திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்களுக்கு…
இன்னும் நீங்க எத்தனை நாளைக்குத்தான் பொறுமையா இருக்கப் போறீங்க… சின்ன அம்மாவைப் பாருங்க… எப்படி கடகடன்னு மேலே வந்துட்டாங்க…
உங்களுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. ஆனா, சின்ன அம்மாவோடு அரசியல் செய்ய வேண்டிய நிலைமைக்கு நீங்க தள்ளப்பட்டிருக்கும்போது, நான் அட்வைஸ் பண்ற கொடுமையையும் சேர்த்தே ஏத்துக்கங்க….
1. முதல்லே, உங்களைத் தவிர, கட்சியிலே இருக்கிற மத்த சீனியரை எல்லாம் வீட்டுக்கு அனுப்புங்க… போக மாட்டேன்னு சொல்றவங்களை எல்லாம் தளபதியோட வேன்லே தொங்கிட்டு வரச் சொல்லுங்க…
2. நீங்க டெய்லி அறிவாலயம் வர்றதை நிப்பாட்டுங்க… அண்ணா பிறந்த நாளுக்கு மட்டும் வந்தா போதும்…
3. கோபாலபுரம் வீட்டுக்கு 20 அடி சுவர் எழுப்பி, இரண்டாம் கட்டத் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், தொண்டர்கள் யாரும் உள்ளே வராம பார்த்துக்கங்க… அறிக்கை மட்டும் அப்பப்போ பேக்ஸ்லே போனா போதும்…
4. பொதுக்குழு, செயற்குழு கூட்டும்போது, ரெண்டே ரெண்டு நாற்காலி மட்டும் போடுங்க… ஒண்ணு உங்களுக்கு, இன்னொன்னு தளபதிக்கு… மத்தவங்களை நிக்க வச்சு பழக்கப்படுத்துங்க…
5. பொதுக்குழு, செயற்குழுவுலே உறுப்பினர்கள் சாப்பிடறதுக்கு மட்டும் தான் வாயைத் திறக்கணும்னு சொல்லிருங்க...
6. மாசத்துக்கு ஒருவாட்டி கட்சி முக்கியஸ்தர் ஒருவரை மட்டும் பார்த்தாப்போதும். அப்படி சந்திக்க வருபவரும், கோபாலபுரம் தெரு முனை வரைக்கும்தான் காரில் வரணும். அதுக்கப்புறம் இடுப்பு வரைக்கும் குனிஞ்சபடியே வந்து, கேட் பக்கத்துலே ரெண்டு மணிநேரம் காத்துக்கிட்டு இருக்கணும். வீட்டுக்குள்ளே விடும்போது, தவழ்ந்துதான் வரணும்னு சொல்லிருங்க…
7. யாரு கேட்டாலும் பேட்டி கொடுக்கிறது, யாரு கூப்பிட்டாலும் பாராட்டு விழாவில் போய் உட்கார்ந்துக்கிறது எல்லாம் அறவே கூடாது. உங்களை நேர்லே பார்க்கிறது, மோடியை இந்தியாவுலே பார்க்கிற மாதிரி அவ்வளவு கஷ்டமா இருக்கணும். உங்களை சந்திக்க நினைக்கிறவங்க, முதலில் தளபதி காலிலே விழணும். அவர் மனசு வச்சாதான் உங்களைப் பார்க்க முடியணும். இது ஒரு பழக்கமாவே மாறிடணும்.
8. கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளை எந்தக் காரணமும் இல்லாமல் அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்கணும்... எல்லோரையும் எப்போதும் ஒரு பதற்றத்திலேயே வச்சிருந்தாத்தான், விசுவாசம் மாறாமல் இருப்பாங்க.
9. வெறுமனே ‘டாக்டர் கலைஞர்’னு சொல்லாம, ‘முத்தமிழ்க் காவலர், கலைத்தாயின் தலைமகன், உலகத் தமிழர்களின் முதல் மகன், கல்லக்குடி நாயகன், கழகத்தின் நிரந்தரத் தலைவர், இதய தேவன், மாண்புமிகு டாக்டர் கலைஞர் அய்யா’ன்னுதான் எல்லோரும் எல்லா இடத்திலேயும் கூப்பிடனும்னு சொல்லிருங்க… இதை வரிசை மாறாம சரியா சொல்றவங்களுக்கு மட்டுமே தேர்தல்லே சீட் கொடுங்க…
10. நம்ம ஜனங்களுக்கு ‘புரட்சி’ங்கிற பேரு இருந்தா ரொம்பப் பிடிக்கும். அதனாலே தளபதியை ‘புரட்சித் தளபதி’ ஆக்கிருங்க… புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, இப்போ புரட்சித் தளபதின்னு மக்களும் செட்டாயிருவாங்க…
11. உங்க ஆட்சியில் வட்டச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், அவர்களின் உதவியாளர்கள் என ஆளாளுக்கு சம்பாதிக்கத் தொடங்கி, கட்சிக்கு நிறைய கெட்ட பெயரை உண்டாக்கிறாங்க. மத்தவங்க யாராவது வசூல் செஞ்சா, அதை உளவுத் துறை மூலம் பறிமுதல் செய்றதோடு, அவங்களை பதவியை விட்டே நீக்கிறணும். பழ.கருப்பையாகிட்டே கேட்டீங்கன்னா, இதுலே நிறைய குறிப்புகள் கொடுத்து உதவுவாரு. மத்தவங்க எல்லாம் சம்பாதிக்க முடியாம, அடங்கி ஒடுங்கிப் போயிட்டாலே, உங்களுக்கு ‘நல்ல நிர்வாகி’ங்கிற பேரு தானாகவே கிடைச்சிரும்.
12. ஞாபகமா புள்ளிவிவரங்களை அடுக்கி அறிக்கை விடுறது எல்லாம் தேவையில்லை. ‘திருவாரூர் தீயசக்தி’ ரேஞ்சுக்கு இறங்கிடுங்க… மக்கள் அதைத்தான் ரசிக்கிறாங்க. இடையே ‘நாயே’, ‘பேயே’ சேர்த்துக்கோங்க...
13. வருஷத்துலே 365 நாளும் அரசியல் செய்து, மக்களை போரடிக்கக் கூடாது. ஊட்டிப் பக்கம் ஒரு டீ எஸ்டேட்டை வாங்கிப் போட்டு, செட்டிலாயிருங்க… வருஷத்துக்கு மூணு மாசம் சென்னையிலே இருந்தாப் போதும்.
14. உங்க குடும்பம், மாவட்டச் செயலாளர்களின் குடும்பம் மட்டும்தான் தேர்தல்லே போட்டியிடுறாங்க என்ற எண்ணம் கட்சித் தொண்டர்களுக்கு வந்துறக்கூடாது. அப்பப்போ தொண்டர்கள்லே செருப்புக்கடை, காயலான் கடை, டீக்கடை வச்சிருக்கிற யாராவது ஒருவருக்கு சீட் தரணும். அப்பதான் கடைமட்டத் தொண்டர்கள் ஒரு நம்பிக்கையோடு கட்சியிலே இருப்பாங்க…
15. முதல்வர்னா ஒரு கெத்து வேணும்னு மக்கள் எதிர்பார்க்கிறாங்க.. ட்ரெயின்லே போய் அவங்களை கடுப்பேத்தாதீங்க... ஒரு நல்ல ஹெலிகாப்டர் வாங்கிக்கோங்க...
16. தப்பு செஞ்சா பொறுத்துக்க மாட்டாருன்னு ஜனங்க நினைக்கணும்... அதுக்கு ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை கட்சி ஆட்கள்லே யாராவது ஒருத்தரை வீட்டுக்குக் கூப்பிட்டு, குடும்பத்தோடு சேர்ந்து பின்னி எடுத்துருங்க...
17. மன்னராட்சிக்கு மக்கள் பழகினவங்க தான்... ஆனா ஒரே நேரத்துலே 20 மன்னர்கள் என்பதைத் தான் ஏத்துக்க மாட்டாங்க... நீங்க மன்னரா இருக்கும் போது, இளவரசரை மட்டும்கூட வச்சிக்குங்க.. மத்தவங்க அந்தப்புரத்துலே சந்தோஷமா இருக்கட்டும்... இரண்டாம் கட்டத் தலைவர்களை மட்டும் அரண்மனைக்கு அப்பப்போ கூப்பிட்டு, ‘இவர் இளவரசி, இவர் குட்டி இளவரசர், இவர் தக்கனூண்டு இளவரசர்’னு சொல்லி கும்பிடு போடச் சொல்லுங்க... அவங்களுக்கு எப்பவுமே மன்னருக்கு அடுத்து யாருங்கிற குழப்பம் இருக்கக் கூடாது... அவங்க ஏத்துக்கிட்டா மக்களும் ஏத்துக்கிடுவாங்க...
18. கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்துலேதான் போட்டியிடணும்னு கண்டிஷனா சொல்லிருங்க… ஒரு சீட்டுக்கு மேலே கொடுக்காதீங்க… அதுக்கு மேலே வேணும்னு கேட்கிறவங்களை, வைகோ, இல்லை பாஜககிட்டே அனுப்பிருங்க… அவங்களோட கூட்டணி வச்சி 100 ஓட்டு மட்டுமே வாங்கும்போது, திமுக கூட்டணிலே ஒரு சீட்டு பரவாயில்லேங்கிற மனநிலைக்கு வந்துருவாங்க…
19. நீதிபதிகள் உங்களை நிம்மதியா ஆட்சி செய்ய விட மாட்டாங்க... சும்மா சும்மா ஏதாவது தடை போட்டுக்கிட்டே இருப்பாங்க.. பேசாம எல்லா நீதிமன்றங்களையும் குழந்தைகள் மருத்துவமனையா மாத்திருங்க... அதுக்கு சட்டத்துல வழி இல்லைன்னா, எல்லா நீதிபதிகள் மேலேயும் கஞ்சா கேஸ் போட்டுருங்க..
20. வைகோ, தா.பா., பழ.நெடுமாறன், தமிழருவி மணியன்னு யாராவது ஒருத்தரை அடிக்கடி தூக்கி உள்ளே போடுங்க… அப்பதான் இரும்பு மனிதர், தைரியம் மிக்கவர்னு பேரு கிடைக்கும்.
21. பெரியார் கொள்கைகளை ஏற்கனவே நீங்க ஒரங்கட்டிட்டாலும், அவர் பெயரைச் சொல்றதை இன்னும் விடலை. அதை நிப்பாட்டிட்டு, முருகனை உள்ளே கொண்டு வாங்க... சீமானை ‘முருகப்பெருமான் வாரியத் தலைவரா’ப் போட்டு, கட்சிப் பிரமுகர்களை பால்குடம், மண் சோறு, காவடி தூக்குறதுக்குன்னு இறக்கி விடுங்க.. மக்கள் ஃபீல் ஆவாங்க.... இல்லைன்னா நல்லா எண்டர்டெயின் ஆவாங்க...
22. சுபவீ, மனுஷ்யபுத்திரன் போன்றவர்களுக்கு எல்லாம் கட்சி மேடைகள்லே ஸ்லாட் ஒதுக்கினா போதும்… டிவியிலே விவாதம் பண்றதுக்கு சி.ஆர்.சரஸ்வதி மாதிரி நாலு பேரை ரெடி பண்ணுங்க…
23. நல்லா இங்கிலீஷ் பேச கத்துக்கிடுங்க... அது ஒரு பெரிய திறமைன்னு இந்த முட்டாப் பயபுள்ளைக நம்புதுங்க...
24. மக்களை எவ்வளவு அடிக்க முடியுமோ, அவ்வளவு அடிங்க… ‘உங்க நல்லதுக்காகத்தான் அடிக்கிறேன்’னு சொல்லிக்கிட்டே அடிங்க… பேசாம ஏத்துக்கிடுவாங்க அந்த மடசாம்பிராணிக…
25. ஏதாவது தப்பா ஆயிருச்சுன்னா பயந்து போய் பின்வாங்காதீங்க... அதை விட பெரிய தப்பு ஒண்ணு செஞ்சிருங்க.... முதல் தப்பை மறந்துருவாங்க…
கடைசியா ஒண்ணு… இதையெல்லாம் ஜனங்க ஏத்துக்கிட்டு பல வருஷமாயிருச்சு… அதோடு, அம்மாவுக்குப் பிறகு சின்ன அம்மா, உங்களுக்குப் பிறகு தளபதி, தளபதிக்குப் பிறகு உதயநிதின்னு ஜனங்க செட்டாகிட்டாங்க… இன்னும் நீங்க யோசிச்சிக்கிட்டு இருந்தா எப்படி… உடனே செயலுக்கு வாங்க…
- கீற்று நந்தன்