police attack on dyfi

பணத் தட்டுப்பாட்டைக் கண்டித்து சென்னை பள்ளிக்கரணையில் 31/12/2016 அன்று போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது கொலைவெறித் தாக்குதலை தமிழக போலீசார் நிகழ்த்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்தோழர்களிடம் பள்ளிக்கரணை ஆய்வாளர் நடராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் ரவி போன்றவர்கள் மிக வக்கிரமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். பெண்தோழர்களை ‘தேவடியா’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, 'இந்த உலகில் மிக கேவலமான இழிபிறவிகள் யார் என்றால் எங்களைப் போன்று அதிகார வர்க்கத்தின் காலை நக்கியே உயிர்வாழப் பழகிய அயோக்கியர்கள் தான்' என்பதை நிரூபித்துள்ளனர். குண்டாந்தடிகளாலும், பூட்ஸ் கால்களாலும் இன்னும் கையில் கிடைத்த அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி போராடியவர்களின் உடலை அடித்துக் கிழித்திருக்கின்றார்கள். 16 தையல்கள் போடும் அளவிற்கு மண்டையை உடைத்து இருக்கின்றார்கள். 14 தோழர்கள் மீது பொய்வழக்குப் போட்டு புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இப்போது நமக்குள் எழும் கேள்வி, எப்படி இவ்வளவு மோசமான தாக்குதலை தமிழக அரசுக்குத் தெரியாமல் நடத்த முடியும் என்பதுதான். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த தலைவர்கள் குற்றச்சாட்டை மத்திய அரசின் மீதும், காவல்துறைனர் மீதும் மட்டுமே சுமத்துகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ கண்ணகிநகர், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி காவல் நிலையங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் லாக்அப் மரணம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி தலையிடுவதை வன்மமாகக் கொண்டு இந்தத் தாக்குதலை காவல்துறை நடத்தியதாகத் தெரிகின்றது என்று சொல்லி மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மென்மையாக கோரிக்கை வைக்கின்றது

இது ஒரு காரணமாக இருந்தாலும் நிச்சயம் காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலுக்கு இதுமட்டுமே காரணமாக இருந்திருக்க முடியாது. இந்தத் தாக்குதல் தமிழக அரசால் திட்டுமிட்டு நடத்தப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கத்திற்கு எதிராக தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளும் போராடி இருக்கும்போது ஏன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது மட்டும் இவ்வளவு மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது?. 25/12/2016 அன்று நாகையில் ஜி.ராமகிருஷ்ணன் அளித்த பேட்டிதான் உண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உண்மையான காரணம். அந்தப் பேட்டியில் “டெல்லிக்கு சென்று பிரதமரைச் சந்தித்த முதலமைச்சர் பன்னீர்செல்வம் வறட்சி பாதிப்பு குறித்தோ, விவசாயிகளின் தற்கொலை குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.பிரதமரிடம் கொடுத்த மனுவிலும் தெரிவிக்கவில்லை. அமைச்சர்களும் தமிழக விவசாயிகளின் மரணம் குறித்து வாய்திறக்கவில்லை. அமைச்சர்கள் தங்கள் பதவியைப் பாதுகாத்துக் கொள்ளவும், புதிதாக பதவிகளைப் பெறவும்தான் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர். விவசாயிகளைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ அவர்கள் கவலைப்படவில்லை. ஊழல்செய்த அனைவரின் மீதும் வருமான வரித்துறையினர் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் கிடையாது. அவர்கள் சசிகலாவின் வீட்டுக்குச் சென்று, அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராக வேண்டி, கெஞ்சியது கண்டிக்கத்தக்கது” என்று கூறியிருந்தார். இந்தப் பேட்டி கொடுத்து ஐந்து நாட்கள் கழித்து தான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது இந்தத் கொலை வெறி தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்றது.

சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்ததை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனமுவந்து ஏற்றுக்கொண்டது. அந்தக் கட்சியில் உள்ள ‘முக்குலத்தோர் முன்னேற்றப் பேரவை’ தலைவர் தா. பாண்டியன் சசிகலாவை (முக்குலத்தோர்) சந்தித்து, தோளிலே போட்டிருந்த சிவப்புத்துண்டை கையிலே பிடித்துக்கொண்டு ஒரு அடிமையைப் போல குழைந்ததும், “சசிகலாவிற்கு மக்கள் சக்தி ஆதரவு இருக்கின்றது” என தன்னுடைய மார்க்சிய மெய்ஞானத்தை அம்மணமாக்கிக் காட்டியதும் நமக்கு ஏற்கெனவே தெரியும். தா.பாவின் இந்தக் கண்டுபிடிப்பை அவரைப் போலவே அறிவிலும், அரசியல் முதிர்ச்சியிலும் சிறந்தவரான முத்தரசனும் ஒத்துக் கொண்டார். ஆனால் சிபிஎம் ஏனோ இதை ஒத்துக்கொள்ளவில்லை. ஆரம்பத்தில் இருந்தே சசிகலா, அதிமுகவின் அதிகார மையமாக மாறுவதை ஏற்றுக் கொள்ளாமல் முரண்டு பிடித்துக் கொண்டு இருந்தார்கள். அதன் உச்சகட்டமாக பொங்கிய ஜி.ராமகிஷ்ணன், ஒ.பன்னீர்செல்வத்தையும், மற்ற அமைச்சர்களையும், ஏன் சசிகலாவையும் விட்டுவைக்கமால் வறுத்தெடுக்க, வந்ததுதான் இந்த விபரீதம்.

police attack on dyfi 1

ஆனால் ராமகிருஷ்ணன் இந்தத் தாக்குதலுக்கு நேரடியாக தமிழக அரசின் மீது குற்றம் சாட்டாமல் நைசாக நழுவிக் கொள்வதைப் பார்த்தால் உண்மையில் ராமகிருஷ்ணன் தெரிந்து பேசினாரா, இல்லை தன்னுடைய பழைய கற்கால கம்யூனிச ஞாபகத்தில் தெரியாமல் வாய் தவறிப் பேசிவிட்டாரா என்று சந்தேகம் வருகின்றது. உண்மையில் இந்தப் பேட்டிதான் அனைத்திற்கும் காரணமாக இருந்திருக்கின்றது. ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன் போன்று சின்னம்மா துதியை ஹெவியாக இல்லை என்றாலும், கொஞ்சம் லைட்டாகவாவது பாடியிருந்தால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது. அந்த வகையில் அவர் அம்மணமாக இல்லாமல், கோவணத்துடனாவது இருந்ததற்கு நாம் பாராட்டலாம். ஆனால் இவ்வளவு மோசமான தாக்குதலை ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு கட்டவிழ்த்துவிட்டும் நேரடியாக இது சசிகலாவும், ஒ.பன்னீர்செல்வமும் சேர்ந்து செய்த திட்டமிட்ட சதி என்று குற்றம் சாட்ட அவரால் முடியவில்லை. இன்னும் துண்டு போட்டுவைக்கும் மனநிலையில்தான் அவர் இருக்கின்றார் என்று தெரிகின்றது. தன்னுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு போர்க்குணத்துடன் போராடி, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் சித்தரவதையை அனுபவித்த தோழர்களிடம் கொஞ்சமாவது உண்மையாக நடந்துகொள்ள அவர் முயற்சிக்க வேண்டும்.

இனி தமிழ்நாட்டில் சசிகலாவுக்கு எதிராகவோ, இல்லை பன்னீர்செல்வத்துக்கு எதிராகவோ, இல்லை அதிமுகவைச் சேர்ந்த எந்த அடிமைகளுக்கு எதிராகவோ கருத்து தெரிவிப்பவர்களுக்கு இது போன்ற நிலைமைதான் ஏற்படும் என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதிகார வர்க்கத்திடம் தங்களை காப்பாற்றிக்கொள்ள மிகப்பெரிய கூலிப்படை இருக்கின்றது. அந்தக் கூலிப்படை, காசு கொடுத்தால் தன்னுடைய சொந்த சகோதரிகள் மீதே பாலியல் வன்முறையை அரங்கேற்றத் தயங்காதது. இந்த உலகில் உள்ள எல்லாவிதமான கேடுகெட்ட, அயோக்கியத்தனமான, அருவருக்கத்தக்க, வக்கிரமான குணங்களையும் தன்னகத்தே கொண்ட அமைப்பு அது. அந்த அமைப்பு தற்போது சசிகலா மற்றும் ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான கொள்ளைக்கூட்டத்தின் கைவசம் உள்ளது. எனவே இனி தமிழ்நாட்டில் இந்தக் கொள்ளைக்கூட்டத்திற்கு எதிராக கருத்து சொல்லும் அனைவருக்கும் இந்த நிலைமை வரும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

இந்தியா ஜனநாயக நாடு என்றும், இங்கே பாராளுமன்றம், சட்டமன்றம் போன்றவை கோவில்கள் என்றும், பேச்சுரிமை, எழுத்துரிமை, போராடும் உரிமை போன்றவை இங்கே இருக்கின்றது, எனவே புரட்சி எல்லாம் தேவையில்லை, ஆளும்வர்க்கத்துக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களைச் செய்தாலே போதும் என்றும், தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு வகுப்பெடுக்கும் சிபிஎம் தோழர்கள், இந்தச் சம்பவத்தையும் ஏதோ ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட சிறிய சறுக்கல், அதை நாம் சரி செய்து கொள்ளலாம் என்றுதான் மீண்டும் தனது தோழர்களுக்குப் புரிய வைக்க முயற்சிப்பார்கள் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். அப்போதுதான் ஏதாவது ஒரு பெரிய கட்சியிலே தொத்திக்கொண்டு, ஒன்று, இரண்டு சீட்டுகளாவது வாங்கி, ஜனநாயகக் கடமையாற்ற முடியும். அப்படித்தானே தோழர்களே!

- செ.கார்கி

Pin It