இன்றைய நவீன யுகத்தில் மக்களிடம் பெரும் விவாதப் பொருளாக இருப்பது கல்வி தொடர்பானது தான். கல்வியைப் பொருத்தவரை அதை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி விட முடியாது. அது, ஒரு பரந்துபட்ட ஒன்றாகும். நம்முடைய மரணம் வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

periyar 340இன்றைய மக்களிடம் அந்த கல்வியைப்பற்றிய தவறான எண்ணம் அதிகரித்திருப்பதால், தங்களுடைய பிள்ளைகளுக்கு எது பயனுள்ள கல்வியாக இருக்கும் என்பதைத் தேர்ந்தெடுக்க தவறி விடுகின்றனர் அதிகமான பெற்றோர்கள்.

அதற்கு, பெரும்பாலான காரணம் இன்றைய கல்வி முறையும், தனியார் நிறுவனங்கள் கல்வி தொடர்பாக ஏற்படுத்தி வைத்துள்ள கல்வியைப் பற்றிய பயமும் தான் என்பதையும் நாம் அறிய முடிகின்றது.

குழந்தைகளுக்கு தனியார் பள்ளிக்கூடங்களில் இலட்சக்கணக்கான ரூபாய்களைக் கொடுத்து சீட் வாங்கி, அதனுடைய அறுவடையை குழந்தைகளிடமே இருந்து எதிர்பார்க்கின்றனர். இதனால், குழந்தைகளிடம் அவர்களின் இயற்கைக்கு மாறாக கல்வியை திணிக்கக்கூடிய சூழலுக்கு பெற்றோர்கள் தள்ளப்படுகின்றார்கள்.

இதன்மூலம், குழந்தைகள் அவர்களுடைய ஆசைக்கு அப்பாற்பட்டு, பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும் நிர்ப்பந்திக்கும் கல்வி முறைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். அதன்மூலம், அவர்கள் ஏற்கக்கூடிய அந்த கல்வி முறை அவர்களை எவ்வாறு மாற்றுகின்றது?

ஒரே வார்த்தையில் சொன்னால், அவர்களை ஒரு ‘ரோபோ’வாகவே மாற்றுகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. இது, ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், உண்மை அதுதான்.

அப்படியென்றால், கல்வி ஒரு மனிதனை எப்படி மாற்ற வேண்டும்? என்ற கேள்வி நம்மவர்களிடம் எழும்...

கல்வி என்பது ஒரு மனிதனை பண்படுத்த வேண்டும். ஒழுக்க மேம்பாட்டை அதிகப்படுத்த வேண்டும். சுய முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட கல்வி முறைகளை எந்த பள்ளிக்கூடங்களிலும் நம்மால் இன்று கண்டு கொள்ள முடியவில்லை.

சரி பெரியார் போதித்த கல்வி முறை எப்படி இருந்தது? 

பெரியார் போதித்த கல்விமுறை இரண்டு விதமான ஆளுமைகளை வலியுறுத்தியே இருந்தது. ஒன்று, கல்வியால் மக்களுக்கு பகுத்தறிவும், சுயமரியாதையும், தன்மான உணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.

மற்றொன்று, மேன்மையான வாழ்வுக்கும், தொழில் செய்வதற்கும் அல்லது சுயமதிப்புள்ள வேலை பார்க்கவோ பயன்பட வேண்டும் என்பதே அவருடைய கூற்றாக இருந்தது.

இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், கல்வியால் மேன்மையான வாழ்வு என்பது கூட பெரியாரைப் பொருத்தமட்டில் இரண்டாம் பட்சமே. 

முதலாவதாக, அவர் வலியுறுத்தியது பகுத்தறிவு பெறுதலும், அதன்மூலம் சுயமரியாதை அடைதலுமே அவரின் குறிக்கோளாக இருந்தது என்பதை இங்கு தெளிவு பெற வேண்டும்.

அதேபோன்று, புகழ்பெற்ற கல்வியாளர் பாவ்லோ பிரையர் ஒருமுறை சொன்னார், “எழுதப் படிக்க மட்டும் கற்றுக்கொடுப்பது கல்வியல்ல. வெறும் மனப்பாடத் திறமையில் தகவல் தொகுப்பாக குழந்தைகளை மாற்றுவது கல்வியின் பணியல்ல. 

மாறாக, ஒட்டுமொத்த சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் விருப்பு வெறுப்பின்றி விசாரணை செய்வதும், சமூக அநீதியைக் களைவதும், ஒரு சிலர் மட்டும் அனுபவிக்கும் முறையற்ற செல்வப் பகிர்வை உலகில் உள்ள அனைவருக்கும் பயனுடையதாக மாற்றுவதுமே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்!” என்றார்.

- நெல்லை சலீம்

Pin It