கீற்றில் தேட...

அக்டோபர் 30, 2015 அன்று நள்ளிரவில் ஒரு பாடகரும், கவிஞருமான திரு கோவன் அவர்களை திருச்சியில் அவரது வீட்டிலிருந்து தமிழ்நாடு காவல் துறை கைது செய்தது. அவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (பல்வேறு சமூகங்களிடையே பகைமையை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல்) மற்றும் 505/1 (குற்றவியலான அச்சுறுத்தல், மனதைப் புண்படுத்துதல்) ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.

தேச துரோக சட்டத்தில் இந்த கலைஞர் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதற்கு இவர் செய்து குற்றம் என்ன? அதிகாரிகள், தமிழக முதல்வர் செயலலிதாவை அவமதிக்கும் வகையில் கருத்தைக் கூறியதாகவும், பொது அமைதியைக் கெடுத்ததாகவும் அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த கோவன், கைது செய்யப்படுவதற்கு முன்னால், டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என்றும், இது பற்றிய அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்தும் இருக்கிறார்.

கோவன் தேச துரோக குற்றச் சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதும், அதன் காரணமாக நீதி மன்றம் அவருக்குப் பிணையை மறுத்திருப்பதும், இந்திய அரசின் தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அரசின் கொள்கைகளைப் பற்றி யாரும் கேள்வி கேட்பதையும், மன சாட்சிக்கான உரிமையையும் மறுப்பதற்காக மிகவும் காட்டுமிராண்டித் தனமான சட்டங்களை வைத்துக் கொண்டிருக்கிறது. காலனிய ஆட்சியை எதிர்க்கும் புரட்சியாளர்களைக் கொடுமைப்படுத்தவும், வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கவும், அல்லது தூக்கிலிடவும் இந்த தேச துரோகச் சட்டத்தை ஆங்கிலேய காலனியர்கள் கொண்டு வந்தனர்.

1947 ஆகஸ்டில் ஆட்சிக்கு வந்தவர்கள், இந்த தேச துரோகச் சட்டத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டது மட்டுமின்றி, அதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்வி கேட்கும் எவரையும் துன்புறுத்துவதற்கு இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். 1947-லிருந்து இப்படி நடைபெற்ற எண்ணெற்றவைகளில், கோவனுடைய வழக்கு சமீபத்தியதாகும்.

ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தின் கொள்கைகளை மட்டுமின்றி, அரசைப் பற்றியே கேள்வி கேட்பது மக்களுடைய உரிமையாகும்.

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், போக்குவரத்து சேவைகள், சுகாதாரம் மற்ற மக்கள் நலச் சேவைகள் ஆகிய அத்தியாவசிய தேவைகளை நடத்த அரசாங்கங்கள் மறுப்பதோடு, உதவியற்ற மக்களைக் கொள்ளையடிக்க இந்த முக்கிய சேவைகளைத் தனிப்பட்ட பிணந்தின்னிக் கழுகுகளிடம் வழங்கி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட மக்கள் விரோதக் கொள்கைகளை தொழிலாளி வகுப்பினர், உழைக்கும் மக்கள் மற்றும் முற்போக்கான சிந்தனையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தியப் பெருமுதலாளி வகுப்பினருடைய சுயநலத்திற்கு சேவை செய்வதற்காக மத்தியிலும் மாநிலங்களிலும் அரசாங்கங்கள் கடைபிடித்துவரும் தொழிலாளர் விரோத, உழவர் விரோத மற்றும் சமூக விரோத தனியார்மய, தாராளமயத் திட்டத்தை எதிர்த்து தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் போராடி வருகின்றனர்.

மக்களை ஓரங்கட்டியும், ஆளும் வகுப்பினருடைய மேலாண்மைக் குழுக்களாக அரசாங்கத்தை நடத்துவதற்கு முதலாளி வகுப்பினருடைய நம்பிக்கைக்குரிய கட்சிகள்  அதிகாரத்திற்கு வருவதையும் உறுதி செய்யும் இந்த பல கட்சி சனநாயகத்தைப் பற்றி மக்கள் அதிக அளவில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தன்னை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாமல், உலகத்திலேயே மிகப் பெரிய சனநாயகம் தானென கூறிக்கொள்ளும் அதே நேரத்தில், எல்லா எதிர்ப்பையும் நசுக்குவதற்கு இந்திய அரசு அதிக அளவில் பாசிசத்தைப் பயன்படுத்தி வருகிறது.

பாடகர் கோவன் கைது செய்யப்பட்டிருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி கண்டிப்பதோடு, அவரை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டுமென கோருகிறது.