இப்படி ஒரு துர்பாக்கியமான நிலைமை இந்த உலகில் யாருக்கும் வரக்கூடாது. ஆமாங்க கண்டிப்பா வரக்கூடாது. அம்மாவை ‘அம்மா’ என்று கூட நிம்மதியாக அழைக்க முடியவில்லை. அம்மா என்ற அந்த அழகான சொல்லுக்கே ஒரு கெட்ட வார்த்தைக்கு நிகரான அந்தஸ்த்தை ஏற்படுத்தி விட்டார்கள். பெற்ற தாயை மட்டும் அல்லாமல், ஊரில் யாரையும் ‘அம்மா’ என்று அழைக்க முடியவில்லை. நமக்கே சங்கோஜமாக இருக்கின்றது. அம்மா என்பது பெற்ற அம்மாவையோ அல்லது நாம் அம்மா போன்று நினைக்கும் நமது உறவுகளையோ குறிக்கும் சொல்லாகத்தான் இருந்து வந்தது. எந்த நாயின் வாய்பட்டதோ, இப்போது அது ஊழல் பெருச்சாளிகளையும், கொள்ளைக் கூட்டத்தின் தலைமையையும் குறிக்கும் சொல்லாக மாற்றப்பட்டுவிட்டது. இன்னும் சொல்லப்போனால் அம்மாக்களே இப்போது ‘அம்மா’ என்று தாங்கள் அழைக்கப்படுவதை விரும்புவது கிடையாது. அப்படி கூப்பிட்டால் நம்மை குற்றவாளிகளைப் போல பார்க்கின்றார்கள். அவர்களுக்கே அது ஒரு அந்நியப்பட்ட சொல்லாக மாறிவிட்டது. அம்மா என்பது முதுகெலும்பில்லாத ஜீவராசிகளும், கட்டியிருக்கும் வேட்டி காற்றிலே கழன்று குண்டி தெரிவதைக்கூட கவனிக்காமல் கூழைக் கும்பிடுபோடும் கோழைகளின் பொதுச்சொல்லாக மாறிவிட்டது.
உலகில் எல்லா உயிரினங்களும் முதலில் அம்மா என்று அழைப்பதால் உலகில் தமிழ்தான் முதலில் தோன்றிய மொழி என்று கூறிய சுத்தமான தமிழ் விந்துவுக்குப் பிறந்த ஜல்லிக்கட்டுக் காளைகள் எல்லாம் இப்போது அம்மா என்ற சொல்லுக்கு நேர்ந்த அவலநிலையைக் கண்டு கொதித்து எழாமல், மிரண்டுபோய் ‘சின்ன’ அம்மாவின் காலடியில் தங்களது ஆன்ம பயத்தை வெளிப்படுத்தி நிற்கின்றனர். ஆன்மாவைக் கூட நம்பாமல் போகலாம். ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் அம்மாவை நம்பியே ஆகவேண்டும் என்று போலி பொதுவுடைமைவாதிகள் புதிய மூலதனத்தைப் புனைந்துகொண்டு இருக்கின்றார்கள். திராவிடத்தை மறுமலர்ச்சி செய்வதாய் புறப்பட்ட ரோமாபுரி கதையாடிகள் உறக்கம் என்று நினைத்து விழிப்பிலேயே விரல் சூப்பி அவமானப்பட்டார்கள். அம்மாவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. வேண்டுமென்றால் ஒரு அம்மாவை வேறொரு அம்மாவாக மாற்றலாம். என்ற தங்களது புதிய பிழைப்புவாத நக்கிவிதியை கவித்துவமான வரிகளில் மக்களைக் கலங்கடிக்கும் விதத்தில் கற்பனைத் தேரினில் பூட்டி உலாவவிட்டார்கள்.
பழைய ‘செல்வி’ அம்மாவின் புதைகுழியில் இருந்து டிஎன்ஏவை எடுத்து, புதிய அம்மாவை அச்சு அசலாக அதே போன்று ஆடம்பரமும், அகம்பாவமும், தட்டுப்பட்டதை எல்லாம் சுருட்டும் சூட்சமமும் நிறைந்த குளோனிங் அம்மாவை உருவாக்கும் முயற்சியில் முன்னாள், இன்னாள் பட்டாபட்டி அண்டர்வியர் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மாபெரும் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கான நிதியை ‘ரெட்டியின்’ புதிதாக குட்டிபோட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களால் முடிந்த மட்டும் நிறைவேற்றிக்கொண்டு இருக்கின்றனர். தம்மின் தம்மக்கள் அறிவுடமை என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப இந்த குளோனிங் அம்மா நிஜமான ‘செல்வி’ அம்மாவைவிட ஜகஜால கில்லாடி என்பதும், ஜாஸ் சினிமாஸை ஆட்டையை போட்டவர் என்பதும் ஊரறிந்த ரகசியமாகும்.
நீதிமன்றங்களில் உள்ள நீதிதேவதையை நாய்ச் சங்கிலியில் பிணைத்து ஜனநாயகத்தின் அனைத்துத் தூண்களிலும் கட்டிப்போட்டு அழகு பார்த்த தாயுள்ளம் கொண்ட பேயைப் பார்த்து ஆச்சாரியா ஆச்சரியப்பட்டார், குன்காவே கொஞ்சம் குலை நடுங்கிப்போனார். உலகத்தையே பாயாக சுருட்டி, கடலுக்குள் ஒளிந்து கொண்ட திராவிட அசுரனை பன்றி அவதாரம் எடுத்து பார்ப்பன விஷ்ணு கொலை செய்தான். அதை ஆரிய திராவிடப் போராட்டம் என்று ஈரோட்டு தாடி தாத்தா சொல்லிவைத்தார். இன்றோ ஆரியமும், திராவிடமும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டைக் கொள்ளையடித்து கொடநாட்டில் ஒளித்துவைத்ததை தாத்தாவின் அரசியல் வாரிசுகள் கொண்டாடி மகிழ்கின்றன. பன்றியிலே பார்ப்பனப் பன்றி, திராவிடப் பன்றி என்றெல்லாம் வித்தியாசம் பார்க்க முடியவில்லை. எல்லாப் பன்றிகளும் மலத்தைத் தின்பதால் நாம் அழுகிப்போன வெங்காயங்கள் சொல்வதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாட்டில் பல மர்ம மரணங்களை நடத்திக் காட்டிய அடிமைகளின் அம்மா, இறுதியில் தானே மர்ம மரணம் அடைவோம் என்று நினைத்தாரா என்று தெரியவில்லை. தலைகால் தெரியாமல் ஆட்டம்போட்டு, தமிழ்நாட்டையே மொட்டை போட்ட கூட்டம் இன்று தான் தான் என்று தலைக்கனத்துடன் ‘புதிய பார்வை’ புண்ணாக்குகளின் ஆசியுடன் வலம்வர அடிமைகளிடம் பேரம் பேசிக்கொண்டு இருக்கின்றது. அம்மாவின் சகாப்தம் முடிந்துவிட்டது, இனி தைரியமாக நாம் எல்லா அம்மாவையும் ‘அம்மா’ என்றே அழைக்கலாம் என நினைத்துக்கொண்டு இருக்கும்போது, ;அப்படி எல்லாம் அழைக்க நாங்கள் விட்டுவிட மாட்டோம், அம்மா என்பது எங்கள் அடிமைகள் கட்சியின் அடையாளப் பெயர். அதை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம், ஒரு அம்மா போனால் என்ன இன்னொரு அம்மாவை அந்த இடத்தில் கொண்டுவருவோம். அதற்காக சாலையில் போவோர் வருவோரை எல்லாம் நாங்கள் கொண்டு வந்துவிட மாட்டோம். நல்ல தீர்க்க தரிசனத்துடன் தொலைநோக்குப் பார்வையோடு ‘செல்வி’ அம்மாவுடன் பல ஆண்டுகள் கூடவே இருந்து, அவரது கொள்கைகளை மட்டும் அல்லாமல், கொள்ளைகளையும் சிறப்பாக கற்று வைத்திருக்கும் ஒருவரையே தேர்ந்தெடுப்போம்’ என செல்வி அம்மாவின் செருப்புமீது ஆணையிட்டு சொல்கின்றனர்.
அடிமைகளின் முடிவு இது போன்று இருக்க, அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய் இட்லியும், ஐந்துரூபாய் சாப்பாட்டையும் ருசி பார்த்த எம் மானமுள்ள தமிழ் மக்கள் வேறுவிதமாய் பேசிக் கொள்கின்றார்கள். மன்னார்குடி கள்ளர் கூட்டம் தான் அம்மாவின் ஆவியை அவரது பூத உடலில் இருந்து விரட்டியதாக திரும்பிய பக்கமெல்லாம் தீயாகப் பேசுகின்றார்கள். ஓட்டுக்கேட்க வந்தால் ஓடஓட விரட்டி அடிப்பேன், கொலைகாரி, அம்மா கொள்ளையடித்து ஊர் பூராவும் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை சுருட்ட வந்த சதிகாரி என வாய்க்கு வந்ததை எல்லாம் வாந்தியெடுத்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றார்கள்.
அடிமை எஜமானரின் மறைவு அடிமைகளுக்கு புதிய தெம்பையும், உற்சாகத்தையும் வழங்கியுள்ளது. ஏற்கெனவே பல வருடங்கள் குனிந்துகொண்டே இருந்ததால் அவர்கள் நிமிர்ந்து நிற்பதையே மறந்துவிட்டார்கள். அதனால் நீண்ட காலமாக பார்த்துப் பழகிய பாதத்திற்கே தங்களது அடிமை விசுவாசத்தை அர்ப்பணம் செய்ய அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஆனால் நம்மால்தான் சீரணித்துக் கொள்ள முடியவில்லை. அம்மா துதி முடிவுக்கு வந்துவிட்டது என மனதார நினைத்துக்கொண்டு இருக்கும் போது, இன்னும் முன்பைவிட கனஜோராக அது நிகழும்போல் இருக்கின்றது. யாராவது ‘அம்மா’வை கொள்ளைக்கூட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுங்கள். இல்லை என்றால் அம்மா என்பது திருடிகளையும், கொள்ளைக்காரிகளையும் குறிக்கும் சொல் என அகராதியில் வரும் காலங்களில் அர்த்தம் கொடுத்துவிடுவார்கள். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடிக்கு’ இப்படி ஒரு நிலைமை வரலாமா? சிந்தியுங்கள் மானமுள்ள தமிழ்மக்களே!
- செ.கார்கி