மோடி அரசின் ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்களின் பட்டியலில் முஸ்லிம்கள், தலித்துக்களுக்கு அடுத்தபடியாக இருப்பது மாவோயிஸ்ட்கள் தான். முந்தைய காங்கிரஸ் அரசின் பிரதமரான மன்மோகன்சிங் மாவோயிஸ்ட்களை உள்நாட்டு அச்சுறுத்தல் என்றார், பன்னாட்டு தொழில் கழகங்களுக்கு இந்தியாவின் காடுகளை திறந்துவிட முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரை அப்படி சொல்ல வைத்தது. மாவோயிஸ்ட்களை ஒழித்துக் கட்ட பசுமைவேட்டை என்ற பெயரில் ஏறக்குறைய மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பழங்குடியின மக்களுக்கு எதிராக களமிறக்கப்பட்டார்கள். அவர்கள் மூலம் காடுகளில் இருந்து லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள் வன்முறையான வழிகளில் விரட்டி அடிக்கப்பட்டனர். மாவோயிஸ்ட்களுக்கும், காங்கிரசுக்குமான பிரச்சினை என்பது அடிப்படையில் அரசியல், பொருளாதார பிரச்சினை ஆகும். ஆனால் மோடிக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையிலான பிரச்சினை என்பது வெறும் அரசியல், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை மட்டும் அல்ல, அது சித்தாந்தப் பிரச்சினையும் கூட. தங்களுடைய பார்ப்பன சனாதன கட்டமைப்பை ஏற்கமறுக்கும் மார்க்சிய- லெனினிய-மாவோயிசத்துக்கும் அதையே ஒட்டுமொத்த இந்திய மக்களின் கருத்தாக பரப்பத் துடிக்கும் பார்ப்பனியத்துக்கும் இடையிலான சித்தாந்தப் பிரச்சினை.

 அதனால் தான் அது வன்மத்தோடு மாவோயிஸ்ட்கள் மீது பாய்கின்றது. மாவோயிஸ்ட்கள் மீது மட்டும் அல்ல, அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் பழங்குடியின மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், படித்த அறிவுஜீவிகள் என அனைவரின் மீதும் பாய்கின்றது. ஆந்திர- ஒடிஷா எல்லையில் உள்ள மல்காங்கிரி மாவட்டம் ராம்கூர்கா வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஆயுதப்படைகள் நடத்தியதாக சொல்லப்படும் தாக்குதலில் 27 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் பெண்கள் ஆவர்கள். இவ்வளவு பெரிய மனிதப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது; ஆனால் இதை ஒரு பொருட்டாகக் கூட இந்திய ஊடகங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. பாகிஸ்தான் மீது இந்தியா நடத்தியதாக சொல்லிக் கொண்டிருக்கும் போலி மோதலுக்கு மணிக்கணக்கில் நேரத்தை ஒதுக்கும் கார்ப்ரேட் ஊடகங்கள் அரசு பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட தன் சொந்த நாட்டு மக்களைப் பற்றி பேச நேரம் ஒதுக்க முடியவில்லை. அவர்களைப் பொருத்தவரை மாவோயிஸ்ட்கள் ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்கள். செய்திகளாக விவாதிக்கும் அளவிற்கு அவர்களின் உயிர் ஒன்றும் மேன்மையானதல்ல. இந்த உலகில் மிகக் கேவலமாக வாழ நிர்பந்திக்கப்பட்ட பழங்குடியின மக்களின் உயிர்தானே அது.

 அரசு இதை என்கவுன்டர் என்கின்றது. ஆனால் மாவோயிஸ்ட்களின் பிரதிநிதி ஷியாம் தெலுங்கு தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதை மறுத்துள்ளார். பிரதமர் மோடியும், சந்திரபாபு நாயுடுவும் சேர்ந்து செய்த சதிதான் இது என்கின்றார். மேலும் மாவோயிஸ்ட்கள் நம்பும் நபர்கள் மூலம் கொண்டுவந்த உணவில் விஷம் கலந்து கொடுக்கச் செய்து 27 பேரையும் கொன்றதாக குற்றம் சாட்டியிருக்கின்றார். நிச்சயம் இது உண்மையாக இருப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருந்த செர்குரி ராஜ்குமார் என்கின்ற ஆசாத்தை இப்படித்தான் என்கவுன்டரில் கொன்றதாகக் கூறினார்கள் ஆனால் பிரேதப் பரிசோதனையில் அவர் திட்டமிட்டு மிக அருகில் வைத்து( 7.5 செ.மீ) கொல்லப்பட்டதாக  பின்பு நிருபிக்கப்பட்டது. மாவோயிஸ்ட்களையும் அவர்களுக்கு ஆதரவுதரும் கோடிக்கணக்கான பழங்குடியின மக்களையும் நேர்மையாக எதிர்க்கத் துப்பற்ற இந்த அரசு இதுபோன்ற நயவஞ்சகமான வழிகளில் அவர்களை அழித்தொழிக்கின்றது.

 இப்படி பழங்குடியின மக்களை கொன்ற ரத்தக்கறை காய்வதற்குள் மோடி தன்னை பழங்குடியின மக்களின் மீட்பானாக காட்சிபடுத்தி இருக்கின்றார். டெல்லியில் செவ்வாய்கிழமை(25/10/2016) அன்று நடந்த தேசிய பழங்குடியினத் திருவிழாவில் பழங்குடியின மக்கள் போன்று வேடமணிந்து பேசிய மோடி “ இயற்கை வளங்கள் பெரும்பாலும் வனப்பகுதிகளில்தான் கொட்டிக் கிடக்கின்றன, அங்கு பழங்குடியின மக்கள் தான் அதிக அளவில் வசித்து வருகின்றனர். வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் போது இயற்கை வளங்களை சுரண்டி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிடக்கூடாது. இரும்பு தாதுக்கள், நிலக்கரி ஆகியவை நாட்டுக்கு அவசியம்தான்; அவற்றை எடுக்கும் போது பழங்குடியின மக்களின் வாழ்க்கையைப் பணயம் வைக்கக்கூடாது. பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வாய்ப்பு யாருக்கும் அளிக்கப்படவில்லை. ஒருவேளை அவர்களது உரிமைகளைப் பறிக்க நினைத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியிருக்கின்றார். எவ்வளவு பெரிய மோசடி! ஒருபக்கம் அந்த மக்களை கொல்வதற்கு லட்சக்கணக்கான துருப்புகளை காடுகளுக்குள் அனுப்பிவிட்டு, இன்னொரு பக்கம் அந்த மக்களின் நலனில் அக்கறை உள்ளது போல பேசுவது. என்ன ஒரு நடிப்பு!.

 மாவோயிஸ்ட்கள் பெருமுதலாளிகளிடம் இருந்து இயற்கை வளங்களையும் பழங்குடியின மக்களையும் காப்பாற்றுவதற்காக ஆயுதம் ஏந்துகின்றார்கள். ஆனால் இராணுவவீரர்கள் யாருக்காக ஆயுதம் ஏந்துகின்றார்கள்?. பெருமுதலாளிகளின் நலனுக்காக, அவர்களை நக்கிப் பிழைக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து, அவர்களை சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கிய அரசு, அவர்கள் தங்களை அரச பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் ஏந்தும் போது காக்கை குருவிகளை சுடுவதுபோன்று சுட்டுத் தள்ளுகின்றது. இன்று இந்தியாவில் அந்த மக்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் காப்பாற்றும் ஒரே சக்தியாக மாவோயிஸ்ட்கள் தான் இருக்கின்றார்கள். லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை அவர்கள் தான் அந்த மக்களுக்கு பிரித்துக் கொடுத்தார்கள். அவர்களின் பொருள்களுக்கு அவர்கள் தான் நியமான கூலியை பெற்றுக் கொடுத்தார்கள். ஒரு கெளரவமான வாழ்க்கையை அவர்கள் தான் அந்த மக்களுக்கு உருவாக்கிக் கொடுத்தார்கள். அதனால் தான் அந்த மக்கள் அவர்களின் பின்னால் அணிதிரளுகின்றார்கள்.

 ஆனால் அரசு அவர்களுக்கு என்ன செய்தது. சுதந்திரம் அடைந்த இந்த 69 ஆண்டுகளில் இன்னும் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு சாலை வசதி இல்லை, மின்சாரம் இல்லை, மருத்துவமனைகள் இல்லை, கல்விக்கூடங்கள் இல்லை. இருக்கும் ஒரு சில கல்விக்கூடங்களும் இராணுவ வீரர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளும் இடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு இதுவரை எதுவுமே செய்துகொடுக்காத அரசு அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்துவரும் நிலம் மட்டும் வேண்டும் என்கின்றது. அவர்கள் கொடுக்க மறுக்கும்போது அந்த எளிய மக்களுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய இராணுவம் களத்தில் இறக்கிவிடப்படுகின்றது. இந்த அரசின் கொள்கைகள்தான் மாவோயிஸ்ட்கள் இன்று மிகப்பெரிய சக்தியாக வளர்வதற்கு ஊக்கப்படுத்தியது. மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும், மோடியும் இல்லை என்றால் இன்று மாவோயிஸ்ட்கள் இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியாது. அவர்களது பிரச்சினைகளுக்கு நிரந்திர தீர்வு காணாமல் வெறும் ஆயுதங்கள் மேல் நம்பிக்கை வைப்பதால் மட்டுமே தீர்வுகண்டுவிட முடியாது. இது ஒரு அரசியல், பொருளாதார, சித்தாந்தப் பிரச்சினை. பெருமுதலாளிகளை நக்கிப் பிழைக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தால் இதை ஒரு போதும் தீர்க்க முடியாது. வெறும் கொலைகளின் மூலம் எளிமையாக அவர்களை அச்சுறுத்த நினைக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் கோழைத்தனமான செயலே இந்தப் படுகொலைகள். இதற்கு நிச்சயம் அவர்கள் எதிர்வினை ஆற்றுவார்கள். அதற்கு இந்த மோடி அரசுதான் முழுபொறுப்பு.

-       செ.கார்கி

Pin It