இந்தியப் பொருளாதார சூழல் தற்போது எப்படி இருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பல முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றன. நுகர்வு குறைந்துள்ளது. உற்பத்தி அதள பாதாளத்தில். தனியார் முதலீடு முற்றிலும் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் பொருளாதாரத்தை மீட்க பல சலுகைகளை, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், அடிப்படையில் ஒரு விஷயத்தை அரசு நினைவில்கொள்ள மறுக்கிறதோ என்று தோன்றுகிறது.

indian economy 400ஜார்கண்டில் 40 வயதான விவசாயி ஒருவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை நம்பி தன்னுடைய விவசாய நிலத்தில் கிணறு வெட்டினார். இப்போது கிணறு இருக்கிறது. ஆனால், அவர் உயிரோடு இல்லை. வெட்டிய கிணற்றிலேயே குதித்து தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டார். அவருடைய தற்கொலைக்குக் காரணம், அரசு தர வேண்டிய மானியத்தை தராததுதான். இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் நிலையும் கிட்டதட்ட இதுதான்.

ஒரு தனிநபருக்கு அரசு சரியான நேரத்தில் கொடுக்க வேண்டிய உதவியை, நிதியைத் தராமல் போனதால் எப்படி அந்தக் குடும்பமே வாழ்க்கையை இழந்து நிற்கிறதோ, அத்தகைய நிலையில்தான் இன்றைய பொருளாதாரமும் இருக்கிறது. அதற்கு காரணமாக அரசே இருக் கிறது என்பதுதான் வேதனை தரும் விஷயமாக இருக்கிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங் களுக்கு அரசு தரப்பிலிருந்து செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகள் சில லட்சம் கோடிகள் உள்ளன.

குறிப்பாக பொதுத் துறை நிறுவனங்களின் நிலை இன்று மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பொதுத் துறை நிறுவனங்கள்தானே என்று அவற்றிட மிருந்து பெறும் சேவைகளுக்கும் பொருட் களுக்குமான தொகையை சரியான நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதையே வழக்கமாக வைத்துள்ளன. இதன் விளைவு, நிறுவனங்கள் கடன் சுமையில், தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல், நஷ்டத்தில் கிடந்து உழல்கின்றன. பணியாளர்கள் வேலை பறிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். முதலீடு குறைகிறது, உற்பத்தி குறைகிறது. இப்படி பொருளாதாரத்தின் ஒவ்வொரு நிலைகளையும் பாதிக்கிறது. எந்தத் துறையில் எந்தெந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு தொகை நிலுவை இருக்கிறது என்பதைப் பார்த்தாலே, தற்போதைய பொருளாதார சரிவில் அரசின் பங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பது புலனாகும்.

அரசு மானியம் : இந்தியாவின் தற்போதைய பொருளாதார இயக்கத்தைத் தீர்மானிக்கும் சக்தி எரிபொருள். எரிபொருளுக்கு அரசு குறிப்பிட்ட மானியத்தை வழங்கிவருகிறது. ஆனால், இந்த மானியத் தொகையை எண்ணெய் நிறுவனங் களுக்கு அளிப்பதில் அரசு தாமதம் செய்கிறது. இந்த நிதி ஆண்டில் எரிபொருள் மற்றும் உர மானியத்தில் ரூ. 62 ஆயிரம் கோடியை அரசு செலுத்தாமல் நிலுவை வைத்து அடுத்த நிதி ஆண்டு கணக்குக்கு கொண்டு செல்ல இருக்கிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதில் அடக்கம். அரசிடமிருந்து வரவேண்டிய நிதி வராத பட்சத்தில் அவை கடன் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றன. தொழிலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், கடன் நெருக்கடியால் திவால் ஆகும் நிலைக்கு ஆளாகின்றன. இந்த பட்ஜெட்டில் உரமானியம் ரூ.74 ஆயிரம் கோடியாகக் கணிக்கப்பட்டது.

ஆனால் சென்ற ஆண்டு செலுத்த வேண்டிய தொகையிலேயே ரூ. 32 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளதால், இந்த நிதி ஆண்டில் நிலுவைத் தொகை இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. எரிபொருள் மானியம் வழங்கவேண்டிய தொகையில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு ரூ.63,100 கோடி செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு இருக்கும் கடன் அளவு மொத்தமாக ரூ.1.62 லட்சம் கோடியாக உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ரூ.92,712 கோடியும். பாரத் பெட்ரோலியம் ரூ.42,915 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ.26,036 கோடியும் என கடன்கள் உள்ளன. இத்தகைய கடன் நெருக்கடியில் அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய தொகையும் சரிவர கிடைக்காமல் இருப்பதால் பெரும் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடுகின்றன. இதுபோக ஏர் இந்தியா நிறுவனம் எண்ணெய் நிறுவனங் களுக்கு ரூ.5,000 கோடி பாக்கிவைத்துள்ளது. ஆட்டோமொபைல் துறை விற்பனை ஏற்கெனவே சரிவைச் சந்தித்துவரும் நிலையில், எரிபொருள் மானியத்துக்கான தொகையை அரசு தராமல் இருப்பது எப்படியான விளைவுகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களிடையே ஏற்படுத்தும் என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.

உணவு மானியம் : அதேபோல் விவசாயிகளின் முக்கிய நம்பிக்கையாக விளங்கும் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய உணவு வாணிப கழகத்துக்கு வழங்கப்படும் மானியத்திலும் நிலுவையைவைத்துள்ளது அரசு. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப் படும் உணவுப் பொருள்களுக்கான மானியத்தில் ரூ. 69,394 கோடி நிலுவையில் உள்ளது. மத்திய தணிக்கை ஆணையத்தின் தகவல்படி அரசின் மொத்த மானியத்தில் இந்த ஆண்டில் 74 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது மீதமுள்ள 26 சதவீதம் நிலுவையில் உள்ளது. சென்ற ஆண்டு 83 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

விவசாயிகளின் நிலை : கரும்பு, கோதுமை உள்ளிட்டவற்றை விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்கான விலையை வழங்கு வதிலும் அரசுகள் மிகவும் தாமதப்படுத்துகின்றன. கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய விலை நிலுவையில் இருப்பதில் முதலிடத்தில் உத்திரப் பிரதேசம் இருக்கிறது. 2018-19 நிலவரப்படி உத்திரப்பிரதேச அரசு சர்க்கரை ஆலைகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.7,364 கோடியாக உள்ளது.

பி.எஸ்.என்.எல்., ஏர் இந்தியா : பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவற்றுக்கும் அரசு தரப்பில் தர வேண்டிய நிலுவைத் தொகை பெருமளவில் இருந்தது. சமீபத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நெருக்கடி ஏற்பட்ட நிலையில்தான் அரசு தான் தரவேண்டிய தொகையை வழங்கியது. ஏர் இந்தியா நிதி நெருக்கடியில் திவாலாகும் தருணத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து செயல்பட அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தினால் பயனாக இருக்கும் என்று கூறியும் அரசு அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

மின் விநியோகத் துறையின் நிலை இன்னும் மோசம். கிட்டதட்ட மாநில அரசுகள் ரூ.30 ஆயிரம் கோடி மின் விநியோக நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியிருக்கிறது. வீடுகளில் மின் கட்டணம் செலுத்த ஒரு நாள் தவறினாலும் பியூஸ் கேரியரை பிடுங்கி விடுகிறார்கள். ஆனால், அரசுகளை இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதிலும் உத்தரப்பிரதேச அரசு ரூ. 11,176 கோடி நிலுவைத் தொகையுடன் முதலிடத் தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் மகாராஷ் டிரா ரூ.5,419 கோடி தர வேண்டி உள்ளது. தமிழகம் ரூ.1,396 கோடி நிலுவை வைத்துள்ளது.

பிற துறைகள் : ஜூட் எனப்படும் சாக்குப்பைகள் தயாரிக்கும் மில்களுக்கு அரசு தர வேண்டிய தொகை ரூ.1,950 கோடி. 2 லட்சம் பேர் இந்தத் துறையை நம்பி உள்ளனர். ஜூட் மில் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாமல், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் திணறிவருவதாகத் தெரிவித்திருக் கிறார்கள். மொத்த ஜூட் உற்பத்தியில் 70 சதவீதத்தை அரசுதான் கொள்முதல் செய்கிறது. உணவு தானியங்களை பேக்கிங் செய்வதற்காக. ஆண்டுக்கு ரூ.6,500 கோடி அளவில் வாங்குகிறது. இவர்களுக்கு கடன் ரூ.1,200 கோடி உள்ளது. பணியாளர்களுக்கான ஊதிய பாக்கி ரூ.750 கோடியாக உள்ளது. தனியார் மருத்துவமனை களுக்கு அரசுகளின் இலவச காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ சேவைகளுக்கு வழங்கவேண்டிய தொகையில் ரூ.1,400 கோடி நிலுவை வைத்துள்ளது. அதேபோல் அரசு மருத்துவமனைகளுக்கு வாங்கப்படும் மருந்து களுக்கான தொகையும் நிலுவையில் உள்ளது.

ஜவுளித் துறைக்கு வழங்கவேண்டிய ’டெக்னாலஜி அப்கிரேட்’ மானியம் ரூ.9,000 கோடியை அரசு நிலுவையில் வைத்துள்ளது. இந்த மானியம் வழங்கப்பட்டால் ஏற்றுமதி, வேலை வாய்ப்பு அனைத்துமே ஊக்குவிக்கப்படும் என்கிறார் ஜவுளித் துறை கூட்டமைப்பின் தலைவர் நட்ராஜ். ஜவுளித் துறை அமைச்சகத் தினால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தினால் கடந்த இருபது ஆண்டுகளில் ரூ.3.75 லட்சம் கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், சரியான நேரத்தில் அரசு தர வேண்டிய மானியத்தைத் தராததால் பல வகைகளிலும் பணத்தட்டுப்பாடு உண்டாகிறது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் இல்லாத நிலையில் ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் வேலை இழக்கும் அபாயம் உண்டாகிறது என்று அவர் கூறுகிறார்.

பங்குச் சந்தையில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவரான மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் இணை நிறுவனர் ராம்தியோ அகர்வால் கூறுகையில், ‘அரசு நிறுவனங்களுக்குத் தர வேண்டிய தொகையை சரியாகக் கொடுத்தாலே உள்நாட்டில் இருக்கும் பாதி பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்கிறார். உடனேகூட கொடுக்க வேண்டாம், 30 நாட்களுக்குள் கொடுத்தால்கூட போதும் மூன்றில் ஒரு பங்கு பிரச்சினை தீர்ந்துவிடும் என்கிறார். பங்குச் சந்தையில் 40 வருடங்களில் இப்போது நடப்பது போன்ற ஒரு வீழ்ச்சியைக் கண்டதில்லை என்கிறார் ராம் தியோ அகர்வால்.

சந்தையை ஊக்குவிக்க, தொழிலை ஊக்குவிக்க நுகர்வை ஊக்குவிக்க என அரசு கூறி வருவதெல்லாம் தனியார் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதற்குத்தான். அரசு முதலீடு செய்ய முன்வராதது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் நிறுவனங்களுக்குத் தர வேண்டிய தொகையைத் தராமல் காலம் தாழ்த்தி பல முக்கிய நிறுவனங் களை மெல்ல சாகடித்துக் கொண்டிருக்கிறது.

மக்களிடம் எப்படி வரியை சரியான நேரத்தில் செலுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறதோ அதைப் போலவே அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை, மானியம், நிதி உதவி போன்றவற்றையும் சரியான நேரத்தில் தர வேண்டுமல்லவா? ஒவ்வொரு நிதி ஆண்டிலும் நிதி நிலையை சமாளிக்க, நிதிப் பற்றாக்குறை யிலிருந்து தப்பிக்க செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் அடுத்த நிதி ஆண்டுக்குக்கொண்டு செல்வதால் அந்த நிதி பற்றாக்குறை சரியாகிவிடுமா?

முதலீடு குறைவு, உற்பத்தி குறைவு, கடன் அதிகரிப்பு, வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு என அனைத்துமே ஒன்றோடொன்று பிணைந்தவை. வட்டியைக் குறைப்பதாலும், அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதாலும் மட்டுமே தற்போதுள்ள பொருளாதார சரிவைச் சரி செய்துவிடமுடியாது என்பதை அரசு உணரும் தருணம் எப்போது வரும்?

கிராமப் பொருளாதாரத்தின் பேரழிவு : எந்தவொரு முன்னுதாரணமும் இல்லாமல், முன்னேற்பாடும் இல்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நவம்பர் 8, 2016-ல் அறிவிக்கப் பட்டது. இந்த ஒரு நடவடிக்கைக்குப் பிறகுதான் GDP-ல் 12 சதவிகிதமாக இருந்த பணப்புழக்கம், 8.2 சதவிகிதமாக குறைந்தது. இது இயற்கையாக இருந்துவந்த மக்களின் ஒட்டுமொத்த நுகர்வு தேவைக்கு கொடுக்கப்பட்ட பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ரொக்கப் பரிவர்த்தனை குறைந்து, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இது நாட்டின் பெரும்பான்மை மக்களை நேரடியாகப் பாதித்தது.

அதிலும் முக்கியமாக சாதாரண, கிராமப் புற, முறைசாராத் துறைகளைச் சேர்ந்த மக்களின் வாங்கும் திறனை மிகக் கடுமையாக பாதித்தது. பொதுவாக இவர்கள் அனைவருமே தங்களின் பெரும்பகுதி வருமானத்தை செலவிடக் கூடியவர்கள். சேமிப்பு என்பதை கனவிலும் நினைக்காதவர்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்த மக்களை முற்றிலுமாக பொருளாதாரப் பிணைப்பிலிருந்து துண்டித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இவையனைத்துக்கும் மேல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கான நோக்கமாக அறிவிக்கப்பட்ட கருப்புப் பணம் மற்றும் கள்ளப் பணம் எதையும் அரசு கண்டு பிடிக்கவில்லை.

மொத்தப் பணமும் வங்கிக்கு வந்து விட்டதை அறிவிக்க ரிசர்வ் வங்கி இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டதுதான் மிச்சம். அதுபோலவே ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற முழக்கத்தோடு தொடங்கிய GST போதுமான ஏற்பாடுகள் இல்லாமல் அவசர கோலத்தில் அமல்படுத்தப்பட்டு சிறுதொழில், சிறு, குறு வியாபாரிகளைப் பாதித்ததோடு மட்டுமல்லாமல் அரசுக்கும் போதுமான வரி வருவாயை ஈட்டித் தரவில்லை. அதுமட்டுமல்லாமல், டிஜிட்டல் பரிவர்த்தனையும் பெரிய அளவில் அதிகரிக்க வில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு நமது GDP-ல் ரொக்கத்தின் பங்கு 11-12 சதவீதமாக இருந்தது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அதே பழைய நிலையை எட்டிவிட்டது. அன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் மொத்த பணத்தில் 85 சதவீதமாக இருந்தது. இன்று 500, 2000 ரூபாய் நோட்டுகள் 2019 மார்ச் மாத கடைசியில் 82.2 சதவீதத்தை எட்டியுள்ளது.

ஒரே வித்தியாசம் என்னவென்றால், அன்று அதிகமாக கள்ள நோட்டுகள் இல்லை. இன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 200, 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் அதிகமாகியுள்ளதாக அண்மையில் வந்த ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை தெரிவிக்கின்றது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி இந்த இரண்டு நடவடிக்கைகளும் மக்களின் ஒட்டுமொத்த தேவைகளை வெகுவாக குறைத்து பொருளா தாரத்தின் தொடர் சரிவுக்கு அடித்தளமிட்டது என்பதை இன்றுவரை அரசு நம்பத் தயாராக இல்லை.

இந்த இரு நடவடிக்கைகளின் தோல்வியை அரசு ஏற்காமல் தொடர்ந்து வெற்றிகரமான நடவடிக்கைகள் என்றே பாராட்டிக்கொண்டது. இதனால், பொருளாதார சரிவையும் ஒப்புக் கொள்ள மறுத்து அதை தடுக்கும் எந்த முக்கிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக உலக பொருளாதாரத்தைக் காரணம் காட்டியது. இங்கு உள்நாட்டு பொருளாதார சரிவுடன் கூடவே தனியார் முதலீடுகள், குடும்ப சேமிப்புகள், உள்நாட்டு வெளிநாட்டு சந்தை முதலீடுகள், நுகர்வு என அனைத்துமே சரிந்து வந்தன. இவை அனைத்துக்கும் முக்கிய காரணம் உள்நாட்டு காரணிகள்தான் என்பது தெளிவாகத் தெரிந்தும் அரசு காது கொடுக்கவில்லை.

பொருளாதார சரிவும் வேலை இழப்பும் பொருளாதார வளர்ச்சிக்கும் சாதாரண மக்களுக்கும் உள்ள முக்கிய தொடர்பு வேலை வாய்ப்புதான். இதை குருச்சரண் தாஸ் என்ற பொருளியல் பத்திரிகையாளர் பின்வருமாறு கூறுகிறார். 1 சதவீத GDP-யின் வளர்ச்சி சராசரியாக 15 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடியது. இதில் ஒவ்வொரு நேரடி வேலைவாய்ப்பும் 3 மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ஆக, 1 சதவீத GDP வளர்ச்சி 60 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவல்லது.

ஒவ்வொரு வேலையும் 5 பேர் உள்ள ஒரு குடும்பத்தை பாதுகாக்கும் என்றால், 1 சதவிகித GDP வளர்ச்சி 3 கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும். அதாவது GDP வளர்ச்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட 3.2 சதவிகித சரிவு என்பது, 9.6 கோடி மக்களின் வாழ்வை பாதித்துள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை உயர்ந்து உள்ளது என்று அரசின் NSSO புள்ளி விவரம் கூறுவதையும் இதனோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த சரிவு எந்த அளவுக்கு நம்மை பாதித்துள்ளது என்பது தெளிவாகும். இந்த வரலாறு காணாத வேலை யிழப்பு, சாதாரண மக்களின் வருமானத்தை, ஒட்டு மொத்த தேவையை வெகுவாக குறைத்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால் முதலீடுகளை எடுத்துக்கொண்டு வெளியேற ஆரம்பித்தனர். இதனால் பங்குச்சந்தை தொடர் சரிவைச் சந்தித்தது. இதையடுத்து தொழில் துறையினரிடையே எதிர்ப்பு கிளம்ப நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்த அறிவிப்புகளையெல்லாம் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதுதவிர ‘சிங்கிள் பிராண்ட் ரீடெய்ல்’ விற்பனை, டிஜிட்டல் மீடியா மற்றும் நிலக்கரி போன்ற துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஊக்குவிக்க அதன் விதிகளை தளர்த்தும் அறிவிப்புகளை அரசு வெளியிட்டது.

இதன் மூலம் நுகர்வோர்கள் தேர்ந்தெடுக்க பல்வேறு வெளிநாட்டு பிராண்டுகள் அதிகமாக கிடைக்குமாம். இதுபோக கடன் சந்தையை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்கு முறை வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுத்தது. இப்போது கூடவே ரூ. 1.76 லட்சம் கோடி கையிருப் பினையும் அரசுக்குத் தாரைவார்க்க இருக்கிறது. 27 வங்கிகள் 12 வங்கிகளாக ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இன்னும் இதுபோன்ற பல அறிவிப்புகள் வரவும் வாய்ப்புள்ளது.

இந்தத் தொடர் பொருளாதார சரிவு கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்துகொண்டிருக்கிறது. பல பொருளாதார வல்லுநர்கள், தரச்சான்று நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலை யிலும், அரசு அதை அங்கீகரிக்காமல் பொருளா தாரம் நன்றாக உள்ளதாகவே சாதித்துவந்தது. ஆனால், பங்குச்சந்தையின் கடும் வீழ்ச்சி, அந்நிய முதலீடுகளின் திடீர் வெளியேற்றம், ரூபாய் மதிப்பின் சரிவு, நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பு, பணியாளர்கள் வேலை இழப்பு என்று ஒவ்வொன்றாகவே வெளிச்சத்து வரவே அரசு பொருளாதார சரிவை ஏற்க வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் தனியார் தொழில் துறை முதலீட்டில், போதுமான உற்பத்தியை அளிப்பதில் (Supply Side) தடைகள்/பிரச்சினைகள் இருப்பதாக அரசு எண்ணிக்கொண்டிருப்பதால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். அதாவது வட்டி விகிதத்தை குறைத்து, வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரித்தால், வங்கிகளை ஒருங்கிணைத்தால், அந்நிய முதலீடுகளுக்கான தடைகளை தளர்த்தினால், இந்தியத் தொழில் துறையில் முதலீடுகள் பெருகி, வேலைவாய்ப்புகள் அதிகரித்து, தனிநபர் வருமானம் செழித்து பொருளாதாரம் சரியாகிவிடும் என்று அரசு எண்ணுகின்றது. ஆனால், கவலை என்னவெனில், இது முற்றிலும் தவறான புரிதல்.

இங்கே முதலீடுகளுக்கும், கடன்களுக்கும் உள்ள தடைகளைவிட நுகர்வும் தேவையும்தான் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சாமான்ய மக்களின் தேவை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. பணப்புழக்கமும், வாங்கும் திறனும் வெகுவாகப் பாதித்துள்ளன. இந்த அடிப்படையை புரிந்து கொள்ளாமல் ஏதேதோ நடவடிக்கைகளை யெல்லாம் அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. ஆக, நமது பொருளாதாரத்தின் தொடர் சரிவுக்கு அடிப்படை காரணம் சரிந்து வரும் தேவை குறைவே. அதை சரி செய்ய கல்வி, சுகாதாரம், விவசாயம், கிராமப்புற கட்டமைப்பு போன்ற துறைகளில் அதிக முதலீடுகளைச் செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் சாதாரண மக்களின் வருமானத்தையும், வாங்கும் திறனையும் உயர்த்தலாம்.

ஆனால், இவற்றையெல்லாம் செய்வதற்கு தேவையான நிதிநிலை அரசிடம் உள்ளதா என்பதும் பெரும் கேள்விக்குறியே. ஏனெனில், அரசு தனது ஒட்டுமொத்த செலவை கடந்த ஆண்டுகளில் ஜிடிபியில் 14 சதவீதம் என்ற நிலையிலிருந்து 12 சதவீதமாகக் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற ரூ. 1.76 லட்சம் கோடியையும் அரசு எப்படி பயன்படுத்தப் போகிறது என்பதும் அரசுக்கே வெளிச்சம்.

- வணிக மணி

Pin It