ஆரம்பித்தது செப்.22 அன்று..... இன்றும் தெளிவில்லை... எங்கும் பரபரப்புகள், பதற்றங்கள்...... வதந்திகள்.... கேள்விகள்..... குழப்பங்கள்......
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்களுக்கும் மேலாகி விட்டது. ஆளுநர் வருகிறார், ராகுல் வருகிறார், பிரதமர் மோடி வருகிறார். முதல்வரின் ஒரு புகைப்படத்தையோ அல்லது சில வினாடிகள் காணொலியோ வெளியிட வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.. பார்ப்போம்....
மிகவும் வியப்பாக உள்ளது. எதை நினைத்தெனில், ஒரு மாநில முதல்வர் தன் உடல்நிலை பற்றிய செய்தி மக்களிடம் இவ்வளவு குழப்பத்துக்கு உள்ளாகும்போது, தற்போதைய நிலை பற்றிய தெளிவினைத் தராததைப் பற்றி அல்ல. எப்படி ஒட்டுமொத்த தமிழகமும் இப்படி நேர்மாறாக எதிர்பார்க்கிறது என்றுதான்!.
இதற்கு முன்பு ஜெயலலிதா எப்போது மக்களுக்கு பதிலளித்திருக்கிறார். அவரை யாரால் பார்க்க முடிந்திருக்கிறது?
கடந்த வருடங்களில் ஜெயலலிதா ஊடகங்கள் வாயிலாக எத்தனை முறை மக்களிடம் தொடர்பு கொண்டுள்ளார். ஊடகங்கள்தான் அவரை அத்தனை எளிதாக அணுகி விட முடியுமா? சாதாரண நாட்களிலேயே பார்க்க முடியாத அவரை அவர் மருத்துவமனையில் இருக்கும்போது பார்க்க நினைப்பது(அவரது புகைப்படத்தைக்கூட) எவ்வளவு பெரிய மகா பேராசை?!!
கடந்த 5 வருடங்களில் 24க்கும் மேற்பட்ட தடவைகள் அமைச்சரவையில் மாற்றம் செய்தார். அவற்றில் ஒன்றுக்காவது தெளிவான காரணம் சொல்லப்பட்டதா?
கடந்த வருடம் சற்றேறக்குறைய இதே காலகட்டத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மிதந்தபோது ஜெயலலிதா எங்கே இருந்தார்? எல்லாம் முடிந்தபின் கட்பூ வழியாக அவர் அனுப்பிய தகவல் என்ன?(நான் உங்களுடன் இருக்கிறேன்! ) அதனால் விளைந்த பயன் என்ன? அதற்குள் அனைவரும் மறந்து விட்டோமா? ஆச்சரியம் இல்லை.
தேர்தல் பிரச்சாரத்திற்கே கூட வான் மார்க்கமாகவே வருபவர்தானே அவர். அங்கும் மேடைக்கு நடுவே மிகத் தனியாய். ஆக, பிரச்சாரங்களிலும் அவரை மக்களோடு மக்களாய்க் காண முடியாது.
ஜனநாயகத்தையே தாண்டுவோமே. மக்களை விடுவோம், அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகளே கூட, அதுவும் சாதாரண நாட்களிலே கூட அவரை எளிதாக சந்தித்து விட முடியுமா? மன்னிக்கவும், கஷ்டப்பட்டாவது அவரை சந்தித்து விட முடியுமா? பதில் ஒவ்வொரு தமிழருக்கும் தெரிந்ததே.
மேற்படி நிலைமைகள் சாதாரண நாட்களிலும் மற்றும் மக்கள் பிரச்சனைகளின்போதும். இப்போது பிரச்சனை ஜெயலலிதாவின் உடல்நலத்திலேயே. சொல்லவும் வேண்டுமா என்ன? சாதாரணமாகவே மிகக் கடினமான காரியம் தற்போது அசாத்தியமானது ஆகும்...
பிள்ளைகளை(மக்களை) விட்டு எப்போதும் விலகியே நிற்கும் அம்மாவை(முதல்வரை)த்தானே நாம் பெற்றிருக்கிறோம், மீண்டும் தேர்ந்தெடுக்கிறோம். ஆக, இது ஒன்றும் புதிதல்ல என்று நமக்குத் தெரியாதா?!
அவர் நிச்சயம் உடல்நலம் தேறி ஆரோக்கியத்துடன் மீண்டு வருவார். அதையே அனைவரும் எதிர்பார்க்கிறோம். ஆனால், அப்போது மட்டும் அவரைப் பார்த்து விட முடியுமா என்ன? அவர் எப்போதும் இடைவெளி கொண்ட "அம்மாவாகவே" இருக்கிறார். அம்மா முகம் காணாத "குழந்தைகளாகவே" நாமும் இருக்கிறோம்.
ஆனால், நிச்சயமாக இது ஜெயலலிதாவின் பிரச்சனை மட்டும் அல்ல…
- கோபி செல்வம்