08-03-2016 செவ்வாய் அன்று இரவு சுமார் 9-45 மணிக்கு இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் தீடீரென தாங்க முடியாத கடும் துர்நாற்றம் வீசியது. நேரம் போக போக இந்த கொடூரமான துர்வாடை அதிகமாகியதோ தவிர குறையவில்லை. 

koodankulam 371இடிந்தகரை போராட்ட மேடையில் இருந்த பெண்களுக்கும், ஊரில் இருந்த பலருக்கும் குமட்டல், வாந்தி ஓயாமல் ஏற்பட்டு உள்ளது. மக்கள் தங்கள் அருகே உள்ள வீட்டில் இருந்துதான் வாடை வருகிறதோ எனக் கருதியுள்ளனர். பின்பு அப்படி இல்லை என்றவுடன் உடனே மக்கள் ஓடி சென்று இடிந்தகரை பங்குத்தந்தையிடம் சென்று சொல்ல, அவரும் துர்நாற்றம் தாங்காமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்துள்ளார். அங்கிருந்து பங்குத்தந்தை பல அரசு அதிகாரிகளிடம் அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசி அங்கு ஏற்பட்டு உள்ள பிரச்சினையை சொல்லியுள்ளார்.

மக்கள் எதனால் இந்த சகிக்க முடியாத கொடூரமான துர்நாற்றம் வருகிறது என தெரியாமல் தவித்தபடியே இருக்க, எந்த ஒரு வழியும் தெரியாமல் நள்ளிரவு 01-00 மணி வரை பிணம் வேக வைக்க கூடிய பொழுது வரக்கூடிய அந்த கொடுமையான கடும் துர்வாடையை சகிக்க முடியாமல் சகித்துக் கொண்டு சுவாசித்து வந்துள்ளனர். 

அந்த நடு இரவில் என்ன செய்வது என்றே மக்களுக்கு தெரியாததால், விபரமானவர்கள் அணு உலையால் வந்த பாதிப்போ எனக் கருதி வீட்டை பூட்டிக்கொண்டு தொலைகாட்சி செய்தி சானல்களில் ஏதாவது சொல்கிறார்களா எனப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர்.

ஆனால் மக்கள் எல்லாரும் அப்படி வீட்டை பூட்டிக் கொண்டு பாதுகாப்பாக இருக்கவில்லை. பலரும் போராட்ட மேடைக்கு வருவதும், பங்குத்தந்தையிடம் காரணம் கேட்பதும், தேவாலயங்களின் முன்பு கூடுவதும், தெருவில் கூடி கும்பல் கும்பலாக பேசுவதும் என இருந்துள்ளனர். 

அணு உலையில் ஏதாவது பாதிப்பு என்றால் உடனடியாக வீட்டிக்குள் சென்று வீட்டை பூட்டிக் கொள்ள வேண்டும். இது மிக அடிப்படையானது. அணு உலையில் விபத்து நடந்தால் வீட்டில் மின் இணைப்பை துண்டித்து விட வேண்டும்.தற்போது மக்கள் யாரும் இதை செய்யவில்லை. இதுவரைக்கும் அணு உலையை சுற்றுயுள்ள எந்த பகுதி மக்களுக்கு பேரிடர் பயிற்சி எதுவும் இதுவரை தரப்படவே இல்லை, அதன் விளைவுதான் இது.

மக்களின் கடுமையான பிரச்சனையும், தொலைகாட்சி ஊடகங்களில் செய்தி வந்த பின்னரே அரசு நிர்வாகங்கள் சுதாகரித்துக் கொண்டு ஏதோ செய்து கடுமையான துர்நாற்றம் வருவதை நள்ளிரவு ஒரு மணி சுமாருக்கு தடுத்துள்ளனர்.

ஆனால் துர்நாற்றத்திற்கான காரணத்தை இன்று வரை அறிவியல் பூர்வமாக 70 மணி நேரமாகியும் சரியான வகையில் இதுவரைக்கும் நெல்லை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் மக்களுக்கும், நாட்டுக்கும் தெரிவிக்கவில்லை.

அன்று இரவு தூக்கம் என்பது மக்களுக்கு காணமல் போனது. அதிகாலையில் செய்தி கேள்விப்பட்ட வெளியூரில் இருந்த பலரும் இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களிடம் தொடர்பு கொண்டு "உயிரோடு இருக்கீங்களா" எனக் கேட்டது ஒரு வகையில் நகைச்சுவையாக தெரிந்தாலும் கூட அதன் உள்அர்த்தம் என்பது என்ன என அனைவருக்கும் தெரியும்.

போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ( டிசம்பர் -2 நள்ளிரவு 1984) விபத்து ஏற்பட்ட போது, மக்கள் தனது முகத்தின் மீது ஈரத் துணியை போட்டுக் கொண்டு அந்த விசவாயு காற்றை சுவாசித்து இருந்து இருந்தால் அப்போதே 25000 மக்கள் இறந்து இருக்க மாட்டார்கள்.

இன்று வரை போபாலில் 32 ஆண்டுகளாக இறந்தும், பாதிப்புக்கு உள்ளான பல லட்சம் மக்களையும் பாதுகாத்து இருக்க முடியும் என்பதை இப்போது நம்மால் நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. மக்களுக்கு அரசாங்கம் எவ்விதத்திலும் விபத்து நேர்ந்தால் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்ற பேரிடர் பயிற்சி எதுவும் தராமல் இருந்தததும், அரசாங்கம் விசவாயு விபத்தின் போது எப்படி பாதுகாத்துக் கொள்வது என்ற எவ்வித அறிவிப்பும் வானொலி, தொலைகாட்சி வழியாக மக்களுக்கு தராமல் இருந்ததன் விளைவை, இன்று வரை போபால் மக்கள் பல்வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளாகி சந்தித்து வருகின்றனர்.

09-03-2016- புதன்கிழமை 

=======================

09-03-2016 காலையில் ராதாபுரம் வட்டாட்சியரும், காவல்துறையினரும் பாதிப்புக்கு உள்ளான இடிந்தகரைக்கு வந்துm, சுனாமிக் காலனி மக்களை சந்தித்தும் மக்களிடம் துர்நாற்றம் -பாதிப்பு பற்றிக் கேட்டுள்ளனர்.

அதன் பின்பு அதிகாரிகள் இந்த கடுமையான துர்நாற்றத்திற்கு காரணம் இருக்கந்துறை பகுதியில் இருக்கும் மீன் அரவை ஆலைதான் காரணம் என ஒரே அடியாகக் கூறி சென்று, பிரச்சினையை ஒட்டுமொத்தமாக மூடி மறைத்து விட்டு சென்று உள்ளனர்.

நமக்கு வரும் கேள்விகள் :

========================

தூதுக்குடி-உடன்குடி PSV மீன் அரவை ஆலையின் பாதிப்பு பிரச்சினைகளை பற்றி கடந்த ஓராண்டுகளாக அப்பகுதிக்கு நேரில் சென்று நாங்கள் ஆய்வு செய்தும், உடன்குடி PSV மீன் அரவை ஆலை போராட்டக் குழுவோடும்- மக்களோடு இணைந்து தொடர்ந்து போரட்டத்தில் பங்கேற்று போராடியும் வருகின்றோம். 07-03-2016 அன்று கூட நாங்கள் தூத்துக்குடி-உடன்குடி PSV மீன் அரவை ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கனக்கான மக்களோடு பங்கேற்று காவல்துறையின் தடையை உடைத்து போராட்டம் நடத்தியும், அன்று இரவு கைதாகி வட்டாட்சியர் உட்பட பல அதிகாரிகள் வந்து எங்களிடம் பேசசுவார்த்தை நடத்தி எங்களது கோரிக்கையை நிறைவேற்றுகிறோம் எனக் கூறி எழுத்து பூர்வமாக எழுதிக் கொடுத்ததால் போராட்டத்தை முடித்துக் கொண்டு வந்தோம்.

- உடன்குடி psv மீன் அரவை ஆலையின் சட்ட விரோத உற்பத்தி என்பது, இருக்கந்துறை மீன் அரவை ஆலையின் உற்பத்தியை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

- இருக்கந்துறை மீன் அரவை ஆலை உற்பத்தி தொடங்கி ஓராண்டே முடியவில்லை. உடன்குடி psv மீன் அரவை ஆலையின் உற்பத்தி தொடங்கி நான்கு ஆண்டுகளை விட அதிகம்.

உடன்குடி psv மீன் அரவை ஆலை பகுதியில் உள்ள துர்நாற்ற பாதிப்பு என்பது....

- ஆலையை சுற்றி 5 கிலோமீட்டர் தூரத்திற்க்குள் மட்டுமே சகிக்க முடியாத துர்நாற்ற பாதிப்பு உள்ளது 

- மீன் அரவை ஆலையை சுற்றி வரும் துர்நாற்றம் என்பது அழுகல் மீன்வாடை போன்றவை ஆகும். வேறு எவ்வித கெட்ட துர்வாடையும் அங்கு இல்லை.

- இருக்கந்துறை மீன் அரவை ஆலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில்தான் இடிந்தகரை ஊர் உள்ளது. இருக்கந்துறை முதல் இடிந்தகரை நோக்கி காற்று வரும் வழியில் நக்கநேரி, சங்கநேரி, என எண்ணற்ற கிராமங்கள் உள்ளது, அங்கு இடிந்தகரை போல் கொடுரமான துர்நாற்றம் அன்று வீசவில்லை. வழியில் உள்ள கூடன்குளத்தில் கூட இடிந்தகரையில் இருந்தது போல கடுமை துர்நாற்றம் இல்லாமல் ஓரளவே இருந்து உள்ளது.

இருக்கந்துறை மீன் அரவை ஆலையில் இருந்து வடக்கே 5 கி. மீட்டர் தூரத்தில் உள்ள ராதாபுரத்தில் எவ்வித துர்நாற்றமும் இல்லை.

- 08-03-2016 அன்று இரவு காற்றும் கூட குறிப்பான ஒரு பக்கம் நோக்கி வீசாமல் சலனமற்று இருந்து உள்ளது. எனவே அணு உலையை ஒட்டிய இடிந்தகரை பகுதியில் ஏற்பட்ட துர்நாற்றத்திருக்கு சரியான காரணம் அரசால் சொல்லப்பட வேண்டும். 

-உடன்குடி psv மீன் அரவை ஆலையின் புகைபோக்கியை விட இருக்கந்துறை மீன் அரவை ஆலையின் புகைபோக்கி உயரம் குறைவே. எனவே உடன்குடிPSV மீன்அரவை ஆலையில் 5 கி.மீ தூரத்திர்க்குள் பாதிப்பு, இருக்கந்துறை மீன் அரவை ஆலைக்கு 15 கி.மீ தூரத்திர்க்குள் பாதிப்பு எனக் கூறி, அதிகமான தூரத்திற்க்கு துர்நாற்றம் அடித்தது என்று அரசால் சொல்ல எவ்வித முகாந்திரமும் இல்லை.

- மேலும் இடிந்தகரை மக்களுக்கு அழுகல் மீன் உட்பட அனைத்து மீன் வாடையும் பிறப்பு முதாழ் இறப்பு வரை தெளிவாக அறிந்தவர்கள். அவர்களிடம் 08-03-2016 இரவு ஏற்பட்ட துர்நாற்றம் மீன் அரவை ஆலையால் ஏற்பட்டது இல்லை என்பது அவர்களின் தீர்மானகரமான முடிவாகும். 

எனவே தமிழக அரசும், அணு உலை நிர்வாகமும் 08-03-2016 இரவு மக்களுக்கு ஏற்பட்ட கடும் துர்நாற்ற பாதிப்பு பற்றி சுயேட்சையாக செயல்படும் வல்லுநர் குழுவை அமைத்து மக்களுக்கும், நாட்டுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 

2014 - மே அணு உலையில் விபத்துக்கு உள்ளானவர்கள் பற்றி உண்மை நிலை மக்களுக்கு இதுவரைக்கும் வெளிப்படையாக அரசால் மக்களுக்கு சொல்லப்படவில்லை 

32 முறை கூடன்குலம் அணு உலையில் செயல்பட முடியாத நிலையில் முடங்கி நின்ற காரணங்கள் பற்றி முழு உண்மையும் மக்களுக்கு அரசால் சொல்லப்படவில்லை.

மணப்பாட்டில் திமிங்கலங்கள் கரையில் ஒதுங்கி இறந்தது பற்றியான அறிவியல்பூர்வ உண்மையை மக்களிடம் இதுவரை தெளிவாக சொல்லப்படவே இல்லை.

இன்று வரை கூடன்குளம் அணு உலையில் ஒவ்வொரு நாள் வாரியாக எவ்வளவு மின்சாரம் உற்பத்தி ஆகி உள்ளது.தினமும் உற்பத்தியான மின்சாரம் எந்த மாநிலங்களுக்கு தினசரியும் எவ்வளவு வழங்கப்பட்டு உள்ளது. அதற்க்கான கட்டண தொகை எவ்வளவு, எப்போது பெறப்பட்டு உள்ளது என்ற உண்மையான விபரம், நாள் வாரியாக அரசால், அணு உலை நிர்வாகத்தால் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

இடிந்தகரை உட்பட கடலோர கிராமங்களில் அணு உலை இயங்க தொடங்கியதாக சொல்லப்படும் 2013 ஆகசுடு காலம் முதல் கடலில் மீன் பிடித்தல் (மீன் கிடைக்காமல் இருப்பது -பல வகையான மீன்கள் இல்லாமல் போனது ) கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதற்கான உண்மையான காரணம் அரசால் தெளிவு படுத்தப்பட வேண்டும்.

08-03-2016 செவ்வாய் அன்று இரவு ஏற்பட்ட துர்நாற்றம் பற்றி பொய்யான காரணம் கூரி மறைக்கமால் உண்மையை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும்.

வரும்முன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

போலத் தூவக் கெடும் 

என்பதை உணர்ந்து அரசும் -அணு உலை நிர்வாகமும் மக்களுக்கும், நாட்டுக்கும் முழு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

இல்லையெனில் கடுமையான மக்கள் போராட்டத்தை அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கடந்த மார்ச் 11-2011 தேதியில்தான் ஜப்பான் ஃபுகுஷிமாவில் அணு உலை விபத்து நடந்தது. ஜப்பான் அணு உலை விபத்து பற்றிக் கூட அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அங்கு ஜப்பானில் நடந்தது அணு உலை விபத்து அல்ல, சாதாரண கெமிக்கல் ரியாக்சன் என சப்பைக் கட்டு கட்டி மக்களை ஏமாற்றியதை நினைவு கூர்ந்து நாம் பார்க்க வேண்டிய தருணம் இது. 

விழிப்போடு இருப்போம் !! 

தமிழகத்தை பாதுகாப்போம்!!!

-       முகிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம்

Pin It