பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் முதல் நாளைத் தமிழ்நாடு நாள் என அறிவித்து அரசுவிழா எடுக்கவேண்டும் எனும் தமிழ்நாட்டு மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று 25.10.2019 அன்று அரசாணை வெளியிட்டு, 01.11.2019-இல் தமிழ்நாடு அரசே விழா எடுத்து, தமிழ்நாடு நாளைச் சிறப்பாகக் கொண்டாடியதைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வரவேற்றுப் பாராட்டியது.

ஏனெனில், மொழிவழி மாநிலங்கள் தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிடவும், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் பெற்றிடவும், தங்கள் மாநிலத்தின் சமூகம், பொருளாதாரம், பண்பாடு, கல்வி போன்றவற்றைத் தாங்களே முடிவு செய்து கொள்ளுகிற தன்னாட்சி அதிகாரத்திற்கு தடையாக எதிரான நடப்புகளை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்து மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு வலு சேர்த்திட வும் இதுபோன்ற விழாக்கள் மிகுந்த பயனளிக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அமைப்புகளும் கட்சிகளும் ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளைத் தனித் தனியே கொண்டாடிவந்த நிலையில், இந்த ஆண்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு அளாவிய பெருவிழாவாக எடுக்க முடிவெடுத்து, அந்தத் தகவலை அரசுக்கும் முறையாகத் தெரிவித்ததோடு, நவம்பர் முதல்நாளைப் பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், தமிழ்நாட்டுக்கென ஒரு பொதுக்கொடியை அறிவிக்கவும் கோரிக்கை வைத்திருந்தது.

மாநிலங்கள் தனிக் கொடி வைத்துக் கொள்வதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த இடத்திலும் மறுக்க வில்லை. ஏற்கெனவே பல மாநிலங்கள் தனிக்கொடி வைத்துள்ளன.

எனவே, தமிழ்நாடு அரசே ஒரு கொடி யை அறிவிக்கிற வரை தமிழ்நாட்டின் வரைபடத்தைக் கொண்ட ஒரு கொடியினையும் பெரியாரிய உணர் வாளர் கூட்டமைப்பு முன்மொழிந்ததொடு மட்டுமன்றி, தமிழ்நாடு அரசு இதே கொடியையோ அல்லது எல்லோரும் ஏற்கத் தகுந்த வேறொரு கொடியையோ அதிகாரப்பூர்வ மாக அறிவிப்பின் அதையும் வரவேற்றுப் பின்பற்றுவோம் என்றும் உறுதியளித்திருந்தது.

தமிழ்நாட்டு முதலமைச்சரும் 31.10.2020 அன்று தமிழ்நாடு நாள் வாழ்த்துச்செய்தி வெளியிட்டு நவம்பர் முதல் நாளை எல்லோரும் கொண்டாடச் சொல்லி அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகளைச் செய் திருந்த நிலையில், கொடியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ள தாகத் திடுமெனக்கூறி, 31.10.2020 மாலையிலிருந்தே தமிழ்நாடு முழுவதும் விழா ஒருங்கிணைப்பாளர்களுக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்து, அடக்குமுறை களை ஏவியதமிழ்நாடுகாவல்துறையைப்பெரியாரியஉணர் வாளர்கள் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், காவல்துறைக்குக் கட்டுப்பட்டுப் பொதுவெளியில் கொடியை ஏற்றாத நிலையிலும் சென்னை, மேட வாக்கம் பாவலரேறு தமிழ்க்களத்தில் அத்துமீறிப் புகுந்து பதாகைகைகளையும் கொடிகளையும் பறித்துச்சென்றதுடன், விழா ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், தோழர் தம்பி மண்டேலா; அதேபோல் இனிப்புகளை மட்டுமே வழங்கிய வட சென்னை தோழர்கள் 13 பேர் மற்றும் பட்டாபிராம் பகுதித் தோழர்கள் 6 பேர் என 21 பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்புத் தோழர்களையும், மற்றும் பல்வேறு அமைப்புகளின் தோழர்களையும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடியதற்காகத் தளைப்படுத்தி, கொடும் சட்டப் பிரிவுகளான 124-A, 143, 188, 353, 506 (1) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்துள்ள தமிழ்நாட்டு அரசையும், காவல் துறை யினரையும் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழக அரசே ! தமிழக அரசே !

தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான போக்கைக் கைவிடு !

தோழர் பொழிலன் உள்ளிட்ட எல்லாத் தோழர்களையும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுதலை செய்!

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

 

Pin It