந்து வர்க்கப் போராட்டம் தொடங்குவது போல மேல் சாதி கீழ் சாதி என்ற பிரிவினை ஏற்பட்டதில் இருந்து சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி விடுகின்றன. நமது சமூகத்தின் வரலாறு என்பது வர்க்க- சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களின் வரலாறே ஆகும்.
தென்தமிழகத்தில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன. மன்னர்கள் ஆட்சியில், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவை நடந்தன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட்டம் தலித் மக்களால் திருவாடானையில் தொடங்கப்பட்டது.
இப்பகுதியிலுள்ள தலித் கிருத்துவர்கள் தங்களுக்காக சர்ச் கட்ட முயன்ற போது, அதை மறவர் சாதியில் உள்ள சாதி வெறியர்கள் எதிர்க்கின்றனர். தலித் மக்கள் இதற்கு எதிராக போராடி கோயில் கட்டும் உரிமையை நிலை நாட்டுகின்றனர்.
தென் தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீது பல்வேறு சாதிகளின் ஒடுக்கு முறைகள் இருந்தாலும் முக்குலத்தோர் அல்லது தேவர் சாதியில் உள்ள ( மறவர், கள்ளர், அகமுடையார் இன்னபிற) ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறைகள் தீவிரமானது.
ஏனெனில் பாளையங்கள் ஆட்சி முறையின் போது பாளையக்காரர் களாகவும் ஆங்கிலேயர் ஆட்சியில் மிராசுதார்களாகவும், நாட்டார்களாகவும் இருந்து இவர்களே ஆட்சி செய்தனர்.
நாடு என்பது பாளையம் அல்லது மிராசுக்கு கீழே உள்ள ஆட்சிப் பிரிவாகும். இன்றும் கூட பல நாடுகள் இப்பகுதியில் அம்பலக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்பலக்காரர்கள் பெரும்பாலும் தேவர் சாதியில் உள்ள ஆளும் வர்க்கங்கள் என்பது சொல்லாமலே புரியும்.
ஆனால் தலித் மக்கள் தங்கள உரிமைகளுக்காக குரல் எழுப்பிய பொழுதெல்லாம் அக்குரல்வளையைத் தேவர் சாதியில் உள்ள ஆளும் கும்பல்கள் நசுக்கின. தலித் மக்கள் பொருளாதார ரீதியில், சமூக ரீதியிலும் முன்னேற விடாமல் தடுத்தனர்.
உதாரணத்திற்கு 1930 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழும் பள்ளர் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய 11 வகையான கட்டுப்பாடுகளைத் தேவர் சமூக நாட்டார்கள் விதித்ததை ஜே.எச்.ஹட்டன் கீழ்க்கண்டவாறு விளக்கிறார்.
“பள்ளர்கள் தங்க நகை அணியக்கூடாது.
பெண்கள் மேலாடை அணியக்கூடாது.
இவர்கள் பூ வைக்கவோ மஞ்சள் பூசவோ கூடாது.
ஆடவர்கள் இடுப்புக்கு மேலும், முழங்காலுக்குக் கீழும் ஆடை ஆடை அணியக் கூடாது. இவர்கள் முடிவெட்டிக் கொள்ள’கூடாது.
மண் பாத்திரங்களில் மட்டுமே புழங்க வேண்டும். தண்ணீர் பானையை சுமக்கும் போது தலையில் துணியை பயன்படுத்த கூடாது. அதற்கு வைக்கோலை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
குழந்தைகள் படிக்கப் போகாமல் மிராசுதார்கள் ஆடு மாடுகளையே மேய்க்க வேண்டும்.
மிராசுதாரர்கள் நிலத்தை வாரத்திற்கு குத்தகைக்கு வாங்கி உழக் கூடாது. அவர்களின் பண்ணைகளில் இவர்கள் அடிமை வேலை செய்ய வேண்டும்.
பள்ளர்கள் தமக்குச் சொந்தமான நிலங்களை அக்கிராமத்து மிராசுதாரர்கள் மிக்க குறைந்த விலையில் விற்று விட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் நிலத்துப் பாசனத்துக்குரிய நீர் மறுக்கப்படும். மழையின் உதவியால் ஏதேனும் விளைந்தாலும் அவை அறுவடைக் காலத்தில் பறிமுதல் செய்யப்படும்.
காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை மிராசுதார்களுக்குக் கீழிருந்து இவர்கள் கூலி வேலை செய்ய வேண்டும். ஆண்களுக்கு நான்கு அணாவும், பெண்களுக்கு இரண்டு அணாவும் கூலியாக வழங்கப்படும்.
திருமணம், விழாக் காலங்களில் மேளதாளம் வைக்க கூடாது. மணமகன் குதிரைச் சவாரி செய்ய’கூடாது.”
(இம்மானுவேல் தேவேந்திர கதைப்பாடல் ஆய்வு, செ.சண்முக பாரதி)
இத்தகைய பொருளியல், சமூக ஒடுக்குமுறைகளை தலித் மக்கள் ஒவ்வொன்றாக மீறினர். உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கினர். இதனால் தலித் மக்களுக்கும், பெரும்பாலும் தேவர் சாதியில் உள்ள சாதி வெறியர்களுக்கும் இடையே பல மோதல்கள் நிகழ்ந்தன.
இதன் உச்சக்கட்டமாக 1957இல் முதுகுளத்தூர் கலவரம் நிகழ்ந்தது. இதில் தலித் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 17 பேர் உயிர் இழந்தனர். 2,735 தலித் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டன. தேவர்கள் 8 பேர் உயிர்கள் இழந்தனர். 107 வீடுகள் அழிக்கப்பட்டன. தொடர்ந்து உஞ்சனை, திருவாடானை என்று பல பகுதிகளில் மோதல்கள் நடைபெற்றன.
இங்கு குறிப்பிட வேண்டிய விசயம் யாதெனில் தலித் மக்களை விட மோசமாக தீண்டாமை அனுபவித்த நாடார்கள் தங்களை ஒடுக்கிய சாதி வெறியர்களுக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டங்களை இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடத்தி அதில் வெற்றியும் பெற்றனர். ஆதிக்க சாதிகளுக்கு எதிராக நடந்த பெரும் போராட்டங்கள் இவைகள்.
அது போல் கடந்த 10 ஆண்டுகளில் போடி, குறிஞ்சான்குளம், நாலுமூலைகிணறு, திருவாடானை என்று பல இடங்களில் தலித் மக்களுக்கும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் அரசிற்கும் இடையே மோதல்கள் நடைபெற்றன. இவைகள் அனைத்தும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக அரசால், ஆதிக்க சாதி ஆளும் வர்க்கத்தால் சித்தரிக்கப்பட்டன. இவைகள் மட்டுமல்ல ஆங்காங்கே பல ஊர்களில் தங்கள் பொருளாதார, சமூக உரிமைகளுக்காக தலித் மக்கள் எண்ணற்றப் போராட்டங்களை நடத்தினர்.
அவற்றில் சில
14.03.92 குறிஞ்சான்குளம் - அம்மனுக்கு சிலை வைக்க தடை
03.06.92 விராலிப்பட்டி, திண்டுக்கல் - கோயிலில் நுழைய தடை
05.07.92 சென்னகரம்பட்டி, மேலூர் - கோவில் நிலம் ஏலம் எடுக்கத் தடை
05.03.93 அம்மணம்பாக்கம் - பொது நிலத்தை பயன்படுத்தத் தடை
05.05.94 டி.கல்லுப்பட்டி, பெரியகுளம் - பேருந்து குடையில் அம்பேத்கர் பெயர் எழுதத் தடை
09.04.95 ஊர்சேரி, மதுரை - ஜல்லிக்கட்டில் தலித் இளைஞர் மாடு பிடிக்கத் தடை.
மேலும் பஞ்சமி நில மீட்பு, பொது குளத்தில் மீன் பிடித்தல், புளியம் பழம் ஏலம் எடுத்தல், புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு, சுடுகாட்டுப் பிரச்சனை என்று பல உரிமைகளுக்காகப் போராடினர். இதன் வளர்ச்சியில் கொடியங்குளத்தில் நடந்த தாக்குதல், எரியும் தீ பத்தில் எண்ணெய் ஊற்றியது போல் தலித் மக்களிடம் தீயாய்ப் பற்றி பரவியது.
ஜெயலலிதா ஆட்சியின் பாசிச ஒடுக்குமுறையை புரிந்துக் கொள்ள இந்த ஒரு நிகழ்ச்சியே போதும். 30.08.95 ஆம் தேதி கலெக்டர் தலைமையில் காவல்துறை, அழகு செக்குருட்டி சர்வீசை சேர்ந்த தேவர் சாதி ரவுடிகள் இணைந்து ஆலந்தா, காசிலிங்கபுரம் கிராமங்களைச் சூறையாடினர். மறுநாள் 1000க்கும் மேற்பட்ட போலீசார் கொடியங்குளத்தை சூறையாடினர்.
பெண்கள் குழந்தைகள் என்று கண்ணில் பட்டவர்களை தாக்கினர். 35 தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிகள் சமையல் பாத்திரங்கள், டிராக்டர்கள் என்று அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. தானியங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது. குடிநீர் கிணற்றில் கொடிய பூச்சி மருந்து ஊற்றப்பட்டு நாசம் செய்யப்பட்டது. 610 சவரன் நகைகளையும் 15 லட்சம் ரூபாயையும் போலீசார், ரவுடிகளும் கொள்ளையடித்தனர்.
‘சோதனை‘ என்ற பெயரில் இத்தகைய பாசிச ஒடுக்குமுறை ஜெயா-சசிகலா கும்பல் செய்தது. இதை எதிர்த்து பெரும் கிளர்ச்சி செய்தனர். பாசிச ஆட்சியை எதிர்த்து 6.10.95 இல் சென்னையில் பெரும் பேரணி நடத்தப்பட்டது.
இப்பேரணியிலும் காவல்துறை, ரவுடிகளை ஏவி கலாட்டா செய்து துப்பாக்கிச் சூடு நடத்தி சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள திரிசூலம் கிராமத்தில் கல்லுடைக்கும் தலித் தோழர்கள் இருவரைச் சுட்டுக் கொன்றது.
இதைக் கண்டித்து 7 மாதங்களாக பெரும் போராட்டங்களை தலித் மக்கள் ஆட்சியாளர்களுக்கும், ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் எதிராக நடத்தினர். பதிலுக்கு பதில் என்று தாக்குதல் நடத்திய பின்புதான் அரசும், சாதி வெறியர்களும் அடங்கினர். தொடர்ந்து நடத்த தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியைக் கூண்டோடு தோற்கடித்த மண்ணைக் கவ்வ தலித் மக்களுக்கும், உழைக்கும் மக்களும் செய்தனர்.
பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக 50 ஆண்டுகள் (சு)தந்திர வரலாற்றில் இந்தியாவின் ஒரு பகுதியில் ஆதிக்கச் சாதி ஆளும் கும்பல்களும், ஆட்சியாளர்களும் செய்த ஒடுக்குமுறையும், அதற்கு எதிரான தலித் மக்களின் கிளர்ச்சிகளும் தான் இவைகள். தலித் மக்களை ஒடுக்கிக் கொண்டே தலித் ஒருவரை ஜனாதிபதி ஆக்கிவிட்டது வரலாற்று சாதனை என்று ஆளும் கும்பல் பிரச்சாரம் செய்வது யாரை ஏய்க்க செய்யும் வேலை?
ஆதிக்க சாதியில் உள்ள ஆளும் கும்பல்களின் தாக்குதல்கள்
ஆட்சியாளர்களும் ஆதிக்கச் சாதியில் உள்ள ஆளும் வர்க்கங்களும் தலித் மீது தங்கள் ஆதிக்கத்தை திடப்படுத்திக் கொள்ள ஒடுக்கு முறைகள் ஏவியதன் விளைவே இன்றைக்கு உள்ள பிரச்சினை. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோயிலில் தங்களுக்கு மண்டகப்படி உரிமை வேண்டும் என்று தலித் மக்கள் கேட்டனர்.
கோவில் நிர்வாகமும், அரசாங்கமும் பலமுறைகள் இப்பிரச்சினை பற்றி பேசியும் எந்த தீர்ப்பும் வழங்கவில்லை. தெலுங்கு நாயக்கர் (நாயுடு) சாதியில் உள்ள சாதி வெறியினர் திருவிழாவில் தலித் மக்களைத் தாக்கினர்.
இவர்களுடன் ஜெயவிலாஸ் பேருந்து முதலாளியும், தேவர் சாதி ஆதிக்க வெறியர்களும் கைகோர்த்துக் கொண்டனர். தாக்குதல் அதிகமாகி தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் ஒரு வாரம் தொடர்ந்து மோதல்கள் நீடித்தது.
அடுத்து, தேனி அருகே கண்டமனூர் தேவர்சிலை சிறிது சேதமடைந்ததை பெரியதாக்கி ஆதிக்கச் சாதி வெறியர்கள் தலித் மக்களைத் தாக்கினர். தலித் மக்களும் பதிலடி தாக்குதல்கள் தொடுத்தனர். இதை ஒட்டி டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் 02.05.97 இல் அப்பகுதிக்கு சென்றபோது போலீசாரால் கைது செய்யப்படுகின்றார்.
வழக்கமாகத் தடையை மீறுபவர்களை கைது செய்து மாலையில் விடுதலை செய்யும் கருணாநிதி ஆட்சி வேண்டுமென்றே கிருஷ்ணசாமியை சிறையில் அடைக்கின்றது.
டாக்டரை விடுதலைச் செய்யக் கோரி பல இடங்களில் தென் மாவட்டங்களில் மறியல்கள் நடைபெறுகின்றன. இதே சமயத்தில் தலித் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் போராட்டத்தை மழுங்கடிக்கும் அரசியல் தந்திரத்துடன், கருணாநிதி அரசாங்கம் மே 1 ஆம் தேதி அப்பகுதி பேருந்து நிறுவனத்திற்கு வீரன் சுந்தரலிங்கம் பெயரை சூட்டுகிறது. தங்கள் ஆதிக்கம் எங்கே தளர்ந்து விடுமோ என்று ஆதிக்கச் சாதி வெறியர்கள் இவ்விரு சம்பவங்களை பெரியதாக்கி இப்பேருந்துகளை சேதம் விளைவிக்கின்றனர். பெயரைத் தார்பூசி அழித்தனர். சாதி மோதல்கள் தீயாய் பரவியது.
தொடர்ந்து அமைச்சியார்பட்டி, கிழவிகுளம் கிராமங்களில் சிரட்டையில் தேநீர் குடிக்க வேண்டும், பிணக்குழி வெட்ட வேண்டும் என்று ஆதிக்கச் சாதி ஆளும் வர்க்கத்தினர் வற்புறுத்துகின்றனர். தலித் மக்கள் மறுக்கவே சாதி வெறியர்கள் மீண்டும் தாக்குகின்றனர். தலித் மக்களும் தாங்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் பதில் தாக்குதல்கள் செய்கின்றனர்.
ஆதிக்க வெறியர்கள் ஆட்களை திரட்டி இராஜபாளையம் வட்டம் மங்காபுரம், அமைச்சியார்பட்டி, கிழவிகுளம், ரெங்கப்பநாயக்கன்பட்டி போன்ற சில கிராமங்களை தாக்கி தலித் மக்களின் உடமைகளுக்கு சேதம் செய்கின்றனர். 160 க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் பாதுகாப்பு இல்லாததால் தங்கள் கிராமங்களை காலி செய்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் தலித் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறி உள்ள கொடுமை உழைக்கும் மககள் நெஞ்சில் கோபக்கனல் விளைவிப்பதாகும். 16.05.97 அன்று வள்ளியூர் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து மதுரை சுப்ரமணியபுரம் தலித் மககள் கடையடைப்பு செய்ய முயன்றனர்.
இதை எதிர்த்து கந்து வட்டிக்காரன் - சிவசேனா பொறுப்பாளர் பெரியாம் பிள்ளை தேவர் தமது சாதியில் உள்ள சாதி வெறியர்களை அணி திரட்டினார். தலித் மக்களின் 37 வீடுகளை அடித்து நொறுக்கியத்துடன், தீக்கு இரையாக்கினர். சேத்தூர், பெரியகுளம், ராஜபாளையம் என்று பல இடங்களில் தலித் மக்கள் உடமைகளுக்கு ஆதிக்க சாதி வெறியர்கள் சேதத்தை ஏற்படுத்தினர்.
அனைத்திற்கும் மேலாக, மேலூரில் 30.06.97 அன்று மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித் மக்களின் (பறையர் சமூகம்) கழுத்தைத் தனியாக அறுத்து ஆதிக்க சாதி வெறியர்கள் கோரமான படுகொலைகள் புரிந்தனர். மதுரை மாவட்டத்தின் மேலவளவு, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கள்ளிப்பட்டி, நாட்டார் மங்கலம் ஆகிய தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து தனி தொகுதிகளில் வேட்பு மனுக்களை கூட தாக்கல் செய்ய விடாமல் ஆதிக்க சாதியின் ஆளும் கும்பல்கள் தடை செய்து உள்ளனர்.
பல தடவைகள் ஆட்சியாளர்களிடம் தலித் அமைப்புகள் எடுத்து கூறியும் அவர்கள் அலட்சியம் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளும் வர்க்கம், ஒட்டு கட்சிகள் பெருமையாக பேசும் சட்டத்தின் ஆட்சியின் அவலட்சணம் இதுதான். முருகேசன் என்பவர் இந்த மிரட்டலுக்கு பயப்படாமல் தேர்தலில் நின்று தலைவரானார்.
தலைவரானதற்காகவே அவர் தலையை அறுத்து பேயாட்டம் போட்டது சாதிவெறி’ கும்பல். இவர்கள் மட்டுமல்ல கல்குவாரி ஏலத்தில் தலையிட்டதற்காக வஞ்சிநகரம் கந்தன் என்பவரை, அரசு நிலத்தை ஏலம் எடுத்தற்காக சென்னகரம்பட்டி அம்மாசி, வேலு ஆகியோரை, அம்பேத்கார் பிறந்தநாள் விழா கொண்டாடியதற்காக பிச்சன்பட்டி சந்திரன் ஆகியோரை மதுரை மாவட்டத்தில் ஆதிக்க சாதி வெறியர்கள் கொடூரமாகக் கொலை செய்தனர்.
இவ்வாறு ஆதிக்கச் சாதி வெறியர்களின் கொண்டாட்டம் தென் மாவட்டங்களில் அதிகரித்ததன் விளைவாக தலித் மக்கள் பலவிதக் கொடுமைகள் ஆளாக்கப்பட்டனர். குட்ட குட்ட எத்தனை நாள் குனிவது? தலித் மக்கள் இக் கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். விளைவு ஆதிக்க சாதி ஆளும் வர்க்கத்தினரின் உரிமைகளும், உயிரும் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டு உள்ளது.
ஆட்சியாளர்களின், காவல்துறையினரின் திட்டமிட்ட சதிகள்
அதிமுக ஆட்சியில் பாசிச ஜெயா-சசிகலா கும்பல் வெளிப்படையாகத் தேவர் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு துணை இருந்தது போல் கருணாநிதி ஆட்சியானது வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினர் பக்கம் இல்லை என்று பத்திரிகைகளும், ஒட்டு கட்சிகளும் அறிவு ஜீவிகள் சிலரும் பரப்பி வருகின்றனர்.
உண்மை நிலை அப்படியா என்றால் இல்லை? அரசு இயந்திரம் (காவல்துறை, நிர்வாகம், நீதித்துறை, சட்டமன்றம்) எப்பொழுதும் ஒரு வர்க்கத்தின் பக்கம் நின்றுதான் சேவை செய்யும் என்பது மார்க்சியத்தின் அரிச்சுவடி.
நமது நாட்டில் உள்ள அரசு எந்திரம் அரை நிலவுடைமை அரை காலனிய சமூக அமைப்பை கட்டிக் காப்பாற்றுவதற்கான அடக்குமுறை கருவியாகும். இதனால் இது ஒடுக்கப்பட்ட சாதிகளின் எழுச்சியை வன்முறைகளை கொண்டு ஒடுக்கவே செய்யும். அதிலும் தற்பொழுது பாசிச மயமாகி வரும் இந்திய அரசியலும், அரச இயந்திரமும் முன்பைவிட கொடூரமாக மக்கள் திரள் எழுச்சிகளை ஒடுக்கும்.
இதன்படி பார்த்தால் கருணாநிதி ஆட்சி ஆதிக்கச் சாதி ஆளும் கும்பல்கள் பக்கம் நின்று தலித் எழுச்சியை எவ்வாறு திட்டமிட்டு நசுக்குகிறது என்பது விளங்கும். சாதாரணமாக முன்னெச்சரிக்கையை ஒட்டி கைது செய்யப்பட்டவர்களை மாலைக்குள் விடுதலை செய்யும் கருணாநிதி அரசு டாக்டர் கிருஷ்ணசாமியை விடுதலை செய்யாமல் தனது புத்தியைக் காட்டியது.
கவிஞர் இன்குலாப், எஸ்.வி. இராசதுரை போன்ற அறிஞர்கள் சென்ற உண்மை அறியும் குழுவின் கூற்றுப்படி, “செந்தட்டியாபுரம், தேவிகாபுரம் ஆகிய பள்ளர்கள் வசிக்கும் கிராமங்களில் எந்த பிரச்சினையும், மோதல்களும் இல்லை. இக்கிராமங்களில் ஜ.ஜி. விஜயகுமார் தலைமையிலான நூற்றுக்கணக்கான போலீசார் சென்ற மே 20,22 தேதிகளில் கடும் தாக்குதல்களைச் செய்துள்ளனர்.
வீடுகளை அடித்து நொறுக்கினர். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி உள்ளனர். 45 பேர்கள் மீது பொய் வழக்குகளை புனைந்துப் போட்டு உள்ளனர். ஐ.ஜி. விஜயகுமார், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் ஆகிய இருவரும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்.
அரசு துறைகளான இரெவின்யூ, காவல் துறைகளில் மிகக் குறைந்த அளவில் கூட தலித் மக்கள் நியமிக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. இப்படி ஆதிக்க சாதி வெறியர்கள் ஆதரவாக ஆட்சியாளர்கள், காவல்துறையினர் உள்ளதைத் தெளிவாக அறிக்கை படம் பிடித்துக் காட்டுகின்றது.
துறையூர், சிவகிரி, மதுரை, காட்டுமன்னார் கோவில் துப்பாக்கிச் சூடுகள் அனைத்தும் மக்கள் எழுச்சியை ஒடுக்கும் பாசிச நடவடிக்கைகள் தவிர வேறென்ன? டாக்டர் கிருஷ்ணசாமி கைதானதை கண்டித்து, நெல்லை மாவட்டத்தில் உள்ள துறையூரில் மக்கள் மே மாதம் 5 ஆம் தேதி தங்கள் ஊரில் கூடி எவ்வாறு கண்டனம் செய்வது என்று பேசி’ கொண்டிருந்தனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் ஜாங்கிட் அவர்களின் தலைமையில் பெரும் போலீஸ் படையுடன் நுழைந்து சாதாரணமாக பேசி’ கொண்டிருந்த அம்மக்களை அடித்து நொறுக்கி உள்ளார். தப்பியோடிய தலித் மக்களை விரட்டி விரட்டி போலீசார் அடித்தனர். ஜாங்கிட் துப்பாக்கியால் ஒடிக் கொண்டிருந்த தலித் செயல் வீரர் பிலிப்சை (வயது 26) திட்டமிட்டுக் குறி பார்த்து கட்டு படுகொலை செய்துள்ளார்.
இதைக் கேள்விப்பட்டு பார்க்க வந்த ஆலந்தூர் கிராமத்தைச் சேர்நத் 55 வயது சண்முகம் என்ற பெரியவரையும் கட்டுக் கொன்றனர். இந்த இருவரின் பிணங்களைக் கூட பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல் பாளையங்கோட்டையில் காவல்துறையினரே சட்டவிரோதமாக புதைத்து உள்ளனர்.
07.05.97 அன்று சிவகாசியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கும் சாதி மோதல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. போலீஸ் துறை ஆட்சியாளர்களின் திட்டமிட்ட தாக்குதலே இந்த கொலை சிவகாசியில் கட்டப்பட்டு வரும் “அலுமினீய பவுடர்” ஆலை சுற்றுப்புறச் சூழலை நஞ்சாக்கும் என்பதால் 18 பட்டி மறவர் சமுகத்தினரும் எதிர்த்து வருகின்றனர்.
இந்த ஆலை நாடார் சாதி முதலாளிக்கு சொந்தமானது என்பதால் இப்பகுதியில் உள்ள நாடார் சாதி ஆதிக்க சக்திகளான எம்.எல்.ஏ, நகராட்சி மன்றம் தலைவர், டி.எஸ்.பி. துணை ஆய்வாளர் என்று பலரும் ஆலை தொடங்க ஆதரவாக உள்ளனர்.
நாடார் சாதியிலுள்ள ஆளும் வர்க்க கும்பலுக்கும் மறவர் மக்களுக்கும் இடையே முரண்பாடு இருந்து வந்தது. இதே நேரத்தில் வீரன் சுந்தரலிங்கம் பெயர் அழித்ததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்ட மூன்று மறவர் சாதி இளைஞர்களைத் தொடர்ந்து சட்டவிரோத காவலில் வைத்து இருந்தனர். இந்த இளைஞர்களை விடுதலைச் செய்யக்கோரி 6000க்கும் மேற்பட்ட மறவர் இன மக்கள் ஊர்வலமாக செல்கின்றனர்.
எந்தவித தகராறம் நடக்காமல், பவுடர் ஆலை முன் விரோதம் காரணமாக நாடார் சாதியில் உள்ள ஆளம் கும்பலின் தூண்டுதலால் தடியடி, கண்ணீர் புகை, துப்பாக்கிச் சூடு தொடர்ந்து இடைவெளி இன்றி போலீசாரால் நடத்தப்படுகிறது. அதே இடத்தில் மூன்று பேர் இறந்தனர். பலர் படு காயங்கள் அடைகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு காரணங்கள் நாடார் சாதி முதலாளிகளின் தூண்டுதலும், தங்களின் பேச்சைக் கேட்காமல் திரண்ட மக்கள் மீது இயல்பாக காவல் துறை அதிகாரிகளுக்கு உள்ள ஆத்திரமும் வெறியுமே ஆகும். அதிகார வர்க்கத்தின் இந்த திட்டமிட்ட பாசிச செயல் சாதி மோதல்களை வளர்த்து பெரியதாக்கியது.
வள்ளியூர் அம்பேத்கர் சிலை உடைப்பைக் கண்டித்து மதுரை சுப்பிரமணியபுரம் தலித் மக்கள் கடையடைப்பு நடத்தினர். இதை தேவர் சாதி ஆதிக்க வெறியர்கள் திரளாக வந்து எதிர்த்தனர். இதை உளவுத்துறை டி.எஸ்.பி. வாசு கணபதி (சங்கராச்சாரியை புகழும் இந்து மத வெறியர் இவர் ) யிடம் தலித் (அருந்ததியர்) சமூகத்தினர் முறையிட்டனர்.
இதை அலட்சியம் செய்ததோடு அல்லாமல், தலித் மக்களை டி.எஸ்.பி. வாசு கணபதி மிரட்டி விரட்டியுள்ளார். அன்று மாலை போலிஸ் படை சுப்பிரமணியுபரத்தைத் தாக்கி தீவைத்து உள்ளது. தேவர் சாதி ஆதிக்க வெறியர்கள் இணைந்து தலித் மக்களைத் தாக்கினர். இதைக் கண்டித்து மேலவாசல் தலித் மக்கள் மறியல் செய்தனர்.
உடனே கண்மூடித்தனமாக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 10 ஆவது படிக்கும் தலித் மாணவர் நெற்றியில் குண்டடிப்பட்டு இறந்தார். காட்டுமிராண்டித்தனமாக தலித் மக்களின் உடமைகளையும், வீடுகளையும் சேதப்படுத்தி உள்ளனர். பொய் வழக்கு போட்ட 15 துப்பரவுத் தொழிலாளர்கள் வெஞ்சிறையில் அதிகாரிகள் தள்ளி உள்ளனர். இதற்கு எதிராக துப்புரவு தொழிலாளர் கிளர்ந்து எழுந்து போராடி வெற்றி பெற்று உள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடுகள் அனைத்தும் மக்கள் எழுச்சியை ஒடுக்க காவல்துறை அதிகாரிகள் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட பாசிச வன்முறையே என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அரச எந்திரம் ஆதிக்க சாதி வெறியோடு உள்ளதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகப் பார்த்து தலித் மக்களை ஒடுக்கியதே பிரச்சனை அதிகமானதற்கு காரணம் ஆகும். மோதல்களில் பதிவான வழக்குகளை’ காட்டி பயமுறுத்தி மிரட்டி இன்று தேவர், தலித் மக்களிடம் பணம் பறிக்கும் கொள்ளைக்கார கும்பலாகச் காவல்துறை வளர்த்துள்ளது. (நக்கீரன் இதழில் வந்த செய்தி) இதனால் இப்பிரச்சினை இம்மக்களுக்கும் அரசுக்கும் இடையில் மோதலாக உருவெடுத்து சாதி மோதல்களை மேலும் சிக்கலாக்குகிறது.
ஜாங்கிட், விஜயகுமார், வாசுகணபதி, ராஜகோபால், மருதையா, திரிபாதி போன்றவர்களும் பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், ரெவின்யூ அதிகாரிகளும் மேல்தட்டு ஆதிக்க சாதியிலுள்ள ஆளும் வர்க்கத்திலிருந்து உருவாகி உள்ளனர்.
தலித் மக்கள் எழுச்சியை மேல் சாதி ஆதிக்க வெறியுடன், பாசிச அதிகார வெறியுடன் முரண்பாடாகப் பார்த்து ஒடுக்க முயலுகின்றனர். தலித் மக்கள் மட்டுமல்ல எந்த மக்களின் உரிமைகளுக்காக அணி திரண்டாலும் அவை அரசுக்கு விடப்பட்ட சவாலாக நினைத்து கொடூர பாசிச ஒடுக்குமுறையை மேற்கொள்கின்றனர். திட்டமிட்டு துப்பாக்கிச் சூடுகள் நடத்தி படுகொலைகள் புரிகின்றனர்.
“மக்களுக்குப் பாடம் புகட்ட, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, அமைதியை பாதுகாக்க மக்கள்” திரள் மீது மிருகத்தனமான தாக்குதல்களைத் தொடுகின்றனர். இந்து மத பாசிச பயங்கரவாதம் பெருகி வரும் அரசியல் சூழலில் இந்த அதிகார வர்க்கத்தின் கொண்டாட்டம் மேலும் அதிகரித்துள்ளன.
இந்த அதிகாரிகள், ஆட்சியாளர்களும் இயல்பாகவே உள்ளுர் ஆதிக்க சாதி ஆளும் வர்க்கத்தினருடன் கைகோத்து கொள்கின்றனர். தலித் மக்களும் உழைக்கும் மக்களும், தமது பிரதான எதிரி அரசுதான் என்பதை உணர வேண்டும். இவர்களுக்கு எதிரான போராட்டம் திசை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒட்டு பொறுக்கிகளும் கருணாநிதியின் காட்டாட்சியும்
“தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்ணும் போனால் சரி என்ற முதுமொழியை போல ஒட்டுப் பொறுக்கிக் கட்சிகளும், ஆதிக்க சாதி வெறியர்களும் பத்திரிக்கைளும் ஒரே ஒரு தலித் தலைவர் பெயரைக் கூட வைக்கக் கூடாது என்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றன.
மனுஸ்மிருதி குல கல்வியை உயர்த்திப் பிடித்த ராஜாஜி போன்றவன் பெயரை வைக்கும் பொழுதெல்லாம் வாயைப் பொத்திக் கிடந்த இவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பெயரைச் சூட்டும் பொழுது மட்டும் வாய் கிழிய சாதி தலைவன் பெயரை வைக்கக் கூடாது என்று கூச்சல் போடுகின்றனர். கம்ப்யூட்டர் யுகத்தில் வாழும் இந்த பார்ப்பனிய பதர்களை எதைக் கொண்டு அடிப்பது.
ஜெயலலிதா பேயாட்சியில் கொடியங்குளம் தாக்குதலைக் கண்டித்து தலித் மக்கள் எழுச்சி கொண்டு போராடிய போது, அவர்கள் மீது கருப்பு சட்டங்கள் பாயவில்லை ‘சூத்திரன்’ கருணாநிதியின் ஆட்சியில் தலித் போராளிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் (NSA)குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்துள்ளன.
மேலவளவில் ஆறு தலித் மக்கள் ஆதிக்க சாதி வெறியர்களால் பேடித்தனமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து முழு அடைப்பு நடத்த தலித் அமைப்புகள் முயன்றன. கருணாநிதி அரசும், நாளேடுகளும் ஒட்டுக் கட்சிகளும் இதை ஒடுக்க முயன்றதால் எழுந்த தலித் மக்களின் கோபத்தால் சில பஸ்கள் எரிந்தன.
உடனே “அய்யோ குய்யோ” என்ற மூப்பனாரும், சோவும், சுப்பிரமணிய சாமியும் பத்திரிகைகளும் அலற, கருணாநிதி தன் பாசிச இரும்பு கரத்தை நீட்டினார். 150ககும் மேற்பட்ட தலித் செயல்வீரர்கள் ( மூர்த்தியார் தலைமையிலான APLF, ஆதி அருந்ததியர் பேரவை, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு, திருமாவளவன் தலைமையிலான DPI ) போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தேச விரோதிகளாக, குண்டர்களாக ஓராண்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சென்னை - செங்கையில் மட்டும் 8 தலித் பெண்களை குண்டர் சட்டத்தில் போட்டுள்ளது.
ராஜீவ் காந்தி செத்தபோது 1000 கணக்கில் பேருந்துகளை கதர் சட்டை ரவுடிகள் எரித்தனரே அவர்கள் மீது கறுப்புச் சட்டம் பாய்ந்ததா? பாபர் மசூதியை இடித்த பிறகும், மண்டல் அறிக்கைக்குப் பிறகும் நாடெங்கும் பேயாட்டம் போட்டு எண்ணற்ற பேருந்துகளை தீக்கிரையாக்கி, கடைகளை நொறுக்கிய பி.ஜே.பி. பாசிஸ்டுகள் மீது தேச விரோத சட்டம் பாய்ந்ததா? கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்ட போது, கைது செய்யப்பட்ட போது பஸ்கள் புஸ்வானம் ஆனதே அப்பொழுது கழக கண்மணிகள் மீது குண்டர்கள் சட்டம் பாய்ந்ததா? ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் எழும் பொழுது மட்டும் தேச விரோதிகளாக, குண்டர்களாக கருணாநிதிக்கும், ஆளும் கும்பலுக்கும் தெரிகின்றனர். ஜெயலலிதா ஆட்சி பேயாட்சி என்றால், கருணாநிதி ஆட்சி கருப்பு சட்டங்களில் காட்டாட்சி தவிர வேறென்ன?
அதிமுக, மதிமுக, ஜனதா தளம் என்று அனைத்து மக்கள் விரோத கட்சிகளும், நாளேடுகளும், இதழ்களும், சோ, சாமி போன்ற அநாமத்துகளும் சாதி கலவரங்களை ஒடுக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர். உடனே கருணாநிதி போலீஸ் படையை ஏவி தலித் மக்களின் எழுச்சியை ஒடுக்குகின்றார். துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலைகள் செய்கின்றார். சபாஷ் என்று மகிழ்ந்து ஒட்டு கட்சிகளும், நாளேடுகளும் படுகொலைகளைக் கண்டிக்காமல் மவுனம் சாதிக்கின்றன. சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டது என்று இவர்கள் அக மகிழ்கின்றனர்.
தீண்டாமை ஒழிப்புச் சட்டம், தாழ்த்தப்பட்டோர் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை சட்டம், நில உச்சவரம்பு சட்டம் என்று சட்டங்கள் போட்டு காகித கட்டுகளாக ஆட்சி மன்றங்களில் தூங்குகின்றன. ஆதிக்கச் சாதி வெறியர்களின், ஆளும் கும்பலின் குப்பைகளையும், மலங்களையும் அகற்றவே இந்த காகிதச் சட்டங்கள் உதவுகின்றன.
மாறாக தீண்டாமைக் குற்றத்தை எதிர்த்தால், சம உரிமை கோரினால் மக்கள் விரோத சாதி வெறியர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராகக் கிளர்ந்து எழுந்தால் சட்டம் - ஒழுங்கு கெட்டு போய்விட்டது என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
சட்டத்தில் காலில் போட்டு மிதிக்கும் ஆதிக்கச் சாதி ஆளும் வர்க்கத்தினர் மீது இந்த சட்டம் பாயவில்லை. அப்பொழுதெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று முணுக் கூட வில்லையே இந்த சட்டம் ஒழுங்கு பாதுகாவலர்கள்! இது எதைக் காட்டுகிறது? ஆட்சியாளர்களும், ஒட்டு கட்சிகளும், ஆதிக்கச் சாதி வெறியர்களும் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்தவர்கள் என்பதே அம்மணமான உண்மை என்பதை தவிர வேறு என்ன?
தினமலர், தினமணி, தினகரன் தினத்தந்தி மாலைமுரசு, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து, ஜூனியர் விகடன், கல்கி, குங்குமம் உள்ளிட்ட அனைத்து அச்சு ஊடகங்களும், தனியார் அரசு தொலைக்காட்சிகளும் தலித் மக்கள் சம உரிமைக்காகப் போராடுவதைச் சகிக்க முடியாமல் உள்ளன. இந்து ஆங்கில நாளேடு ஆயுதக் கும்பல்களின் கருணையில் ஒட்டப்பிடாரம் (12.5.97) என்று தலித் மக்கள் உரிமைகளாக வீரமாகப் போராடுவதை கொச்சைப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட தலித் கிராமங்களில் உளவுத்துறை காவலர்கள் நுழைய முடியாததை (எவ்வளவு) நல்ல விசயம் எரிச்சலுடன் இந்த நாளேடு விவரிக்கிறது. ஒட்டு பொறுக்கி ஒட்டு கட்சிகளும் (தி.மு.க அ.தி.மு.க காங்கிரஸ்) முழு அடைப்பு நடத்திய பொழுது அதை இவர்கள் எதிர்க்கவில்லை.
தலித் மக்கள் தங்கள் சனநாயக உரிமைகள் கூட அல்ல. தங்கள் அடிப்படையான மனித உரிமைகளும், குடியுரிமைகளும் வன்முறையால் மரணக்குழிக்குள் தள்ளப்படுவதற்கு எதிராக முழு அடைப்பு நடத்தினால் தலித் மக்கள் தீவிரவாதிகளாக, ரவுடிகளாக, வன்முறையாளர்களாக பத்திரிக்கைகள் சித்தரிக்கின்றன.
என்னே இவர்களின் சனநாயகம்? அது மட்டுமல்ல வியாபார கண்ணோட்டத்தில் சம்பவங்களைப் பரபரப்பாகவும், சாதிவெறியை ஊட்டும் விதமாகவும் செய்திகளை திரித்தும் எழுவதால் இன்னும் மோதல்கள் கூர்மைப்படுத்த படுகின்றது.
சங்கராச்சாரி ஜயேந்திரன், சோ,சுப்பிரமணியசுவாமி போன்ற பார்ப்பன பதர்கள் தலித் எழுச்சியை கொச்சைப்படுத்த சாதி கலவரம், வன்முறை, தீவிரவாதம், சட்டம் ஒழுங்கு கொட்டுப் போய்விட்டது என்று வாயில் வந்தபடி கூசாமல் பிதற்றுகின்றனர். இந்த பிதற்றலையும் முதல் பக்கத்தில் நாளேடுகள் வெளியிடுகின்றன.
“சிறு சிறு சச்சரவுகளை மனதில் கொண்டு மிருகமாக மாறி ஒருவரை ஒருவர் வெட்டிக் கொல்லும் செயல்களைக கைவிடவேண்டும்” (தினமணி 05.07.97) என்று ஜயேந்திரன் தலித் மக்களுக்கு உபசேதம் செய்கிறார். உழைக்கும் மக்களின் செங்குதியையும் வேர்வையும் குடித்து கொழுத்த இவன்களுக்கு தலித் மக்கள் மிருகங்களாகக காட்சி அளிக்கின்றனர்.
சிறு சிறு சச்சரவாம் என்ன திமிர்? தீண்டாமையும், சாதி இழிவுகளும், இந்துமத பாரபட்ச கொடுமைகளும் சிறு சிறு சச்சரவாம்! மனிதர்களையும், மிருகங்களையும் வேறுபடுத்து எல்லைக் கோடு திட்டமிட்ட உழைப்பு தான். அந்த உடல் உழைப்பில் ஈடுபடாத மிருகங்களாக, காட்டுமிராண்டிகளாக உள்ள சங்கராச்சாரிகளுக்கு இந்நாட்டின் உண்மையான படைப்பாளிகள் மிருகங்களாக தெரிவதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை ஆளும் வர்க்க கும்பல்களுக்கு மாமா வேலை பார்க்கும் சி.ஐ.ஏ. ஏஜெண்டு சுப்பரிமணி சுவாமி தலித் மக்கள் எழுச்சியைக கண்டு மிரண்டு போய் உள்ளார். இ.க.க. (மா.லெ) மககள் யுத்தக கட்சி நகசல்பாரிகள் தூண்டுகிறார்கள் என்று கூறி இப்போராட்டங்களைக கடுமையாக ஒடுக்க வேண்டும் என்கிறார்.
இப்படி ஒட்டு மொத்தமாக மக்கள் விரோதச் சக்திகள் தலித் எழுச்சியைக் கண்டு மிரண்டு போய் உள்ள இச்சூழலில் வெளிநாட்டு சக்திகளும் இப்போராட்டங்களைத் திசைத் திருப்ப முயலுகின்றன.
தன்னார்வ குழுக்களை புறக்கணியுங்கள்
தலித் எழுச்சிக்கு ஆதரவாக நின்று புரட்சியாளர்களும், சனநாயக சக்திகளும் போராடிக் கொண்டுள்ள இச்சூழலில், காளான்கள் போல தன்னார்வக் குழுக்கள் ஆங்காங்கே முளைத்து மக்களுக்காகப் போராடுவதாகக கூறுகின்றன. இக்குழுக்கள் ஏகாதிபத்தியங்களின், வெளிநாட்டு சகதிகளின் கள்ளக் குழந்தைகளாகும்.
இந்தியா போனற மூன்றாம் உலக நாடுகளில் புரட்சிகள் வெற்றிபெறக் கூடாது. மக்கள் போராட்டங்கள் காயடிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஏகாதிபத்தியங்கள் பணம், பொருளுதவி செய்கின்றன. இவைகளுக்கு முதலில் பலிகடாக்கள் ஆவது அறிவுஜீவிகளும், படித்தவேலையில்லா இளைஞர்கள், பெண்களும் ஆவார்கள்.
தலித் எழுச்சியில் தன்னார்வக் குழுக்களின் அணுகுமுறைகளாக இருப்பவைகள்
1. மக்கள் போராட்டங்கள் எடுத்து இடையில் நிறுத்தி திசைத் திருப்பி காயடிப்பது.(காரணை பஞ்சமி நில மீட்புப் போராட்டம் இதற்கு நல்ல எடுத்துக் காட்டு) 2. உறுதியான வலுவான அமைப்பிற்கு அமாறாக தொள தொளப்பான ஒருங்கிணைப்பை கூட்டமைப்பை உருவாக்குவது.
3. உரிமைகளுக்குப் போராடும் செயல்வீரர்களுக்கு கூலி கொடுத்து அவர்களிடம் குட்டி முதலாளிய சிந்தனையைத் தூண்டி அவர்களின் போராட்ட உணர்வை காயடிப்பது
4. மார்க்சிய தத்துவத்திற்கும், மார்கசிய லெனினிய அமைப்புகளுக்கு எதிரான சிந்தனையை விதைப்பது, மாறாக பின்நவீனத்துவம், நுண் அரசியல் போன்ற கோட்பாடுகளை பரப்பி திசை திருப்புவது.
5. தலித் மக்கள் ஏனைய சாதிகளில் உள்ள உழைக்கும் மக்கள், சனநாயக சக்திகளுடன் இணைந்து போரிடாமல் தடுப்பது.
இப்படியே தன்னார்வ’ குழுக்களின் நயவஞ்சகங்களை விவரித்தால் பக்கங்கள் போதாது. எனவே, தலித் மக்களும், செயல் வீரர்களும், தன்னார்வ குழுக்களிடம், அவைகள் ஊடுருவி செயல்படும் தலித் மற்றும் ஏனைய அமைப்புகளுடன் மிகவும் எச்சரிகையாக இருந்து அவைகளை புறக்கணிக்க வேண்டும்.
தலித் எழுச்சிககு காரணங்கள்.
1. இந்தியாவில் உள்ள அரை நிலவுடைமை - அரை காலனிய சமூகம் இன்று பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. நிலவுடைமை சுரண்டலும், நிலவுடைமை சாதி ஆதிக்கமும் இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும். கூலி உழவர்களாக உள்ள தலித் மக்களுக்கு நிலங்கள பகிர்ந்தளிக்கப்படவில்லை.
இதனால் சமூக பொருளியல் வளர்ச்சிகள் தடைப்பட்டு உள்ளது. இந்த நெருக்கடி புரட்சிகரச் சூழலை நாடு முழுவதும் ஏற்படுதி உள்ளது. இச்சூழலால் மக்கள் ஆங்காங்கே அமைப்பாகவும், தன்னெழுச்சியாகவும் எழுச்சிக் கொண்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். இப்புரட்சிகர நெருக்கடி தலித் மக்களின் எழுச்சிக்கு முக்கிய காரணம் ஆகும்.
2. வளர்ந்து வரும் வீரம் செறிந்த புரட்சிகர, சனநாயக, சக்திகளின் போராட்டங்கள் தலித் மக்களிடம் புதிய நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சி உள்ளது. ஆந்திரா குறிப்பாக தெலுங்கானா, தண்டகாருண்யா, பீகார் பகுதிகளில் நக்சல் பாரிகள் தலைமையில் நீண்ட மக்கள் யுத்த பாதையில் முன்னேறி வரும் வீரம் செறிநத் உழவர்களின் கொரில்லா போராட்டங்களை புத்திய அத்தியாத்தை இந்திய வரலாற்றில் எழுதத் தொடங்கி விட்டன.
இந்த வசந்தத்தின் இடி முழக்கம் தலித் மக்களை வீறுகொண்டுஎழச்செய்துள்ளன. ஆயுதம் தாங்கிய காஷ்மீர், நாகா, அஸ்ஸாம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம் போன்ற தேசிய இனங்களின் போராட்டங்கள் இந்திய இராணுவத்தைத் திணற அடிககின்றன. ஈழ விடுதலைப் போராட்டம் புதிய வீரக் காவியங்களைப் படைக்கின்றது.
இத்துடன் பல்வேறு தலித் மற்றும் அம்பேத்கார் இயக்கங்களின் சட்டத்தை மீறிய போராட்டங்கள், பெண்களின் எழுச்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்ட்ங்கள், சுற்றுப்புறச்சூழலுக்கான இயக்கங்கள் ஆளும் வர்க்கங்களை’ கதிகலங்க வைக்கின்றன. மேற்சொன்ன அனைத்து போராட்டங்களிலும் தலித் மக்கள் பங்கு கொண்டு முன்னணி படைவீரார்களாக செயல்படுகின்றனர்.
3. ராஜீவ், ராவ், கௌடா, குஜரால் அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கை தலித் மககளின் வாழ்வை மேலும் ஆழமான நெருக்கடியில் தள்ளி உள்ளது. “உலக வர்த்த நிறுவனம் (WTO), காட் டங்கல் ஒப்பந்தங்கள், உலக வங்கி, பன்னாட்டு நிதி அமைப்பு (IMF) கடன்கள், உலக மயமாககல் தாராளமயமாக்கல் போன்ற மைய, மாநில அரசுகளின் திட்டங்கள் ஏகாதிபத்திய சுரண்டலைத் விரயமாக்கி உள்ளன.
புது காலனியத்தை நோக்கி நாடு விரைகின்றது. வறுமை, கல்வியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவைகள் பல மடங்காக அதிகரித்து உள்ளன. இவைகளினால் உடனடியாக பாதிக்கப்படுவது அடிப்படை வர்க்கமான தலித் மக்கள்தான் இந்த ஈவிரக்கமற்ற ஏகாதிபத்திய சுரண்டலில் இருந்து மீள தலித் மக்கள் போராட்ட வழிகளை தேடுவது இயல்பான ஓன்றாகும்.
4. தேனாறும் பாலாறும் ஓடும் என்ற சுதந்திர கனவு 50 ஆண்டுகளில் பொய்த்து விட்டது. தீண்டாமை ஒழிப்பு சட்டம், உச்ச வரம்பு சட்டம் போன்ற சட்டங்கள் போட்டு 50 ஆண்டுகளில் முடித்து தலித் மக்களிடம் நிலங்கள் போய் சேரவில்லை. தீண்டாமை ஒழியவில்லை. அம்பேத்காரை வைத்துத் தங்களுக்கு சாதகமான அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி விட்டு ஏமாற்றிய டாட்டா, பிர்லா ஆளும் வர்க்கங்களையும், ஒட்டு கட்சிகளையும் தலித் மக்கள் தங்கள் சொந்த அனுபவங்கள் மூலம் தெளிவாக புரிந்துக் கொள்ளத் தொடங்கி உள்ளனர். தலித் மக்கள் முன்பு பொதுவாக ஆளும் வர்க்கங்களின், தத்துவங்கள், நிறுவனங்கள், அலுவலங்கள், நீதிமன்றங்கள், காவல்துறை போன்ற அனைத்தும் அம்பலப்பட்டு போயுள்ளன. போராட்டங்கள் இல்லாது போகாது துன்பங்கள் என்பதைத் தங்கள் சொந்த அனுபவங்கள் வாயிலாக உணர்ந்து உள்ளனர்.
5. இந்து மதவெறி பாசிசம் வளர்ந்து வருவதால் பார்ப்பனீய தத்துவத்தை மறுவார்ப்பு செய்ய ஆளும் வர்க்கங்கள் முயல்வதுடன், பாசிச ஒடுக்குமுறைகளையும் அதிகரிக்கச் செய்துள்ளன. இது தலித் மக்களை அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
மேற்சொன்னவைகளுடன் தென் மாவட்டங்களில் தலித் எழுச்சிக்கு குறிப்பான சில காரணங்கள் உண்டு.
1. தலித் மக்களில் படித்தவர் தொகை அதிகரித்து உள்ளது. இக்கல்வி அம்மக்களிடம் விழிப்புணர்வை ஒரளவு ஏற்படுத்தி இருக்கிறது. அரசு வேலைவாய்ப்புகள், வெளிநாடுகள் சென்று வேலை செய்தல் மூலம் தலித் மக்களில் சிலரது பொருளாதாரம் ஆதிக்கச் சாதியினர் பொருளாதார கட்டுமானத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியானது தாங்களும் சமமாக, சகமனிதர்களாக நடத்தப்பட வேண்டும் என்ற உரிமை வேட்கையை தலித் மக்களிடம் அதிகரித்துள்ளது.
2. தேவர் சாதியில் புதியதாக வளர்ந்துள்ள ஆதிக்க சக்திகளும், ஆளும் வர்க்க கும்பலும் மீண்டும் சாதிய ஒடுக்குமுறையைத் தங்கள் நலன்களுக்காகத் திணிக்க முயலுகின்றன. கந்துவட்டி, மீட்டர் வட்டி, ரியல் எஸ்டேட், கள்ளச்சாராயம், கஞ்சா, அரசியல் ஆகியவற்றின் மூலம் இச்சாதியில் புதிய பணக்காரர்கள் தோன்றி உள்ளனர். ஜெயலலிதா ஆட்சியில் சசிகலா-நடராச கும்பல் மூலம் இவ்வாதிக்க சக்திகள் அதிகார பலமும், அரசியல் பலமும் பெற்று உள்ளனர்.
இவர்களுக்கு புதிய பொருளாதாரக் கொள்கை பெருமளவு துணை புரிந்துள்ளது. அரசு நிர்வாகம், காவல் துறையில் தேவர் சாதியினர் நுழைய சசிகலா கும்பல் வழி ஏற்படுத்தி கொடுத்தது. இந்த புதிய - பழைய தேவர் சாதியிலுள்ள ஆளும் வர்க்கங்கள் தலித் மக்களின் உரிமைகளை எரிச்சலுடன் பார்த்து ஒடுக்கி விட துடிக்கின்றனர்.
3.தேவர் சாதி பெருமையை, பழக்க வழக்கங்களை வீரத்தைப் புகழ்ந்து சினிமாக்கள் கடந்த பல ஆண்டுகளாக வெளிவந்து அம்மக்களிடம் பிற்போக்கு சாதிய மனப்பான்மையை ஆழமாக விதைத்துள்ளன. பாரதிராஜா, கார்த்திக், சிவாஜி இன்னும் பல சினிமா இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் தேவர் சாதி வெறியை வளர்க்கும் விதமாக திரைப்படங்களை எடுத்து அம்மக்களிடம் பார்ப்பனிய, சாதி பெருமை வளர்ந்து விட்டனர். இது தலித் மக்களிடம் ஒடுக்குவதற்கான பிற்போக்கு சிந்தனையை தேவர் சாதியினரிடம் ஏற்படுத்தி உள்ளன.
இத்தகைய காரணங்கள் அனைத்தும் இணைந்துதான் இன்று தென் மாவட்டங்களில் தலித் மக்களிடம் எழுச்சிகர சிந்தனையையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
சனநாயக வாதிகளே தலித் தோழர்களே உழைக்கும் மக்களே
மேலே விவரித்தவாறு தலித் மக்கள் இடையே எழுந்துள்ள எழுச்சியையும், அதனை நசுக்கிட முயலும் அரசினுடைய, ஆதிக்கச் சாதி வெறியர்களையும் இனங்கண்டு அவர்களுக்கு எதிரானப் போராட்டத்தை நாம் அனைவரும் இணைந்து தீவிரப்படுத்த வேண்டும். இச்சாதிய ஒடுக்குமுறைகளை முற்றாக துடைத்தெறிய வேண்டுமெனில் சாதியத்தை ஒழித்தால்தான் முடியும்.சாதியத்தை ஒழிக்க வேண்டுமெனில் அதன்வேராக உள்ள நிலவுடைமையையும் இதனுடன் கைகோர்த்து கொண்டுள்ள ஏகாதிபத்தியத்தையும் ஒழிக்க வேண்டும்.
ஆனால் முன்னர் விவரித்தபடி இந்துமத பாசிச சக்திகளின் வளர்ச்சியானது சாதிய ஒடுக்குமுறைகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. இத்துடன் வளரும் புதுக் காலனிய சுரண்டல் தலித் மக்கள் மீது சொல்லொண்ணாத் துயரத்தைச் சுமத்துகின்றனது. எனவே நிலவுடைமை ஏகாதிபத்தியத்திற்கு எதிரானப் போராட்டத்தை தீவிரப்படுத்துவதுதான் சாதியத்தை முற்றாகத் துடைத்து எறிவதற்கான ஒரே வழியாகும்.
நிலவுடைமை பொருளியல் ஆதிக்கத்தில் இருந்து தலித் மக்களில் வெகு சிலர் விடுபடுவதே தலித் மக்களிடம் மேற்கண்டவாறு எழுச்சியை உண்டாகுமெனில், தலித் மக்கள் பெரும்பாலானோர் நிலவுடைமை பொருளியலில் இருந்த முழு விடுதலை அடைந்தால் மாபெரும் பேரெழுச்சியை உருவாக்கும் என்பது திண்ணம். இதற்கு கூலி உழவர்களாக, கைவினைஞர்களாக உள்ள தலித் மக்களுக்கு பண்ணையார்களின் நிலங்களையும் புறம்போக்கு அரச நிலங்களையும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டு. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற நக்சல்பாரி எழுச்சியின் முழக்கத்தைத் தலித் மக்களிடம் வேகமாகக் கொண்டு செல்வதுதான் சாதியத்தின் வேரை அசைத்து பார்ககும்.
இவற்றை நடைமுறைப்படுத்த நிலவுடமை - ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கும் ஒட்டு கட்சிகளாலும், போல் கம்யுனிஸ்டுகளாலும், சமரச - சீர்திருத்த சாதி தலைவர்களாலும் முடியாது என்பதை தலித் மக்கள் தங்கள் சொந்த அனுபவங்கள் மூலம் தெளிவாக உணர்ந்து வருகின்றனர். அனைத்து உழைக்கும் மக்களும் இதை உணர்ந்துள்ளனர். கடந்த தேர்தலில் தமிழக மக்கள் ஒட்டு கட்சிகளுக்கும், சாதி தலைவர்களுக்கும் காட்டிய வீரஞ்செறிந்த எதிர்ப்புகள் இதைத்தான் நமக்கு உணர வைக்கின்றது.
ஆனால் இந்த எதிர்ப்பை மழுங்கடிக்கும் விதத்தில் ஒட்டு கட்சிகளும், ஆளும்வர்க்கமும், அதிகார வர்க்கமும் சாதிய தலைவர்களும் திசைத் திருப்ப முயல்வர். குறிப்பாக, முன்னேறிய, இடைநிலை சாதிகளில் உள்ள ஆதிக்க சக்திகளும், ஆளும் கும்பலும் தங்களின் சுரண்டலைத் தக்க வைக்கவும், நிலவுடைமை சாதிய ஒடுக்குமுறையை நிலை நிறுத்தவும் தங்கள் சாதியில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு சாதிய பெருமையை, சாதி மனப்பான்மையை ஏற்படுத்தி சாதி வெறியைத் தூண்டி விடுகின்றனர்.
எனவே இச்சாதிகளின் (தென்மாவட்டங்களில் தேவர் சாதியில்) உள்ள உழைக்கும் மக்களும் சனநாயக் சக்திகளும் இச்சாதி வெறிக்கு பலியாகக் கூடாது. சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தலித் மக்களின் போராட்டங்களை ஏனைய சாதிகளிலுள்ள உழைக்கும் மககள் அங்கீகரித்து, அவர்களுடன் இணைந்து சாதி வெறியர்களுக்கு எதிராகப் போரடவேண்டும்.
ஆதிக்கச் சாதி சங்கங்களில் இருந்து உழைக்கும் மக்கள் வெளியேற வேண்டும். அனைத்து சாதிகளிலுள்ள உழைக்கும் மக்களும் இணைந்து நிலவுடைமை - ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஐக்கிய முன்னணியை அமைத்து போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.
தலித் மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் உண்மையான விடுதலைச் சுதந்திரம் என்பது நிலவுடைமை ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் புதிய சனநாயகப் புரட்சியில்தான் உள்ளது. இத்தகைய புரட்சியை ஆந்திரா, தண்டகாருண்யா, பீகார் மாநிலங்களில் உள்ள மக்கள் வேகமாக முன்கொண்டு செல்கின்றனர்.
அங்கு தலித் மக்களும், ஏனைய சாதியிலுள்ள உழைக்கும் மக்களும் நக்சல்பாரிகள் தலைமையில் ஒன்றிணைந்து நிலவுடைமை சாதி ஒடுககுமுறைககும், சுரண்டலுக்கும், ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக வீரஞ்செறிந்த வரலாற்று காவியங்களைப் படைத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள தலித் மக்களும், உழைக்கும் மக்களும், சனநாயக, சக்திகளும் இந்த நக்சல்பாரி பாதையில் இணைந்து கொண்டு புதிய சனநாயக புரட்சிக்கான போராட்டங்களை தீவிரப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் தீண்டாமையையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் வீழ்த்தி, சாதிய ஒழிப்பை விரைவுப்படுத்த முடியும்.
(1997யில் எழுதப்பட்ட கட்டுரை)
- கி.நடராசன்