தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் சுவரொட்டிகளாலும், விளம்பரங்களாலும் அறிமுகப்படுத்தப்பட்டு, தலைமையேற்க அழைக்கும் ஒரு பெயர் ஜெ.தீபா. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்பார்களே அதைப் போல, நேற்று ஜெயலலிதா இறந்தவுடன் இன்று தமிழக அரசியலில் தலைமைப் போட்டிக்கு தயாராகிவிட்ட ஒரு நபரானார் தீபா. ஜெயலலிதா இறந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை கூட இந்த நபரைப் பற்றி யாருக்கும் தெரியாது. துக்கம் முடிந்த கையோடு ஆரம்பித்த அதிகாரப் போட்டி ஏற்கனவே கொலைகாரிப் பட்டம் கட்டப்படிருந்த சசிகலாவின் அதிகார வெறியை அம்பலமாக்கியதுடன், கூட்டுக் கொள்ளையின் பகடைக்காயாய் பயன்படுத்தப்பட்ட பன்னீர் செல்வத்தை தியாகியாகவும் காட்டத் தலைப்பட்ட இந்த கபட நாடகத்தில், யாரும் எதிர்பார்க்காத ஒரு பாத்திரமாய் தலை காட்டியவர்தான் இந்த ஜெயராமன் தீபா. தீவிர அரசியல் நோக்கர்களுக்கு இவ்வகை கதாபாத்திரங்கள் தோன்றி மறையும் (running role) ஒன்றாகவே தோன்றினாலும், இவ்வகை அரசியல் நிகழ்வுகளே தீவிரமான பல கேள்விகளை நம்முன்னே எழுப்புகின்றன.
மக்களாட்சி என்கிற ஆட்சிமுறை, உலகில் இருக்கும் பல வகை ஆட்சிமுறைகளில் (இராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி, கம்யூனிச ஆட்சி என்பன) சற்றே சிறந்ததாக பொதுநோக்கர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பல நாடுகளும் ஒவ்வொரு காலகட்டத்தில் வேறு முறைகளில் இருந்து விடுபட்டு மக்களாட்சி முறைக்கு மாறிக் கொண்டே இருக்கின்றன. இது மக்கள் விருப்பத்தால் ஏற்படுவது. தங்களை ஆள்பவர்களை நாமே தேர்ந்தெடுத்தால் சிறப்பாக வாழலாம் என்ற நப்பாசையால் மக்களாட்சி முறையை பிற ஆட்சிமுறையைக் காட்டிலும் மக்கள் விரும்புகின்றனர். மக்களாட்சி முறையை ஏற்றுக் கொண்டு பெரும்பாலான நாடுகள், குறிப்பாக முன்னேறிய ஐரோப்பிய நாடுகள், பல சோதனைகளைத் தாண்டி தேர்ந்த மக்களாட்சி முறையை அடைந்துள்ளனர். இதற்குக் காரணம் அந்நாட்டு மக்களின் கல்வியறிவு, அரசியல் விழிப்புணர்வு, தொழில் நேர்மை, பொது வாழ்வில் ஒழுக்கம், மற்றும் தூய்மை போன்றவை. ஆக மக்களாட்சி முறையில் ஆட்சியாளர்கள் அம்மக்களின் எண்ணங்கள் மற்றும் ஒழுகலாறுகளைப் பிரதிபளிப்பவர்களாகவே உள்ளனர். இதை மனதிற் கொண்டு சிந்தித்தால் முன்னேறிக் கொண்டிருப்பதாக பல காலமாய் கூறிக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற என்றும் வளரும் நாடுகளின் மக்களாட்சி முறையின் நிலைமை மற்றும் செயல்பாடுகள் தெளிவாகத் தெரியும்.
காலம் மக்களின் சிந்தனை ஓட்டத்திலும், செயல்பாட்டிலும், பண்பாடு மற்றும் அரசியல் தளத்திலும் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். அதுதான் முன்னேற்றத்தின் (மனிதகுல) அறிகுறி மற்றும் சான்று. சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டாய் இந்திய அரசியல் முறை மாறாமல் பின்னோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பது எல்லா வகையிலும் கேள்விக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாகும். சுதந்திரம் அடைந்த கையோடு இருந்த அரசியல் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, பொது நோக்கு, எளிமை மற்றும் பழிக்கு அஞ்சல் போன்ற பண்புகள் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி பொய் வாக்குறுதி, பகட்டு, அதிகார போதை, பொதுச் சொத்தை சுருட்டல், தனக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களிடமே காசு கேட்டல் என்ற அளவிற்கு குட்டிச்சுவராகி நிற்கின்றது. இந்நிலைமை கட்டுடைத்து ஆராயப்பட வேண்டிய ஒன்று.
“எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை, வாழிய நிலனே” என்ற பழந்தமிழ் சிந்தனை மரபு நிகழ்கால அரசியல் அவலத்தை உணர்த்துகிறது. சாதிகளால் சிதைவுண்ட சமூகம் நடுவு நிலைமையை புறந்தள்ளி பயணிக்கத் தலைப்பட்டதன் விளைவே இன்று சந்தி சிரிக்கும் இந்திய அரசியலின் நிலை. தமிழகத்தின் அரசியல் நிலை அதனினும் படுகேவலம். பழந்தமிழ் இலக்கிய மரபுகள்வழி அறியப்படும் பண்பாடு மட்டும் இல்லையென்றால் இன்று பண்பாடு என்று கூறிக்கொள்ள தமிழர்களிடம் ஒன்றுமே இல்லை எனலாம். பண்பாட்டின் அங்கமாக இன்று கட்டமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு உட்பட பழந்தமிழ்ப் பண்பாடு அறம் சார்ந்தது. ஆனால் இன்று அறம் என்றால் அரம் என்ற பொருளிலேயே பலருக்குத் தெரியும். அந்த அளவிற்கு மங்கிப் போய்விட்டது தமிழனின் சிந்தனை மரபு. ஒரு சமூகத்தின் இருப்பு மற்றும் வளர்ச்சி அச்சமூகத்தின் சிந்தனை மரபை பொருத்ததே. அவ்வகையில் சிந்தனை மரபொழிந்த தமிழ்ச் சமூகத்தின் இன்றைய தமிழகத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலை.
சிந்தனை மரபு ஒரு சமூகத்தின் பொது சொத்து. அதன் முன்னோக்கிய வளர்ச்சி பல காரணிகளால் ஆனது. அவ்வகை காரணிகளில் தலையாயது, சமூக சிந்தனை மரபை தொய்வில்லாமல் வளர்த்தெடுக்கும் தன்னலமற்ற அறிவு ஜீவிகள், மதம் மற்றும் ஜாதிபேதமில்லாமல் நியாயம் சார்ந்து அரசியல் கோட்பாடுகளைப் பேசி மக்களை நல்வழிப்படுத்தி அரசியல் கட்ட விழையும் அரசியல்வாதிகள், தன்னை முன்னிறுத்தி அரசியல் செய்யாமல் தாம் சார்ந்த இயக்கத்தின் கோட்பாடுகளை முன்னிறுத்தி அரசியல் செய்யும் கோட்பாடுசார் அரசியல் தலைமைகள், தனி மற்றும் பொதுவாழ்வில் தூய்மை போற்றி, பழி போடும் எந்த செயலைiயும் அரசியல் கருதி செய்யாமலிருக்கும் பழி அஞ்சும் போக்கு மற்றும் சீர்தூக்கிப்பார்த்து நடுவு நிலை தவறாதவர்களை அரசியலில் வளர்த்தெடுக்கும் மக்கட்கூட்டம் போன்றவை. இன்றைய சூழலில் மேற்சொன்ன காரணிகள் எல்லாமே தன்நிலையில் பழுதுபட்டு நிற்கின்றன. மனிதம் சாராத சிந்தனை மேலோங்கி எல்லாவற்றிற்கும் கடவுகளிடம் கையேந்தி நிற்கும் போக்கு அரசியலில் நீட்சியுற்று மதம் மற்றும் சாதிசார் அரசியலில் முடிந்ததோடு, கண்மூடித்தனமான “பின்பற்றுதல்” அரசியல் பாணிக்கு அச்சாரமிட்டது. பின்பற்றுதல் பாணி அரசியல் இந்தியாவைப் பிடித்திருக்கும் பெருவியாதியாகும். சுதந்திரத்திற்காகப் போராடிய காங்கிரஸ் கட்சி, இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை கணக்கில் கொண்டு பல யதார்த்தக் கொள்கைகளோடு ஆட்சிக்கு வந்தது. கொஞ்ச நாளில் அது நேரு கட்சியாகவும், நேருவுக்குப் பிறகு இந்திராவின் கட்சியாகவும், அதன் பிறகு இராசீவின் கட்சியாகவும், இன்று சோனியாவின் கட்சியாகவும் நீட்சியுற்று மொத்தத்தில் நேருவின் குடும்பக்கட்சியாக நீர்த்துப் போனது. அதே கதிதான் இன்று பல பிராந்தியக் கட்சிகளுக்கும். கட்சிகளுக்கும் கொள்கைகளுக்கும் உள்ள தனித்தன்மை மறைந்து, கொள்கை என்ற ஒன்று இல்லை, கட்சிதான் அனைத்தும் என்ற நிலை மக்களாட்சியை போலியான ஒன்றாக்குவதற்கான முதற்படியாகும். தமிழ்நாடு இப்போலித் தனத்தில் சிக்குண்டு பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது.
பெரியாரின் பகுத்தறிவு வாதத்தால் சிந்தனையூக்கம் பெற்ற தமிழ்ச் சமூகத்தை சாமார்த்தியமாய் தன் பேச்சுத் திறமையால் காயடித்தவர் அண்ணாதுரை. அவரிடம் பாலபாடம் கற்று தமிழ்நாட்டை தன் குடும்பச் சொத்தாக்கியவர் கருணாநிதி. அவரைத் தொடர்ந்து பின்பற்றுதல் அரசியலின் பிதாமகன் எம்.ஜி.ஆர். அவ்வகையில் சொந்த சந்ததிகள் இல்லாமலேயே தன்னைத் தானே சந்ததி என கூறிக் கொண்டவரான ஜெயலலிதாவை அறியணையில் உட்கார வைத்து நான்கு முறை ஆளச்செய்து, இடையில் மூன்று முறை ஊழல் குற்றச்சாட்டிற்காக சிறைக்கும் அனுப்பி, வழக்கு நடந்துகொண்டிருக்கும் போதே மீண்டும் முதல்வராக்கி, கீழ்நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட போதும், மீண்டும் முதல்வராக்கி, இறக்கும்வரை ஆளச் செய்ததன்மூலம் தமிழக அரசியலை முன்னெப்பொழுதும் இல்லாத வகையிலும், இனியொருகாலம் நிகழாவண்ணமும் தரம்தாழ வித்திட்டவர் புரட்சித் தலைவர். பின்பற்றுதல் மற்றும் சந்ததி அரசியலில் கருணாநிதியும், எம்.ஜி.இராமச்சந்திரனும் போட்ட விதை இன்று ஆலமரமாக அதிலொரு விழுதாய் தீபா வரை வந்து நிற்கிறது. பொதுவாழ்வில் குடும்பத்தையும், அந்தப்புர நாயகிகளையும் புகுத்தி, பொதுச் சொத்தை தன் சொத்தாய் கூறுபோட்டு ஆளச் செய்த இவ்வகை கேடுகெட்ட மாந்தர்களை குறை சொல்வதா? அல்லது எம்மையும், எமது நாட்டையும், எமது பொது சொத்தையும் ஏன் இந்த மானங்கெட்டவர்களின் வாரிசுகள் அல்லது வாரிசுகள் என கூறிக் கொள்பவர்கள் ஆள வேண்டும்? என்று கேள்வி கேட்கத் துணியாத அறிவிலி மக்களைக் குறை சொல்வதா?
இந்திய மற்றும் தமிழக அரசியலில் இதுநாள்வரை வாரிசுகள், அடையாளம் காட்டப்பட்டு படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டுதான் அதிகார பீடத்தை அடைந்தள்ளனர். இன்று பல தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் பெரு மற்றும் குறுந்தலைவர்களின் மகன்கள், மகள்கள் பாலபாடம் கற்றே அரசியலில் களம் கண்டுள்ளனர். ஆனால் ஜெயராமன் மகள் தீபா, ஜெயலலிதாவின் மறைவையொட்டி மாநில அளவில் அறியப்பட்ட, அதிலும் வருங்கால முதல்வராகும் அளவில் எதிர்பார்க்கப்படும் ஒரு நபராக முன்னிருத்தப்படுகிறாரெனில், தமிழக மக்களின் உளவியல் வரலாற்றுக் கீழ்மை அடைந்துள்ள விதமே காட்டுகிறது.
ஜெயலலிதா என்ற ஆளுமை தமிழகத்திற்கு விளைவித்தக் கேடுகள் மிகப்பல. அதில் தலையாயது உட்கட்சி ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைத்து தன்னொருத்திக்காகவே கடைசிவரை வாழ்ந்தது. மக்களாட்சி என்ற பெயரில் தன்னை ஒரு ராணியாகவே பாவித்து அதிகார உச்சத்தில் வலம் வந்தது. பொது சொத்தை எவ்வித வெட்கமுமின்றி சுரண்டி அனுபவித்து வெளிப்படையாக காட்டியது. ஒரு தரப்பினரைச் சார்ந்து அதிகாரத்தை குவித்தது. உறுதி செய்யப்பட்ட ஊழல்வாதியாய் மறைந்தது. பிற நாடுகளில் இவ்வகை அரசியல்வாதிகள் இகழப்பட்டு புறக்கணிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களின் அடியொற்றி வாரிசுகள் எனக் கூற யாரும் தலைப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் இங்கே, நிச்சயமான ஊழல் பேர்வழியின் நிழலாய் தீபா தன்னை முன்னிறுத்தி முதல்வராகும் ஆசையில் களமிறங்கியுள்ளார். இதுதான் சந்ததி அரசியலின் உச்சகட்டம். இனி தன் சந்ததிகளை முன்னிறுத்தி அரசியல் செய்யும் பிறரைப் பற்றிப்பேச நமக்கு துளியும் அருகதையில்லை. ஏன் அரசியலைப்பற்றிப் பேசவே அருகதையில்லை.
- ஏ.அழகிய நம்பி