அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் 8.1.2018 அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

வீரப்பன் தேடுதல் வேட்டை எனும் பெயரில் பழங்குடி மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும், திட்டமிட்டு நடத்திய பரமக்குடி துப்பாக்கிச் சூடு முதல் ஆந்திராவில் செம்மரக் கடத்தல் எனக் கூறி 20 தமிழர்களை சுட்டுக் கொன்றது வரையிலான மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த குடியுரிமை பாதுகாப்பு நடுவம் மாநில ஒருங்கிணைப்பாளரும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான முருகன், மாவோயிஸ்டுகள் என்று கைது செய்யப்பட்ட சந்திரா மற்றும் கலா ஆகியோருக்காக எந்த வழக்கு பார்த்து வந்தாரோ அதே வழக்கின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2017 ஜனவரி 8 அன்று கொடுஞ்சட்டமான தேசவிரோத தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஓர் ஆண்டு காலமாக திருச்சி சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். அவரது பிணை மனு இன்று வரையிலும் கிடப்பிலேயே போட்டுள்ளது.

நவம்பர் 3, 2017 அன்று திருநெல்வேலி பழவூர் மாறன்குளத்தைச் சார்ந்த வழக்கறிஞரும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினரும், தமிழக மக்கள் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளரும் கூடங்குளம் போராட்ட வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர் செம்மணி என்கிற இராஜரத்தினம், எந்தவித புகாரும் இல்லாத நிலையில் தமிழக வள்ளியூர் போலீசாரால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

மண்ணுக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற் காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும், ஆதரவு போராட்டங்களை முன்னெடுக்கும் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகளின் மீதும் தொடர்ந்து கொடுஞ்சட்டங்களை சுமத்துவது அரசின்  வாடிக்கையாகவே உள்ளது. அதற்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி வெளி வந்திருக்கும் திருமுருகன், டைசன், இளமாறன், அருண் மற்றும் வளர்மதி ஆகியோர் சிறந்த உதாரணங்களாவர். இதன் தொடர்ச்சியாகத் தான் சம்பள உயர்வுக்காகப் போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், அவர்களைத்  தொடர்ந்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீதும் மற்றும் ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கும் அனைத்து வழக்கறிஞர்களின் மீதும் நீதித் துறையும், அரசும் கைகோர்த்து, கொடூரமான அடக்குமுறையை ஏவி வருகிறது.

மாவோயிஸ்டுகளை ஆதரிப்பது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தமது தீர்ப்புரையில் சுட்டிக் காட்டிய பின்னரும், எத்தகைய குற்ற வழக்குகள் சுமத்தப்பட்டவர்களாக இருப்பினும், அவர்களுக்காக வழக்காடுவது என்பது வழக்கறிஞர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாக உள்ள போதிலும், மாவோயிஸ்ட் என்ற பெயரில் தமிழக அரசால் வழக்கு தொடுக்கப்பட்டவர்களுக்காக, வழக்காடிய மதுரை வழக்கறிஞர் முருகன் மீது போடப்பட்டுள்ள UAPA-வை இரத்து செய்து உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டுமென அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

வழக்கறிஞர் செம்மணி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய வள்ளியூர் டி.எஸ்.பி. குமார், பணகுடி ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் விமல்குமார், பழனி, முகமது நாசீர் ஆகிய உதவி ஆய்வாளர்கள், சாகர், செல்லதுரை, ஜோஸ் ஆகிய தனிப்படை காவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டமைப்பு வலியுறுத்துகிறது” என்று கூறினார்.

சந்திப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), தமிழ்நேயன் (தமிழ் தேசிய விடுதலை இயக்கம்), ஜெயநேசன் (ஜாதி ஒழிப்பு கூட்டியக்கம்), அப்துல் கரீம் (எஸ்.டி.பி.அய்.), சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், செயலாளர் இரா. உமாபதி கலந்து கொண்டனர்.

செய்தியாளர்கள் கேள்விக்கு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பதிலளிக்கையில் கூறியதாவது:

தமிழ்நாட்டில் தேர்தல் கட்சிகளைவிட மக்கள் பிரச்சினைகளுக்காக மக்களைத் திரட்டி இயக்கங்களே போராடி வருகின்றன. மீதேன், ஹைடிரோ கார்பன் போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை தமிழ் நாட்டில் தனது பினாமி ஆட்சியின் வழியாக செயல்படுத்தி வருகிறது பா.ஜ.க. ஆட்சி. இத்திட்டங்களை எதிர்த்துப் போராடும் மக்களையும் அவர்களுக்காக வாதிடும் வழக்குரைஞர்களையும் அடக்குமுறை சட்டத்தின் கீழ் கைது செய்து மிரட்டினால் மக்கள் போராட்டத்தை ஒடுக்கி, மத்திய பா.ஜ.க. அரசின் திட்டங்களை நிறைவேற்றிடலாம் என திட்டம் போட்டு செயல்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

Pin It