(முந்தைய பகுதி - ரூ.500, 1000 செத்தது ஏன்? மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா! - 3)
அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டிய பின்னர், தனது நாணயமான டாலரை உலக நாணயமாக ஆக்கியது. உலகமயத்தை உலகின் மீது திணித்ததுடன், பெருமளவு உலக எண்ணெய் வளத்தையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால், உலக நாடுகளின் டாலர் தேவை கட்டுக்கடங்காமல் பெருகியது. டாலர் இப்போது அமெரிக்காவின் நாணயமாக மட்டும் இல்லாமல் ஏற்றுமதிப் பண்டமாகவும் ஆனது. உலகம் முழுவதிற்கும் தேவையான டாலரை உற்பத்தி செய்து குவித்தது. தனக்குத் தேவையான பொருட்களை, தனது மண்ணில் உற்பத்தி செய்வதை விட, மிக மலிவான விலையில் ஆசிய நாடுகளில் உற்பத்தி செய்து வாங்கிக் கொண்டது. இதனால் அமெரிக்க மக்கள் தமது வேலைகளை இழந்தனர். அமெரிக்க மக்கள் வெறுமனே நுகர்வோராகவும், சேவையாளராகவும் ஆக்கப்பட்டனர். அமெரிக்காவில் விலைவாசி உயர்ந்ததே தவிர, மக்களின் வருவாய் உயரவில்லை. இதனோடு தனியார்மயத்தின் லாப வெறியினால் விலைவாசி விண்ணை முட்டியது. அமெரிக்க மக்கள் தமது வாங்கும் சக்தியை இழந்தனர். இதனால் அமெரிக்க தேசியப் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. வீழ்ச்சி. அதை தூக்கி நிறுத்த அமெரிக்க மக்களை கடனாளிகளாக ஆக்கினார்கள். வாங்கிய கடனை மக்களால் திருப்பிக்கட்ட முடியாமல் போனதால், அமெரிக்க வங்கிகள் அனைத்தும் திவாலாகின. இதை சமாளிக்க, மேலும் அதிகமாக டாலரை அச்சிட்டது. அச்சிட்ட டாலருக்கு ஏற்ப, உலக எண்ணெய் சந்தை முழுவதையும் கைப்பற்ற முயன்ற அமெரிக்காவின் முயற்சிகள் அனைத்தையும் ரசியா முறியடித்தது.
மூன்றாம் உலகப்போரை தவிர்க்க நினைத்த அமெரிக்கா, தனது தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்க ஏற்றுமதியை இழக்கப்போகும் ஆசிய நாடுகளின் பொருளாதாரங்கள் ஆட்டம் காணப் போகின்றன. இதற்கு முன்பே டாலர் என்ற வெற்றுக் காகிதத்தை, அமெரிக்காவிடம் வாங்கிக்கொண்டு, அதற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பாத சீனா, தனது தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் துவங்கி விட்டது.
இந்தியாவும் தனது திட்டத்தை, அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நவ-8 அன்று அறிவித்துள்ளது.
கருப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது. ஆகவே மக்கள் தமது கைககளில் சேமிப்பாக வைத்துள்ள பணத்தை வங்கிகளில் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. மக்களின் சேமிப்புப் பணம் முழுவதையும் இந்திய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. திட்டமிட்டே பணத்தட்டுப்பாட்டை உருவாக்கி, மின்னணு பண முறைக்கு மாற மக்களை நிர்ப்பந்திக்கிறது. இப்படி செய்வதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் 90 விழுக்காட்டு அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும், முறைப்படுத்தப்படாத தொழில்கள் அனைத்தையும் மக்களிடமிருந்து பிடுங்கி முதலாளிகளுக்கு அளிக்க முயற்சி செய்கிறது.
இந்திய அரசின் இந்தத் திட்டம், அமெரிக்க வருவாய் இழப்பை சந்திக்கப்போகும் முதலாளிகளுக்கு தற்காலிகமான ஆறுதலை மட்டுமே தரும். பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதாரமாக உள்ள முறைப்படுத்தப்படாத தொழில்களை அவர்களிமிருந்து பிடுங்கினால் அது தற்போது இருக்கும் அரைகுறை தேசியப் பொருளாதாரத்தையும் முற்றாக சிதைத்துவிடும். இது தற்கொலைப் பாதையாகும். ஆனால் இதைப் பற்றி இந்திய அரசு சிறிதும் கவலைப்படவில்லை. இதற்கு மாறாக, ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதைப் போன்று, இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் மூலம், எவ்வளவு ஆதாயம் அடைய முடியுமோ, அவ்வளவு ஆதாயம் அடையப் பார்க்கிறது.
அதாவது, உள்நாட்டில் முறைப்படுத்தப்படாத தொழில்களை மக்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்வதுடன், அவர்களிடம் இருந்து சேமிப்பை பறித்துக் கொள்வது! தான் உருவாக்கியுள்ள பணத்தட்டுப்பாட்டால் மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்தது, அதனால் குறையப் போகும் விலைவாசியை காரணம் காட்டி, மக்களிடமிருந்து தான் பிடுங்கி வைத்துள்ள பணத்திற்கான வட்டிவிகிதத்தை குறைக்கத் திட்டமிடுகிறது. அமெரிக்கா இப்போதைய நிலையில் தனது தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தாலும், இந்தியாவிற்கான வாய்ப்பினை நிச்சயம் வழங்கும். சீனாவுடனான, அமெரிக்காவின் முரண்பாடு முற்றி வருவதால், சீனாவிற்கு அது தற்போது வழங்கியுள்ள சந்தை வாய்ப்பை பறித்து தனக்கு வழங்கும். எனவே அதுவரை நம்பிக்கையோடு காத்திருப்பது என்று ஆட்சியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
சீனா தனது தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தி விட்டதால், அதன் பொருட்களின் விலை அதிகரித்து, ஏற்றுமதி சரியும். இது இந்திய ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் என்று இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியுள்ள கருத்து அமெரிக்கா மீதான ஆட்சியாளர்களின் கண்ணோட்டத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
அமெரிக்கா, சீனாவிற்கு வழங்கியுள்ள சந்தை வாய்ப்பை, இனி தான் வகிப்பதற்கு தகுதி உள்ளது என்பதை அமெரிக்க எசமானனுக்கு நிரூபிக்கவுமான வாய்ப்பாகவும், உயர் மதிப்பு நோட்டுக்கள் செல்லாது என்பதை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது அமெரிக்க எசமான் தன்னை ஏற்றுக்கொண்டால், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வேன். எத்தனை கோடி மக்களின் வாழ்வையும் பலி கொடுக்கத் தயங்க மாட்டேன் என்ற தனது விசுவாசத்தை அமெரிக்காவுக்கு மோடி வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் தான் அமெரிக்காவுக்கு தாலி கட்டிய பொண்டாட்டி இல்லை, தாலிப்பிச்சை கேட்டு மாரியாத்தாளிடம் வேண்டிக்கொள்வதற்கு!
அமெரிக்காவிடம் மட்டுமல்ல உலக மேலாதிக்கத்திற்காக போட்டியிடும் சீன அணியையும் ஆட்சியாளர்கள் விட்டுவிடவில்லை. இரு அணியினருக்கும், இந்தியாவின் இயற்கை வளத்தையும், மனித ஆற்றலையும் சுரண்ட பேரம் பேசியே வருகின்றனர்.
நமது உள்ளூர் மொழியில் சொன்னால் மாமா வேலை செய்வதில் வல்லவரான திருவாளர் மோடி அவர்கள், இவ்வுலகில் யார் வல்லவர்களோ, அவர்கள் அனைவரிடமும் இடைவிடாது பறந்து சென்று பேரம் பேசி வருகிறார்.
ரசியாவிடம் ராணுவத்தளவாடம் மற்றும் அணு உலை, ஜப்பானிடம் புல்லட் ரயில், அணு உலை, சீனாவிடம் அதிவேக ரயில் ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளார். இதன் மூலம் உலகின் எந்த எஜமானனிடமும் பேரம் பேசி ஒப்பந்தம் செய்து முடிக்கும், சிறந்த தரகன் என்பதையும், இந்திய முதலாளிகளின் சிறந்த தளபதி என்பதைம் மோடி நிரூபித்துள்ளார்.
அமெரிக்காவினால் ஏற்படப் போகும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், தனது எஜமான விசவாசத்தை நிரூபிக்கவும், பெரும்பான்மை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, நாட்டு மக்களை பலிகொடுக்கத் தயங்க மாட்டோம் என்பதை நிரூபித்து வருகின்றனர் இந்திய ஆட்சியாளர்கள்.
பலியாகப் போகும் ஆட்டுக்கு மாலை போடுவதைப் போன்று, மோடி நமக்கு தேசபக்தி மாலையை மாட்டுகிறார். மாலை மாட்டும் தனது நடவடிக்கைக்கு ஒத்துழைக்கும் நம்மைக் கண்டு பெருமிதம் அடைவதாக புகழாரமும் சூட்டுகிறார். அதாவது வெட்டுப்படப் போகும் ஆட்டுக்கு தண்ணீர் தெளிக்கும் போது அது தலையாட்டுவதைப் போன்று, நாமும் தலையாட்டி சம்மதிப்பதாகக் கூறுகிறார்.
பூசாரி மோடி ஆடுகளான நம்மை வெட்டத் தயாராகி விட்டார். வெட்டுப்பட நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம்?
(தொடரும்)
- சூறாவளி